Monday, October 28, 2013

தூக்கினைக் கொண்டாடி தரம் தாழ்த்திக் கொண்ட தமிழ் நாளிதழ்கள்

தூக்கினைக் கொண்டாடி தரம் தாழ்த்திக் கொண்ட தமிழ் நாளிதழ்கள்  

பெருமளவு விற்பனையாகும் முன்னணி  தமிழ் நாளிதழ்களில், அஜ்மல் கசாப்பிற்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்கு தண்டணை குறித்த செய்திகள் வெளியிடப்பட்ட விதம் குறித்து ஆராய்ந்தால், தமிழ் நாளிதழ்கள் கட்டமைக்கும் சமூகம், நாகரீகச் சூழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றதா என்ற அச்சம் மேலிடுகின்றது.
இச்செய்தியை காய்தல் உவத்தல் இன்றி, மிகச் சரியாக அறிக்கையிட்டது பிபிசி தமிழோசை மட்டுமே:
 "மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டபோது உயிருடன் பிடிபட்ட துப்பாக்கிதாரி முகமது அஜ்மல் அமீர் கஸாப் புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தான் பிரஜையான கஸாப்பின் கருணை மனுவை இந்த மாதத் துவக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்ததை அடுத்து, அவர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். புதன்கிழமை காலை 7.30 மணிக்கு புனே நகரில் உள்ள எரவாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.....".  இந்தச் செய்தியில்  தீவிரவாதி என்றோ, பயங்கரவாதி என்றோ அடைமொழியிட்டு செய்தி அறிக்கையிடப் படவில்லை.
தமிழ் முன்னணி நாளிதழ்கள் இச்செய்தியை அறிக்கையிட்டுள்ள விதத்தைக் கவனிப்போம்:
அஜ்மல் கசாப்பை "பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு பயங்கரவாதியான அஜ்மல் கசாப்"  என்று குறிப்பிட்டது தினமணி.
"உலகையே உலுக்கிய மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்" என்று தினகரன் வர்ணித்திருந்தது.  தினத்தந்தியோ, "மும்பை தாக்குதல் தீவிரவாதி", என்று குறிப்பிட்டிருந்தது.
"ஈவு இரக்கமின்றி 166 பேரைக் கொன்று குவித்த பாகிஸ்தானின் லஸ்கர் -இ-தொய்பா பயங்கரவாதிகளில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்" என்று நீண்ட அடைமொழியுடன் கசாப்பைக் குறிப்பிட்டது தினமலர்.
முன்னணித் தமிழ் நாளிதழ்கள் குறைந்தது மூன்று பக்கங்களிலாவது இந்தச் செய்தி தொடர்பான படங்கள், கிராபிக்ஸ், துணுக்குகள் என்று இந்தச் செய்தியை விரிவாகக் கொண்டாடியுள்ளன.    இந்த 4 நாளிதழ்களுமே, தூக்கு தண்டணை நிறைவேற்றப்பட்ட பூனா நகரில் செய்தியாளரைக் கொண்டிருக்கவில்லை. இவை நான்குமே,  பிடிஐ அல்லது யுஎன்ஐ என்ற இரு செய்தி நிறுவனங்கள் தரும் செய்தியை மொழி பெயர்த்தே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
தி இந்து நாளிதழ்  தனது முதல் பக்கத்தில் அரைபக்கத்திற்கும் மேல் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியில் எங்குமே தீவிரவாதி என்ற சொல்லையோ, பயங்கரவாதி என்ற சொல்லையோ பயன்படுத்தவில்லை.
உலகில் 110 நாடுகள் மரண தண்டணையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று ஐ நா மன்றத்தில் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, இந்தியா இந்த மரண தண்டணையை நிறைவேற்றியுள்ளது. தமிழ்ச் சமூகம் இதனைக் கொண்டாடிக் கொண்டுமிருக்கின்றது.
தமிழ்ப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக அஜ்மல் கசாப்பின் தூக்கினை விவரித்துக் கொண்டாடும் அதே வேளையில்,  நாகரீக சமூகங்கள் மரண தண்டணையை ஏன் ஒழிக்க விரும்புகின்றன என்பது பற்றிய விவாதத்தைத் தமிழ் மக்களிடம் தொடங்கி வைத்திருக்கும் அரிய வாய்ப்பினைத் தவற விட்டிருக்கின்றன.
தூக்கு தண்டணை நிறைவேற்றப்படக்  காரணமாக அமைந்த மும்பைத் தாக்குதலை கசாப் திட்டமிட்டவரல்ல என்பது உலகறிந்த விஷயம்.  அதனால் தான், அவரை துப்பாக்கிதாரி என்ற அடைமொழியுடன் நிறுத்திக் கொண்டுள்ளது பிபிசி தமிழோசை.  "அவரைத் தூக்கில் போடாமல் இருந்திருந்தால், இந்தச் செயலைச் செய்யத் தூண்டியவர்கள் பற்றி அவர் இன்னும்  விரிவாகச் செல்லியிருக்கலாம் என்பதையும்", ஒரு ஆங்கில நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
2000 பேருக்கும் அதிகமானோர் பலியாகக் காரணமாக இருந்த இன மோதல்களைத் திட்டமிட்டவர்களும், செயல்படுத்தியவர்களும் குற்றவாளிகளாகவோ, தீவிரவாதிகளாகவோ, பயங்கரவாதிகளாகவோ கருதப் படவில்லை என்பதையும் ஒரு விவாத்ததில் ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான ஆரோக்கியமான விவாதங்களை எழுப்பி, நாகரீக சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து, பக்குவப்படாத நிலையில் செய்திகளை வெளியிட்டு, உலக அரங்கில் தமிழ் முன்னணி நாளிதழ்கள் தம்மைத் தாமே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளன.

நீதியை நோக்கிய கரடுமுரடான ஒரு பயணம் - வே.வசந்திதேவி

தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு தலித் பெண் 2002ல் போலீஸ் காவலின் போது மரணமடைந்ததை ஒட்டிய சூழல், குற்றவாளிகள் அரசுப் பணியில் உள்ளவர்களாக இருக்கும் போது, நீதியை வென்றெடுப்பதில் உள்ள் கடும் சவால்களை நினைவூட்டுவதாகவே உள்ளது. 

ஒரு தசாப்த ஆண்டுகளுக்குப் பின் நீதி வழங்கப் பட்ட வழக்கு இது. கடந்த மாதம், ராமநாதபுரம் அமர்வு  நீதிமன்றம், காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு,  தமிழ் நாட்டின் பரமக்குடி  காவல் நிலையத்தில் 2002ஆம் ஆண்டில்   கருப்பி என்ற ஏழை தலித் பெண்ணை  கொட்டடியில் கொலை செய்ததற்காக 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்தது. இது  வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்புரையாகும். படுகொலையானவர் அருந்ததியினர் எனப்படும், மிகவும் ஒடுக்கப் பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் இந்தத் தீர்ப்புரை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.

பலியான கருப்பி, வயது 48, ஒரு வீட்டு வேலை செய்யம் பணிப்பெண். அவர் பணி செய்து வந்த வீட்டாரின், திருடுபோன  நகையைக் கருப்பி களவாடி விட்டதாகக் குற்றஞ்சாட்டப் பட்டார். அதற்காக, கருப்பி போலீஸ் கொட்டடியில் 6 நாட்கள் சித்திரவதை  செய்யப் பட்டு விசாரிக்கப் பட்டார். அவரது உடல், 2002 டிசம்பர் முதல் நாளில், காவல் நிலையத்தின் பின் புறமிருந்த ஒரு  டிரான்ஸ்மிஷன் டவரில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. காவல் துறையினர், இதனை ஒரு தற்கொலை  என்றும், இது  இது காவல் நிலையத்தில் நடக்கவில்லை என்றும் வழக்கைப்   பதிவு செய்தனர்;  

மனித உரிமைகளுக்காகப் போராடிவரும் பீப்பிள்ஸ் வாட்ச் என்ற நிறுவனம், இது காவல் மரணம்  என்றும்  இதில்  சாட்சிகள் அச்சுறுத்தப் படுவதாகவும், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவியாக இருந்த என்னிடம் மனுச்  செய்தது.   நான், உடனடியாக, கருப்பியின் குடும்பத்தாரைச் சந்திக்க வேண்டும் என்று  ராமநாதபுர மாவட்ட ஆட்சியரிடம்
தெரிவித்தேன். நான், காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வு செய்தேன். அந்தச் சிறைக்  கொட்டடியிலிருந்து கருப்பி ஒருபோதும்,  தப்பித்துச் சென்று   தனக்குத் தானே தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்க முடியாது என்று எனக்கு  உறுதிபடத் தெரிந்தது. பின், அச்சுறுத்தலுக்கு உட்பட்டதாகச் சொல்லப் பட்ட கருப்பியின்  குடும்பத்தாரைச் சந்தித்தேன்.

எல்லோருமே "அதிகாரப்பூர்வமாக" முன்வைக்கப் பட்ட  அதே கதையைத் தான் சொன்னார்கள் - திருடியது தெரிய வந்ததால்,  கருப்பி அவமானத்திற்கும் பழிக்கும்  அஞ்சி, அவராகவே தூக்கிலிட்டுக் கொண்டார் - இதில் பாவம் போலீஸ்கார்களுக்கு  ஒன்றுமே தெரியாது - என்ற ரீதியிலான கதை அது. என்னை நம்பி அவர்கள் மனப்பூர்வமாகச் சொல்லலாம் என்று நான் கொடுத்த  உறுதிமொழிக்குப் பலனில்லை.  வழக்கமாகத் தங்களை வாட்டி வதைப்பவர்களிடமிருந்து தங்களின்  உயிருக்கு உடனடியாக ஏற்படவிருக்கும் ஆபத்தைக் கவனத்தில் கொண்டால், நான் சொன்ன உறுதி மொழி வலுவ‌ற்றதாகவே  அவர்களுக்க்த் தோன்றியிருக்க வேண்டும்.  உண்மையைக் கண்டறிவதில் இருந்த  எல்லா நம்பிக்கையும் எனக்கு அற்றுப் போனது.  கிளம்பி விடவே  தீர்மானித்திருந்தேன்.

திருப்பு முனை :
அப்புறம்தான் அந்தத்  திருப்புமுனை வந்தது. சாட்சி சொல்ல வந்தவர்களில் கடைசி ஆள் கிறிஸ்து தாள், கருப்பியின் மதினியின் கணவர். இன்னுமொரு விசாரணை இன்னும் சில நிமிடங்களில் முடிவுக்கு வரப்போகின்றது என்ற  விரக்தியில் நான் இருக்க, விசாரணை அடுத்த 2 மணித் தியாலங்களுக்குத் தொடர்ந்தது.  இது வரை சொல்லப் பட்ட  பின்னப் பட்ட  மூடி மறைத்துச் சொல்லப் பட்ட சாட்சியங்களின் ரகசிய முகத்திரையைக் கிழித்து அந்த இழிந்த கதையைச்  சொல்வதாக அமைந்தது அந்த சாட்சியம். 

கிறிஸ்து தாள் என் காலில் விழுந்தார். நான் அவர் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனேன் : "அம்மா, தயவு செய்து என்னையும், என் குழந்தைகளையும் காப்பாற்றுங்கள். நாங்கள் மாபெரும் அபாயத்தில் இருக்கின்றோம், உங்களிடம் நான் ஒரு உண்மையைச் சொல்லாவிட்டால், என் நெஞ்சு வேகாதம்மா", என்றார்.

நான் எனது முழு ஆதரவையும் அளிப்பதாக உறுதி சொன்னபின், அவர், நம்பிக்கையுடன் விவரங்களை விவரிக்கத்  தொடங்கினார்: நவம்பர் 26 2002 இரவு. கிறிஸ்து தாஸ், அவரது மனைவி ஆறுமுகம், அவர்களது மகள், எந்தவிதக் காரணமும் கூறப்படாமல், பரமக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கே அவர்கள் கருப்பி ஒரு அறையில் விலங்கிடப் பட்டு  இருந்ததைக் கண்டனர். நகை திருட்டிற்காக, அவர் கைது செய்யப் பட்டிருப்பதாக அவர்களுக்குச் சொல்லப் பட்டது.

கிறிஸ்துதாஸ், உள்ளாடை தவிர்த்த பிற ஆடைகள் களையப் பட்டு, கை விலங்கிடப்பட்டு, அவரது கால்கள், ஒரு மேஜையுடன்  சேர்த்து சங்கிலியால் இணைக்கப் பட்டது. அடுத்த நாள் காலையிலிருது, காவலர்கள், அவரைத் தொடர்ச்சியாகத் தாக்கி  சித்திரவதை செய்தனர். பின்னர் கிறிஸ்து தாசுக்குத் தெரியவந்தது என்ன வென்றால், அவரும், அவர் மனைவியும், மகளும், கருப்பியின் மருமகனும், கருப்பியை உண்மையைச் சொல்லுமாறு நிர்ப்பந்திப்பதற்காகவே அவர்கள் எல்லோரும் அங்கு வரவழைக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பது.

நான்கு காவலர்கள், மூன்று நாட்கள் தொடர்ந்து கருப்பியைக் கடுமையாகச் சித்திரவதை செய்ததைக் காண நேர்ந்தது  கிறிஸ்து தாசுக்கு.  கருப்பி, லத்தியால் தாக்கப் பட்டார். நகக் கண்களில் ஊசியால் குத்தப் பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.  அவர் அப்பாவி என்று கதறியது எவர் காதிலும் விழவில்லை. கொடுமைப்படுத்தாதீர்கள் என்று கிறிஸ்து தாஸ் இடை மறித்த  போதெல்லாம், அவருக்கும் அடியும் உதையும் விழுந்தது.  மூன்று நாள் கொடுமைக்குப் பின் கிறிஸ்து தாஸ் குடும்பம்  விடுவிக்கப் பட்டது.

டிசம்பர் முதல் நாளன்று, கிறிஸ்து தாசும் அவர் மனைவியும் ஒரு மீன் வியாபாரி மூலமாக, காவல் நிலையத்திற்குப் பின்  ஒரு பெண்ணின் உடல் கிடந்ததையும், பின் அது மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப் பட்டிருந்ததையும் தெரிந்து  கொண்டனர். மருத்துவமனையில், அவர்கள் பயந்த படியே நடந்தது. அது கருப்பியின் உடல் தான். கிறிஸ்து தாஸ் மேலும் சொல்கையில், எனது விசாரணை நடக்கும் வரையிலும், அவரது குடும்பத்தினரை அழித்துவிடப்போவதாக, மிரட்டப் பட்டுக் கொண்டே இருந்ததாகக் குறிப்பிட்டார்.

அறிக்கைகள் :
இந்தக் கொடூரமான  கொட்டடி மரணத்தை அம்பலப் படுத்தியே தீருவது என்ற கங்கணத்துடன் நான் சென்னை திரும்பினேன்.  பிரேதப்  பரிசோதனை அறிக்கையின் நகல்கள் எனக்குக் கிடைத்தது. முதல் தகவல் அறிக்கை, ஆய்வறிக்கையும் ராமநாதபுர  ஆட்சியரால், எனக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. ஒரு காவல் ஆய்வாளர் உள்பட  ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டிருப்பதாகவும், துணை ஆட்சியரால் ஒரு விசாரணை நடத்தப் பட்டிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

நான் முதலாவது மற்றும் முன்றாவது அறிக்கைகளை சென்னை அரசு மருத்துவமனையின், தடயவியல் துறைத் தலைவருக்கு அனுப்பினேன் :  அவரது பதில் : வழக்கில் தொடர்புடையவர்,   Asphyxia due to acute ante mortem (AM) ல் இறந்திருக்கிறார். பல்வேறு நசுக்கல்களுக்குப்  பின் தொங்கவிடப் பட்டிருக்கிறார். நசுக்கல்கள் ஒரு நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் நிக்ழந்திருக்கும். அநேகமாக காயங்கள் இடப்புறத்திலும், வலப் புறத்திலும் நபர்கள் ஏறி நின்றதால் ஏற்பட்டிருக்க வேண்டும்.

கருத்து :
மருத்துவ நிபுணரின் அந்த அறிக்கையைச் சாமானிய மொழியில் சொல்வதென்றால், "பலியானவர், மரணத்திற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் வலுவான தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும். வலது முன் தலையில் நசுக்குதலால் ஏற்பட்ட காயம், கடும் தாக்குதலால் ஏற்பட்டு அதன் பின்னே தொங்க விடப்பட்டிருக்க வேண்டும்.
இத்தனை தகவல் வலுவுடன், நான் உள்துறைச் செயலருக்கு,  குற்றவியல் பிரிவின் குற்றப் புலனாய்வு (சிபி சிஐடி) அல்லது  மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சி பி ஐ) விசாரணை நடத்தக் கோரி கடிதம் எழுதி, தலைமைச் செயலருக்கு நகலிட்டு,   அனுப்பினேன். இந்தக்  கடிதமும், இதனைத் தொடர்ந்த நினைவூட்டல்களும், நீண்ட மவுனத்தையே பதிலாகப் பெற்றன.

நான் மகளிர் ஆணையத் தலைவியாக இருந்த போது , அந்த ஆணையம், ஒரு அரசியல் சாசன பூர்வமான அமைப்பாக  இருக்கவில்லை.  சாட்சியங்களை அழைக்கும் அதிகாரமோ, உறுதி மொழி ஏற்று சாட்சியமளிக்கச் செய்யும் அதிகாரமோ  பெற்றிருக்க வில்லை.  தேசிய மகளிர் ஆணையத் தலைவி பூர்ணிமா அத்வானியைத் தொடர்பு கொண்டு,  தேசிய மகளிர் ஆணையமும், மாநில மகளிர் ஆனையமுமாகச் சேர்ந்து, ஒரு கூட்டு பொது  விசாரணையை மதுரையில்  2003 அக்டோபர் 28 அன்று  நடத்தினோம்.

கருப்பி குடும்பத்ததினர், பரமக்குடியின் துணை ஆட்சியர், நிகழ்வு நடந்த போது பொறுப்பில் இருந்த காவல் அதிகாரிகள்,  உள்ளிட்ட ஏராளமான சாட்சியங்கள் சாட்சி சொன்னார்கள். கருப்பி ஆறு நாட்கள் தொடர்ந்து காவல் நிலையத்தில் வைக்கப்   பட்டு சித்திரவதை செய்யப் பட்டிருக்கின்றார் என்பதைக் கண்டறிந்தோம். பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது உடலில்,  இறப்பதற்கு  முன்பு ஏற்பட்ட பல காயங்களைச் சுட்டிக் காட்டியது. இதனால், போலீஸ்காரர்கள் சொன்ன தற்கொலைக் கதை நம்ப  முடியாததாகியது.  கருப்பியின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் இழப்பீடாகவும், கிறிஸ்து தாசுவுக்கும், ஆறுமுகத்திற்கும்  தலா ஒரு லட்சம்,  அவர்களைச் சித்திரவதை செய்ததற்காகவும், இழப்பீடாக வழங்கச் சொல்லி பரிந்துரைத்தோம். நான் மகளிர் ஆணைய‌த்  தலைவி பொறுப்பை  நிறைவு செய்த மார்ச் 2005 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

2006ஆம் ஆண்டில்,  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், மகளிர் ஆணையத்தின் சட்ட ஆலோசகருமான, சுதா  ராமலிங்கம்,   பீப்பிள்ஸ் வாட்சைச் சேர்ந்த ஹென்றி திபேனின் சார்பில், குற்றவியல் ஒரிஜினல் மனு ஒன்றின் மூலம், வழக்கை  பரமக்குடி காவல் ஆய்வாளரிடமிருந்து, சி பி ஐக்கு மாற்றக் கோரினார்.   இரண்டு ஆன்டுகளுக்குப் பின், செப்டம்பரில், நீதியரசர் கே என் பாஷா, சி பி சி ஐ டி, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க  ஆணையிட்டார்:  "பலிகடாவாக்கப் பட்டவர், சொல்லொணாத் துயரங்களுக்கும், சித்திரவதைக்கும் ஆளாக்கப்  பட்டிருக்கின்றார் என்பதும், காவல் துறையினரின் அத்துமீறிய வன்முறை பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் தெள்ளத்  தெளிவாகத் தெரிகின்றது. இவ்வளவு அபரிதமான ஆதாரங்கள் பதிவு செய்யப் பட்டிருப்பதாலும், அதிலும் குறிப்பாக,  வழக்கில் குற்றஞ் சாட்டப் பட்டவர்கள் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளாக இருப்பதாலும், இந்த நீதிமன்றம்,   நியாயமான சுதந்திரமான விசாரணை அமைப்பின் மூலம் இந்த வழக்கு விசாரிக்கப் படவேண்டியது தேவை என தீர்மானமாகக் கருதுகிறது".

அடிப்படை உரிமைகள் :
கருப்பியின் வழக்கு விசாரணை இறுதியாக பிப்ரவரி 14 2013 அன்று முடிவுக்கு வந்தது. நீதியரசர் டபிள்யூ. சதாசிவம்,  குற்றஞ்சாட்டப் பட்ட எட்டு காவலர்களில் ஐந்து பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.  பிற இரு  காவலர்களுக்குத் தலா, ஏழு ஆண்டுகளும், மூன்று ஆன்டுகளும் சிறைத் தண்டனை வழங்கியுள்ளார்.  அப்போதைய ஆய்வாளர் ஷாகுல் ஹமீதுவுக்கு ரூ ஒரு லட்சம் தண்டமும் விதிக்கப் பட்டிருக்கின்றது.  "கொட்டடி மரணத்தை மூடி மறைக்க, (கருப்பியின்) உடல் சிறையிலிருந்து அகற்றப் பட்டு இது ஒரு தற்கொலை என்னும்  தோற்றம் ஏற்படும் வகையில்  வி எச் எப் கோபுரத்தில்  தொங்க விடப் பட்டுள்ளதாக", தெரிவிக்கப் பட்டுள்ளது.

நான் மாண்புமிகு நீதியரசர் கே என் பாஷா, உச்சநீதிமன்றத்தில் நடந்த   டி கே பாசு  எதிர் மேற்கு வங்க அரசு என்ற வழக்கிலிருந்து மேற்கோள் காட்டிய  ஒரு மேற்கோளுடன் இதை நிறைவு செய்கின்றேன்:  "கொட்டடி மரணங்கள், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் ஒரு நாகரீக சமூகத்தின் மிகக் கொடிய குற்றமாகவே  கருதப் பட வேண்டும்.  அரசின் அங்கமானவர்களே, சட்டத்தை மீறுபவர்களானால், அது சட்ட அவமதிப்பை  ஏற்படுத்துவதாகவே அமையும்; அது சட்டமற்ற ஒழுங்கீனத்திற்கே இட்டுச் சென்று அரசின்மைக்கே வழி வகுக்கும். ஒரு   காவலர் கைது செய்ததால், ஒரு  குடிமகன் அடிப்படை உரிமை மறுக்கப் பட்டு உயிரிழப்பதா  ?  ..... இந்தக் கேள்விகள்,  மனித உரிமைகள் நீதிபரிபாலனத்தின் மூலத்தையே உலுக்குபவையாக உள்ளன".
கட்டுரையின் ஆங்கில மூலம் தி இந்து நாளிதழின் ஆசிரியவுரைப் பகுதியில் 28 மார்ச் 2013 அன்று வெளியானது.
[கட்டுரையாளர் வே வசந்திதேவி, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவியாகவும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின்  துணைவேந்தராகவும் இயங்கியவர்]. 
மொழியாக்கம் : அருள்செல்வன் செந்திவேல்

Courtesy: http://keetru.com/index.php?option=com_content&view=article&id=23420&Itemid=1 

 

Monday, May 08, 2006

விடை பெறுகிறோம்

ஏறத்தாழ 40 நாள் அற்புதமான பயிற்சிக்குப் பின், இப்போதைக்கு விடை பெறுகிறோம். தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செய்திகளைத் தமிழ் இதழ்கள் எப்படிக் கையாணடன் என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கும், அது குறித்து விவாதிப்பதற்கும், தமிழ்ப் பத்திரிகைகளில் பணியாற்றப் போகும் எங்களில் பலருக்கும், இனி தொடர்ந்து மாணவர்களைப் பயிற்றுவிக்கவிருக்கும் எங்களின் ஆசிரியர்களுக்கும் இந்தப் பயிற்சி ஒரு அற்புத அனுபவமாக இருந்தது. இதில், உலகத் தமிழர்கள், தமிழ் மணம் வாயிலாக முன் வைத்த ஆக்கப் பூர்வமான விமர்சனங்கள் எங்களின் பணியைப் பெரிதும் ஊக்கப் படுத்தின. இந்த ஆய்வுகளைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டாலும், குறிப்பிட்ட சில செய்திகளை ஆய்வு செய்வதைத் தொடர்வது என்று தீர்மானித்திருக்கிறோம். குறிப்பிட்ட மனித உரிமை மீறல்களைப்பதிவு செய்வது குறித்து நாளிதழ்கள் எப்படிக் கையாள்கின்றன, பிற உரிமை சார்ந்த பிரச்னைகளை ஊடகங்கள் எப்படிக் கையாள்கின்றன என்றும் தொடர்ந்து ஆய்வு செய்வோம். பிரச்னைக்குரிய விஷயம் தென்படும்போது, நிச்சயம் எங்களின் பதிவு இடம் பெறும். எங்களின் உறிப்பினர்கள் மாறிக்கொண்டே இருக்கலாம். வ்ழிகாட்டும் ஆசிர்யர்கள் மட்டும் தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டே இருப்பார்கள். 4 பத்திரிகைகளில் 3 பத்திரிகையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் எங்களின் பதிவுகளைக் கவனித்து வந்தனர் என்பது எங்களின் பணியை மேலும் ஊக்குவிப்பதாக இருந்தது. மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

ஊடக விமர்சனக் குழுவினர்.


மே 07 08 ஆகிய நாட்களில் வெளி வந்த செய்திகள் குறித்த பதிவு:

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப் பட்டதாக பத்திரிகைகள் புகார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் சாதகமாக வாக்களிக்கச் செய்யும் வகையில் வாக்காளர்களுக்குப் பணம் கையூட்டாக வழஙகப் பட்டிருப்பதாக தினகரன் தவிர்த்த 3 பத்திரிகைகளுமே பதிவு செய்துள்ளன. ஆனால், இது போன்ற ஒரு மிகவும் சீரியசான ஒரு விஷயத்தைக் கூட தொழில் முறை நேர்த்தியுடன் பதிவு செய்ய 3 பத்திரிகையுமே முயற்சிக்க வில்லை என்பது கவனிக்கத் தக்கது.

தினத் தந்தி 8 5 2006 ப.20

குடம், புடவை, பேனாவுக்குள் மறைத்து வைத்து பணம் சப்ளைஅரசியல் கட்சிகள் புகார்: இரவு முழுவதும் போலீஸ் கண்காணிப்பு,

என்ற தலைப்புடன் தினத்தந்தியில் ஒரு செய்தி பதிவு செய்யப் பட்டுள்லது. அந்தச் செய்தியின் முகப்புரை இது:சென்னையில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு குடம், புடவை, பேனா ஆகியவற்றுக்குள் பணத்தை மறைத்து வைத்து கொடுப்பதாக நேற்றிரவு போலீசுக்கு புகார்கள் வந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் 07 05 2006 ப.16

குவார்ட்டர் பாட்டில், கமகம பிரியாணியுடன் ஓட்டு வேட்டையாட கரை வேட்டிகள் தயார்

என்ற தலைப்புடன்வெளியாகியுள்ள இந்தச் செய்தியிலும், யாரையும் மேற்கோள் காட்டாமல் இந்த செய்தி விலாவாரியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

"குவார்ட்டர்' பாட்டில், "கமகம' பிரியாணியுடன் ஓட்டு வேட்டையாட கரை வேட்டிகள்
தயார்
சென்னை: தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் "கிக்'
ஏற்றும் குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் "கமகம'க்கும் பிரியாணி பொட்டலங்களுடனும்
வாக்காளர்களை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி விட்டன. அனைத்து ஒயின்
ஷாப்புகளுக்கும் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு
தினங்களுக்கு முன்னதாகவே, குவார்ட்டர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்து
மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன.
இருப்பினும், நேற்றும் சில டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் அங்கு கரை
வேட்டிகள், வேன்களிலும் ஆட்டோக்களிலும் குவார்ட்டர் பாட்டில்களை வாங்கிச் செல்வதைக்
காண முடிந்தது.
எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய பிரதான கட்சிகள்
மட்டுமின்றி பா.ஜ., தே.மு.தி.க., மற்றும் சுயேச்சைகள், உதிரிக்கட்சிகள் களத்தில்
உள்ள காரணத்தால் அனைத்துக் கட்சிகளுமே வாக்காளர்களைக் கவர பல்வேறு கவர்ச்சிகரமான
அறிவிப்புக்களை நாளுக்குநாள் அறிவித்து வருகின்றன. இது தவிர வாக்காளர்களை சந்தித்து
ஓட்டுக்களை "மானாவாரியாக' பெற்று விடுவதற்காக அனைத்துக் கட்சிகளுமே "பகீரத
பிரயத்தனம்' செய்து வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை நகரில்
உள்ள 14 தொகுதிகளுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளிலிருந்து விஸ்கி, ரம், வோட்கா, பீர், ஒயின் ஆகியவற்றை வேட்பாளர்கள் கொள்முதல் செய்து ரகசிய இடங்களில் மறைத்து வைத்துள்ளனர். தேர்தல் தினத்தன்று வாக்காளர்களுக்கு "சப்ளை' செய்யும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர். குறிப்பாக, ரூ.49 முதல் ரூ.52 வரை விலையுள்ள ஆர்டினரி பிராண்ட் (180 மி.லி.,), ரூ.60 முதல் ரூ.62 வரை விலையுள்ள மீடியம் பிராண்ட் (180 மி.லி.,) மற்றும் ரூ.70 முதல் ரூ.123 வரையுள்ள பிரிமியம் பிராண்ட் பாட்டில்களுக்குப் பிரத்யேக மவுசு ஏற்பட்டுள்ளது. அதிகமாக விற்பனையாகும் ஓல்டு மங்க், மானிட்டர் பிராந்தி, மெக்டெவல், ஜானெக்ஷா, கிங் பிஷர், கோல்கொண்டா, சிவா ரம், பேக் பைப்பர், பிளாக் நைட் வகையறாக்கள் அதிகமாக கரை வேட்டிக்காரர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மது வகைகளுமே ஸ்டிராங்க், எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் மற்றும் சூப்பர் ஸ்ட்ராங்க் என்று மூன்று ரகங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பிரதான கட்சிகளுமே சரக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து விட்டதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கையிருப்பில் வைக்க வேண்டிய அளவை விட மிகக் குறைவாகவே சரக்குகள் உள்ளன. அதே போல் வாக்காளர்களுக்கு குவார்ட்டர் பாட்டில்களுடன் பிரியாணி பொட்டலங்களை வழங்கவும் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ஆங்காங்கே உள்ள பிரியாணி கடைகளில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி ஆகியவற்றை செய்து பொட்டலம் கட்டித் தருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தி.நகர், எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சைதாப்பேட்டை பகுதிகளில் பல கடைகளில் பிரியாணி செய்து தருவதற்கும் "ஆர்டர்கள்' கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்று வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து குவார்ட்டர் பாட்டில்களையும், பிரியாணி பொட்டலங்களையும் கொடுக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தினமணி 08 05 2006 ப. 5
வாக்களர்களுக்குப் பணம் அளிப்பு? பார்வையாளர்கள் தீவிரக் கண்காணிப்பு

ன்ற தலைப்பில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இந்தச் செய்தியின் முகப்புரை:திருநெல்வேலி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் கூறப் படும் புகார்கள் குறித்து மத்திய தேர்தல் பார்வையாளர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ....

தினமலரில் தொடரும் ஆதாரமற்ற செய்திகள்...

செய்தித் தாளில் இடம் பெறும் செய்திகளை வரலாற்றின் முதல் படி என்று அறிஞர்கள் குறிப்ப்டிவர். அதனால், அதை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பதிவு செய்ய வேண்டிய கடமை செய்தியாளர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும் உண்டு. குறிப்பாக செய்தியை வதந்தியிலிருந்து வேறு படுத்திக் காட்டும் துணிவும், நேர்மையும் பத்திரிகையாளர்களிடம் இருக்க வேண்டும். இது பத்திரிகைக்கு நம்பகத் தன்மையையும் அதிகரிக்க உதவும்.

தினமலர் மே 7 2006 ப.1

விஜய டி ராஜேந்தருக்கு திமுக ஆதரவுகூட்டணி கட்சிகளின் காலை வார முடிவு

என்ற தலைப்புடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
விஜய டி ராஜேந்தரின் லட்சிய திமுக போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் காலை வார திமுக தயாராகி வருகிறது என்பது தான் இந்தச் செய்தியின் சாராம்சம். இது ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் என்றோ, இது ஒரு ஆதாரமற்ற குற்றச் சாட்டு என்றோ எளிதில் ஒதுக்கி விட முடியும். இந்தச் செய்தி முழுக்க எவரையும் உரிமையாக்கிக் கூறப் படவில்லை. இதே போல 8 5 2006 அன்று ஒரு ரூபாயில் ஒரே இந்தியா திட்டம் படு தோல்விசில ஆயிரம் பேர் கூட திட்டத்தில் சேர முன் வரவில்லை என்ற தலைப்புடன் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இதுவும் ஏறத் தாழ ஒரு அவதூறுக்குச் சமமானது. தயாநிதி மாறன் மீதான கோபத்தின் வெளிப்பாடாக இந்தச் செய்தியை வாசகர்கள் எளிதில் இனம் கண்டு கொள்வார்கள்.

தினகரன், 07 05 2006 ப15

மேடை ஏறவில்லை ஜெயலலிதாசென்னையிலும் கூட்டம் இல்லை

என்ற தலைப்பில் ஒரு செய்தி. இதில் ஜெயலலிதா மேடை ஏறவில்லை என்ற தகவலை வைத்துக் கொண்டு, சென்னையிலும் கூட்டம் இல்லை என்ற தகவல் மிகப் படுத்திக் கூறப் பட்டிருப்பதாகக் கருத இடமிருக்கிறது. போட்டி அரசியலில், தினகரன் இப்படி செய்தி வெளியிடுகிறதோ என்று கருத இடமிருக்கிறது. தினகரன், இதற்கு முன்பு வெளியிட்ட புகைப் படங்கள் நம்பும் படியாக இல்லை என்பதை ஏற்கனவே ஆதரங்களுடன் இங்கே நிரூபித்திருக்கிறோம்.

பத்திரிகைகளில் தகவல்களை மக்கள் முன் வைப்பதை விடுத்து, நேரடியாகப் பிரச்சாரத்திலும், தாமே அரசியல் நடத்துவதிலும் தீவிரமாக இறங்கி விடுகின்றன. தினகரனும், தினமலரும் தீவிர நிலைப்படுகளை எடுத்து, சிலரை ஆதரித்து, சிலரை இருட்டடிப்புச் செய்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.தினத் தந்தி அதிமுகவையும், நாடர்களையும் பாதுகாப்பதற்காக அவதாரம் எடுத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தையே ஏற்படுத்துகிறது.


தினமணி, இந்த 3 பத்திரிகைகளை ஒப்பிடுகையில் கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம் என்றாலும், முழுமையான ஒரு நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட பத்திரிகையாகக் கொள்ள இடமில்லை என்பதும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. தமிழின் தரமான பத்திரிகை இனிதான் வளர்த்தெடுக்கப் படவேண்டும் என்ற குறிப்புடன்விடை பெறுகிறோம்

ஊடக விமர்சனக் குழுவினர்

Saturday, May 06, 2006

குழந்தைகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கை:

தி இந்து நாளிதழின் 5 5 2006 இதழின் 6ஆம் பக்கத்தில் திண்டுக்கல்லில் குழந்தை உரிமைக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை பிரமாண்டமான படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது.
அந்தச் செய்தியின் தலைப்பும், முகப்புரையும் இங்கே தரப்படுகிறது. :

Now, it is school children’s manifesto

Released at a function organised by Coalition of Child Rights Networks in Dindigul
While political parties hae been making promises to lure voters, school children and rescued child labours have released a manifesto, urging political parties to give due importance to education and child rights.
The manifesto was released at a funcion orgnaised by the Coalition of Child Rights Networks in Dindigul on Thursday.

இலவசங்களை விமர்சிக்கும் குரல் - தினமணியில்

இலவசங்களின் பட்டியலைத் தினமும் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுக் கொண்டேயிருக்க, இது போன்ற இலவசங்கள் என்னவிதமான சிக்கல்களை உருவாக்கும் என்ற விமர்சனக் குரலை பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம் எழுப்பியிருக்கிறார். தினமணி 5 5 06 இதழில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. "மானியங்களாலும், இலவசங்களாலும் இன்றியமையாத நலத் திட்டங்களுக்கு உரிய நிதி குறைந்து போகும் என்பது ஒன்று. அதை ஈடு செய்ய, கடுமையாக வரிகளை விதிக்க நேரிடும் என்பது மற்றொன்று", என்று வாதிடிகிறார் பேராசிரியர். "அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள் இதனை அறியாதவர்கள் அல்ல. பொறி பறக்கும் தேர்தல் களம் அறிவைப்பகடையாக்கிப் பழி தீர்க்க முனைகிறது", என்கிறார் கட்டுரையாளர்.
இது போன்ற குரல்கள், தமிழ் வெகு ஜன்ப்பத்திரிகைச் சூழலில் காண முடியாத ஒன்றாக இருக்கிறது.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20060504103458&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0

இலவசங்களின் பிரளயம்
சிற்பி பாலசுப்பிரமணியம்
"ஆனை வரும் பின்னே, மணியோசை
வரும் முன்னே' என்பது பழமொழி. "தேர்தல் வரும் பின்னே, இலவசங்கள் முன்னே' என்பது நம்
காலப் புதுமொழி.
வணிக உலகம் கையாண்ட ஒரு தந்திர உத்தி அரசியல்வாதிகளின் கையில்
அட்சய பாத்திரமாகி விட்டது. சரியாகச் சொன்னால் அட்சய பாத்திரத்துக்குப் பசி
தணிப்பது தவிர வேறு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் தேர்தல் வாக்குறுதிகளின் பின்
வாக்கு அறுவடை அமோகமாகக் கிடைக்கும் என்ற பேராசை ததும்பி நிற்கிறது.
உலகமயமாதலில் அடுத்த கட்டத்தில் இலவசங்கள் அறவே அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற
நிபந்தனைகள் கடுமையாகிக் கொண்டிருக்கும்போது, இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில்
மயிலிராவணன் தலைபோல் மறுபடியும் மறுபடியும் அவை முளைத்துத் தழைத்துத் தேர்தல்
தோரணங்களாகக் கெக்கலி கொட்டுகின்றன.
குறுகிய கால, நெடுங்கால மக்கள் நலத்
திட்டங்களை வாரிக் குப்பையில் போட்டு விட்டு முன்வரிசையில் முகம் காட்டி
நகைக்கின்றன இலவசங்கள்.
ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை, சிறிதளவு நிலம்,
பஞ்சகாலத்தில் பண உதவி, இயற்கைப் பேரழிவு நேர்ந்தால் தக்க நிவாரணம், விளைச்சல்
தவறும்போது கடன்கள் ரத்து என்பவைதான் பொதுவாக அரசு வழங்கும் இலவச உதவிகளாகப் பல ஆண்டுகள் முன் கருதப்பட்டன. ஒரு நல்லரசின் பொறுப்புகள் அவை என்பதில் ஐயமில்லை.
வேளாண் துறையின் சிக்கல்களுக்கு உதவி புரியும் வகையில் நீர் வளம் பெருக்க,
வீரிய விதைகளை அறிமுகம் செய்ய, கட்டுபடியாகும் விலை தர, புதிய கருவிகளைக் குறைந்த
விலைக்கு வழங்க அரசு முன் வருவது இயற்கை. தொழில் துறை செழிக்க மின் உற்பத்தி
பெருக்க, ஏற்றுமதிக்கு உறுதுணை புரிய, தடையற்ற நிர்வாக உதவி தர, வல்லுநர்களைக்
கொண்டு புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசு கைகொடுப்பது அவசியம். கல்வி, வாணிகம்,
கைத்தொழில்கள், சிறுதொழில்கள் ஆகியவை வளம் பெறவும், மருத்துவம் செழிக்கவும் அரசு
திட்டங்கள் வகுப்பது கடமை.
தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள் தகுதிக்கேற்ற வேலை
வாய்ப்புகளைப் பெற ஆவன செய்வதும் அரசின் பொறுப்பு. ஆனால் ஓடி ஓடி இலவசங்களைப்
பெறும் அடிமைகளாக மக்களை மாற்றுவது என்ன வகை நியாயம்?
பேருந்து நிலையத்தில்
போலித் துணி வியாபாரம் செய்பவர்கள் முதலில் ஏலம் கோருபவருக்கு இலவச சீப்புக்
கொடுப்பார்கள். அவையெல்லாம் வியாபார தந்திரங்கள். அரசியல் அப்படி வியாபாரம் ஆவது
வளர்ச்சியின் அடையாளம் அல்லவே அல்ல.
மீனைச் சாப்பிடக் கொடுப்பதை விடத்
தூண்டிலைக் கொடுத்து மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பது விவேகம் என்று சொல்லுவார்கள்.
அரசியல், பொருளாதார, சமூகத் தளங்களில் உழைப்பை முன்வைத்துச் செழிப்பை உருவாக்குவதே
வளம் பெருக்கும் வாழ்வியல்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்கம் ஆட்சியைக்
கைப்பற்ற முன்வைத்த சாகசமான வாக்குறுதி: "ஒரு படி நிச்சயம்-மூன்று படி லட்சியம்'.
அரசியல் அரிசியியல் ஆனதின் தொடக்கம் அது.
அரிசிப் பஞ்சம் காமராசர் ஆட்சிக்குப்
பின் உருவாயிற்று. அப்போது இந்த வாக்குறுதி வாக்குகளை உறுதியாக்கிற்று. அதன் பிறகு
அந்த வாக்குறுதி நின்றதுபோல் நின்று நெடுந்தூரம் சென்று மறைந்துவிட்டது. அதைக்
குறித்து மறந்தே போனோம். அதற்குக் காரணம் அண்ணா என்ற உயர்ந்த மனிதர் ஆட்சிப்
பொறுப்பில் இருந்தார் என்பதுதான். வாக்குறுதி தந்தவரின் நல்லெண்ணம் தோற்றதாய்ச்
சமாதானம் பூண்டோம்.
ஆனால் இன்றைய சூழ்நிலை வேறு. அரிசிப் பஞ்சங்களின் காலம்
கடந்து வேளாண்மையில் தன்னிறைவு பெற்றுவிட்டதற்குக் காரணமான பசுமைப்புரட்சியின்
அடுத்த கட்டம் இது (டர்ள்ற் எழ்ங்ங்ய் தங்ஸ்ர்ப்ன்ற்ண்ர்ய் டங்ழ்ண்ர்க்). மக்களில்
பெரும்பான்மையோருக்குப் பங்கீட்டு அரிசி கட்டாயத் தேவையும் அல்ல.
இந்த நிலையில்
இலவசங்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறது அரிசி. மானியங்கள் மூலம் இலவச மின்சாரம்
அளிப்பதைப்போல, பங்கீட்டு அரிசியும் பெருமளவு மானியம் தந்து குறைந்த விலைக்கு
வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலவசங்களின் பிரளயத்தை இந்தத் தேர்தலில்
தொடங்கி வைத்த பெருமை கலையுலகிலிருந்து அரசியலைத் திடீரென்று தாக்கிய ஒரு கட்சியையே
சாரும்.
பதினைந்து கிலோ அரிசி பங்கீட்டுக்குக் கடைக்கே போகாமல் வீட்டுக்கே
இலவசமாக வந்து கதவைத் தட்டும் என்ற அறிவிப்பு மேகமில்லாத வானத்திலிருந்து விழுந்த
இடியாக மற்ற கட்சிகளைத் தாக்கியது. அத்துடன் வேறு பல இலவசங்களும் கூட்டணி அமைத்துக்
கொண்டதால் அந்தக் கட்சி "கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ'னாகத் தோற்றம் தந்தது.
அந்த இலவச அலையின் ஓசை அடங்கிய போது, ஆளுங்கட்சி மிக நிதானமான, ஏற்கெனவே
வகுக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், புதிய கொள்கை அறிவிப்புகள், வேலை வாய்ப்புகள்
அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. சாதனைகளைச் சொல்லியும், சாதிக்க உள்ளவற்றை
விளக்கியும் வாக்குக் கேட்ட அறிக்கை பாராட்டுக்குரியதாகவே இருந்தது.
ஆனால்
முற்போக்குக் கூட்டணியின் முதன்மையான எதிர்க்கட்சி கொதிக்கக் கொதிக்க வெளியிட்ட
தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் புத்துயிர் கொண்டன.
இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ
அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு ஏக்கர் நிலம் என இலவசங்கள் அணி
வகுத்தன.
முடியுமா என்ற வினாவுக்கு முடியாதது அந்தக் கட்சியின் அகராதியில்
இல்லாதது என்ற கம்பீரமான அறிவிப்பு மெய்க்காப்பாளனாக இலவசத்துடன் வலம் வரத்
தொடங்கியது.
இதனிடையே கருத்துக் கணிப்புகள் வேறு கலந்து கொள்ள இலவசங்களின்
அறிவிப்பில் அழுத்தமும் ஆவேசமும் கூடலாயிற்று. தேர்தல் களம், இலக்குகளை
விட்டுவிட்டு இலவசங்கள் பற்றிய பரபரப்பில் மூழ்கியது.
மக்கள் மனத்தில்
மாற்றங்கள் விளைந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் இலவசங்களின் ஓட்டப்பந்தயத்தில்
இப்போது ஆளுங்கட்சியும் கச்சை கட்டிக் கொண்டு இறங்கிவிட்டது. எதிரிதான் போர் முறையை
நிர்ணயிக்கிறான் என்று அரசியல் வித்தகர்கள் கூறுவது வழக்கம். எதிர்க்கட்சிகளின்
இலவசம் போர் முறை ஆளுங்கட்சியையும் அதே ஆயுதத்தோடு களமிறக்கி இருப்பது வருத்தம்
தருகிறது.
மாதம்தோறும் பங்கீட்டு அரிசியில் பத்து கிலோ இலவசமாக வழங்கப்படும் என
ஆளுங்கட்சி மிகத் தெளிவாக அறிவித்திருக்கிறது.
ஒரு நாடு அணு ஆயுத வல்லரசாக
மாறினால் இன்னொரு நாடு இன்னொரு அணு ஆயுதப் பேரரசாக மாற வரிந்து கட்டுகிறது. இதன்
விளைவை உலக அரங்கில் பார்க்கிறோம்.
இலவசங்களின் அறிவிப்புகளும் அந்த அபாயகரமான
விளையாட்டில் இறங்கிவிட்டன. வார்த்தைக்கு வார்த்தை, பேச்சுக்குப் பேச்சு என்ற எல்லை
கடந்து ஏட்டிக்குப் போட்டியாக இலவச அறிவிப்புகள் வானமே எல்லையாக வளர்ந்து
கொண்டிருக்கின்றன.
சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கத் தொடங்கிய தேர்தல்
பிரசாரத்தின் நல்ல தொடக்கம் எவ்வாறோ திசைமாறிப் போயிருக்கிறது.
இலவசங்களுக்கு
முடிவு ஏது? வலது காலணி வாங்கினால் இடது காலணி இலவசம் என்று தொடங்கி, கால்கள்
இருந்தால் காலணி இலவசம் என்று வளர்ந்து, காலணிகளோடு கால் உறையும் இலவசம் என்று
தொடர்ந்தால் முடிவு ஏது?
இலவசம் இன்றைய பரவசமாக இருக்கலாம். ஆனால் நாளைய
அரசாங்கத்தின் தலைவலி அது. இந்த விஷ வட்டம் பொருளாதார நட்டத்தில் போய் முடியலாம்.
உடனடியாக இரண்டு விளைவுகளைப் புதிய அரசு எதிர்பார்க்கலாம். மானியங்களாலும்,
இலவசங்களாலும் இன்றியமையாத நலத் திட்டங்களுக்கு உரிய நிதி குறைந்து போகும் என்பது
ஒன்று. அதை ஈடு செய்ய, கடுமையாக வரிகளை விதிக்க நேரிடும் என்பது மற்றொன்று.
அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள் இதனை அறியாதவர்கள் அல்ல. பொறி பறக்கும்
தேர்தல் களம் அறிவைப் பகடையாக்கிப் பழி தீர்க்க முனைகிறது.

சன் டிவியில் தயாநிதியின் பங்கு : தினமணியில் புலானாய்வுக் கட்டுரை

சன் டிவியில் தயாநிதி மாறனுக்குரிய பங்குகள் குறித்து தினமணி தொடர்ந்து அதிக அக்கறை செலுத்தி வருகிறது. கட்டுரைகள், கருத்டுப் படங்கள் என்று தொடர்ந்து வெளியிட்டு வருகிறது தினமணி. இவ்வரிசையில், மூத்த பத்த்ரிகையாளர் கே என் அருணின் கட்டுரை, "முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?", என்ற தலைப்பில் 6 5 2006 தினமணியின் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரை இதோ இங்கே தரப் படுகிறது. :


சன் டிவியில் தயாநிதியின் பங்கு: முழுப் பூசணிக்காயை சோற்றில்
மறைக்க முடியுமா?


கே.என். அருண்
சென்னை, மே 6: டிடிஎச் விவகாரத்தில்
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவை மிரட்டியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி
நாளேடுகளில் செய்திகள் வெளியாயின. அதன்பிறகு 2 நாள் கழித்து பத்திரிகைகளுக்கு
வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அமைச்சராவதற்கு முன்போ, அதன் பிறகோ சன் டிவி
நிறுவனத்தில் எனக்குப் பங்கு ஒருபோதும் இருந்தது இல்லை' என்று திட்டவட்டமாகக்
கூறியிருந்தார் தயாநிதி மாறன்.
இதையடுத்து, சன் டிவி நிறுவனத்துக்கும் தயாநிதி
மாறனுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று வெகுஜனங்கள் வேண்டுமானால் நம்பலாம். ஆனால்,
பங்குபத்திர வர்த்தக நிபுணர்களைக் கேட்டால் இது முழுப் பூசணிக்காயை சோற்றில்
மறைக்கும் கதை என்பது தெளிவாகும்.
சன் டிவி நிறுவனத்துடன் சிலந்தி வலை போல்
தொடர்புடைய சில நிறுவனங்களில் தயாநிதி மாறன், அவரது மனைவி பிரியா தயாநிதி மற்றும்
கலாநிதி மாறன் ஆகியோருக்கு எந்த அளவுக்குப் பங்கு உள்ளது என்பது வெட்ட
வெளிச்சமாகும். அதிலிருந்தே பத்திரிகைகளுக்கு அவர் வெளியிட்ட அறிக்கை உண்மை அல்ல
என்பது நிரூபணமாகும்.
விவரம்:
சமீபத்தில் சன் டிவி நிறுவனம் பங்கு வெளியீடு
மூலம் மூலதனம் திரட்டியது. அதற்கு முன்பாக சன் டிவியில் தயாநிதி மாறன் 2
நிறுவனங்களில் மறைமுகமாக வைத்திருந்த பங்குகள் முழுவதும் சன் டிவி நிறுவனத்துக்கும்
அதைச் சார்ந்த மற்றொரு நபருக்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாற்றப்பட்டன.
பங்குகளை வெளியிடுவதற்கு முன்பு செபி-யில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு ரெட் ஹெர்ரிங்
பிராஸ்பெக்டஸ் (ஆஎச்பி)யில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல் கேபிள்ஸ் பிரைவேட்
லிமிடெட் மற்றும் நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை
வைத்திருந்த ரூ. 10 முகமதிப்புள்ள தலா 31 பங்குகள் (மொத்தம் 62) அதே விலைக்கு
குங்குமம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சன் டிவி நிறுவன துணைத் தலைவர்
கே. சண்முகம் ஆகியோரது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. இது வரைவு ரெட்ஹெர்ரிங்
பிராஸ்பெக்டஸ் ஆவணத்தின் (ஆர்எச்பி) 36-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு முன் கலாநிதி மாறனின் தாயார் மல்லிகா மாறன் மற்றும் இதர சில
நிறுவனங்களுக்குச் சொந்தமான பங்குகள் மற்றும் அவரது பாட்டியும் திமுக தலைவர்
கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் வசம் இருந்த பங்குகளும் கலாநிதி மாறன்
பெயருக்கு மாற்றப்பட்டன. இதன்மூலம் சன் டிவி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு
முன்பு அதன் 99.9 சதவீத பங்குதாரர் ஆகி விட்டார் கலாநிதி மாறன்.
தயாநிதி மாறனுக்கு 91 சதவீதமும் அவரது மனைவி பிரியாவுக்கு 9 சதவீத பங்குகளும் உள்ள டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு கல் கேபிள்ஸ் மற்றும் நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 25 சதவீதப் பங்குகளும் இருந்தன. இந்த 2 நிறுவனங்களிலும் கலாநிதி மாறனுக்கு 75 சதவீதப் பங்குகள் உள்ளன. இந்த 2 நிறுவனங்களில் தயாநிதி மாறனின் 25
சதவீதப் பங்குகள்தான் இந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி மாற்றப்பட்டன. இதிலிருந்தே ஏப்ரல்
27-ம் தேதி தயாநிதி மாறன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை உண்மை அல்ல என்பது
தெளிவாகிறது.
சன் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி விநியோகச் சேவைகளை மேற்கொண்டு
வருகிறது நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன் நிறுவனம். இதன் மூலம் பெரும் வருமானம்
கிடைக்கிறது.
சன் டிவி நிறுவனத்துக்கு டவுன்லிங்கிங் சேவைகளைச் செய்து
கொடுக்கும் சேவைகளைச் செய்து வருவதன் மூலம் பெரும் வருவாயை ஈட்டுகிறது கல் கேபிள்ஸ் நிறுவனம். டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எச்எப்ஓ
எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், சன் டிவி நிறுவனத்துக்குத் தேவையான கேளிக்கை
சாதனங்களை வாடகைக்குக் கொடுத்து வருவதன் மூலம் பெரும் வருவாய் கிடைக்கிறது.
டிஎம்எஸ் என்ற மற்றொரு நிறுவனத்தில் தயாநிதி மாறனுக்கு 91 சதவீதப் பங்குகள்
உள்ள டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 60 சதவீதப் பங்குகளும் எஞ்சிய 40 சதவீதப்
பங்குகள் தயாநிதி மாறனின் மனைவி பிரியாவுக்கும் உள்ளன.
இதுபோன்று சன் டிவி
நிறுவனத்தில் நேரடியாகப் பங்குதாரராக இல்லாமலேயே பெரும் வருவாய் வேறு வழியில்
ஈட்டப்படுகிறது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன்
பொறுப்பேற்று 2 மாதங்களுக்குப் பிறகு 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி டிகே
எண்டர்பிரைசஸ் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிறுவனம் "சாப்ட்வேர்
டெவலப்மெண்ட் மற்றும் சேவை' வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு
சன் டிவிக்காக நிகழ்ச்சிகளை டவுன்லிங்கிங் சேவை புரிந்து வரும் கல் நிறுவனத்தில் 25
சதவீதப் பங்குகள் உள்ளன. சன் டிவி நிறுவனத்தின் ஓர் அங்கமாக இருந்த கேபிள் மற்றும்
கண்டிஷனல் ஆக்சஸ் சிஸ்டம் செயல்பாடுகளை முழுமையாகச் செய்து வருகிறது.
2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமங்கலி கேபிள்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்த பணிகள் கல் கேபிள்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேற்கண்ட பங்குகளின் மாற்றத்தின்
மொத்த மதிப்பு ரூ. 33.9 மில்லியன் என சன் டிவி நிறுவன பங்கு வெளியீட்டு ஆவணத்தில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவைகள் அனைத்தும் தயாநிதி மற்றும் தொலைத் தொடர்பு வர்த்தகத்தை நெறிமுறைப்படுத்தும் அமைச்சகத்தின் கீழ் வருகிறது. மத்திய அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன் அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்கு 75 சதவீதப் பங்குகள் உள்ள நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 25 சதவீதப் பங்குதாரர்.
இந்த நிறுவனம் இன்டர்நெட் சேவை, நெட்வொர்க் டெலிகம்யூனிகேஷன் மற்றும் டெலிபோனி சேவை ஆகிய வர்த்தகங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதுவும் பங்கு வெளியீட்டு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம் கம்ப்யூட்டர்
சாப்ட்வேர் டெவலப்மெண்ட், சிஸ்டம்ஸ் சாப்ட்வேர்கள், அப்ளிகேஷன்ஸ் சாப்ட்வேர்கள்,
உற்பத்தி, அசெம்பிளி, டிரேட், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட இந்த வர்த்தகங்கள் அனைத்தையுமே மத்தியத் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வருபவைதான். அதுதான் தயாநிதி மாறன்!
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20060505135635&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0

தினமலர் நடத்திய சர்வே:

ஆங்கிலப் பத்திரிகைகள் கருத்துக் கணிப்பு நடத்துதற்குரிய நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்கள் உதவியுடன் அதற்கெனப் பயிற்சியும் திறமையும் பெற்ற நிபுணர்களால் நடத்தப் பட்டு முடிவுகளை, அது எப்படி நடத்தப் பட்டது என்ற மெதடாலஜியுடன் வெளியிடுகின்றன. ஆனால், தமிழ்ப் பத்திர்கைகள், தங்களின் பத்திரிகையாளர்கள் துணையுடனே இந்த சர்வேயை நடத்தி முடித்து விடுகின்றன. ஆய்வு வழிமுறையும் விரிவாக வெளியிடப் படுவதில்லை.

தினமலர் சென்னையில் சில தொகுதிகளிலும், மதுரையில் சில தொகுதிகளிலும், நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் 05 05 2006 இதழின் 14ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

05 05 2006 இதழில் சென்னையில் நடத்தப் பட்ட ஆய்வு முடிவும், 06 05 2006 இதழில் மதுரையைச் சுற்றிய பகுதிகளில் நடத்தப் பட்ட ஆய்வு முடிவும் வெளியிடப் பட்டுள்ளன. அவை இங்கே தரப் படுகின்றன.


சென்னையில் தண்ணீர் பிரச்னை இல்லை; ரவுடியிசம் ஒழிந்தது
தி.மு.க., கோட்டையில் அ.தி.மு.க.,

"தினமலர்' கருத்துக் கணிப்பில்
அதிரடி முடிவு நமது சிறப்பு நிருபர்
சென்னை நகரில் உள்ள 14 சட்டசபை தொகுதிகளில்
கணிசமான தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பது "தினமலர்'
நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மற்ற தொகுதிகளில் தி.மு.க.,வுக்கும்,
அ.தி.மு.க.,வுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

ஒவ்வொரு
தேர்தலிலும் ஏதாவது ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்து வந்துள்ளது.
தமிழக மக்கள் இதுவரை கூட்டணி ஆட்சி அமையும் வகையில் ஓட்டுப் போட்டதில்லை என்பது
வரலாறு. ஆனால், இந்த முறை கூட்டணி ஆட்சி அமையுமோ என்ற சந்தேகத்தை பல்வேறு
நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்துகின்றன.
இருந்தாலும் மக்களின் நாடித் துடிப்பை அறிய "தினமலர்' சார்பில் சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த மாதம் 26ம் தேதி கருத்துக் கணிப்பு
நடத்தப்பட்டது. கருத்துக் கணிப்பு குழுவில் 50 பேர் இடம் பெற்றனர். ஆண்கள்,
பெண்கள், அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மாணவர்கள்,
இல்லத்தரசிகள், வர்த்தகர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என எல்லாத் தரப்பினரிடமும்
கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், நான்காயிரத்து 662 பேர் தங்கள்
கருத்துக்களை தெரிவித்தனர்.

சென்னை நகரில் உள்ள ராயபுரம், துறைமுகம்,
ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பூங்காநகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர்,
ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், தி.நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை
ஆகிய 14 சட்டசபை தொகுதிகளில் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க.,வை விட
அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது.

சென்னை நகருக்குட்பட்ட 14 தொகுதிகளில்
கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டுகள் விவரம்:

தி.மு.க., 443

அ.தி.மு.க.,551

தே.மு.தி.க.,210

பா.ஜ., 25

மொத்த
ஓட்டுகள் 1,229

சென்னை நகரில் உள்ள 14 தொகுதிகளும் தி.மு.க.,வின் கோட்டை
என்று வர்ணிக்கப்படுகிறது. கடந்த 2001 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில்
அ.தி.மு.க., இரண்டு இடத்தையும், கூட்டணிக் கட்சிகள் இரண்டு இடத்தையும் கைப்பற்றின.
தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க., ஆறு அல்லது ஏழு இடங்களை கைப்பற்றும் பட்சத்தில்,
சென்னை தி.மு.க.,வின் கோட்டை என்ற மாயை தகர்க்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதற்கு
காரணம், சென்னை நகரில் தி.மு.க.,வை விட அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது.

சென்னை மாநகர குடிநீர் பிரச்னையை அ.தி.மு.க., அரசு தீர்த்து விட்டது
என்றும், நகரில் ரவுடிகள் தொல்லை இல்லை என்றும் பொதுமக்களிடம் பரவலாக கருத்து
உள்ளது. அ.தி.மு.க., முன்னணியில் இருக்க இதுவே காரணம். நமது சர்வே முடிவுப்படி
சென்னை நகரில் உள்ள 14 தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு குறைந்தது ஏழு தொகுதிகள்
கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை நகரில் கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்துள்ள
ஓட்டு சதவீதம்:

அ.தி.மு.க., அணி 43.35

தி.மு.க., அணி 34.85

தே.மு.தி.க., 16.52

இந்த சதவீத அடிப்படையில் பார்க்கும் போது
சென்னை நகரில் கணிசமான தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றும் என்றே தெரிகிறது.
தி.மு.க.,வின் கோட்டை என்று அழைக்கப்படும் சென்னை நகரில் அ.தி.மு.க.,வால் இந்த
அளவுக்கு ஓட்டு சதவீதங்களை பெற முடிந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
சென்னை நகரின் தலையாய பிரச்னை குடிநீர் பிரச்னை. கடந்த காலங்களில் சென்னை நகரில்
பெண்களும், ஆண்களும் குடத்தை துõக்கிக் கொண்டு லாரி தண்ணீருக்காக அலைந்தனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூட லுங்கியுடன் குடத்தை துõக்கிக் கொண்டு தண்ணீர்
பிடிக்கச் சென்றது பல பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்தது உண்மை. குடிநீருக்காக
மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்ய
வேண்டியிருந்தது. இப்போது குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டுகிறது. தினந்தோறும்
காலை நேரத்தில் குழாய்களில் தண்ணீர் வருவது சென்னை நகர மக்களுக்கு நிம்மதியை
தந்துள்ளது.

அடுத்ததாக, சென்னை நகரில் கொடிகட்டிப் பறந்த ரவுடிகள்
ராஜ்ஜியம் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளது சென்னை நகர மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மூன்றாவதாக, சென்னை நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் நிவாரணப்
பொருட்களும் போய்ச் சேர்ந்தது அ.தி.மு.க., அரசின் பக்கம் மக்களை இழுத்துள்ளது. இந்த
மூன்று காரணங்களும் சென்னையில் தி.மு.க.,வின் கோட்டையை தகர்த்து அ.தி.மு.க.,
ஓட்டுகளை கைப்பற்ற வழிவகுத்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., அணிக்கும் தி.மு.க., அணிக்கும் இடையே
கடும் போட்டி நிலவி வருகிறது. சொற்ப எண்ணிக்கையில் இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று
முந்திச் செல்கின்றன. சில தொகுதிகளிலும் மிகக் குறைந்த சதவீதத்தில் தி.மு.க.,
முன்னணியில் உள்ளது.

காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட சர்வே முடிவு:

தி.மு.க., 1,320

அ.தி.மு.க., 1,128

தே.மு.தி.க., 706

பா.ஜ., 66

செல்லாத ஓட்டு 49

மொத்த ஓட்டுகள்: 3,269

சதவீதம்:

தி.மு.க., 40.37

அ.தி.மு.க., 34.50

தே.மு.தி.க., 21.59

பா.ஜ., 2.01

பெண்கள்:

தி.மு.க., 352

அ.தி.மு.க., 375

தே.மு.தி.க., 203

பா.ஜ., 36

சதவீதம்:

தி.மு.க., 36.36

அ.தி.மு.க.,
38.73

தே.மு.தி.க., 20.07

பா.ஜ., 3.71

* கூடுதல் பிரசாரம்,
அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளில் கடுமையாக உழைத்தால்
வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்குமே உள்ளது. நடிகர் விஜயகாந்தின்
தே.மு.தி.க., அனைத்து தொகுதிகளிலும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது. கடுமையாக
உழைக்கும் கட்சி வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்ற நிலைதான் இந்த மாவட்டங்களில்
நிலவுகிறது.

* இந்த கருத்துக் கணிப்பில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில்
கருத்து தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்துள்ள பெண்களில் அதிகம் பேர்
அ.தி.மு.க.,வை விரும்புகின்றனர். இந்த மாவட்டத்தில் பெண்கள் ஓட்டு தான் அதிகம்.
பெண்கள் ஐம்பது சதவீதத்திற்கு மேல் ஓட்டு போடும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் மாற
வாய்ப்பு உள்ளது.
* விஜயகாந்த் குறிப்பிட்ட சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார். இவர்
அ.தி.மு.க., ஓட்டுகளைப் பிரிக்கிறாரா அல்லது தி.மு.க., அணி ஓட்டைப் பிரிக்கிறாரா
என்பதை கணிக்க முடியவில்லை. அதனைப் பொறுத்தும் தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்பட
வாய்ப்பு உள்ளது.
http://www.dinamalar.com/2006may05/fpnews6.asp


தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடிக்கும்
* தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பு

மதுரை , திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர்
மாவட்டங்களில் உள்ள ஏழு சட்டசபைத் தொகுதிகளில் தினமலர் கருத்துக் கணிப்பு
நடத்தியது. தேர்தல் பிரசாரம் முடிவடைவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு நடந்த இந்த
கருத்துக் கணிப்பில் தேர்தல் முடிவுகளை ஓரளவு
கணிக்கக்கூடிய அளவிற்கு
வாக்காளர்கள் தங்களது கருத்துக்களை தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளனர். இதன்படி,
அ.தி.மு.க.,விற்கு 43.5 சதவீத வாக்காளர்களின் ஆதரவும், தி.மு.க.,விற்கு 39.9 சதவீத
வாக்காளர்களின் ஆதரவும், விஜயகாந்திற்கு 14.5 சதவீத வாக்காளர்கள் ஆதரவு
தந்துள்ளனர். பா.ஜ., மற்றும் இதர கட்சிகளுக்கு 2.1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பின் முழு விவரம்:
கருத்துக் கணிப்பு நடந்த
தொகுதிகள்: மேலே கூறிய ஆறு மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளில் முக்கிய தொகுதிகளான
ஏழு (மதுரை மத்தி, சேடபட்டி, ஆத்துõர், ஆண்டிபட்டி, பரமக்குடி, சிவகங்கை, சிவகாசி)
மட்டும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதாவது, அ.தி.மு.க.,
தி.மு.க., நேரடியாக மோதக்கூடிய நகர்புற தொகுதி ஒன்று (மதுரை மத்தி) அ.தி.மு.க.,
தி.மு.க., நேரடியாக
மோதக்கூடிய கிராமப்புற தொகுதிகள் இரண்டு(சேடபட்டி,
ஆத்துõர்). அ.தி.மு.க., காங்கிரஸ் மோதக்கூடிய தனித்தொகுதி ஒன்று (பரமக்குடி),
தி.மு.க., ம.தி.மு.க., மோதக்கூடிய தொகுதி இரண்டு (சிவகங்கை. சிவகாசி) மற்றும் ஒரு
வி.ஐ.பி., தொகுதி (ஆண்டிபட்டி). தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆயிரத்து 400
பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் ஆயிரத்து 12 பேர், பெண்கள் 388 பேர். இவர்களில்
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என 610 பேர் ஓட்டளித்துள்ளனர்.
இது
43.5 சதவீதம் ஆகும். தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும் என 559 பேர் ஒட்டளித்துள்ளனர்.
இது 39.9சதவீதம் ஆகும். விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து 201 பேர்
ஓட்டளித்துள்ளனர். இது 14.5 சதவீதம் ஆகும். பா.ஜ., மற்றும் இதர கட்சிகளுக்கு ஆதரவு
தெரிவித்து 30 பேர் ஓட்டளித்துள்ளனர். இது 2.1 சதவீதம் ஆகும்.
சிறந்த ஆட்சி:
இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 1012 ஆண்களில் 417 பேர் அ.தி.மு.க.,விற்கு
ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.மு.க.விற்கு 423 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் கட்சிக்கு 143 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களை பொருத்தவரை
அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிக்க சிலர் தயக்கம் காட்டிய போதும், அ.தி.மு.க.,
ஆட்சியை சிறந்த ஆட்சி என்று பாராட்டியுள்ளனர். விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டளிக்க
கூடிய பலரும் ஜெயலலிதாவின் ஆட்சியை சிறந்த ஆட்சி என தெரிவித்துள்ளனர். கருத்துக்
கணிப்பின் முதல் கேள்வியான அ.தி.மு.க., ஆட்சி பற்றி உங்கள் கருத்து என்ன? என்று
கேட்ட போது, சிறந்த ஆட்சி என 510 பேரும், சுமாரான ஆட்சி என 586 பேரும், மோசமான
ஆட்சி என 304 பேரும் கூறியுள்ளனர். இதில், ஜெயலலிதாவின் ஆட்சி "சுமாரானது' என சில
தி.மு.க., ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்கள் ஆதரவு:
ஜெயலலிதாவிற்கு பெண்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. கலந்து கொண்ட 388 பெண்களில்,
அ.தி.மு.க.,விற்கு 193 பெண்களும், தி.மு.க.,விற்கு 136 பெண்களும் விஜயகாந்திற்கு 58
பெண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே கருத்துக் கணிப்பை நாங்கள் சந்தித்த
ஆயிரத்து 400 பேரில் சரிபாதி பெண்களிடம் கேட்டிருந்தால் ஜெயலலிதாவிற்கான ஆதரவு
சதவீம் மேலும் அதிகரித்திருக்கும்.
யார் முதல்வர்: நடைபெற இருக்கின்ற தேர்தலில்
யார் முதல்வராக வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவிற்கு
ஆதரவு தெரிவித்து 630 பேரும், கருணாநிதிக்கு ஆதரவு தெரிவித்து 587 பேரும்,
விஜயகாந்திற்கு ஆதரவு தெரிவித்து 213 பேரும் பதிலளித்துள்ளனர். கடந்த தேர்தலில்
யாருக்கு ஓட்டளித்தீர்கள் என்ற கேள்விக்கு தி.மு.க., என 679 பேரும், அ.தி.மு.க., என
610 பேரும் இதர கட்சிகள் என 111 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்
யாருடைய ஓட்டை பிரிப்பார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு அ.தி.மு.க., தி.மு.க.,
ஓட்டுகளை சரிசமமாக பிரிப்பார் என தெரிகிறது. விஜயகாந்த் கட்சி தீவிரமாக வேலை
செய்யக்கூடிய தொகுதிகளில் தி.மு.க.,விற்கும் அ.தி.மு.க.,விற்கும் மோதல் கடுமையாக
உள்ளது.
அரசு ஊழியர் நிலை: இந்த கருத்துக் கணிப்பில் 167 அரசு ஊழியர்கள் கலந்து
கொண்டனர். இதில், 124 பேர் மாநில அரசு ஊழியர்கள், 43 பேர் மத்திய அரசு ஊழியர்கள்.
இவர்களில், மாநில அரசு ஊழியர்கள் தி.மு.க.,விற்கு ஆதரவாக 85 பேரும்,
அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக 27 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்திற்கு
ஒன்பது பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களில் தி.மு.க.,விற்கு 25
பேரும் அ.தி.மு.க.,விற்கு 14 பேரும், விஜயகாந்திற்கு மூன்று பேரும், பா.ஜ.,விற்கு
ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர்களில் ஆதரவு நிலையை
பார்க்கும் போது தி.மு.க.,விற்கு 65.86 சதவீதமும் அ.தி.மு.க.,விற்கு 24.55
சதவீதமும் உள்ளது.
குடும்ப அரசியல்: குடும்ப அரசியலை தி.மு.க., வளர்த்து
வருகிறது என்ற குற்றச்சாட்டு சரி என ஆயிரத்தி 400 பேரில் 844 பேர்
தெரிவித்துள்ளனர். தவறு என 556 பேர் தெரிவித்துள்ளனர். இதை பார்க்கும் போது
தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க விரும்பும் பலரும், தி.மு.க.,வினருமே குடும்ப அரசியலை
விரும்பவில்லை. வைகோ தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியது தவறு என 529 பேரும்
சரி என 871 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இளம் வாக்காளர்கள்: 18 முதல் 25
வயதிற்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் 221 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து
கொண்டனர். இவர்களில் அ.தி.மு.க.,விற்கு 79 பேரும் விஜயகாந்திற்கு 75 பேரும்
தி.மு.க.,விற்கு 67 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜயகாந்தின் வளர்ச்சி வரும்
தேர்தல்களில் நிலைத்து நிற்குமானால், அது தி.மு.க.,வை பாதிக்கும். கணிப்பு
முடிவுகளை வைத்து பார்க்கும் போது 38 தொகுதிகளில் 27 தொகுதிகளில்
அ.தி.மு.க.,கூட்டணியும், 11 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணியும் வெற்றி பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் கடைசி நேர மனமாற்றம் தேர்தல் முடிவையே மாற்றி
கருத்துக் கணிப்புகளை தடுமாறச் செய்யும் என்பதையும் மறுக்கமுடியாது.
*கருத்துக்
கணிப்பில் குடும்ப பெண்கள் 236 பேரும், மாநில அரசு ஊழியர்கள் 124 பேரும், மத்திய
அரசு ஊழியர்கள் 43 பேரும், தனியார் நிறுவன ஊழியர்கள் 212 பேரும், வர்த்தகர்கள் 329
பேரும், மாணவர்கள் 101 பேரும், கூலி வேலை செய்பவர்கள் 52 பேரும், விவசாயிகள் 156
பேரும், இதர தொழில்களை செய்யும் 147 பேரும் கலந்து கொண்டனர்.
தென்
மாவட்டங்களில் அ.தி.மு.க., அலட்சியம்: தேர்தல் வேலையில் தென்மாவட்டங்களை பொறுத்த
வரை அ.தி.மு.க.,விற்கு சாதகமான நிலையே காணப்படுகிறது. ஆனால், வெற்றிக்கனியை
பறிக்கும் அளவிற்கு அ.தி.மு.க.,வினர் வேலை செய்யவில்லை. தேர்தல் நெருங்கிவிட்ட
நிலையிலும் பூத் சிலிப்கள் வழங்கப்படவில்லை. மேலும், வாக்காளர்களை வீடு வீடாகச்
சென்று சந்திக்கவில்லை. வீடு தேடி சிலிப்புகள் வந்தால் தான் ஓட்டுப் போட பலரும்
ஓட்டுச்சாவடிக்கு செல்வார்கள். தி.மு.க.,வினர் பெரும்பாலான தொகுதிகளில் பூத்
சிலிப்களை வழங்கிவிட்டார்கள். மேலும், ஏன் தி.மு.க.,விற்கு ஓட்டுப் போட வேண்டும்
என்றும் நோட்டீஸ்களை வினியோகித்துள்ளனர். இதை, அ.தி.மு.க., செய்யாதது வாக்காளர்களை
தன் பக்கம் இழுக்கத் தவறி விட்டதாக தெரிகிறது. மூன்று கட்டமாக பண பட்டுவாடா
நடந்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்று சில மாவட்டத் தலைவர்கள்
வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.


ஆதாரமில்லாத தினமலரின் 2 லீட் ஸ்டோரிகள்:

5 5 அன்றும் 6 5 2006 அன்றும் தினமலர் வெளியிட்டுள்ள லீட் ஸ்டோரிகள் இரண்டுமே, எவ்வித ஆதாரங்களையும் மேற்கோள் காட்டாமல் புனைகதையைப் போல எழுதப் பட்டுள்ளது. 5 5 2006 இதழில், பிரதமரின் தமிழகப் பிரச்சாரப் பேச்சில் தயாநிதி மாறன் குறித்து எதுவுமே சொல்லப்படவில்லை என்று திமுகவினர் ஏமாந்து விட்டதாக இந்த லீட் ஸ்டோரி குறிப்பிடுகிறது.


6 05 2006 அன்று வெளியான லீட் ஸ்டோரியில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரப் போவ்தாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இனதச் செய்தியும் ஒரு கற்பிதத்தின் அடிப்படையிலான செய்தியாகும். இதிலும் எதுவும் மேற்கோள் கட்டப்படவில்லை. ஆனால், மத்திய அரசின் சார்பில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயராது என்று வெளியிடப் பட்ட அறிக்கையை தினமலர் தவிர பிற இதழ்கள் வெளியிட்டுள்ளன.
தினமலரில் வெளியான லீட் ஸ்டோரி இது:


தேர்தல் பரிசு! விரலில் வைக்கும் மை காயும் முன் வெளியாகப்போகிறது அறிவிப்பு*
மத்திய அரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட், தி.மு.க., கட்சிகள் மவுனம்

புதுடில்லி:
ஐந்து மாநில தேர்தல் பரிசாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை
மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இந்த விலை உயர்வு இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருக்கும். வரும் எட்டாம் தேதி ஓட்டு போடும் போது விரலில் வைக்கும் மை காயும் முன்பாக இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது. மக்களை கடுமையாகப் பாதிக்கும் இந்த விஷயத்தில் மத்திய அரசு இந்த அளவுக்கு திடமான ஒரு முடிவை எடுக்க துணிந்து விட்ட பின்பும், அதற்கு ஆதரவு அளித்து வரும் தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் மூடி மவுனியாக இருக்கின்றன. பெட்ரோலியப் பொருட்களின் விலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்றவாறு உயர்த்தப்படாததால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு 2005'06ம் நிதியாண்டில் ரூ.39 ஆயிரத்து 595 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் கெரசின் விற்பனையில் ரூ.14 ஆயிரத்து 384 கோடி, சமையல் காஸ் விற்பனையில் ரூ.10 ஆயிரத்து 245 கோடி, டீசல் விற்பனையில் ரூ.13 ஆயிரத்து 284 கோடி, பெட்ரோல் விற்பனையில் ரூ.இரண்டாயிரத்து 680 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி., மூலம் 14 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டிஸ்கவுன்டாக ரூ.750 கோடி செலுத்தியுள்ளது. இருப்பினும், மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் கடந்த நிதியாண்டில் மிக அதிக பட்சமாகவே இருந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் மானியத் தொகையை ரூ.இரண்டாயிரத்து 900 கோடியில் இருந்து ஓரளவுக்கு உயர்த்தினால் நஷ்டத்தைக் குறைக்க முடியும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு கோரிக்கையை முன் வைத்தன. ஆனால், இதை மத்திய நிதி அமைச்சகம் ஏற்க மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ரூ. 11 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு பத்திரங்களை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை இதனால் ஈடுகட்ட முடியவில்லை. மேலும், காலம் கடந்து எடுத்த முடிவாகவே இது கருதப்பட்டது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் 50 சதவீத வினியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தான் கவனித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் நிர்பந்தமாக உள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சமையல் காஸ் விலையில் ரூ.192ம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஆறு ரூபாயிலிருந்து ஏழு ரூபாய் வரையும், கெரசின் விலையில் ரூ.13ம் உயர்த்த வேண்டும் என்பது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இதில், கெரசின் விலையில் மத்திய அரசு கை வைக்காது. ஆனால், இதர பெட்ரோலியப் பொருட்களின் விலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கை அளவுக்கு உயர்த்தாவிடிலும் ஓரளவுக்கு விலையை உயர்த்த மத்திய அரசு சம்மதித்து விட்டதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலருக்கு மேல் உள்ளது. சமீபத்தில் ஈரான் எண்ணெய் துறை துணை அமைச்சர் ஹாதிமுகமது நிஜாத் ஹூசேன் டில்லி வந்து இருந்தார். அப்போது அவர் குளிர் காலத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ஒரு அதிர்ச்சி தகவலைத் தெரிவித்து இருந்தார். மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில் கோவையில் நிருபர்களைச் சந்தித்த போது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை அதிக நாட்களுக்கு தள்ளிப் போட முடியாது என்ற கருத்தைத் தெரிவித்து இருந்தார். அதற்கு ஏற்றார் போல் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தப் போகிறது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. கடைசி கட்டமாக வரும் 8ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும், மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்த அன்றைய தினமே பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தலாம் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில மக்களுக்கு மத்திய அரசு அளிக்கும் தேர்தல் பரிசு இதுவே என்ற விமர்சனம் தற்போதே எழுந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு நியாயமானது என்று பொதுத்துறை நிறுவனங்கள் கூறினாலும், இந்த விலை உயர்வு மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்ற நிலை உள்ளது. மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., இடம் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு வெளியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஒவ்வொரு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயரும்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்ற போதிலும் வாயை திறக்காமல் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் உள்ளன. கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தி.மு.க.,வோ ஓட்டுப்பதிவு நடக்கும் வரை இந்த விலை உயர்வு அறிவிப்பு வராமல் இருந்தாலே போதுமானது என்ற நிலைப்பாட்டை எடுத்து மவுனமாக உள்ளது.


வைகோவின் சிறப்புப் பேட்டி தினமலரில்:

தேர்தலில் வெற்றி நிச்சயம்! வைகோ சிறப்புப் பேட்டி என்ற தலைப்பில் தினமலரில் சிறப்புப் பேட்டி 6 5 2006 இதழின் 16ஆம் பக்கத்தில் அரைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வைகோவைத் தூக்கிப் பிடிக்கும் பக்கச் சார்பான பேட்டி இது.
தினகரனின் சிறப்புப் பேட்டியில் கலைஞரும், ராமதாசும்
தினகரன் 5 5 இதழில், ராமதாஸ் சிறப்புப் பேட்டி இடம் பெற்றுள்ளது. 6 5 இதழில், திமுக தலைவர் கருணாநிதியின் பேட்டி முழுப்பக்கத்தில் வெளியாகியுள்ளது.



கருணாநிதியின் பேட்டி, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தரப்பு வாதஙக்ளை மீண்டும் நினைவூட்டும் வகையில் உள்ளது.

தினகரனின் 5 5 2006 இதழில், திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை என்ற தலைப்பில் லீட் ஸ்டோரி வெளியாகியுள்ளது. 207 இடங்களில் திமுக ஜெயிக்கும் என்று ஜூனியர் விகடனும், நக்கீரனும் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருப்பதாக இந்தச் செய்தி கூறுகிறது. தமக்கு ஆதரவான கருத்துக் கணிப்புக்களை வெளியிடும் தமிழகப் பத்திரிகைகளின் எழுதப்படாத விதிக்கேற்ப தினகரனும் 8 காலம் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் கருணாநிதி கவிதை:

திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கவிதை, தினகரனில் 6 5 அன்று 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. வெற்றியை உறுதி செய்ய எச்சரிக்கை தேவை என்று தம் தொண்டர்களுக்கு மிகச் சுருக்கமாக எழுதப் பட்டுள்ள இந்தக் கவிதை தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது.

புதிய தமிழகத்தை வன்முறைக் கட்சியாகச் சித்தரிப்பு:

தலித் கட்சிகளை வன்முறைக் கட்சிகளாகச் சித்தரிக்கும் வழக்கம் தமிழ்ப் பத்திரிகைகளில் பரவலாகக் காணப்படும் வழக்கம். புதிய தமிழகம் கட்சியின் பேச்சுக்களோ, பேட்டிகளோ, அறிக்கைகளோ இடம் பெறாத தமிழ்ப் பத்திரிகைகளில், தொடர்ந்து நெகட்டிவான செய்திகள் மட்டுமே இடம் பெறுவது வழக்கம். இந்த மரபின் படி, தினகரனின் 6ஆம் தேதி இதழில் 2ஆம் பக்கத்தில், ஓட்டப்பிடாரம் தொகுதியில், வாக்காளர்களை மிரட்டும் புதிய தமிழகம் திமுகவினர் சாலை மறியல், என்ற தலைப்புடனும், மறியல் செய்யப்பட்ட படத்துடனும், ஒரு 4 காலம் செய்தி இடம் பெற்றுள்ளது.

Thursday, May 04, 2006

தினமலரின் குறும்பு:

தனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை வெளிப்படை யாகவும், கூச்சமின்றியும், அறநெறிகளை மீறியும் செய்து வரும் தினமலர் 03 05 2006 அன்று தயாநிதி மாறன் குறித்து முதல் பக்க லீட் ஸ்டோரியை வெளியிட்டுள்ளது. தயாநிதி மாறன் விவகாரத்தில் டாடாவுடன் பேச நிராகரிப்பு... கருணாநிதியின் கோரிக்கையை ஏற்க சோனியா மறுப்பு என்பது அந்த லீட் ஸ்டோரியின் தலைப்பாகும். இந்த ஸ்டோரியில், எங்குமே, யாரையுமே மேற்கோள் காட்டப் படவும் இல்லை. இந்த வாதங்களுக்கு எந்த ஆதாரமும் முன் வைக்கப் படவுமில்லை. முழுக்க முழுக்க இது ஒரு கற்பனையாகவோ, வதந்தியாகவோ இருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
அந்தச் செய்தியை இங்கே அப்படியே தருகிறோம்.:

தயாநிதி மாறன் விவகாரத்தில் "டாடா'வுடன் பேச... சோனியா நிராகரிப்பு! கருணாநிதி கோரிக்கையை ஏற்க மறுப்பு

நமது சிறப்பு நிருபர்
டாடா நிறுவனத்தை மிரட்டியதாக கூறப்படும் சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை காப்பாற்ற தி.மு.க., தலைமை காங்.,
கட்சியிடம் வைத்திருந்த கோரிக்கையை காங்., நிராகரித்து விட்டது.

இந்த விவகாரத்தில் டாடா நிறுவனம் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க., தலைமை விரும்புகிறது. ஆனால், இது தொடர்பாக டாடா நிறுவனத்திடம் பேச
சோனியாவும், பிரதமரும் மறுத்து விட்டதாக டில்லி காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.

வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு (டி.டி.எச்.,) வர்த்தக
உரிமம் பெற்றுள்ள டாடா நிறுவனத்தில், சன் "டிவி' குழுமத்தை பங்குதாரராக்க வேண்டும்
என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதாக பத்திரிகைகளில்
செய்திகள் வெளிவந்தன. இந்த விவகாரத்தை முதன் முதலில் கிளப்பியவர் வைகோ.

டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் நாட்டில் உள்ள தொழிலதிபர்களை
உலுக்கியுள்ளது. தேர்தல் களத்தில் இது தி.மு.க.,வுக்கு பெரும் தர்மசங்கடத்தை
ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரமாக செய்திகள் தொடர்ந்து
வெளியாகிக் கொண்டுள்ளன. ஆனால், டாடா நிறுவனம் இந்த செய்திகளை இதுவரை
மறுக்கவில்லை.

இதுதான் தி.மு.க.,வை பீதிக்குள் தள்ளி விட்டது. தேர்தல்
நேரத்தில் டாடா விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தி
வருவதாக தி.மு.க.,வினரே கூறி வருகின்றனர்.

டாடாவை மிரட்டிய விவகாரம்
தமிழக தேர்தலின் போக்கையே மாற்றிவிடும் என்ற அச்சம் தி.மு.க., தலைமையை பிடித்துக்
கொண்டுள்ளது. இந்த விவகாரத்திலிருந்து எப்படியாவது தயாநிதி மாறனை மீட்க வேண்டும்
என்று தீவிரமாக இறங்கியது தி.மு.க., தலைமை.

இதற்காக முதலில் காங்கிரஸ்
தலைவர் சோனியாவிடம் தி.மு.க., தலைமை பேசியது. "இந்த விவகாரத்தில் டாடா நிறுவனம்
உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்தால் தேர்தலுக்கு
நல்லது' என்று தி.மு.க., தலைமை கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தில்
தலையிடாமல் சோனியா ஒதுங்கிக் கொண்டார். "இதில் தலையிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு
அவப்பெயர் வந்துவிடும்' என்று சோனியா தெரிவித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரம்
கூறுகிறது. பின்னர் பிரதமரிடம் தி.மு.க., தலைமை முறையிட்டது. பிரதமரும் இந்த
விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டதாக தெரிகிறது.

சோனியாவும்,
பிரதமரும் தலையிட மறுத்துவிட்டதால், டாடா விவகாரம் மேலும் வெடித்துக் கொண்டே
இருக்கிறது. தமிழக தேர்தலில் டாடா விவகாரம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்
என்று தி.மு.க.,வினரே தங்கள் கட்சி தலைமையிடம் எடுத்துக் கூறி வருகின்றனர்.
இதிலிருந்து தயாநிதி மாறனை எப்படி மீட்பது என்று தெரியாமல் தி.மு.க., தலைமை தவியாய்
தவித்து வருகிறது.
Source :
http://www.dinamalar.com/2006may03/fpnews1.asp

கருணாநிதிக்கு எதிரான செய்திக்கு தினத் தந்தியில் முக்கியத்துவம்:

தினந் தந்தி அதிமுக வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் அதே வேளையில் கருணாநிதிக்கு எத்ரிஆன நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. கருணாநிதியின் பிரச்சார உரைகளை வெளியிட்டு வந்தாலும், அவருக்கு எதிராக யார் பேசினாலும், அது ஜெயலலிதாவா, வைகோவா, நடிகர் செந்திலா என்பது முக்கியமல்ல, அதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவது தினத் தந்தியின் பாணியாக இருக்கிறது.

மே 03 இதழில், வைகோ கருணாநிதி மீது வழக்குப் போடப் போவதாக அறிவித்துள்ள செய்தி, " என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டிய கருணாநிதி மீது ரூ 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு, சேப்பாக்கம் கூட்டத்தில் வைகோ அறீவிப்பு", என்ற தலைப்பில் 4 ஆம் பக்கத்தில் 5 காலம் செய்தியாக விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. இந்தச் செய்தியில் வைகோவின் பேச்சை விரிவாக வெளியிட்டதுடன், இதே நாளின் 20 ஆம் பக்கத்தில், "கருணாநிதிக்கு வைகோ அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் விவரம்", என்ற தலைப்பில் வக்கீல் நோட்டீஸ் குறித்த விவரமும் வெளியிடப் பட்டுள்ளது.

கேரளாவில் ஆட்சி மாற்றம்: இந்து நாளிதழ் கணிப்பு

04 05 2006 தி இந்து இதழில் அந்த நாளிதழ் சி என் என் - ஐ பி என் தொலைக்காட்சியுடன் இணைந்து நடத்திய எக்சிட் போல், எனப்படும் வாக்களித்து விட்டு வாக்குச் சாவடியை விட்டு வெளியில் வருபவர்களிடம் கேட்டுப் பெறும் தகவல்களின் அடிப்படையில் இந்தக் கணிப்பு நடத்தப் படுகிறது. இதன் அடிப்படையில் இடது சாரிக் கூட்டணி 107 முதல் 117 இடங்கள் வரைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. அறிவியல் பூர்வமான இந்த ஆய்வின் முடிவு, பதில் அளித்தவர்களின் நேர்மையைப் பொறுத்த விஷயமாகும். எவ்வளவு தூரம் உண்மையைச் சொல்லியிருக்கிறார்களோ, அவ்வளவு தூரம், அது நிஜத்தைப் பிரதிபலிக்கும்.

நடுகை செய்யப் பட்ட செய்தி:

ஈராக் போரில், பத்திரிகையாளர்களை போர் வீரர்களுடன் உள்ளே புகுத்தி அனுப்புவது அமெரிக்க ராணுவத்தின் நுட்பமாக இருக்கிறது. அதே போல இந்தியப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை உளவுத் துறையோ, வேறு எவருமோ நடுகை செய்வதாக (ப்லன்ட்) நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அதைக் கண் முன் நிறுபிப்பதாக உள்ளது 04 05 2006 அன்று தினமலர், தினமணி, தினத்தந்தியில் இடம் பெற்றுள்ள செய்தி.
தினமணியிலும், தினத் தந்தியிலும் முதல் பக்கத்திலும், தினமலரில் கடைசிப் பக்கத்திலும் வெளியாகியுள்ள பெட்ரோல் விலை உயரும் என்ற அறிவிப்பு தான் அது. இதில், எங்கும் எவரும் மேற்கோள் காட்டப் படவில்லை. சிதம்பரத்தின் அறிவிப்பும், அதற்கு அவரே அளித்துள்ள மறுப்பும் இந்தச் செய்தியில் இடம் பெற்றிருந்தாலும், இது ஒரே நேரத்தில் யாரையும் மேற்கோள் காட்டாமல் வெளியிடப் பட்டிருக்கும் விதம் இதை ஒரு நடுகை செய்யப் பட்ட செய்தியாகக் கருத இடமளிக்கிறது.

தினமலரில் வெளி வந்த செய்தி இங்கே அப்படியே தரப் படுகிறது:



நான்கு நாட்களில் பெட்ரோல், டீசல், காஸ் விலை கடுமையாக
உயர்கிறது * தி.மு.க., நிர்பந்தத்தால் அறிவிப்பை தள்ளிவைத்தது மத்திய
அரசு


புதுடில்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த
வேண்டிய கட்டாய நிலைக்கு மத்திய அரசு வந்துவிட்டது. லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை
அதிகரிக்கப்பட உள்ளது. சமையல் காஸ் விலையும் பத்து ரூபாயில் இருந்து ரூ. 15 வரை உயர
உள்ளது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே விலை உயர்வு அமலுக்கு
வரவேண்டும் என கூட்டணி கட்சிகள் கொடுத்துவந்த நெருக்கடி காரணமாக தற்போது விலை
உயர்வு அறிவிக்கப்படவில்லை.


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்
தங்களால் நஷ்டத்தை தாங்கி கொள்ள முடியாது. எனவே விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஓட்டுப்பதிவு வரும் 8ம் தேதி முடிந்ததும் அன்று நள்ளிரவு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாமதத்திற்கு மத்தியில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., வின் தொடர் நெருக்கடியும் காரணம் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் ஆகியவற்றை வினியோகித்து வருகின்றன. இதில் பெரும் பங்கு ஐ.ஓ.சி., நிறுவனத்துடையது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 75 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்து காணப்படுவதால் இந்நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கடந்த 200506ம் நிதியாண்டில் இந்நிறுவனங்களுக்கு ரூ. 39 ஆயிரத்து 600 கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரலில் ஐ.ஓ.சி., நிறுவனத்துக்கு ரூ. இரண்டு ஆயிரத்து 450 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மே மாதத்தில் ஆயிரத்து 560 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து 200607ம் ஆண்டில் ரூ. 57 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்திக்க உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 9.34, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 10. 43, மண்ணெண்ணெய் விலையில் லிட்டருக்கு ரூ. 16.78, சமையல் காஸ் விலையில் ஒரு சிலிண்டருக்கு ரூ. 200 என நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதை சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையில் ரூ. 10 உயர்த்த வேண்டும். அதே போல் சமையல் காஸ் விலையையும் உயர்த்த வேண்டும் என ஐ.ஓ.சி., தலைவர் சில நாட்களுக்கு முன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். கோவையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை நெடுநாளைக்கு தள்ளிப்போட முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாய் வரையும், சமையல் காஸ் விலையில் பத்து ரூபாயில் இருந்து ரூ. 15 வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து விட்டது. ஆனால், ஐந்து மாநில தேர்தல்கள் தான் இந்த முடிவை சற்று தள்ளிப் போட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் தான் இதற்கு பெரும் எதிர்ப்பு என்பதால், கேரளா, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் வரும் 5ம் தேதிக்குள் அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், 8ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம் மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளில் தான் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தை சமாளிக்க 5ம் தேதிக்குள் விலை உயர்வை அறிவிக்க மத்திய அரசு யோசித்தது. இதை அறிந்த , தி.மு.க., தமிழக ஓட்டுப்பதிவு வரை அறிவிப்பை தள்ளிப்போட ரொம்ப பிரயத்தனம் செய்தது. இதற்காக மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மூலமாக காய் நகர்த்தல் வேலைகள் நடந்தன. விலை உயர்வு பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்றால் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் தேவை. ஆனால், சிதம்பரம் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் இருப்பதால் அதை காரணம் காட்டி தி.மு.க., அடுத்த வாரம் வரை தள்ளிப் போட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது . இது குறித்து டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு: தமிழக ஓட்டுப்பதிவுக்கு முன் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டால் தேர்தல் வெற்றி வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலை தேர்தலில் உருவாகியுள்ளதால் "விலை உயர்வு அறிவிப்பு' எக்காரணம் கொண்டும் தேர்தலுக்கு முன்பாக இருக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தி.மு.க., தலைமை திட்டவட்டமாக கூறி விட்டது. தமிழகத்தை சேர்ந்தவரே நிதியமைச்சராகவும் இருப்பதால் "விலை உயர்வு அறிவிப்பு' வெளியாவதில் காலதாமதம் ஏற்படுத்துவது சுலபமாகி விட்டது. தமிழகத்தேர்தல் ஓட்டுப்பதிவு தினமான 8ம் தேதி நள்ளிரவிலோ அல்லது ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 11ம் தேதி நள்ளிரவிலோ விலை உயர்வு அறிவிப்பை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால் தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கருத்து உள்ளது. எனவே ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஓட்டுப்பதிவு தினமான 8ம் தேதி நள்ளிரவில் விலைஉயர்வு அறிவிப்பு வெளியாகும். குறைந்த ஓட்டுபதிவு என்ற நிலை உருவானால் 11ம் தேதி நள்ளிரவு வெளியாகும். தமிழக தேர்தல் முடிவுகள் தி.மு.க., வுக்கு பாதகமாகவும் அ.தி.மு.க., வுக்கு சாதகமாகவும் இருந்தால் நிச்சயம் அன்றைய தினம் நள்ளிரவே விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும். எனவே தமிழக மக்கள் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., வுக்கு ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் பெட்ரோலியப்பொருட்களின் விலை உயர்வை உடனடியாக எதிர் கொண்டே ஆக வேண்டும். இவ்வாறு டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. சொன்னது என்ன? சிதம்பரம் விளக்கம்: "" பெட்ரோல் விலை உயரும் என நான் கூறவில்லை; நீண்ட காலத்துக்கு தள்ளிப்போட முடியாது என்றே தெரிவித்தேன்,'' என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: என்னிடம் " பெட்ரோல் விலை பற்றிய முடிவை எவ்வளவு காலத்திற்கு தள்ளிப்போட முடியும்?' என்று கேட்கப்பட்டது. " நீண்ட காலத்திற்கு தள்ளிப் போட முடியாது' என்று பதில் அளித்தேன். விரைவில் பெட்ரோல் விலை உயரும் என்று நான் கூறவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Source :
http://www.dinamalar.com/2006may04/fpnews3.asp

மாயாவதியின் பேச்சு: தமிழ்ப் பத்திரிகைகள் [தினமணி தவிர] புறக்கணிப்பு

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் எஸ் கிருஷ்ணசாமியை ஆதரித்துப் பேசிய பேச்சு தினமணியில் மட்டும் வெளியாகியுள்ளது. 04 05 2006 அன்று 6ஆம் பக்கத்தில் 6 காலம் செய்தியாக, 3 காலம் படத்துடன் இந்தச் செய்தி வெளியிடப் பட்டுள்ளது. இச்செய்தியைப் பிற இதழ்களில் காணமுடியவில்லை.

தயாநிதிமாறனுக்கு எதிரான தினமலரின் போர்:

டாடா விவகாரத்தை முடிந்தவரைப் பெரிதாக்கி, அதன் மூலம் தயாநிதி மாறனைப் பதவி நீக்கம் செய்ய முடியுமா என்பது தினமலரின் பிரமப் பிரயத்தன முயற்சியாக இருப்பதைப் பாமரனும் உணர்ந்து கொள்வான். தினமும், டாடா- தயாநிதி தொடர்பான ஒரு செய்தியை எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வெளியிட்டுத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொள்வது தினமலரின் வழக்கமாக இருக்கிறது.

04 05 2006 அன்று சென்னை வரும் பிரதமர், பொதுக்கூட்டத்தில் இது தொடர்பாக அறிவிப்பார் என்கிறது தினமலரின் செய்தி. இதற்கும் எவ்வித ஆதாரத்தையோ, மேற்கோளையோ காட்டவில்லை. ஒரு பத்திரிகை முதலாளிக்கு என்னவெல்லாம் ஆசையோ அதையெல்லாம் செய்தியாக, குறிப்பாக லீட் ஸ்டோரியாக்க முடியுமா? இது அபத்தம் இல்லையா? அறநெறிகளை மீறுதலின் உச்சம் இல்லையா?

தினமலர் வெளியிட்டுள்ள செய்தியை அப்படியே தருகிறோம்:


தயாநிதி விவகாரம் குறித்து சென்னையில் இன்று
விளக்கம்?...மன்மோகன் முடிவு! தேர்தல் பிரசாரத்தில் மத்திய அரசின் முடிவை
அறிவிக்கிறார்

நமது சிறப்பு நிருபர்

டாடா நிறுவனத்தை மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில்
தி.மு.க., தலைமையின் நெருக்கடி ஒரு பக்கத்திலும், இந்த விவகாரத்தில் பிரதமர் பதில்
சொல்லியாக வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை மறுபக்கத்திலும் வலுத்து வரும்
நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று தமிழகம் வருகிறார். திருச்சி, சென்னை ஆகிய
இடங்களில் தி.மு.க., அணிக்கு தேர்தல் பிரசாரம் செய்யும் அவர் "டாடா விவகாரத்தில்'
மவுனம் கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக தேர்தல் சூடு
பிடித்துள்ள நிலையில், டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் மத்திய அரசுக்கும்,
தேர்தல் களத்தில் நிற்கும் தி.மு.க.,வுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு (டி.டி.எச்.,) வர்த்தக உரிமம் பெற்றுள்ள டாடா
நிறுவனத்தில், சன் "டிவி' நிறுவனத்தை பங்குதாரராக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்
தயாநிதி மிரட்டியதாக வெளிவந்த செய்திகள் தி.மு.க., கூட்டணியை பெரிதும் பதம்
பார்த்துவிட்டது.
ஆறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் தி.மு.க.,வுக்கு எதிராக
களத்தில் நிற்கும் அ.தி.மு.க., அதே அளவு பலத்தோடு இருப்பது இந்த தேர்தலில்
ஏற்பட்டுள்ள புதிய நிலைமை. எதிர்ப்பு அலை இல்லாத நிலையில் உள்ள ஆளும் அ.தி.மு.க.,வை
எதிர்கொள்ள தி.மு.க., கூட்டணி பல்வேறு யுக்திகளை கையாண்டு
வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் தமிழக
தேர்தலில் கடுமையாக எதிரொலித்து வருகிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின்
வாயை அடைக்க, டாடா நிறுவனம் மறுப்பு தெரிவித்தால் மட்டுமே தயாநிதி மாறனை காப்பாற்ற
முடியும் என்று தி.மு.க., தலைமை கருதுகிறது.
மறுப்பு அறிவிக்கும்படி டாடா
நிறுவனத்திற்கு நிர்ப்பந்தம் செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும்,
பிரதமரிடமும் தி.மு.க., தலைமை கோரிக்கை வைத்தது. ஆனால், இரண்டு பேருமே கையை
விரித்து விட்டதாக டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த
நிலையில், தயாநிதி மாறன் தொடர்பான விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,
இதற்கு பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தேர்தல்
பிரசாரத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக அத்வானி போன்ற தேசிய
தலைவர்களும் இந்த கருத்தை வலியுறுத்தி வருவதால், டாடா விவகாரம் தேசிய பிரச்னையாக
உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியை ஆதரித்து பிரதமர் மன்மோகன்
சிங் இன்று திருச்சி மற்றும் சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும், நிருபர்கள் கண்டிப்பாக இந்த கேள்வியை
பிரதமர் முன் வைப்பது உறுதி.
அங்கே பேட்டியை தவிர்த்து விட்டாலும்,
பொதுக்கூட்டத்தில் டாடா விவகாரத்திற்கு பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்திற்கு
பிரதமர் தள்ளப்பட்டுள்ளார். காரணம், அவருக்கு தி.மு.க., தலைமை கொடுத்து வரும்
நெருக்கடி.
டாடா விவகாரத்தில் இதுநாள் வரை மவுனம் சாதித்த பிரதமர் சென்னையில்
மவுனத்தை கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டாடா நிறுவனத்தை வளைக்க
முயற்சி: தயாநிதி மாறன் மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் சோனியா, பிரதமர்
ஆகியோர் சமாதான கருத்துக்களை கூறினாலும், அவை எடுபடுமா என்பது கேள்விதான். இதற்கு
டாடா நிறுவனத்திடம் இருந்தே மறுப்பு வர வேண்டும் என்று தி.மு.க., தலைமை
கருதுகிறது.
இதற்காக நிருபர்கள் கூட்டத்தை கூட்டி டாடா நிறுவனத்தினர்
பேட்டியளிக்க வேண்டும். அல்லது பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட வேண்டும் என்று
நிர்ப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், டாடா நிறுவனத்தினருக்கும் பல்வேறு
தரப்புகளிலிருந்து நெருக்கடி கொடுத்து வருவதாக டில்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Source :
http://www.dinamalar.com/2006may04/fpnews1.asp

கலைஞரின் கடிதம்: தினகரன் மட்டும் வெளியிட்டது

04 05 2006 தினகரனின் 6 ஆம் பக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. தனது உடன்பிறப்புகளுக்கு, வெற்றியின் வாய்ப்பு அதிகரித்து வருவது குறித்து, ஒரு கற்பனை உரையாடலை வெளியிட்டு இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார் கருணாநிதி.
பொதுவாக, கருணாநிதியின் கடிதங்களை எல்லா தமிழ் நாளிதழ்களும் சுருக்கியோ, நறுக்கியோ, அப்படியோ வெளியிடும். தினகரன், அவர் குடும்பப் பத்திரிகை என்பதால் அப்படியே வெளியிடும். 04 05 அன்று வெளியான கடிதத்தில் நிறைய கற்பனை வசனங்கள் உள்ளன. குறிப்பாக தமிழக முதல்வரைக் கடுமையாகக் கிண்டல் செய்யும் வசனங்களும் உள்ளன. அந்தக் கடிதத்தை எடிட் செய்து விவாதத்துக்குரிய தகவல்களை மட்டும் தெரிவு செய்து வெளியிடும் திறன் சப் எடிட்டர்களுக்கு இல்லையோ என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. கலைஞர் கவிதைகளையும் இது போன்ற சிக்கல்களால் புறக்கணிப்பது தம்ழிப் பத்திரிகையின் வழக்கமாக இருக்கிறது. கலைஞர் கடிதம் அப்படியே இங்கே பிரசுரிக்கப் படுகிறது.






தினகரனின் சிறப்புப் பேட்டிகள் :

மே 3 அன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம் கிருஷ்ணசாமியின் சிறப்புப் பேட்டியும், 04 05 2006 அன்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பேட்டியும் தினகரனின் 8ஆம் பக்கத்துச் சிறப்புப் பேட்டிகளாக இடம் பெற்றுள்ளன.

Monday, May 01, 2006

தினகரனின் வன்முறை






ஜெயலலிதா வேலூர் பஸ் நிலையம் அருகில் பேசிய போது கூடிய கூட்டட்த்கில் கலந்து கொண்டவர்கள் படம் என்று ஒரு படம் தினகரனிலும் [கருப்பு வெள்ளைப் படம்], அதே இடத்தில் அதே நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என்று ஒரு படம் தினத் தந்தியிலும் [வண்ணப்படம்] வெளியாகியுள்ளது. கூட்டம் முடிந்து, மக்கள் கலைந்து போன பிறகோ, அல்லது கூட்டம் நடந்த இடத்தை விட்டு அப்பகுதியைக் கடந்த பின்போ, படத்தை எடுத்து தினகரன் வெளியிடுகிறது. ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மட்டும் இம்மாதிர்யான படங்களை வெளியிட்டு வருகிறது தினகரன். இது அறமா? இது வன்முறை இல்லையா?



அரசியல்வாதிகளான எழுத்தாளர்கள்

இந்தியா டுடே மே 10 2006 ப.26 27 "அரசியல்வாதிகளான எழுத்தாளர்கள்", தமிழக சட்டமன்றத் தேர்தலில் பல எழுட்த்காளர்கள் வேட்பாளர்களாகக் களம் இறங்கியிருப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. கே முரளிதரனின் கட்டுரை.

வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ள சில எழுத்தாளர்கள்:

திருப்பரங்குன்றம் சி பி எம் வேட்பாளர் சு வெங்கடேசன், காட்டுமன்னார்கோயில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமார், திண்டுக்கல் சி பி எம் வேட்பாளர் பால பாரதி, மருங்காபுரி திமுக வேட்பாளர் சல்மா.

சிதம்பரத்துக்கு விளக்கமளிக்கும் ஜெயலலிதா அறிக்கை
எல் கே அத்வானி புகாருக்கு தயாநிதி அறிக்கை
இரண்டையும் வெளியிட 4ல் 3 பத்திரிகைகள் தயாரில்லை..

மே 1 2006 திங்கள் கிழமைல் வெளியான இதழ்களில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இது. இரண்டு முக்கிய அறிக்கைகள். ஒன்று, சுனாமி வெள்ள நிவாரண்மாக தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொடையைக் குறிப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட அறிக்கை. இரண்டாவது, தயாநிதி மாறன் குறித்து எல் கே அத்வானி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு தயாநிதி மாறனின் அறிக்கை. இந்த இரண்டுமெ, க்டந்த ஒன்றிரண்டு நாட்களின் வெவ்வேறு சமயங்களில் தெரிவிக்கப் பட்ட கருத்துக்களுக்கு எதிர்வினைகள்.

சிதம்பரத்தின் கருத்துக்களை வெளியிட்ட பத்திரிகைகள், அதற்கான எதிர்வினையான ஜெயலலிதாவின் அறிக்கையையும் வெளியிட வேண்டும். எல் கே அத்வானியின் கருத்தை வெளியிட்டவர்கள் தயாநிதியின் கருத்தையும் வெளியிட வேண்டும். இது தார்மீக நெறி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல. ஒரு பத்திரிகையைக் காசு கொடுத்து வாங்கும் வாசகனின் தார்மீக உரிமையுமாகும். கருத்துக்களை இருட்டடிப்பு செய்வதும், பத்திரிகைகள் ஒவ்வொன்றுமே ஒரு கட்சியை ஆதரித்தும், வேறொரு கட்சியைப் புறக்கணித்தும் பத்திரிகை நடத்துவது இந்தத் தேர்தலில் அதிகமாகவே காணக் கூடியதாக இருக்கிறது.
ஜெயலலிதா அறிக்கையையும் தயாநிதி அறிக்கையையும் தினமணி வெளியிட்டுள்ளது.

தினமலர் ஜெயலலிதாவின் அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளது.

தினத் தந்தி ஜெயலலிதாவின் அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளது

தினகரனில் 2 அறிக்கைகளும் இடம் பெறவில்லை.

தினகரன் தயாநிதி மீது குற்றம் சாட்டப் பட்ட போதும் அதை செய்தியாக வெளியிடவில்லை. தயாநிதி இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த போது மட்டும், அதைப் பெரிய அளவில் வெளியிட்டது தினகர்ன். அதே வேளை சிதம்பரத்தின் பேச்சுக்களை விரிவாக வெளியிட்ட தினகரன், அதற்கு மறுப்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வது அறமாகாது.

பிடித்தமான கருத்துக் கணிப்புக்கு மட்டுமே இடம்:

தமிழ்ப் பத்த்ரிகைகள் கடைப்பிடித்து வரும் விடாப் பிடியான கொள்கையின் படி, தினத் தந்தி, அதிமுக வெற்றி பெறும் என்று கணித்த மற்றுமொரு கருத்துக் கணிப்பை 01 05 2006 இதழில் வெளியிட்டுள்ளது. டெக்கான் கிரானிக்கள் இதழும், ஏ சி நீல்சன் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 46% பேரும், திமுகவுக்கு 42% பேரும் ஆதரவு அளித்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினகரனின் ஆய்வுத் தொடர்:

திமுகவை முன்னிறுத்தும் தினகரனின் ஆய்வுத் தொடர் 01 05 2006 திங்கட்கிழமை தொடங்கப் பட்டுள்ளது. நியாயமானதுமில்லை, நடுநிலையானதுமில்லை என்று கூறத்தக்க இந்த ஆய்வு, மக்கள் தெளிவாகவே இருக்க்கிறார்கள் என்று கூறுகிறது.

சிறப்புப் பேட்டிகள்:

தினகரனின் சீறப்புப் பேட்டித் தொடரில், 01 05 2006 அன்று, திமுகவின் ஸ்டார் பேச்சாளர் வெற்றிகொண்டானின் சிறப்புப் பேட்டியும், 02 05 2006 அன்று, முன்னாள் நடிகரான பாக்கியராஜின் பேட்டியும் இடம் பெற்றுள்ளன.

தினமலர் மீதான தினகரனின் தாக்குதல்:

தினமலர், தாம்பிராஸ் எனப்படும் தமிழ்நாடு பிராமணர் சங்கட்த்தை உடைக்கச் சதி செய்து வருவதாக தினகரன் குற்றம் சாட்டி வருகிறது. 01 05 2006 அன்று தினகரன் இதழில் "பிராமணர் சங்கத்தை உடைக்க 5 சென்ட் நிலம் தருவதாக ஆசை காட்டியது தினமலர் -- குமரி மாவட்ட தலைவர் பேட்டி", என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தினமலரில் கம்யூனிஸ்ட் கட்சிக்காரரின் சிறப்புப் பேட்டி:

"தங்களது நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகும் யாருடைய குரலுக்கும் இடம் தரத் தயங்க மாட்டோம்; தங்களுக்குப் பிடிக்காத யாருடைய குரலையும் நசுக்கத் தயங்க மாட்டோம்". ஏறத்தாழ இது தான் தினமலரின் மிஷன் ஸ்டேட்மென்ட்டாக இருக்க வேண்டும். சன் டிவியின் ஏகபோகத்தைக் கண்டிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான டடிள்யூ ஆர் வரதராஜனின் சிறப்புப் பேட்டியை தினமலர், மே முதல் நாளன்று 4 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

புதிய தமிழகம் தேர்தல் அறிக்கை : தினமலரும் தினகரனும் புறக்கணிப்பு

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் அதன் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில், திங்கட்கிழமை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பேச்சும், அறிக்கையின் மிக முக்கியமான சில குறிப்புகளும் தினமணியின் 02052006 07ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. தினத் தந்தி, இந்தச் செய்தியை 8ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியிட்டுள்ளது. தினமலரும் தினகரனும் இந்தச் செய்தியை முற்றிலுமாகப் புறக்கணித்திருக்கின்றன. தினகரன், தினமலரைப் பல விஷயங்களில் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுகிறதோ என்று எண்ண இடமிருக்கிறது.

களம் காணும் வாரிசுகள் என்ற தலைப்பில் தினமணியில் கட்டுரை:

02 05 2006 தினமணியில் 10 ஆம் பக்கத்தில் தமிழக தேர்தல் களத்தில் போட்டியிடும் வாரிசுகள் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவேயே இது போன்ற ஒரு தொகுப்பை இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு வெளியிட்டிருந்ததை இந்த வலைப்பூவில் பதிவு செய்திருக்கிறோம். . [ இந்தப் பட்டியலில் துணையுடன் பின்பு ஆய்வு நடத்த வேண்டியிருக்கும் என்பதால், தினமணியில் பொன் தனசேகரன் எழுதிய கட்டுரையை அப்படியே இங்கு பதிவு செய்கிறோம். ஆய்வுப் பணி என்பதால், பதிப்புரிமை பெற்றவரின் அனுமதி பெறப்படவில்லை. : ]

தேர்தல் களம் இறங்கும்
வாரிசுகள்


அரசியல் தலைவர்கள் தங்களது வாரிசுகளையும் அரசியலில் களம் இறக்குவது என்பது இந்திய அரசியலில் வழக்கமான ஒரு விஷயம். இந்த அரசியல் பண்பாட்டுக்கு தமிழகமும் விதிவிலக்கு இல்லை.
நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத்
தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த
தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்
பிரமுகர்களின் வாரிசுகளுக்குத் தேர்தலில்
போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் திமுக
துணைப் பொதுச் செயலாளருமான மு.க.
ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவசர நிலை காலத்தில் "மிசா'வில் சிறையில் இருந்த அவர், சென்னை நகர மேயராகவும் இருந்திருக்கிறார். 30 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து
வருகிறார் அவர். திமுக ஆட்சிக் காலத்தில்
அமைச்சராக இருந்த மறைந்த அன்பில்
தர்மலிங்கத்தின் மகன் அன்பில் பெரியசாமி
திருச்சி-1 தொகுதியில் மீண்டும்
போட்டியிடுகிறார். இவரது சகோதரர் அன்பில்
பொய்யாமொழி மறைவுக்குப் பிறகு,
அன்பில் பெரியசாமி தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. திமுக
அமைச்சர் மறைந்த தங்கப்பாண்டியின் மகன் தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டையில்
போட்டியிடுகிறார்.
ஆலங்குளத்தில் வாக்கிங் செல்லும் போது
கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை அருணா ஆலங்குளம் தொகுதியில்
திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் எம்பியாக
இருந்தவர் ஆலடி அருணா. திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரன்
வீரபாண்டி தொகுதியில் முதன் முறையாக
போட்டியிடுகிறார். மகனுக்காக வழக்கமான தமது
வீரபாண்டி தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்ட அவர், சேலம்-2 தொகுதியில் திமுக
வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், தூத்துக்குடித்
தொகுதியில் திமுக வேட்பாளராகப்
போட்டியிடுகிறார். நத்தம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலத்தின் மகன்
எம்.ஏ. ஆண்டி அம்பலம் திமுக வேட்பாளராகப்
போட்டியிடுகிறார். முன்னாள் எம்எல்ஏ
வீரணன் அம்பலத்தின் மகன் கே.வி.வி. ரவிச்சந்திரன் மேலூர் தொகுதியில் காங்கிரஸ்
வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
திமுக அமைச்சராக இருந்த என்.கே.கே.
பெரியசாமியின் மகன் ராஜா ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மகனுக்கு வழிவிட்டு தந்தை தேர்தலில் ஓதுங்கிக்கொண்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து கொலை செய்யப்பட்ட சுதர்சனத்தின் மகன் கே.எஸ். விஜயக்குமார்
கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதையத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் சகோதரர்
வசந்தகுமார் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜன், ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் மகன் எம்.கே. விஷ்ணு பிரசாத், செய்யாறு தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு
இளைஞர் காங்கிரஸ் தலைவர் இருந்தவர் இவர்.
நாடாளுமன்ற முன்னாள் காங்கிரஸ்
உறுப்பினர் இரா.அன்பரசின் மகன் அருள் அன்பரசு, வேலூர் மாவட்டம் சோளிங்கரில்
காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இதுபோல அரசியல் பிரமுகர்களின்
வாரிசுகள் அரசியலில் களமிறக்கி விடப்படும்போது, அக்கட்சிப் பிரமுகர்களுக்குக்
கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாரிசுகளுக்கும் கொடுக்கப்படுகிறது. சிலர், இடைவிடாத
தீவிர அரசியல் ஈடுபாட்டால் தங்களது தனித்தன்மை விளங்க பரிணமிப்பவர்களும் உண்டு. எனினும், ஆட்சிப் பதவிகளுக்கு குடும்ப வாரிசுகளைக் கொண்டு வரும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே இருந்து வருகிறது.

பொன். தனசேகரன்


குரு மூர்த்தியின் கட்டுரை

சன் டி விக்காக தயாநிதி மாறனால் இயக்கப் படும் தொலைத் தொடர்பு அமைச்சகம், என்ற தலைப்பில் குரு மூர்த்தியின் பெரிய கட்டுரை ஒன்று தினமணியில் 02 05 2006 இதழில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

விதியை மீறும் தினமலரும் தினகரனும்

திமுக அரசு செயல்படுத்திய
திருமண உதவித் திட்டத்தை
நிறுத்திய ஜெ. தாலி வாங்க
4 கிராம் தங்கம் தருவாராம்


என்ற தலைப்பில் தினகரனில் 02 05 2006 அன்று 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இது எப்படி செய்தியாகும்? ஒரு செய்தியாளர், தன் சொந்தக் கருத்தையும் சேர்த்து எழுதுவது எப்படிச் செய்தியாகும்? ஒப்பீனியன் வேறு, செய்தி வேறு, ஆசிரிய உரை வேறு என்பதெல்லாம், பல சமூகங்களில் மிகத் தெளிவாக வரையறுக்கப் பட்டு, பின் பற்றப் படுகின்றன. தமிழ் சமூகத்தில் தினமலரும், தினகரனும் இந்த விதிகளை அப்பட்டமாக மீறுபவை.

Sunday, April 30, 2006

தினகரனின் அப்பட்டமான பக்கச் சார்பு

Source : http://www.dinakaran.com/epaper/2006/Apr/28/default.htm

"கரூர் மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். மகாதான புரத்துக்கு அவர் வந்தபோது சாலையில் நின்று வரவேற்கும் மக்கள்", என்ற பட விளக்கத்துடன் தினகரன் 28 4 2006 முதல் பக்கத்தில் படம் ஒன்று வெளியாகியுள்ளது. [அருகில் படத்தைக் காணலாம்].

கருணாநிதிக்கும் தயாநிதிக்கும் மக்கள் வெள்ளமாகக் கூடுவதாகத் தினம் பக்கம் பக்கமாக வெளியிடும் தினகரன், ஜெயலலிதாவுக்குக் கூட்டமே வராதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது அறமா? கருணாநிதியோ, பிற தலைவர்களோ செல்லும் புறநகர்ப் பகுதியில் இது போன்ற ஒரு படத்தை எடுக்க முடியாதா? நியாயமான செய்தி வெளியிடலும், படம் வெளியிடலும் எப்போது தமிழ்ப் பத்திரிகைகளில் காணக் கிடைக்கும்?

நியாயமான கவரேஜ் இல்லை.

ஏப்ரல் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில் 2 தடவை கருணாநிதியின் அரசியல் கவிதை வெளியாகியுள்ளது. இதில் 28 அன்று ஒரு கவிதையும், 30 அன்று ஒரு கவிதையும் இடம் பெற்றுள்ளது.

வைகோ 28 4 2006 அன்று "பிர்மாஸ்திரங்களை இனிதான் ஏவுவேன்", என்று பேசிய பேச்சுக்குப் பதிலுரையாகத்தான் கருணாநிதி, பிரமாஸ்திரப் பிதற்றல் என்ற கவிதையை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

வைகோவின் பேச்சை தினந் தந்தியில் 28 4 அன்று 3ஆம் பக்கத்தில் வாசிக்கலாம்.

கருணாநிதியின் கவிதையை, தினகரனில் 30 4 அன்று 7 ஆம் பக்கத்தில் வாசிக்களாம்.

வைகோவின் பேச்சை தினகரன் வெளியிடவில்லை. கருணாநிதியின் கவிதையை தினத் தந்தி வெளியிடவில்லை. பிற பத்திரிகைகளில் இரண்டும் இடம் பெறவில்லை.

என்ன நியாயமான கவரேஜ் இது?

தினகரனின் சிறப்புப் பேட்டிகள்:

இது வரை தினகரன் வெளியிட்டுள்ள சிறப்புப் பேட்டிகளை ஆராய்ந்தால் அதன் சார்பு நிலை விளங்கும். கடந்த மூன்று நாட்களில் வெளியான சிறப்புப் பேட்டிகள்:

28 4 வெள்ளிக்கிழமை ஏ பி பரதன், சி பி ஐ தேசியச் செயலர்

29 4 சனிக்கிழமை அன்புமணி ராமதாஸ், ப ம க நிறுவனரின் மகனும், மத்திய அமைச்சரும்

30 4 ஞாயிற்றுக் கிழமை, அரசு ஊழியர் சங்கப் பொதுச் செயலர் முத்து சுந்தரன்

அம்பலமான அரசியல் பேரம்: வாய் மூடி மௌனமான பத்திரிகைகள்

பார்வார்ட் பிளாக் வேட்பாளருக்கு அதிமுக ரூ 2 லட்சம் பேரம், போன் பேச்சை அம்பலப் படுத்தினார் கார்த்திக் என்ற செய்தி 29 4 2006 சனிக்கிழமை, தினகரனின் லீட் ஸ்டோரியாக வெளி வந்துள்ளது. இந்தச் செய்தியை தினகரன், அதிமுகவுக்கு நெருக்கடி தரும் செய்தியாகக் கருதியதால் முதல் பக்கத்தின் பிரதானச் செய்தியாக்கி இருக்கிறது. ஒரு முக்கிய கட்சி இன்னுமொரு கட்சி வேட்பாளருக்குப் பேரம் பேசியதற்கு ஆதரப் பூர்வமாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் முறையிடுகிறார் என்றால், இதை ஏன் மற்ற பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை?
வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவதில் அக்கறை காட்டிய தினமலர், இது போன்ற மோசடிகளைக் கண்டு கொள்ளாமலிருப்பது சரியா? இந்தச் செய்தியைப் பிற பத்திரிகைகள் யாவும் புறக்கணித்திருக்கின்றன. சன் டிவி இந்தச் செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, டெலிபோன் உரையாடலையும் ஒளி பரப்பியது.

தினமலர் தில்லு முல்லு செய்வதாக தினகரன் புகார்

தினமலர் நிறுவனம், பிராமணர்களை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுப் போடும் படிச் சொல்லி, பிராமணர் சங்கத்தின் பெயரில் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக ஒரு செய்தி தினகரனில் 29 4 அன்று 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. பிராமணர் சங்கம் இதைத் தில்லு முல்லு என்று ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்தச் செய்தி தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 30 4 அன்றும், தினமலருக்கு பிராமணர் சங்கம் கண்டனம் என்ற செய்தி 14 ஆம் பக்கத்தில் 8 காலம் பெட்டிச் செய்தியாக் பெரிய அளவில் வெளியிடப் பட்டிருக்கிறது.

சாதகமான கருத்துக் கணிப்புகளுக்கு மட்டுமே இடம் தரும் தமிழ்ப் பத்திரிகைகள்:

தொழில் முறையாக தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் கொண்டு நடத்தப் பட்டாலும், அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் வர வேண்டுமென்றால், அது அந்தத் தமிழ்ப்பத்திரிகையின் அரசியல் நிலைப்பாட்டிற்கு இயைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், தலையில் வைத்துக் கொண்டாடப்படும். தனது விருப்பத்துக்கு நேர் மாறானதாக முடிவு இருந்தால், அந்தக் கருத்துக் க்ணிப்பு முடிவுகள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்யப் படும். இது தான் இன்றைய தமிழ்ப் பத்திரிகைகளின் (நாளிதழ்கள் மட்டும்) கொள்கை முடிவாகும்.
இப்படிச் சாதகமான கருத்துக் கணிப்புக்களை மட்டுமே நாங்கள் வெளியிடுகிறோம் என்று வாசகனுக்கு உணர்த்தும் பொறுப்பு தமிழ்ப் பத்திரிகளுக்கு இருக்கிறது. ஆனால், அவை எப்போதுமே வாசகனை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லையே.
தி வீக் வார இதழ் (மலயாள மனோரமா நிறுவனத்தில் இருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ்) நடத்திய ஆய்வில், திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிய வந்திருப்பதால், அந்தச் செய்தி தினகரனின் முதல் பக்கத்தில் லீட் ஸ்டோரியாக வெளியிடப் பட்டுள்ளது.
இந்திய வாக்காளர் பேரவை என்றொரு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள், அதிமுக கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெறும் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளது. இந்தச் செய்தி தினமலரில் மட்டும் 28 4 அன்று 17 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
ஏசியன் ஏஜ் பத்திரிகையும் ஏ சி நீல்சன் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு ஆய்வில் அதிமுக 1% ஓட்டு கூடுதல் பெற்று ஆட்சியமைக்கும் என்று கண்டறியப் பட்டுள்ளது. இந்தச் செய்தி தினமணியில் மட்டுமே வெளியாகியுள்ளது.

தயாநிதிக்கெதிரான தினமணியின் பிரச்சாரம்:

ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு அரசியல் நிலைப் பாட்டை எடுத்துக் கொள்கின்றன. அதற்குச் சாதகமான செய்திகளை அதிகமாகவும், அதற்கு எதிரான செய்திகளை முற்றிலும் இருட்டடிப்புச் செய்தும் தான் தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதற்கு தினமணி விதி விலக்கல்ல.

டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியதாகச் சொல்லப் படும் செய்தியை முதலில் வெளியிட்ட தினமணி, கடந்த 3 நாட்களில் இது தொடர்பான் செய்திகளுக்கே மிக அதிகமாக இடம் ஒதுக்கியிருக்கிறது
தயாநிதியின் மறுப்பு அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டது மட்டுமே தினமணியின் தனி அடையாளத்தை உறுதிப் படுத்துவதாக இருந்தது. மற்றபடி, 28 4 அன்று 9 ஆம் பக்கத்தில் தயாநிதியை டிஸ்மிஸ் செய்க என்று ஜெயலல்லிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்ட அறீக்கை இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக சுப்ரமணியம் சுவாமியின் அறிக்கை 7ஆம் பக்கத்திலும், ரத்தன் டாடா பிரதமருக்கு இது தொடர்பாக எழுதிய கடிதம் 9ஆம் பக்கமும் வெளியாகி உள்ளது. இது தவிர 30 4 அன்று வைகோ பிரதமருக்கு எழுதிய கடிதமும் தினமணியில் இடம் பெற்றுள்ளது. தயாநிதி - டாடா = டி டி எச் தொடர்பான செய்திகளே தினமணியின் கடந்த 3 நாள் பக்கன்க்களையும் அலங்கரித்தது. இது தினமணிக்குப் பொருந்தாதா ஒரு வரம்பு மீறல் என்றே கூற வேண்டும்.

தினமலரின் தேர்தல் வெற்றி வாய்ப்புக் குறித்த பயனற்ற அலசல்

தினமலரில் தினம் ஒன்று அல்லது தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து தினமலரின் செய்தியாளர்கள் ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிட்டு வருகின்றனர். இந்த அலசல்கள் யாவும் வாக்காளனுக்குப் பயன் தருமா என்ற சந்தேகம் எழுந்தது எங்களுக்கு.
புளித்துப் போன சொற்றொடர்கள் பயன்படுத்துதல், வாசகனுக்கு நேர்மையற்ற பத்திரிகையாளரின் நிலைப்பாடு, என்று சலிப்பூட்டுகின்றன இந்த அலசல்கள்:
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு அலசல்களைப் பாருங்கள்:
திருநெல்வேலி தொகுதி குறித்த அலசலின் முடிவுரையைக் கீழே தருகிறேன்:
னெல்லைத் தொகுதியில் மீண்டும் இலை துளிர்க்குமா? சூரியன் உதிக்குமா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்தான்..

29 4 அன்று 12 ஆம் பக்கம் இடம் பெற்ற கடையநல்லூர்த் தொகுதி குறித்த அலசின் முடிவுரை இது:
வெற்றிக் கனியைப் பறிக்க அதிமுகவும், காங்கிரசும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்பது தான் தற்போதைய நிலைமை. கடையனல்லூர் தொகுதியை மீண்டும் அதிமுக தக்க வைக்குமா அல்லது காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்குப்பின்பு மீண்டும் தொகுதியைப் பெறுமா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்தான்.
அம்பை தொகுதி குறித்த ரவுண்ட் அப் 29 4 அன்று 11 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் முடிவுரையிலிருந்து :

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் அதிமுக திமுக இடையேதான் கடும் போட்டி. அம்பும் தன் பங்குக்கு பாய்ந்து வருகிறது. அரசியல் கட்சிகள் எடுட்துக் கொள்ளும் பிரச்னைகள், வெட்பாளர்களின் அணுகுமுறை, பாமர மக்களின் எண்ணம், அம்பு பெறும் ஓட்டு, இவற்றின் அடிப்படையில் இரட்டை இலை விரியலாம். சூரியனும் உதிக்கலாம்.

30 4 தினமலரின் ஒரு லீட் ஸ்டோரியாக முக்கியத்துவம் யாருக்கு? முக்குலத்தோர், நாடார்களுக்கு 2வது 3 வது இட்ம் தான் என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது. மொத்தம் தமிழ் நாடு முழுவதும் 90க்கும் அதிகமான வன்னியர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இந்தச் செய்தி சொல்கிறது. குறிப்பாக தினமலருக்கும் பா ம கவிற்கும் இடையில் உள்ளதாகக் கூறப் படும் உரசல்களின் வெளிப்பாடுதான் இந்தச் செய்தியின் பின்னணியாகும்.
தினத் தந்தியும் தயாநிதி மாறனுக்கு எதிரான செய்திகள் வெளியான போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பிரசுரித்து வருகிறது என்பதைக் கடந்த 3 நாட்களிலும் தெளிவாகக் காண முடிந்தது.

தினகரன், தினமலர், தினத் தந்தி ஆகியவற்றின் பக்கச் சார்பு இயல்பாகவே அதிகமாக் உள்ளது. தினமணியும் பக்கம் சார்ந்தே எழுதுகிறது. செய்திகளுக்கு இடம் ஒதுக்கிறது.