Sunday, April 09, 2006

அறிக்கைகளைத் திரித்துவெளியிடுவது அறமா?

தி மு க தலைவர் சனிக்கிழமை வெளியிட்ட கேள்வி பதில் வடிவிலான அறிக்கை இன்று நான்கு நாளிதழ்களிலும் நான்கு விதமாக வெளி வந்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர், தேர்தல் வேளையில், தேர்தல் பிரசாரம் தொடர்பாக வெளியிடும் ஒரு அறிக்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், 4 நாளிதழ்களை வாசித்தாலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

தனது பத்திரிகைக்கேற்ப எடிட் செய்து (செம்மை செய்து) வெளியிடும் உரிமை உலகின் எந்தப் பத்திரிகைக்கும் உண்டு. ஆனால், செம்மை செய்வதாகச் சொல்லி, கருத்துக்களை இருட்டடிப்பு செய்வது அறமா? நேற்று, கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை 4 நாளிதழ்களும் எப்படி வெளியிட்டிருக்கின்றன என்று அலசினோம்:

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலப் பிரதி கிடைத்தால் தான் இந்த ஆய்வு முழுமை அடையும். என்றாலும், இந்த வலைப்பூவின் நோக்கமே, 4 நாளிதழ்களையும் ஒப்பிட்டு, அற ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் நாளிதழை அடையாளம் காண முயற்சிப்பது என்பதால், 4 நாளிதழ்களிலும் வெளியானதை ஆதாரமாகக் கொண்டு இங்கு ஆரயப்படுகிறது:

கருணாநிதியின் அறிக்கை கேள்வி பதில் வடிவில் இருந்ததாக 2 நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன. அவரது அறிக்கையில் குறைந்தது 7 கேள்விகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.

1. தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் கூறியிருப்பது பற்றி?
இந்தக் கேள்விக்கான பதிலில் திமுக தலைவர் "முதல்வர் ஜெயலலிதாவுக்கு புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால் ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலே விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள ஜெயலலிதா அந்த கருத்தை ஆதரிப்பாரா?", என்று எழுப்பியுள்ள கருத்து தினத்தந்தியிலும் தினமணியிலும் இடம் பெறவில்லை. தினமலரிலும், தினகரனிலும் இந்த பதில் முழுமையாக இடம் பெற்றிருக்கிறது. தினகாரன் இந்த விஷயத்தையே, இந்த செய்திக்கான முகப்புரையாகத் தந்திருக்கிறது.

2. கேள்வி:- ஒரு கட்சியின் குமரி மாவட்டக் கழகச் செயலாளரிடம் தாங்கள் பேசியதாகவும், அவரை தி.மு.கழகத்தில் சேரும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஒருவர் கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கான பதிலை தினத் தந்தி மட்டுமே வெளியிட்டிருக்கிறது. பிற 3 நாளிதழ்களும் இந்த பதிலை எடிட் செய்து விட்டன.

3. முரசொலி மாறனின் மகன்கள் பல லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள கார்களில் பயணம் செய்வதாக ஒருவர் தொடர்ந்து கூறி வருகிறாரே? என்ற கேள்விக்கான பதிலை தினமணி எடிட் செய்து விட்டது. தினமலர் இந்த விஷயத்தைத் தான் இந்தச் செய்திக்கான முகப்புரையாக வழங்கியிருக்கிறது.

4.தயாநிதி மாறன் நடத்துகின்ற நிறுவனத்திற்குப் பொறுப்பான அரசுத்துறையை அவரே ஏற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே? இந்தக் கேள்விக்கான பதிலையும் தினமணி எடிட் செய்து விட்டது.

5. ஜெயலலிதா கூட்டத்திற்கு கூட்டம் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறுகிறாரே? இந்தக் கேள்வியை தினத் தந்தி எடிட் செய்து விட்டது. தினமணி இந்த விஷயத்தைத் தான் முகப்புரையாக்கியிருக்கிறது.

6. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் 10 மணிக்கு மேல் எங்கேயும் பேசக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியதற்கு காரணம் தி.மு.க., தான் என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? என்ற கேள்விக்கான பதில் தினத் தந்தியில் இடம் பெறவில்லை. பிற 3 நாளிதழ்களும் இந்தக் கேள்விக்கான பதிலை வெளியிட்டிருக்கின்றன.

7. தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத் தொகை கிடைப்பதை கருணாநிதி தடுத்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்பது தொடர்பான கேள்விக்கு தினமணி மட்டுமே பதிலை வெளியிட்டிருக்கிறது.

இந்த செய்தியை ஆய்வு செய்த போது நமக்கு எழும் கேள்விகள்:
செம்மை செய்வது என்பது என்ன? தகவல்களைச் சரி பார்த்து, இடம் இருக்கும் அளவிற்கு ஏற்ப செய்திகளைச் சுருக்கித் தருவதில்லையா? சப் எடிட்டர், தன் பத்திரிகை முதலாளிக்குப் பிடிக்காத சொற்களை எடிட் செய்து, வெளியிடுவது தான் இன்று கடிஅப்பிடிக்கப் படும் வழிமுறையா?

செய்திகளைத் தெரிவு செய்வதிலும், முறையாகச் செம்மை செய்வதிலும், ஏதேனும் ஒழுக்க விதிகள் கடைப் பிடிக்கப் படுகின்றனவா என்ற கேள்வி பலமாக எழுகிறது.

எமது இந்த ஆய்விற்கு ஆதாரமாக, 4 நாளிதழ்களும் இந்தச் செய்தியை வெளியிட்ட படி, கீழே ஒவ்வொன்றாகத் தருகிறோம். அதையடுத்து இன்றைய வழக்கமான பிற ஆய்வுகளும் இடம் பெறுகின்றன.

தினகரனில் வெளிவந்த செய்தி இது:



___________

தினத்தந்தியில் இடம் பெற்ற செய்தி இது:


தி.மு.க. தேர்தல் அறிக்கை:
காங்கிரஸ் கருத்து பற்றி கருணாநிதி விளக்கம்


சென்னை, ஏப்.9-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் கூறிய கருத்து பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி எழுதி உள்ள கேள்வி-பதில் வருமாறு:-
தேர்தல் வாக்குறுதி

கேள்வி:-
தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் கூறியிருப்பது
பற்றி?

பதில்:- ஒரு கட்சியின் சார்பாக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் உள்ளவை அந்தக் கட்சியைத்தான் கட்டுப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு அணியில்
கூட்டணியாக இருக்கிறோம் என்பதற்காக அந்த அணியிலே உள்ள ஒரு கட்சியின் தேர்தல்
அறிக்கையில் உள்ளவை அனைத்தும், அந்த அணியிலே உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடானவையாக இருக்க முடியாது.
கேள்வி:- ஒரு கட்சியின் குமரி மாவட்டக் கழகச்
செயலாளரிடம் தாங்கள் பேசியதாகவும், அவரை தி.மு.கழகத்தில் சேரும்படி கேட்டுக்
கொண்டதாகவும் ஒருவர் கூறியிருக்கிறாரே?
பதில்:- அவரிடம் நான் எப்போது, எப்படிப்
பேசினேன்? தி.மு.கழகக் கூட்டணியிலே அவர்கள் ஒன்றாக இருக்கும்போது, அவருக்கு நான்
வேலையற்றுப் போய் என் கட்சியிலே சேருங்கள், இடம் தருகிறேன் என்று கேட்க வேண்டிய
அவசியம் ஏதாவது இருக்க முடியுமா?
கார்கள்
கேள்வி:- முரசொலி மாறனின் மகன்கள்
பல லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள கார்களில் பயணம் செய்வதாக ஒருவர் தொடர்ந்து கூறி
வருகிறாரே?
பதில்:- அவர்கள் அரசியல் நடத்தி, அதிலே சம்பாதித்து அந்தக் கார்களை வாங்கவில்லையே. இளம் வயதிலேயே தனியாகத் தொழில் நடத்தி, அதிலே சம்பாதித்த
தொகையிலிருந்து அந்தக் கார்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
கேள்வி:-
தயாநிதி மாறன் நடத்துகின்ற நிறுவனத்திற்குப் பொறுப்பான அரசுத்துறையை அவரே
ஏற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே?
பதில்:- தயாநிதி மாறன் தபால் துறை,
தொலைபேசித் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றுக்கான மத்திய அமைச்சர். இதிலே
குறிப்பிட்டுள்ள எந்தத் துறை சம்மந்தமான தொழிலையும் அவரோ, அவருடைய குடும்பத்தினரோ
நடத்தவில்லை. அவருடைய சகோதரர் நடத்துகின்ற தொழில் தொலைக்காட்சி நிறுவனம். அதற்கான
மத்திய அமைச்சர் தாஸ் முன்ஷி. அவர்தான் பத்திரிகை, டி.வி., ரேடியோ ஆகிய மூன்று துறைகளுக்கான அமைச்சர்.
இவ்வாறு கருணாநிதி கூறியிருக்கிறார்.
Source : Daily Thanthi
__________________________

தினமலரில் இடம் பெற்ற செய்தி இது:

இளம் வயதில் சம்பாதித்த பணத்தில் கார் வாங்கியுள்ளனர் மாறன் மகன்கள் சொல்கிறார் கருணாநிதி


சென்னை: ""மாறனின் மகன்கள் இளம் வயதில் தனியாக தொழில் நடத்தி சம்பாதித்த பணத்தில் வாங்கிய கார்களை பயன்படுத்துகின்றனர்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களை சந்திக்காத நாட்களில் நிருபர்கள் கேள்வி கேட்பது போன்று அவரே கேள்வி தயார் செய்து அதற்கு பதிலும் அளித்து
பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பார். அப்படி அவர் நேற்று அனுப்பிய கேள்விபதில் அறிக்கை:
ஜெயலலிதா கூட்டத்திற்கு கூட்டம் பஸ் கட்டணத்தை
உயர்த்தவில்லை என்று கூறுகிறாரே?
கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த
மூன்றாவது மாதமே மினி பட்ஜெட் போல ஏராளமான பொருட்களின் மீதெல்லாம் வரியை உயர்த்திய
நேரத்தில் மின் கட்டணம், பஸ் கட்டணத்தை, ரயில் கட்டணத்தை விட அதிக அளவிற்கு உயர்த்தினார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறியதை
ஜெயலலிதா தனக்கு கிடைத்த ஆதரவு செய்தி என்பதைப் போல சொல்லியிருக்கிறாரே?
ஒரு கட்சியின் சார்பாக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் உள்ளவை கட்சியைத்தான்
கட்டுப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு அணியில் கூட்டாக இருக்கிறோம் என்பதற்காக
அந்த அணியிலே உள்ள ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளவை அனைத்தும் அந்த அணியிலே உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடானவையாக இருக்க முடியாது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால் ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலே விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக றிப்பிடப்பட்டிருக்கும். அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள ஜெயலலிதா அந்த கருத்தை ஆதரிப்பாரா? தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் 10 மணிக்கு மேல் எங்கேயும் பேசக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியதற்கு காரணம் தி.மு.க., தான் என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? முதல்வரின் அந்தக் கூற்று பொய். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தான் தேர்தல் கமிஷன் இரவு 10 மணியோடு பிரசாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணை பிறப்பித்தள்ளதாகவும் ஜெயலலிதாவிற்கு தேர்தல் ஆணையம் உடனடியாக பதில் அளித்துள்ளது. இரவு 11 மணி வரை பேசலாம் என்பதை கருத்தில் கொண்டு தான் தனது சுற்றுப் பயணம் வகுக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளாரே? முதல்வருக்காக சுற்றுப்பயணம் வகுத்த அதிகாரிகளும், முதல்வர் அலுவலகமும் எந்த அளவிற்கு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைக் கூட நன்றாகத் தெரிந்து கொள்ளாமல் செயல்பட்டிருக்கின்றனர் என்பதைத் தான் ஜெயலலிதாவின் பதில் நமக்கு தெளிவாக்குகின்றது. மாறனின் மகன்கள் பல லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள கார்களில் பயணம் செய்வதாக ஒருவர் தொடர்ந்து புலம்பி வருகிறாரே? அவர்கள் அரசியல் நடத்தி, அதிலே சம்பாதித்து அந்தக் கார்களை வாங்கவில்லை. இளம் வயதிலேயே தனியாகத் தொழில் நடத்தி அதிலே சம்பாதித்த தொகையிலிருந்து அந்தக் கார்களை வாங்கி பயன்படுத்துகின்றனர் என்றால் இவருக்கு ஏன் வயிறு பற்றி எரிகிறது? இதுவா அரசியல்? எவர் எந்தக் காரில் போகிறார் என்று தனிப்பட்ட முறையில் பேசுவதா தேர்தல்? சாதனைகளைச் சொல்லி பேசிட வக்கற்ற நிலையில் சண்ட மாருதம் என்ன வேண்டிக் கிடக்கிறது? தயாநிதிமாறன் நடத்துகின்ற நிறுவனத்திற்குப் பொறுப்பான அரசுத் துறையை அவரே ஏற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே? மாறனின் சகோதரர் நடத்துகின்ற தொழில் தொலைக் காட்சி நிறுவனம். அதற்கான மத்திய அமைச்சர் தாஸ்முன்ஷி. அவர் தான் பத்திரிகை, டிவி, ரேடியோ ஆகிய மூன்று துறைகளுக்குமான அமைச்சர். இந்த விவகாரத்தைக் கூடத் தெரியாதவர் தான் 18 ஆண்டுகள் பார்லிமென்ட்டில் உறுப்பினராக இருந்திருக்கிறார். ஆத்திரம் அறிவுக்கு சத்துரு. இவ்வாறு கருணாநிதி எழுதியுள்ளார்.

Source : Dinamalar
_________
தினமணியில் இடம் பெற்ற செய்தி இது:

பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என ஜெ. சொல்வது உண்மையல்ல: கருணாநிதி அறிக்கை


சென்னை, ஏப்.9: அதிமுக ஆட்சியில் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவதில் உண்மையில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த மூன்றாவது மாதத்தில் மினி பட்ஜெட் போல ஏராளமான பொருள்களின் மீது வரியை உயர்த்திய நேரத்தில், மின் கட்டணம், பஸ் கட்டணம் ஆகியவற்றையும் உயர்த்தினார்.
ரயில் கட்டணத்தைவிட அதிகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை யாரும் மறுக்க முடியாது.
தேர்தல் அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளைக் கட்டுப்படுத்தாது என்பது உண்மை.
கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் வாக்குறுதி மற்ற கட்சிகளுக்கு உடன்பானதாக இருக்க வேண்டும் என்று கிடையாது. இன்னும் சொல்லப் போனால் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள சில விஷயங்களை, அக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் அதிமுக
ஆதரிக்குமா?
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் இரவு 10 மணிக்கு மேல் பேசக் கூடாது என்ற முடிவு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் எடுக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. நான் சொல்லி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஜெயலலிதா கூறுவது தவறான தகவல். தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத் தொகை கிடைப்பதை கருணாநிதி தடுத்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 25-11-2005-ல் நடந்த திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தமிழக அரசு கோரியிருக்கும் ரூ.1742 கோடி போதாது என்பதால், தமிழக அரசு கோரும் கூடுதல்
நிதியை உடனடியாக முறையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
26.11.2005-ல் நிருபர்கள் சந்திப்பில், நிவாரணப் பணிகள்
திருப்தி அளிக்கிறதா என கேட்டனர். அப்போதுகூட, இதை நாங்கள் அரசியல் ஆக்க விரும்பவில்லை என்றும், தமிழக அரசு கேட்கும் தொகையை மத்திய அரசு அளித்து உதவ வேண்டும் என்றும் கூறினேன்.
எனவே, தமிழகத்துக்கு மத்திய அரசு நிவாரணத் தொகை
கொடுப்பதை நான் தடுத்ததாகச் சொல்லப்படுவது உண்மைக்கு மாறானது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
Source : Dinamani

_________________

ஒரு ஒப்பீட்டிற்காக தி இந்து நாளிதழில் இதே பேட்டி எவ்வாறு வெளியிடப் பட்டிருக்கிறது என்று ஒப்பிட்டோம். தி இந்து நாளிதழ் இரண்டு விஷயங்களை மட்டும் வெளியிட்டிருக்கிறது என்பதைக் கண்டோம்.

Karunanidhi refutes Jayalalithaa's charge
Says DPA urged Centre to sanction adequate funds for flood relief

CHENNAI: Dravida Munnetra Kazhagam president M. Karunanidhi on Saturday refuted Chief Minister Jayalalithaa's charge that the Democratic Progressive Alliance parties prevented the sanctioning of adequate Central funds for flood relief in the State last year.
Immediately after the Central team visited the flood-hit areas in the State, the DPA adopted a resolution urging the Centre to sanction Rs. 1,742 crore to Tamil Nadu, as demanded by the State Government, Mr. Karunanidhi said. The resolution also said the Centre should not hesitate to sanction additional funds if the State Government felt that they were not sufficient to provide adequate relief to the flood-hit people, a party release said.
Denying the Chief Minister's charge that the DMK was responsible for bringing the deadline for campaigning from 11 p.m. to 10 p.m., Mr. Karunanidhi said the decision was taken by the Election Commission at the instance of the Supreme Court and he had no role in it.
The Chief Minister was making the charge only to mislead people, he said.
Source : THE HINDU, http://www.hindu.com/2006/04/09/stories/2006040914920600.htm

இன்றைய பிற ஆய்வுகள்:

தினமலரிலும் தினமணியிலும் தினம் இன்று தலைவர்கள் எங்கே பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது பற்றிய குறிப்பு தனி செய்தியாக இடம் பெறுகிறது. மறு நாள், அந்தத் தலைவர்கள் அந்தந்த ஊர்களில் பேசிய பேச்சுக்கள் இடம் பெற்று வருகின்றன. ஆனால், இது வரை ஒரு நாள் கூட திருமாவளவன் என்ன பேசினார் என்ற தகவல் தினமலரிலோ, தினமணியிலோ இடம் பெற்றதில்லை. புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாக இது வரை 4 பத்திரிகைகளும் ஒரு வரி கூட செய்தி வெளியிட்டதில்லை.

டி ஜே எஸ் ஜார்ஜ் "எப்போது வரும் விடிவு காலம்", என்ற கட்டுரை தினமணியில் இடம் பெற்றுள்ளது. அரசியல் கட்சிகள், வாக்காளர்களை எந்த அளவுக்கு முட்டாள்கள் எனக் கருதுகின்றன என்பதற்கு அவற்றின் தேர்தல் அறிக்கைகளை ஒரு நோட்டம் விட்டாலே போதும், என்ற அடுக்குத் தலைப்புடன் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது. அண்மையில் வந்த ஒரு நியாயமான, பக்கச் சார்பற்ற ஒரு கட்டுரையாக இதைக் குறிப்பிடலாம். நாம் ஆய்வைத் தொடங்கிய பின் இது போன்ற ஒரு கட்டுரையை இது வரை எந்த நாளிதழிலும் இடம் பார்க்க முடிந்ததில்லை.

இன்று ராமதாசிடம் தினமணியும், தி இந்து நாளிதழும், தனித் தனியாக விரிவாகப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளன.
ஸ்டாலின் அளித்துள்ள சிறப்பு பேட்டி, தினகரனில் 8ஆம் பக்கத்தில் வெளியாக்யுள்ளது. ஜெயலலிதா திருந்தவில்லை, திருந்தியது போல நடிக்கிறார் என்பது இந்த பேட்டி செய்திக்கு தரப்பட்டுள்ள தலைப்பு.
"அதிமுகவின் அதிகார பலத்தை முறியடிப்போம்", என்ற வாசனின் சிறப்புப் பேட்டி தினமணியின் 9ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.


அரசியல் கட்சிக்ளின் இலவச கவர்ச்சி அறிவிப்புகளால் கஜானா காலி ஆவதால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடையாது. வளர்ச்சிக்குத் தடை என்ற ஆய்வுக் கட்டுரை, பொதுவாக மானியங்களை எதிர்த்து வாதிடுகிறது. (தினமலர் ப. 8)
ஜெயலலிதா இன்று முதல் 7 நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் 930 முதல் 10 மணி வரை தனது ஜெயா டிவியில் சிறப்புப் பேட்டி வழங்க இருப்பதாக தினத் தந்தியில் இடம் பெற்றுள்ள ஜெயா டிவியின் விளம்பரம் குறிப்பிடுகிறது.
விஜய்காந் வைகோவின் பேச்சுக்கள் இன்று தினமலரில் 5 தனித் தனி செய்திகளாக இடம் பெற்றுள்ளன. நெப்போலியன் போல வெற்றி பெறுவோம் என்று விஜயகாந் பேசிய பேச்சு தினமணியில் 6ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தோல்வி பயத்தால், தேர்தலை தள்ளி வைக்க திமுக சதி, ஜெ குற்றச்சாட்டு என்ற செய்தி, நேற்று (சனிக்கிழமை) மதுரையில் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின் அடிப்படையில் அமைந்தது. இதை தினமணி லீட் ஸ்டோரியாக்கி இருக்கிறது. தின மலர் முதல் பக்கத்து நங்கூரமாக வெளியிட்டிருக்கிறது. தினகரனில் மிகச் சுருக்கமாக 6ஆம் பக்கத்தில் வெளியிடப் பட்டிருக்கிறது. தினத்தந்தியின் 28 ஆம் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிரச்சார வண்ணப்படங்களுடன் இச்செய்தி வெளியிடப் பட்டிருக்கிறது.

அகில இந்திய பார்வார்ட் பிளாக் தமிழக தலைவர் கார்த்திக் தலைவர்கள் யாரையும் எதிர்த்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று கூறிய பேட்டியும், வேட்பாளர் பட்டியலும் தினத் தந்தியில் 24 ஆம் பக்கத்திலும், தினகரனில் முதல் பக்கத்திலும், தினமணியில் 11 ஆம் பக்கத்திலும், தினமலரில் 3 ஆம் பக்கத்திலும் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா இன்று முதல் 3 நாட்களாகப் பிரச்சாரம் செய்யவிருக்கிறார் என்ற செய்தி தினத்தந்தியின் லீட் ஸ்டோரியாக்கப் பட்டுள்ளது. பிற 3 நாளிதழ்களும் இச்செய்தியை விரிவாகவே வெளியிட்டுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பேசிய பேச்சுக்கள் தினகரனில் மட்டும் இடம் பெற்றுள்ளன. தவிர, செது சமுத்திரம் பற்றி வைகோ கேள்வி எழுப்பாததேன் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயல்ர் ராஜவின் பேச்சு தினமணியில் மட்டும் இடம் பெற்றுள்ளது.

No comments: