Thursday, April 06, 2006

தலித்துகள் மேலும் புறக்கணிப்பு

தலித்துகளுக்கு மீண்டும் மீண்டும் இடம் மறுக்கும் தமிழ் ஊடகங்கள்

ஏப்ரல் 5 அன்று வெளியான 4 நாளிதழ்களிலும் இடம் பெற்ற 10 செய்திகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.
1. ஜயலலிதா திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். இந்தச் செய்தி 4 நாளிதழ்களிலுமே இடம் பெற்றிருக்கின்றன. என்றாலும், வெளியிடப் படும் செய்தியின் அளவிலும், முக்கியத்துவத்திலும் நிறைய வேறுபாடுகளைக் காண முடிந்தது. இலவச கலர் டீ வி கொடுக்க ரூ 15 ஆயிரம் கோடி எங்கே கிடைக்கும் என்ற ஜெயலலிதாவின் கேள்வி தினமனியின் லீட் ஸ்டோரியாகி இருக்கிறது. திருவாரூர் வயலில் வேலை செய்த பெண்களிடம் ஜெயலலிதா உரையாடும் காட்சி, தினத் தந்தியில் முதல் பக்கத்திலும், தினமலரில் கடைசிப் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.
2. பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஏப்ரல் 4 அன்று வெளியிடப் பட்டிருக்கிறது. 139 பேர் கொண்ட முழுப் பட்டியலையும், தினமலர், தினத் தந்தி, தினமணி ஆகிய 3 நாளிதழ்களும் விரிவாக வெளியிட்டுள்ளன. தினகரன், செய்தியை மட்டும் வெளியிட்டு விட்டு, பட்டியலை வெளியிடாமல் தவிர்த்துவிட்டது.

3. நேற்று (ஏப்ரல் 4, 2006) வெளியான மற்றொரு வேட்பாளர் பட்டியல், அகில இந்திய பார்வார்ட் பிளாக்கின் பட்டியலாகும். அக்கட்சியின் தமிழகத் தலைவர் நடிகர் கார்த்திக் இந்தப் பட்டியலை வெளியிட்டார். 19 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை 4 நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. பட்டியலை வெளியிட்ட கார்த்திக்கின் படம் தினமலரில் வண்ணத்தில் பெரிதாகவும், தினத் தந்தியில் வண்ணத்தில் ஓரளவு பெரிதாகவும் (2 காலம் அகலம், 15 செ மீ உயரம்) வெளியிடப் பட்டுள்ளது.
4. தமிழக அரசியலில் நேற்று (ஏப்ரல் 4) மிக முக்கியமான செய்தியாக 4 நாளிதழ்களும் கருதியது, ஜெயலலிதாவும், வைகோவும், திருமாவளவனும், ஒரே மேடையில் மதுரையில் ஏப்ரல் 8 அன்று, பிரச்சாரம் செய்யப்போகும் தகவல் அறிவிக்கப் பட்டது தான். தினத் தந்தி இந்தத் தகவலை லீட் ஸ்டோரியாக வெளியிட்டிருந்தது.
5. திருமாவளவன், இன்று ஏப்ரல் 5 அன்று காட்டுமன்னார்கோவிலில் தனது கட்சி வேட்பாளர்களை அறிமுகப் படுத்தி பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்தச் செய்தி, தினகரனில் மிகச் சிறிய அளவில், ஒரு பத்திச் செய்தியாக வெளியாகி உள்ளது. தினமணி இச்செய்தியை சற்றே பெரிதாக வெளியிட்டுள்ளது. பிற பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிடவில்லை.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஏப்ரல் 10 அன்று நெல்லை பாளை தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் என்ற தகவல், தினகரனில் மட்டும் இடம் பெற்றுள்ளது.
தலித் தலைவர்கள் தொடர்பான செய்திகளுக்கு மீண்டும் மீண்டும் இடம் மறுக்கப் படுகிறது என்று கருத இடமிருக்கிறது.

6. விஜயகாந் 4.4.2006 அன்று சென்னையில் ஆற்றிய தேர்தல் பிரச்சார உரையை, தினகரன், தினமலர், தினமணி ஆகியவை வெளியிட்டுள்ளன. தினத் தந்தி இச்செய்தியை வெளியிடவில்லை. வைகோ ஏப்ரில் 5 அன்று மவுன விரதம் இருப்பதாக தினமலர் மட்டும் செய்தி வெளியிட்டிருக்கிறது. தனது தந்தையின் நினைவு நாளான ஏப்ரல் 5 அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மவுனம் காப்பார் என்ற செய்தி வேறு இதழ்களில் இடம் பெற வில்லை.

7. வைகோ, தி மு க மத்திய அமைச்சர்கள் மீது குற்றஞ் சாட்டிப் பேசியதை, தினகரன் வெளியிடவில்லை. தினமலரும், தினத் தந்தியும் புகைப் படத்துடன், மிக விரிவாக இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. தினமணியில், 2 காலம் செய்தியாக, நன்கு செம்மையாக்கப் பட்டு வெளியிடப் பட்டுள்ளது. இச்செய்தியைத் தினமலரும், தினத் தந்தியும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பதாகக் கருத முடியும்.

வைகோ பற்றி கருணாநிதி, "குற்றமுள்ள நெஞ்சு தான் குறு குறுக்கும்", என்று வெளியிட்டுள்ள அறிக்கையை தினகரனும், தினமலரும் வெளியிட்டுள்ளன. தினத் தந்தியும், தினமணியும் வெளியிடவில்லை.


கருணாநிதியை நோக்கி உடுமலைப்பேட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வைகோ, எழுப்பிய கேள்விகளை, தினத்தந்தி விரிவாக வெளியிட்டுள்ளது. முதன் முறையாக, தினமலர், வைகோவின் உடுமலைப் பேட்டைப் பேச்சை வெளியிடாமல் தவிர்த்துள்ளது.
இந்த ஆய்வைத் தொடங்கிய முதல் வாரத்தின் இறுதியில், 4 செய்தித் தாள்களும் என்ன விதமான கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளன என்பதைக் "கண்டு" கொள்ள முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில், நேர்மையும், சுய ஒழுக்கமும் கொண்ட ஒரு பத்திரிகை ஒன்று கூட இல்லையோ என்ற எண்ணம் மாணவர்களாகிய எங்களிடம் கொஞ்சம் வேதனையைத் தான் உருவாக்கிவிட்டிருக்கிறது.
இன்று 5 4 2006 புதன் கிழமை, தி இந்து ஆங்கில நாளிதழில் ஒரு செய்தியை நாங்கள் கவனித்தோம். இத்தாலியில் உள்ள தகவல் தொடர்பு ஆணையம், அந்த நாட்டுப் பிரதமர் சில்வியோ பெலிஸ்கோனிக்குச் சொந்தமான தொலைக்காட்சிக் குழுமத்திற்கு, 2.5 லட்சம் யூரோக்களைத் தண்டம் விதித்துள்ளது என்பதே அந்தச் செய்தி. பெர்லிஸ்கோனிக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனம், பொதுத் தேர்தலின் போது அதன் முதலாளியான பெர்லிஸ்கோனிக்குச் சாதகமாக, மீண்டும், மீண்டும் அவரைக் காட்சிப் படுத்தியதே இந்தத் தண்டத்துக் காரணம் என்று அந்தச் செய்தி கூறுகிறது. அதிகாரத்தில் உள்ளவர்களையும் துணிவுடன் தண்டிக்க முடிவு செய்த அந்த நாட்டு தகவல் தொடர்பு ஆணையத்தின் முடிவு எங்களை வெகுவாகக் கவர்ந்து விட்டது.

ஊடக விமர்சனக் குழுவிற்காக,
இசை செல்வப்பெருமாள்

No comments: