Monday, May 08, 2006

விடை பெறுகிறோம்

ஏறத்தாழ 40 நாள் அற்புதமான பயிற்சிக்குப் பின், இப்போதைக்கு விடை பெறுகிறோம். தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செய்திகளைத் தமிழ் இதழ்கள் எப்படிக் கையாணடன் என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கும், அது குறித்து விவாதிப்பதற்கும், தமிழ்ப் பத்திரிகைகளில் பணியாற்றப் போகும் எங்களில் பலருக்கும், இனி தொடர்ந்து மாணவர்களைப் பயிற்றுவிக்கவிருக்கும் எங்களின் ஆசிரியர்களுக்கும் இந்தப் பயிற்சி ஒரு அற்புத அனுபவமாக இருந்தது. இதில், உலகத் தமிழர்கள், தமிழ் மணம் வாயிலாக முன் வைத்த ஆக்கப் பூர்வமான விமர்சனங்கள் எங்களின் பணியைப் பெரிதும் ஊக்கப் படுத்தின. இந்த ஆய்வுகளைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டாலும், குறிப்பிட்ட சில செய்திகளை ஆய்வு செய்வதைத் தொடர்வது என்று தீர்மானித்திருக்கிறோம். குறிப்பிட்ட மனித உரிமை மீறல்களைப்பதிவு செய்வது குறித்து நாளிதழ்கள் எப்படிக் கையாள்கின்றன, பிற உரிமை சார்ந்த பிரச்னைகளை ஊடகங்கள் எப்படிக் கையாள்கின்றன என்றும் தொடர்ந்து ஆய்வு செய்வோம். பிரச்னைக்குரிய விஷயம் தென்படும்போது, நிச்சயம் எங்களின் பதிவு இடம் பெறும். எங்களின் உறிப்பினர்கள் மாறிக்கொண்டே இருக்கலாம். வ்ழிகாட்டும் ஆசிர்யர்கள் மட்டும் தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டே இருப்பார்கள். 4 பத்திரிகைகளில் 3 பத்திரிகையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் எங்களின் பதிவுகளைக் கவனித்து வந்தனர் என்பது எங்களின் பணியை மேலும் ஊக்குவிப்பதாக இருந்தது. மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

ஊடக விமர்சனக் குழுவினர்.


மே 07 08 ஆகிய நாட்களில் வெளி வந்த செய்திகள் குறித்த பதிவு:

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப் பட்டதாக பத்திரிகைகள் புகார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் சாதகமாக வாக்களிக்கச் செய்யும் வகையில் வாக்காளர்களுக்குப் பணம் கையூட்டாக வழஙகப் பட்டிருப்பதாக தினகரன் தவிர்த்த 3 பத்திரிகைகளுமே பதிவு செய்துள்ளன. ஆனால், இது போன்ற ஒரு மிகவும் சீரியசான ஒரு விஷயத்தைக் கூட தொழில் முறை நேர்த்தியுடன் பதிவு செய்ய 3 பத்திரிகையுமே முயற்சிக்க வில்லை என்பது கவனிக்கத் தக்கது.

தினத் தந்தி 8 5 2006 ப.20

குடம், புடவை, பேனாவுக்குள் மறைத்து வைத்து பணம் சப்ளைஅரசியல் கட்சிகள் புகார்: இரவு முழுவதும் போலீஸ் கண்காணிப்பு,

என்ற தலைப்புடன் தினத்தந்தியில் ஒரு செய்தி பதிவு செய்யப் பட்டுள்லது. அந்தச் செய்தியின் முகப்புரை இது:சென்னையில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு குடம், புடவை, பேனா ஆகியவற்றுக்குள் பணத்தை மறைத்து வைத்து கொடுப்பதாக நேற்றிரவு போலீசுக்கு புகார்கள் வந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் 07 05 2006 ப.16

குவார்ட்டர் பாட்டில், கமகம பிரியாணியுடன் ஓட்டு வேட்டையாட கரை வேட்டிகள் தயார்

என்ற தலைப்புடன்வெளியாகியுள்ள இந்தச் செய்தியிலும், யாரையும் மேற்கோள் காட்டாமல் இந்த செய்தி விலாவாரியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

"குவார்ட்டர்' பாட்டில், "கமகம' பிரியாணியுடன் ஓட்டு வேட்டையாட கரை வேட்டிகள்
தயார்
சென்னை: தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் "கிக்'
ஏற்றும் குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் "கமகம'க்கும் பிரியாணி பொட்டலங்களுடனும்
வாக்காளர்களை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி விட்டன. அனைத்து ஒயின்
ஷாப்புகளுக்கும் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு
தினங்களுக்கு முன்னதாகவே, குவார்ட்டர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்து
மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன.
இருப்பினும், நேற்றும் சில டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் அங்கு கரை
வேட்டிகள், வேன்களிலும் ஆட்டோக்களிலும் குவார்ட்டர் பாட்டில்களை வாங்கிச் செல்வதைக்
காண முடிந்தது.
எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய பிரதான கட்சிகள்
மட்டுமின்றி பா.ஜ., தே.மு.தி.க., மற்றும் சுயேச்சைகள், உதிரிக்கட்சிகள் களத்தில்
உள்ள காரணத்தால் அனைத்துக் கட்சிகளுமே வாக்காளர்களைக் கவர பல்வேறு கவர்ச்சிகரமான
அறிவிப்புக்களை நாளுக்குநாள் அறிவித்து வருகின்றன. இது தவிர வாக்காளர்களை சந்தித்து
ஓட்டுக்களை "மானாவாரியாக' பெற்று விடுவதற்காக அனைத்துக் கட்சிகளுமே "பகீரத
பிரயத்தனம்' செய்து வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை நகரில்
உள்ள 14 தொகுதிகளுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளிலிருந்து விஸ்கி, ரம், வோட்கா, பீர், ஒயின் ஆகியவற்றை வேட்பாளர்கள் கொள்முதல் செய்து ரகசிய இடங்களில் மறைத்து வைத்துள்ளனர். தேர்தல் தினத்தன்று வாக்காளர்களுக்கு "சப்ளை' செய்யும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர். குறிப்பாக, ரூ.49 முதல் ரூ.52 வரை விலையுள்ள ஆர்டினரி பிராண்ட் (180 மி.லி.,), ரூ.60 முதல் ரூ.62 வரை விலையுள்ள மீடியம் பிராண்ட் (180 மி.லி.,) மற்றும் ரூ.70 முதல் ரூ.123 வரையுள்ள பிரிமியம் பிராண்ட் பாட்டில்களுக்குப் பிரத்யேக மவுசு ஏற்பட்டுள்ளது. அதிகமாக விற்பனையாகும் ஓல்டு மங்க், மானிட்டர் பிராந்தி, மெக்டெவல், ஜானெக்ஷா, கிங் பிஷர், கோல்கொண்டா, சிவா ரம், பேக் பைப்பர், பிளாக் நைட் வகையறாக்கள் அதிகமாக கரை வேட்டிக்காரர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மது வகைகளுமே ஸ்டிராங்க், எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் மற்றும் சூப்பர் ஸ்ட்ராங்க் என்று மூன்று ரகங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பிரதான கட்சிகளுமே சரக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து விட்டதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கையிருப்பில் வைக்க வேண்டிய அளவை விட மிகக் குறைவாகவே சரக்குகள் உள்ளன. அதே போல் வாக்காளர்களுக்கு குவார்ட்டர் பாட்டில்களுடன் பிரியாணி பொட்டலங்களை வழங்கவும் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ஆங்காங்கே உள்ள பிரியாணி கடைகளில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி ஆகியவற்றை செய்து பொட்டலம் கட்டித் தருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தி.நகர், எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சைதாப்பேட்டை பகுதிகளில் பல கடைகளில் பிரியாணி செய்து தருவதற்கும் "ஆர்டர்கள்' கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்று வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து குவார்ட்டர் பாட்டில்களையும், பிரியாணி பொட்டலங்களையும் கொடுக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தினமணி 08 05 2006 ப. 5
வாக்களர்களுக்குப் பணம் அளிப்பு? பார்வையாளர்கள் தீவிரக் கண்காணிப்பு

ன்ற தலைப்பில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இந்தச் செய்தியின் முகப்புரை:திருநெல்வேலி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் கூறப் படும் புகார்கள் குறித்து மத்திய தேர்தல் பார்வையாளர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ....

தினமலரில் தொடரும் ஆதாரமற்ற செய்திகள்...

செய்தித் தாளில் இடம் பெறும் செய்திகளை வரலாற்றின் முதல் படி என்று அறிஞர்கள் குறிப்ப்டிவர். அதனால், அதை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பதிவு செய்ய வேண்டிய கடமை செய்தியாளர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும் உண்டு. குறிப்பாக செய்தியை வதந்தியிலிருந்து வேறு படுத்திக் காட்டும் துணிவும், நேர்மையும் பத்திரிகையாளர்களிடம் இருக்க வேண்டும். இது பத்திரிகைக்கு நம்பகத் தன்மையையும் அதிகரிக்க உதவும்.

தினமலர் மே 7 2006 ப.1

விஜய டி ராஜேந்தருக்கு திமுக ஆதரவுகூட்டணி கட்சிகளின் காலை வார முடிவு

என்ற தலைப்புடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
விஜய டி ராஜேந்தரின் லட்சிய திமுக போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் காலை வார திமுக தயாராகி வருகிறது என்பது தான் இந்தச் செய்தியின் சாராம்சம். இது ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் என்றோ, இது ஒரு ஆதாரமற்ற குற்றச் சாட்டு என்றோ எளிதில் ஒதுக்கி விட முடியும். இந்தச் செய்தி முழுக்க எவரையும் உரிமையாக்கிக் கூறப் படவில்லை. இதே போல 8 5 2006 அன்று ஒரு ரூபாயில் ஒரே இந்தியா திட்டம் படு தோல்விசில ஆயிரம் பேர் கூட திட்டத்தில் சேர முன் வரவில்லை என்ற தலைப்புடன் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இதுவும் ஏறத் தாழ ஒரு அவதூறுக்குச் சமமானது. தயாநிதி மாறன் மீதான கோபத்தின் வெளிப்பாடாக இந்தச் செய்தியை வாசகர்கள் எளிதில் இனம் கண்டு கொள்வார்கள்.

தினகரன், 07 05 2006 ப15

மேடை ஏறவில்லை ஜெயலலிதாசென்னையிலும் கூட்டம் இல்லை

என்ற தலைப்பில் ஒரு செய்தி. இதில் ஜெயலலிதா மேடை ஏறவில்லை என்ற தகவலை வைத்துக் கொண்டு, சென்னையிலும் கூட்டம் இல்லை என்ற தகவல் மிகப் படுத்திக் கூறப் பட்டிருப்பதாகக் கருத இடமிருக்கிறது. போட்டி அரசியலில், தினகரன் இப்படி செய்தி வெளியிடுகிறதோ என்று கருத இடமிருக்கிறது. தினகரன், இதற்கு முன்பு வெளியிட்ட புகைப் படங்கள் நம்பும் படியாக இல்லை என்பதை ஏற்கனவே ஆதரங்களுடன் இங்கே நிரூபித்திருக்கிறோம்.

பத்திரிகைகளில் தகவல்களை மக்கள் முன் வைப்பதை விடுத்து, நேரடியாகப் பிரச்சாரத்திலும், தாமே அரசியல் நடத்துவதிலும் தீவிரமாக இறங்கி விடுகின்றன. தினகரனும், தினமலரும் தீவிர நிலைப்படுகளை எடுத்து, சிலரை ஆதரித்து, சிலரை இருட்டடிப்புச் செய்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.தினத் தந்தி அதிமுகவையும், நாடர்களையும் பாதுகாப்பதற்காக அவதாரம் எடுத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தையே ஏற்படுத்துகிறது.


தினமணி, இந்த 3 பத்திரிகைகளை ஒப்பிடுகையில் கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம் என்றாலும், முழுமையான ஒரு நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட பத்திரிகையாகக் கொள்ள இடமில்லை என்பதும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. தமிழின் தரமான பத்திரிகை இனிதான் வளர்த்தெடுக்கப் படவேண்டும் என்ற குறிப்புடன்விடை பெறுகிறோம்

ஊடக விமர்சனக் குழுவினர்