Monday, October 28, 2013

தூக்கினைக் கொண்டாடி தரம் தாழ்த்திக் கொண்ட தமிழ் நாளிதழ்கள்

தூக்கினைக் கொண்டாடி தரம் தாழ்த்திக் கொண்ட தமிழ் நாளிதழ்கள்  

பெருமளவு விற்பனையாகும் முன்னணி  தமிழ் நாளிதழ்களில், அஜ்மல் கசாப்பிற்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்கு தண்டணை குறித்த செய்திகள் வெளியிடப்பட்ட விதம் குறித்து ஆராய்ந்தால், தமிழ் நாளிதழ்கள் கட்டமைக்கும் சமூகம், நாகரீகச் சூழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றதா என்ற அச்சம் மேலிடுகின்றது.
இச்செய்தியை காய்தல் உவத்தல் இன்றி, மிகச் சரியாக அறிக்கையிட்டது பிபிசி தமிழோசை மட்டுமே:
 "மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டபோது உயிருடன் பிடிபட்ட துப்பாக்கிதாரி முகமது அஜ்மல் அமீர் கஸாப் புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தான் பிரஜையான கஸாப்பின் கருணை மனுவை இந்த மாதத் துவக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்ததை அடுத்து, அவர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். புதன்கிழமை காலை 7.30 மணிக்கு புனே நகரில் உள்ள எரவாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.....".  இந்தச் செய்தியில்  தீவிரவாதி என்றோ, பயங்கரவாதி என்றோ அடைமொழியிட்டு செய்தி அறிக்கையிடப் படவில்லை.
தமிழ் முன்னணி நாளிதழ்கள் இச்செய்தியை அறிக்கையிட்டுள்ள விதத்தைக் கவனிப்போம்:
அஜ்மல் கசாப்பை "பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு பயங்கரவாதியான அஜ்மல் கசாப்"  என்று குறிப்பிட்டது தினமணி.
"உலகையே உலுக்கிய மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்" என்று தினகரன் வர்ணித்திருந்தது.  தினத்தந்தியோ, "மும்பை தாக்குதல் தீவிரவாதி", என்று குறிப்பிட்டிருந்தது.
"ஈவு இரக்கமின்றி 166 பேரைக் கொன்று குவித்த பாகிஸ்தானின் லஸ்கர் -இ-தொய்பா பயங்கரவாதிகளில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்" என்று நீண்ட அடைமொழியுடன் கசாப்பைக் குறிப்பிட்டது தினமலர்.
முன்னணித் தமிழ் நாளிதழ்கள் குறைந்தது மூன்று பக்கங்களிலாவது இந்தச் செய்தி தொடர்பான படங்கள், கிராபிக்ஸ், துணுக்குகள் என்று இந்தச் செய்தியை விரிவாகக் கொண்டாடியுள்ளன.    இந்த 4 நாளிதழ்களுமே, தூக்கு தண்டணை நிறைவேற்றப்பட்ட பூனா நகரில் செய்தியாளரைக் கொண்டிருக்கவில்லை. இவை நான்குமே,  பிடிஐ அல்லது யுஎன்ஐ என்ற இரு செய்தி நிறுவனங்கள் தரும் செய்தியை மொழி பெயர்த்தே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
தி இந்து நாளிதழ்  தனது முதல் பக்கத்தில் அரைபக்கத்திற்கும் மேல் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியில் எங்குமே தீவிரவாதி என்ற சொல்லையோ, பயங்கரவாதி என்ற சொல்லையோ பயன்படுத்தவில்லை.
உலகில் 110 நாடுகள் மரண தண்டணையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று ஐ நா மன்றத்தில் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, இந்தியா இந்த மரண தண்டணையை நிறைவேற்றியுள்ளது. தமிழ்ச் சமூகம் இதனைக் கொண்டாடிக் கொண்டுமிருக்கின்றது.
தமிழ்ப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக அஜ்மல் கசாப்பின் தூக்கினை விவரித்துக் கொண்டாடும் அதே வேளையில்,  நாகரீக சமூகங்கள் மரண தண்டணையை ஏன் ஒழிக்க விரும்புகின்றன என்பது பற்றிய விவாதத்தைத் தமிழ் மக்களிடம் தொடங்கி வைத்திருக்கும் அரிய வாய்ப்பினைத் தவற விட்டிருக்கின்றன.
தூக்கு தண்டணை நிறைவேற்றப்படக்  காரணமாக அமைந்த மும்பைத் தாக்குதலை கசாப் திட்டமிட்டவரல்ல என்பது உலகறிந்த விஷயம்.  அதனால் தான், அவரை துப்பாக்கிதாரி என்ற அடைமொழியுடன் நிறுத்திக் கொண்டுள்ளது பிபிசி தமிழோசை.  "அவரைத் தூக்கில் போடாமல் இருந்திருந்தால், இந்தச் செயலைச் செய்யத் தூண்டியவர்கள் பற்றி அவர் இன்னும்  விரிவாகச் செல்லியிருக்கலாம் என்பதையும்", ஒரு ஆங்கில நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
2000 பேருக்கும் அதிகமானோர் பலியாகக் காரணமாக இருந்த இன மோதல்களைத் திட்டமிட்டவர்களும், செயல்படுத்தியவர்களும் குற்றவாளிகளாகவோ, தீவிரவாதிகளாகவோ, பயங்கரவாதிகளாகவோ கருதப் படவில்லை என்பதையும் ஒரு விவாத்ததில் ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான ஆரோக்கியமான விவாதங்களை எழுப்பி, நாகரீக சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து, பக்குவப்படாத நிலையில் செய்திகளை வெளியிட்டு, உலக அரங்கில் தமிழ் முன்னணி நாளிதழ்கள் தம்மைத் தாமே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளன.

No comments: