Sunday, April 30, 2006

தினகரனின் அப்பட்டமான பக்கச் சார்பு

Source : http://www.dinakaran.com/epaper/2006/Apr/28/default.htm

"கரூர் மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். மகாதான புரத்துக்கு அவர் வந்தபோது சாலையில் நின்று வரவேற்கும் மக்கள்", என்ற பட விளக்கத்துடன் தினகரன் 28 4 2006 முதல் பக்கத்தில் படம் ஒன்று வெளியாகியுள்ளது. [அருகில் படத்தைக் காணலாம்].

கருணாநிதிக்கும் தயாநிதிக்கும் மக்கள் வெள்ளமாகக் கூடுவதாகத் தினம் பக்கம் பக்கமாக வெளியிடும் தினகரன், ஜெயலலிதாவுக்குக் கூட்டமே வராதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது அறமா? கருணாநிதியோ, பிற தலைவர்களோ செல்லும் புறநகர்ப் பகுதியில் இது போன்ற ஒரு படத்தை எடுக்க முடியாதா? நியாயமான செய்தி வெளியிடலும், படம் வெளியிடலும் எப்போது தமிழ்ப் பத்திரிகைகளில் காணக் கிடைக்கும்?

நியாயமான கவரேஜ் இல்லை.

ஏப்ரல் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில் 2 தடவை கருணாநிதியின் அரசியல் கவிதை வெளியாகியுள்ளது. இதில் 28 அன்று ஒரு கவிதையும், 30 அன்று ஒரு கவிதையும் இடம் பெற்றுள்ளது.

வைகோ 28 4 2006 அன்று "பிர்மாஸ்திரங்களை இனிதான் ஏவுவேன்", என்று பேசிய பேச்சுக்குப் பதிலுரையாகத்தான் கருணாநிதி, பிரமாஸ்திரப் பிதற்றல் என்ற கவிதையை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

வைகோவின் பேச்சை தினந் தந்தியில் 28 4 அன்று 3ஆம் பக்கத்தில் வாசிக்கலாம்.

கருணாநிதியின் கவிதையை, தினகரனில் 30 4 அன்று 7 ஆம் பக்கத்தில் வாசிக்களாம்.

வைகோவின் பேச்சை தினகரன் வெளியிடவில்லை. கருணாநிதியின் கவிதையை தினத் தந்தி வெளியிடவில்லை. பிற பத்திரிகைகளில் இரண்டும் இடம் பெறவில்லை.

என்ன நியாயமான கவரேஜ் இது?

தினகரனின் சிறப்புப் பேட்டிகள்:

இது வரை தினகரன் வெளியிட்டுள்ள சிறப்புப் பேட்டிகளை ஆராய்ந்தால் அதன் சார்பு நிலை விளங்கும். கடந்த மூன்று நாட்களில் வெளியான சிறப்புப் பேட்டிகள்:

28 4 வெள்ளிக்கிழமை ஏ பி பரதன், சி பி ஐ தேசியச் செயலர்

29 4 சனிக்கிழமை அன்புமணி ராமதாஸ், ப ம க நிறுவனரின் மகனும், மத்திய அமைச்சரும்

30 4 ஞாயிற்றுக் கிழமை, அரசு ஊழியர் சங்கப் பொதுச் செயலர் முத்து சுந்தரன்

அம்பலமான அரசியல் பேரம்: வாய் மூடி மௌனமான பத்திரிகைகள்

பார்வார்ட் பிளாக் வேட்பாளருக்கு அதிமுக ரூ 2 லட்சம் பேரம், போன் பேச்சை அம்பலப் படுத்தினார் கார்த்திக் என்ற செய்தி 29 4 2006 சனிக்கிழமை, தினகரனின் லீட் ஸ்டோரியாக வெளி வந்துள்ளது. இந்தச் செய்தியை தினகரன், அதிமுகவுக்கு நெருக்கடி தரும் செய்தியாகக் கருதியதால் முதல் பக்கத்தின் பிரதானச் செய்தியாக்கி இருக்கிறது. ஒரு முக்கிய கட்சி இன்னுமொரு கட்சி வேட்பாளருக்குப் பேரம் பேசியதற்கு ஆதரப் பூர்வமாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் முறையிடுகிறார் என்றால், இதை ஏன் மற்ற பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை?
வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவதில் அக்கறை காட்டிய தினமலர், இது போன்ற மோசடிகளைக் கண்டு கொள்ளாமலிருப்பது சரியா? இந்தச் செய்தியைப் பிற பத்திரிகைகள் யாவும் புறக்கணித்திருக்கின்றன. சன் டிவி இந்தச் செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, டெலிபோன் உரையாடலையும் ஒளி பரப்பியது.

தினமலர் தில்லு முல்லு செய்வதாக தினகரன் புகார்

தினமலர் நிறுவனம், பிராமணர்களை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுப் போடும் படிச் சொல்லி, பிராமணர் சங்கத்தின் பெயரில் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக ஒரு செய்தி தினகரனில் 29 4 அன்று 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. பிராமணர் சங்கம் இதைத் தில்லு முல்லு என்று ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்தச் செய்தி தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 30 4 அன்றும், தினமலருக்கு பிராமணர் சங்கம் கண்டனம் என்ற செய்தி 14 ஆம் பக்கத்தில் 8 காலம் பெட்டிச் செய்தியாக் பெரிய அளவில் வெளியிடப் பட்டிருக்கிறது.

சாதகமான கருத்துக் கணிப்புகளுக்கு மட்டுமே இடம் தரும் தமிழ்ப் பத்திரிகைகள்:

தொழில் முறையாக தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் கொண்டு நடத்தப் பட்டாலும், அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் வர வேண்டுமென்றால், அது அந்தத் தமிழ்ப்பத்திரிகையின் அரசியல் நிலைப்பாட்டிற்கு இயைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், தலையில் வைத்துக் கொண்டாடப்படும். தனது விருப்பத்துக்கு நேர் மாறானதாக முடிவு இருந்தால், அந்தக் கருத்துக் க்ணிப்பு முடிவுகள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்யப் படும். இது தான் இன்றைய தமிழ்ப் பத்திரிகைகளின் (நாளிதழ்கள் மட்டும்) கொள்கை முடிவாகும்.
இப்படிச் சாதகமான கருத்துக் கணிப்புக்களை மட்டுமே நாங்கள் வெளியிடுகிறோம் என்று வாசகனுக்கு உணர்த்தும் பொறுப்பு தமிழ்ப் பத்திரிகளுக்கு இருக்கிறது. ஆனால், அவை எப்போதுமே வாசகனை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லையே.
தி வீக் வார இதழ் (மலயாள மனோரமா நிறுவனத்தில் இருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ்) நடத்திய ஆய்வில், திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிய வந்திருப்பதால், அந்தச் செய்தி தினகரனின் முதல் பக்கத்தில் லீட் ஸ்டோரியாக வெளியிடப் பட்டுள்ளது.
இந்திய வாக்காளர் பேரவை என்றொரு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள், அதிமுக கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெறும் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளது. இந்தச் செய்தி தினமலரில் மட்டும் 28 4 அன்று 17 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
ஏசியன் ஏஜ் பத்திரிகையும் ஏ சி நீல்சன் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு ஆய்வில் அதிமுக 1% ஓட்டு கூடுதல் பெற்று ஆட்சியமைக்கும் என்று கண்டறியப் பட்டுள்ளது. இந்தச் செய்தி தினமணியில் மட்டுமே வெளியாகியுள்ளது.

தயாநிதிக்கெதிரான தினமணியின் பிரச்சாரம்:

ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு அரசியல் நிலைப் பாட்டை எடுத்துக் கொள்கின்றன. அதற்குச் சாதகமான செய்திகளை அதிகமாகவும், அதற்கு எதிரான செய்திகளை முற்றிலும் இருட்டடிப்புச் செய்தும் தான் தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதற்கு தினமணி விதி விலக்கல்ல.

டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியதாகச் சொல்லப் படும் செய்தியை முதலில் வெளியிட்ட தினமணி, கடந்த 3 நாட்களில் இது தொடர்பான் செய்திகளுக்கே மிக அதிகமாக இடம் ஒதுக்கியிருக்கிறது
தயாநிதியின் மறுப்பு அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டது மட்டுமே தினமணியின் தனி அடையாளத்தை உறுதிப் படுத்துவதாக இருந்தது. மற்றபடி, 28 4 அன்று 9 ஆம் பக்கத்தில் தயாநிதியை டிஸ்மிஸ் செய்க என்று ஜெயலல்லிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்ட அறீக்கை இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக சுப்ரமணியம் சுவாமியின் அறிக்கை 7ஆம் பக்கத்திலும், ரத்தன் டாடா பிரதமருக்கு இது தொடர்பாக எழுதிய கடிதம் 9ஆம் பக்கமும் வெளியாகி உள்ளது. இது தவிர 30 4 அன்று வைகோ பிரதமருக்கு எழுதிய கடிதமும் தினமணியில் இடம் பெற்றுள்ளது. தயாநிதி - டாடா = டி டி எச் தொடர்பான செய்திகளே தினமணியின் கடந்த 3 நாள் பக்கன்க்களையும் அலங்கரித்தது. இது தினமணிக்குப் பொருந்தாதா ஒரு வரம்பு மீறல் என்றே கூற வேண்டும்.

தினமலரின் தேர்தல் வெற்றி வாய்ப்புக் குறித்த பயனற்ற அலசல்

தினமலரில் தினம் ஒன்று அல்லது தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து தினமலரின் செய்தியாளர்கள் ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிட்டு வருகின்றனர். இந்த அலசல்கள் யாவும் வாக்காளனுக்குப் பயன் தருமா என்ற சந்தேகம் எழுந்தது எங்களுக்கு.
புளித்துப் போன சொற்றொடர்கள் பயன்படுத்துதல், வாசகனுக்கு நேர்மையற்ற பத்திரிகையாளரின் நிலைப்பாடு, என்று சலிப்பூட்டுகின்றன இந்த அலசல்கள்:
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு அலசல்களைப் பாருங்கள்:
திருநெல்வேலி தொகுதி குறித்த அலசலின் முடிவுரையைக் கீழே தருகிறேன்:
னெல்லைத் தொகுதியில் மீண்டும் இலை துளிர்க்குமா? சூரியன் உதிக்குமா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்தான்..

29 4 அன்று 12 ஆம் பக்கம் இடம் பெற்ற கடையநல்லூர்த் தொகுதி குறித்த அலசின் முடிவுரை இது:
வெற்றிக் கனியைப் பறிக்க அதிமுகவும், காங்கிரசும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்பது தான் தற்போதைய நிலைமை. கடையனல்லூர் தொகுதியை மீண்டும் அதிமுக தக்க வைக்குமா அல்லது காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்குப்பின்பு மீண்டும் தொகுதியைப் பெறுமா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்தான்.
அம்பை தொகுதி குறித்த ரவுண்ட் அப் 29 4 அன்று 11 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் முடிவுரையிலிருந்து :

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் அதிமுக திமுக இடையேதான் கடும் போட்டி. அம்பும் தன் பங்குக்கு பாய்ந்து வருகிறது. அரசியல் கட்சிகள் எடுட்துக் கொள்ளும் பிரச்னைகள், வெட்பாளர்களின் அணுகுமுறை, பாமர மக்களின் எண்ணம், அம்பு பெறும் ஓட்டு, இவற்றின் அடிப்படையில் இரட்டை இலை விரியலாம். சூரியனும் உதிக்கலாம்.

30 4 தினமலரின் ஒரு லீட் ஸ்டோரியாக முக்கியத்துவம் யாருக்கு? முக்குலத்தோர், நாடார்களுக்கு 2வது 3 வது இட்ம் தான் என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது. மொத்தம் தமிழ் நாடு முழுவதும் 90க்கும் அதிகமான வன்னியர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இந்தச் செய்தி சொல்கிறது. குறிப்பாக தினமலருக்கும் பா ம கவிற்கும் இடையில் உள்ளதாகக் கூறப் படும் உரசல்களின் வெளிப்பாடுதான் இந்தச் செய்தியின் பின்னணியாகும்.
தினத் தந்தியும் தயாநிதி மாறனுக்கு எதிரான செய்திகள் வெளியான போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பிரசுரித்து வருகிறது என்பதைக் கடந்த 3 நாட்களிலும் தெளிவாகக் காண முடிந்தது.

தினகரன், தினமலர், தினத் தந்தி ஆகியவற்றின் பக்கச் சார்பு இயல்பாகவே அதிகமாக் உள்ளது. தினமணியும் பக்கம் சார்ந்தே எழுதுகிறது. செய்திகளுக்கு இடம் ஒதுக்கிறது.

7 comments:

Muthu said...

இதில் என்ன ஆச்சரியம். தினகரன் கிட்டத்தட்ட திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ்போல இருந்தும் இந்த அளவுக்கு இருப்பதே ஆறுதலான விஷயம்தான். தினபூமி என்று ஒரு 'நடுநிலை' நாளிதழ் இருக்கிறதே தெரியுமா?. அதைவிட "நமது எம்ஜிஆர்" எவ்வளவோ தேவலாம் :-). இங்கே ஒரு விஷேசமான விஷயம், தமிழ் நாளிதழ்களில் முதன் முதலில் இணையத்தில் வெளிவந்தது தினபூமிதான்.

Sivabalan said...

Good work Media Watch Team!! Keep up!!

//தினகரனின் சிறப்புப் பேட்டிகள்://

I have read Thirumavalavan & some one from ADMK also. Even Mathhaih(Correct me if I am wrong) MDMK also figured in this interview.

But It is obvious that Dinakaran is supporting DMK. And Dinamalar & Dailythanthi supports ADMK.

And, do you have any idea, " why the Dinakaran is not giving the sunday supplement " or "they are not posting it on Website".

Media Watch Team said...

தினபூமி நடுநிலை நாளிதழ் தானா என்பதை ஆய்வு செய்து தான் உறுதிப் படுத்த வேண்டும். தினபூமி மிகக் குறைந்த சர்க்குலேஷனைக் கொண்டிருப்பதாலும், அதன் செய்தி வெளியீட்டு முறை குறித்து குறிப்பிடத் தக்க விமர்சனங்கள் வராததாலும் இந்த ஆய்வில் நாங்கள் அதைச் சேர்த்துக் கொள்ள இயலவில்லை. தவிர, எங்களின் சக்திக்கு 4 நாளிதழ்களைத் தொடர்ந்து கவனித்து வருவதே மிகப் பெரும் சவாலாக இருக்கிறது. தினபூமி தான் இணையத்தில் பதிப்பை வெளியிட்டது என்பதை இப்போது தான் கேள்விப்படுகிறோம்.
ஊடக விமர்சனக் குழுவினர்.

Media Watch Team said...

ஆமாம். மாற்றுக் கட்சிகளின் கருத்துக்களுக்கும் திஅன்கரன் எப்போதாவது இடம் தந்து கொண்டு தான் இருக்கிறது. மதிமுக பிரமுகர் மல்லை சத்யாவைத் தான் மாத்தையா என்று நீன்க்கள் குறிப்பிடுகிறீர்கள் என்றூ நினைக்கிறோம். மாத்தையா, சிங்கள மொழியில் அதிகாரிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தும் விளிச் சொல். விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்து, பின்னாளில் கொல்லாப் பட்டவர் மாத்தையா.
தினகரன் ஏன் தனது ஞாயிறு பதிப்பை இணையத்தில் வெளியிடவில்லை என்று எங்களுக்குத் தெரியவில்லை.
ஊடக விமர்சனக் குழுவினர்

கமல் said...

ஏப்ரல் 28ம் தேதியிட்ட தினமலர் இணையப் பதிப்பில், முதல் பக்கத்தில் முதல் செய்தியாக, மத்திய மந்திரி பதவியில் இருந்து தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்யக்கோரி, ஜெயலலிதா பிரதமருக்குக் கோரிக்கை விடுத்த செய்தியுடன் வெளியாகியுள்ள புகைப்படத்தில், மன்மோகன்சிங் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்புவது போல இருக்கிறது. ஆனால் உண்மையில் இக்குற்றச்சாட்டு உண்மையா என்று இன்னும் முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில், இதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத விஷயத்தில் ரத்தன் டாடா பிரதமருக்குக் கடிதம் எழுதியதையும் இதனுடன் வெளியிட்டுள்ளது. கீழ்க்கண்ட சுட்டியில் இதைக்காணலாம்.

http://www.dinamalar.com/2006april28/frontpage.asp

தொடர்பே இல்லாத செய்திகளையும், வேறு ஏதோ ஒரு தருணத்தில் எடுத்த புகைப்படத்தையும் ஒன்றிணைத்து, தான் வெளியிடும், வெளியிட்ட செய்திகள் உண்மையே என்ற பிம்பத்தை மக்கள் மனதில் மறைமுகமாக உருவாக்கி வருகிறது தினமலர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நன்றி
கமல்

முகவைத்தமிழன் said...
This comment has been removed by a blog administrator.
pothigayan said...

Hi everybody,

It's really unfortunate that we don't have daily magazine to publish news as news. All are publishing their illusion only except one or few news that benefits neither.

Thank you,

Pothigayan