Saturday, April 22, 2006

தினத் தந்தியைத் திருப்பும்பக்கமெல்லாம் சரத்குமார்

அரசியல் தலைவர்களின் பேச்சுக்களின் அரிய ஒலித் தொகுப்பு


அரசியல் தலைவர்களது பேச்சுக்களின் அரிய தொகுப்பை கோபிச் செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த ஏ ஆர் குணசேகரன் வைத்திருப்பதாக, தி இந்து நாளிதழின் 4 ஆம் பக்கத்தில் இன்று 22 4 2006 செய்தி வெளியாகியுள்ளது.

You name it, he has it
Gunasekaran’s store has a rare collection of speeches from across the political spectrum என்ற முகப்புரையுடன் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது. மாகாத்மா காந்தி, நேரு, போஸ், அம்பேத்கார் தொடங்கி இன்றைய தலைவர்கள் வரையான பேச்சுக்களை அவர் சேகரித்து வைத்திருப்பதாக இந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

தினமலரும் தினத் தந்தியும், விஜயகாந்திற்கு அதிக முக்கியத்துவம்

விஜயகாந்த் கட்சிக்கு தனிச் சின்னம் இல்லை, என்ற செய்தி, இன்றைய தினமலரிலும், தினத் தந்தியிலும் லேட் ஸ்டோரியாக வெளி வந்துள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்த இந்தத் தகவல், தினமணியில் 9 ஆம் பக்கத்தில் வெளி வந்திருக்கிறது.


சரத்குமாருக்கு தினகரன் தவிர பிற நாளிதழ்களில் முக்கியத்துவம்

தினத் தந்தியும் தினமலரும் இந்தச் செய்தியை லீட் ஸ்டோரியாக்கும் அளவிற்கு இந்தச் செய்தி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்பது கவனிக்கத் தக்கது. விஜயகாந்திற்கு தினமலரும், தினத் தந்தியும் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாக அமைகிறது.
தென் மாவட்டங்களில் கருணாநிதி செய்து வரும் பிரச்சாரம் குறித்த செய்திகள், இன்றைய தமிழ் நாளிதழ்களில் விரிவாக வெளியிடப் பட்டிருந்தன. சரத் குமாரின் பிரச்சாரப் பேச்சுக்களுக்கு தினமலரும் தினத் தந்தியும் அதிக முக்கியத்துவம் கொடுத்தௌ வருகின்றன. தினகரனில், தவறாமல், சரத்குமாருக்கு எதிரான ஒரு செய்தி இடம் பெற்று வருகிறது. இன்று தினமணியும், சரத்குமாரின் பிரச்சாரப் பேச்சை பெ ரிதாகவே வெளியிட்டுள்ளது.

பல தரப்புக் குரலுக்கும் இடம் கொடுக்கும் தினமணி


சேலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின் பேச்சை தினமணி வெளியிட்டுள்ளது. ராமதாசின் சென்னை பேட்டி, வீரமணியின் மதுரை பேட்டி, ஜி கே வாசனின் பெருந்துறைப் பிரச்சாரம், சன்கரய்யாவின் திண்டுக்கல் பேச்சு, தயாநிதி மாறனின் திருப்பத்தூர் பேச்சு, சென்னையில் விஜயகாந்தின் பிரச்சாரம், பாகியராஜின் ஈரோட் நகரப் பேச்சு, அண்ணாமலைனகரில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அளித்த பேட்டி, சென்னையில் ராமதாஸ் அளித்த பேட்டி என்று, இன்றைய தினமணி பலதரப்புக் குரல்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறது.
லயோலாக் கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை முக்கியத்துவம் கொடுத்து தினமணி வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் விவரங்களை தினமணி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் 7 பெண்களைப் பற்றிய குறிப்புக்களை வெளியிட்டுள்ளது.

திமுக சாதகமான கருத்துக் கணிப்புக்கு தினகரனில் முக்கியத்துவம்

லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய தமிழ சட்டசபை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு, தினகரன் அதிக முக்கியத்துவம் கொடுத்து இன்றைய லீட் ஸ்டோரியாகவே வெளியிட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் நடத்திய ஒரு கருத்துக் கணிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. கருத்துக் கணிப்பின் முடிவு, திமுகவுக்க்ச் சாதகமாக இருப்பதால், அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

கருணாநிதியின் பேச்சுக்கு தினகரனில் 2 முழுப்பக்கங்கள்

இன்றைய தினகரனில், மூன்றாம் பக்கம் முழுவதும், 16ஆம் பக்கத்தின் விளம்பரங்கள் தவிர்த்த பிற பகுதிகளும் கருணாநிதியின் தென்காசி நகரப் பேச்சுக்களும், நெல்லை நகரப் பேச்சுக்களும் பிரம்மாண்டமான படங்களுடன் வெளியிடப் பட்டுள்ளது.

தவிர ப சிதம்பரம், ஜெயலலிதா, ஜி கே வாசன், ராமதாஸ், தயாநிதி மாறன் ஆகியோரின் பேச்சுக்கள் இன்றைய தினகரனில் இடம் பெற்றுள்ளன. தினமும், தயாநிதி மாறன் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அதிகம் பேர் பங்கேற்பதான அறிவிப்புடன் ஒரு படம் தினகரனில் இடம் பெற்றுவிடுகிறது.

தினகரனில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் சிறப்புப் பேட்டி

எந்தக் கூட்டணியிலும் எங்களைச் சேர்க்காததால் கவலையில்லை என்ற தலைப்புடன் டாக்டர் கே கிருஷ்ணசாமியின் சிறப்புப் பேட்டி, இன்றைய தினகரனில் 8 ஆம் பக்கம் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பின் தமிழ் நாளிதழ் ஒன்றில் தலித் தலைவரது பேட்டி, விரிவாக இடம் பெறுவது இது இரண்டாவது தடவையாகும். சில தினங்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் தொல் திருமாவளவனது சிறப்புப் பேட்டி இதே பகுதியில் இடம் பெற்றிருந்தது.

தினத் தந்தியில் திருப்பும் பக்கமெல்லாம் சரத்குமார்

1. திருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் பிரச்சாரம், செய்தியும் பெரிய படமும், முதல் பக்கத்தில்.
2. நடிகர் சரத்குமாருக்கு பெண்கள் ஆரத்தி, மலர் தூவி சிறப்பான வரவேற்பு, படத்துடன் செய்தி 2ஆம் பக்கம்.
3. அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் முழு வெற்றி பெற வேண்டும், கோவில் பட்டியில் நடிகர் சரத்குமார் பேச்சு, 5ஆம் பக்கத்தில் படத்துடன் செய்தி,
4. திமுகவினால் எந்த நெருக்கடி வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், சரத்குமார் பேட்டி, 7ஆம் பக்கத்தில் செய்தி.
5. சரத்குமார் நெல்லை மாவட்ட சுற்றுப் பயண விவரம், 10 ஆம் பக்கத்தில் அரைப் பக்க விளம்பரம்
இதில் எல்லா செய்திகளுமே பெரியவை. எல்லாப் படங்களுமே பெரிய சைசிலேயே வெளியிடப் பட்டுள்ளன.
சரத்குமார், தினத் தந்தியின் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டதால், வைகோவுக்கும், விஜயகாந்திற்கும் உரிய இடம் தினத் தந்தியில் குறைந்து இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

சரத்குமார், கருணாநிதி, விஜயகாந்த், ஜெயலலிதா ஆகிய நாங்கு முக்கியமான தலைவர்களது பேச்சுக்களை மட்டுமே இன்றைய தினத்தந்தியில் காண முடிகிறது. ஒப்பீட்டிற்காக தினமணியில் இன்று இடம் பெற்றுள்ள தலைவர்களது பேச்சுக்கள், பேட்டிகளின் பட்டியலை மீண்டும் கீழே தருகிறோம். தினத் தந்தி, எவ்வளவு செய்திகளை இருட்டடிப்புச் செய்கிறது என்று புரியும்.

சேலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின்
பேச்சை தினமணி வெளியிட்டுள்ளது. ராமதாசின் சென்னை பேட்டி, வீரமணியின் மதுரை பேட்டி,
ஜி கே வாசனின் பெருந்துறைப் பிரச்சாரம், சன்கரய்யாவின் திண்டுக்கல் பேச்சு, தயாநிதி
மாறனின் திருப்பத்தூர் பேச்சு, சென்னையில் விஜயகாந்தின் பிரச்சாரம், பாகியராஜின்
ஈரோட் நகரப் பேச்சு, அண்ணாமலைனகரில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அளித்த பேட்டி,
சென்னையில் ராமதாஸ் அளித்த பேட்டி என்று, இன்றைய தினமணி பலதரப்புக் குரல்களுக்கும்
இடம் கொடுத்திருக்கிறது


தினமலரில் சரத்குமாருக்கு முக்கியத்துவம்


இன்றைய தினமலரின் முதல் பக்கத்தில் சரத் குமார் திருச்செந்தூரில் பேசுவது போன்ற படம் 5 காலங்கள் அகலத்தில் வெளியிடப் பட்டுள்ளது. ஜெயலல்டிகா, விஜயகாந்திற்கு அடுத்டு 5 கால அகலத்திற்கு வண்ணத்தில் பெரிய படம் இடம் பெறுவது சரத்குமாருடையது ஆகும்.


ராமதாஸ் பேட்டிக்கு தினமலரின் நீண்ட விளக்கம்

ராமதாசின் பேட்டி இன்றைய தினமலரின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. சென்னையில் அவர் அளித்த பேட்டிக்கு "கூட்டணி ஆட்சியில் பா ம க பங்கெடுக்காது, ராமதாஸ் மீண்டும் திட்டவட்டம்", என்ற தலைப்புடன் செய்தி வெளியாகியுள்ளது. அவர் பேட்டிக்கு அளிக்கப் பட்டுள்ள இடத்தை விட, அது குறித்த தினமலரின் விளக்கம் அதிக இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது. அந்த பேட்டி தினமலரில் உள்ளபடி கீழே தரப் படுகிறது.

கூட்டணி ஆட்சியில் பா.ம.க., பங்கெடுக்காது ராமதாஸ் மீண்டும் திட்டவட்டம்

சென்னை : ""கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க., பங்கெடுக்காது; அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட இந்த முடிவில் கட்சி உறுதியாக இருக்கிறது,'' என்று அக்கட்சித் தலைவர் ராமதாஸ் கூறினார்.தமிழகத்தில் எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக ஆரம்பத்தில் இருந்தே கூட்டணிக் கட்சிகள் "கரைந்து' விடக்கூடாது என்பதற்காக அக்கட்சிகள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுத்தார். தொகுதிப் பங்கீடு முதல், தொகுதி ஒதுக்கீடு வரை மிகவும் "தாராளமாக' நடந்து கொண்டார்.தொகுதி ஒதுக்கீடு முடிந்து பிரசாரப் பணிகளை துவக்கியபோது,
"கூட்டணி ஆட்சி அமையாது. தனிப் பெரும்பான்மை பெற்று தி.மு.க., ஆட்சி அமைக்கும்' என்று கூறி வந்தார். அ.தி.மு.க.,வுக்கு எதிரான அலை இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து தனது முடிவை தளர்த்தினார். கடந்த சில தினங்களாக,"அ.தி.மு.க., ஆட்சியை அகற்றினால் போதும். கூட்டணி ஆட்சிக்கும் தி.மு.க., தயாராக இருக்கிறது' என்று கருணாநிதி கூறி வருகிறார். கூட்டணி ஆட்சியில் பங்கேற்பது குறித்து மற்ற கட்சிகள் வாய் திறக்காவிட்டாலும் அந்த விவகாரத்தில் பா.ம.க., உறுதியாக இருக்கிறது. "கூட்டணி ஆட்சியில் பா.ம.க., பங்கேற்காது' என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டது. அந்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று அக்கட்சித் தலைவர் ராமதாஸ் நேற்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்காது; அதை கட்சி எதிர்பார்க்கவும் இல்லை. கூட்டணி ஆட்சியில் பங்கேற்கமாட்டோம் என்று எங்கள் கட்சி தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருக்கிறோம். அந்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது. 234 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவிற்கு எதிரான அலை வீசுகிறது. எனவே தி.மு.க., தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். 2001 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத ஜெயலலிதா, இலவச அரிசி வழங்குவோம் என்று இப்போது கூறக்கூடாது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையின்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த நிலை இருக்கிறதா? கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாதபோது இலவச அரிசி வழங்குவோம் என்று இப்போது கூறக்கூடாது.
மாநிலம் முழுவதும் 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்றும், அனைத்து கிராமங்களிலும் ஒரு வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்துவோம் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறார். வாக்குறுதி அளிப்பது மிகவும் எளிது. யாரால் செயய்ய முடியும், யாரால் முடியாது என்பதையெல்லாம் மக்கள் நன்றாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

வைகோ, ராமதாஸ், சிதம்பரம், தா பாண்டியன், ஜி கே வாசன், சரத்குமார், ஜெயலலிதா, கருணாந்டிகி, ஆகியோரது பேச்சுக்களும் இன்றைய தினமலரில் இடம் பெற்றுள்ளன.

ஊடக விமர்சனக் குழுவினர்

Friday, April 21, 2006

மீடியாவை ஆட்கொண்ட கருனாநிதி

கருணாநிதி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். சன் டி வி அவரது நெல்லை மாநகரத்துப் பிரச்சார உரையாஇ வெள்ளி இரவு 830 மணிக்கு "என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களெ", என்பதில் தொடங்கி "ஆகவே உதய சூரியனுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்", என்று முடிக்கும் வரையான பேச்சை ஒளிபரப்பியது. சன் டிவியில் கருணாநிதி பேச்சு இரவு 830 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று, கே டிவி, சன் மியூசிக், சன் நியூஸ் என தனக்குச் சொந்தமான அனைத்து பிற டிவி சேனல்களில் அறிவிப்பு சின்னத் திரையின் அடிப்பகுதியில் நேற்றிரவு ஓடிக் கொண்டிருந்தாது. குடும்பத்து டி விக்கள் எல்லாம், அவரது பேச்சையும், பேச்சு பற்றிய அறிவிப்பையும் வெளியிடுவதில் பெரிய வியப்பொன்றும் இருக்க முடியாது. ஆனால், 21 4 2006 வெள்ளிக்கிழமை அன்று வெளியான 4 முன்னணி தமிழ் நாளிதழ்களின் திரும்பிய பக்கமெல்லாம் கருணாநிதியின் பேச்சும், பேட்டியுமாக கொட்டிக் கிடந்தது.

21 4 2006 வெள்ளிக்கிழமை வெளியான தினமணியில் முதல் 9 பக்கத்தில் கருணான்நிதி தொடர்பான 8 செய்திகள் இடம் பெற்றிருந்தன. தூத்துக்குடி பேட்டி மட்டும், முதல் பக்கத்திலும், 9ஆம் பக்கத்தின் மேல் பகுதியிலும், 9ஆம் பக்கத்தின் கீழ் பகுதியிலும் இடம் பெற்றிருந்தன. தவிர, நெல்லை பேச்சு, பாளையம்கோட்டை பேச்சு, தூத்துக்குடி பேச்சு, திருச்செந்தூர் பேச்சு, ஆறுமுகனேரி பேச்சு, என தினமணியின் திரும்பிய பக்கமெல்லாம் கருணாநிதியின் பேச்சே கண்ணில் பட்டது.

தினமலரில் நெல்லை, தூத்துக்குடி பேச்சுக்கள் விரிவாக இடம் பெற்றிருந்தன. கருணாநிதியின் பேட்டி, தினமலரின் 7ஆம் பக்கத்தில் அரைப் பக்கத்திற்கு இடம் பெற்றிருந்தது. கருணாநிதியின் தூத்துகுடிப் பேச்சு பத்தாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. தூத்துகுடியில் பேசிய மற்றொரு பேச்சு, 14 ஆம் பக்கத்தில் விரிவாக இடம் பெற்றிருந்தது. நெல்லைப் பேச்சு முதல் பக்கத்தில் விரிவாக வெளியிடப் பட்டிருந்தது.

தினத் தந்தியின் முதல் பக்கத்தில் தூத்துக்குடி பேட்டியும், கடைசிப் பக்கத்தில் திருநெல்வேலிப் பேச்சும் விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. எண்ணிக்கையில் தினத்தந்தி குறைவாகத் தோன்றினாலும், பரப்பளவில் தினத்தந்தி கணிசமான இடத்தை ஒதுக்கியிருந்தது.
தூத்துகுடியில் கருணாநிதி சொன்ன விஷயங்களைக் கொண்டு எழுதப் பட்டுள்ளது, தினத்தந்தியின் லீட் ஸ்டோரி. இது தவிர, அவரது ஒவ்வொரு பேச்சையும், பேட்டியையும் தினகரன் விரிவாகவும் தனித் தனியாகவும் வெளியிட்டிருந்தது.

ஆக 4 நாளிதழ்களுமே இன்றைய (21 4 2006) பதிப்பில் கருணாநிதியின் பேச்சுக்கும் பேட்டிக்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்திருந்தன. இது பிற தலைவர்களுக்குரிய இடம் ஒதுக்கத் தடையாகவே அமையும் என்று கூறலாம். ரேஷன் அரிசியையும், இலவச டிவியையும் தாண்டி கருணாநிதி பல விஷயங்களை கருணாநிதி விரிவாகப் பேசியும், பேட்டிகளில் அலசியும் இருந்ததால், அவரது நீண்ட பேட்டியும், தொடர்ச்சியான உரைகளும், இன்றைய இதழின் பக்கங்கள் பலவற்றை ஆக்கிரமித்துக் கொண்டது எனலாம்.

தந்தியின் நாடார் பாசம்

கருணாநிதி தவிர, தந்தியில் வைகோவின் பேச்சையும், விஜயகாந்தின் பேச்சையும் விரிவாகவே வெளியிடப் பட்டுள்ளது. ஆனால், சரத்குமாரின் பேச்சுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு, விரிவாக வெளியிட்டுள்ளது தினத் தந்தி. தினத் தந்தியின் அதிபர் சிவந்தி ஆதித்தனுக்கு தான் சார்ந்துள்ள நாடார் சமுதாயத்தின் மேல் ஒரு தனி அக்கறை உண்டு என்பதால், நாடாரான சரத்குமாருக்கு அதீத முக்கியத்துவம் தரப் பட்டு செய்திகள் வெளியிடப் படுகின்றன என்று கருத இடமிருக்கிறது.

இது தவிர ஜெயலலிதாவின் பேச்சு, இளங்கோவனின் பேச்சும் பரவலாக மீடியாவின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஸ்டாலின் திருச்சியில் செய்த பிரச்சாரம் தினகரனில் வெளியாகியுள்ளது (ப.6).

தின்கரன் தனது சிறப்புப் பேட்டிகளின் வரிசையில் இன்று (21.4.06) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயளர், தா பாண்டியனின் சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது.

தினமணியின் தலித் ஆதரவு தலையங்கம்

தினமணியின் 21 4 2006 வெள்ளிக்கிழமை தலையங்கம், மனப்புண்ணுக்கு மருந்து என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் 17 குற்றவாளிகளுக்குக் கீழ் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை, சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்திருப்பதை வரவேற்று இந்தத் தலையஙகம் வரையப் பட்டுள்ளது.

லதிகா சரண் நியமனம் குறித்த செய்தியைப் பற்றிய ஒரு ஆய்வு:

சென்னை மாநகரக் காவல் துறை ஆணையராக லதிகா சரண் நியமிக்கப் பட்ட செய்தி இன்றைய தினமணியின் லீட் ஸ்டோரியாகி இருக்கிறது. இந்தச் செய்தியை 4 நாளிதழ்களும் எப்படி வெளியிட்டிருக்கின்றன என்று ஆய்வு செய்தோம். இதே செய்தியை தி இந்து நாளிதழ் எப்படிக் கையாண்டிருக்கிறது என்றும் ஒப்பிட்டு ஆய்வை நடத்தினோம்.

இந்தச் செய்தி தேர்தலுடன் தொடர்புடையதுதான் என்றாலும், இன்றைய நாளிதழ்களின் தேர்தல் செய்தி எழுதும் முறை பற்றிய ஆய்விற்கு நேரடியாகத் தொடர்புடையது என்று கருத முடியாது. என்றாலும், தமிழ் நாளிதழ்கள் தொழில் ரீதியாக எந்த நிலையில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள, நம்பகத் தன்மையிலும், தொழில் நேர்த்தியிலும் சிறந்து விளங்கும் தி இந்துவுடன் ஒப்பிட்டு இந்தச் செய்தியை விளங்கிக் கொள்ள முயன்றிருக்கிறோம்.

4 நாளிதழ்களிலும் வெளியான செய்திகள் அப்படியே, இந்தப் பதிவின் இறுதியில் ஒன்றன் பின் ஒன்றாகக் கொடுக்கப் பட்டிருக்கின்றது.

Letika Saran replaces Nataraj

She was chosen from three names suggested by Government


New Delhi: The Election Commission on Thursday asked the Tamil Nadu Gov-ernment to appoint Letika Saran Chennai Police Commissioner in place of R Na-taraj, who was shifted for alleged violation of the model code of conduct.

இப்படியாகத் தலைப்பிட்டு, முகப்புரையும் கொடுத்து தி இந்துவின் செய்தி செல்கிறது. இதில் முகப்புரை மிகத் தெளிவாக, “தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப் படும் சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் நடராஜை, மாற்றிவிட்டு அந்த இடத்தில் லெடிகா சரனை நியமிக்குமாறு தமிழக அரசை, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது”, என்று அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

இப்பொழுது 4 முன்னணித் தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ள இதே செய்தியின் முகப்புரை எழுதப் பட்டிருப்பதை ஒன்றன் பின் ஒன்றாகக் கவனியுங்கள்.

சென்னை: சென்னை மாநகரின் முதன் பெண் போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நேற்று நியமனம் செய்யப்பட்டார். நேற்று வரை போலீஸ் கமிஷனராக இருந்த ஆர்.நடராஜ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
-----தினமலர்

சென்னை, ஏப். 21: சென்னை போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜை மாற்றுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒரு மாதமாக நடந்த மோதல் முடிவுக்கு வந்தது.
---------தினமணி


சென்னை, ஏப்.21- தேர்தல் கமிஷன் உத்தரவை தொடர்ந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் பதவி ஏற்றுக்கொண்டார்.
------------தினத்தந்தி

சென்னை ஏப் 21: சென்னை போலீஸ் கமிஷனராக லத்திக சரண் நியமிக்கப் பட்டுள்ளார்.

-----------தினகரன்


தி இந்து நாளிதழின் முகப்புரையில் இருந்த விளக்கமும் நேர்த்தியும் 4 நாளிதழ்களின் செய்தி முகப்பிலும் இல்லை என்பதைக் கவனிக்கலாம். இதில் தொடங்கி, தேர்தல் கமிஷனுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் வழங்கியிருக்கிறது தி இந்து நாளிதழ் செய்தி. தமிழ் நாளிதழ்களில், இந்தச் செய்தியை, தினத் தந்தி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, லதிகா சரண் நியமிக்கப் பட்டதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகார மோதல் நடந்து கொண்டிருக்கும் போது யார் உத்திரவுக்கு யார் பணிந்தார்கள் என்று எழுதுவதை விட, என்ன சரியான வார்த்தைகள் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன என்று தந்தி செய்தியாளர் கவனித்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் லதிகா சரணை நியமிக்கும்படிக் கேட்டுக் கொண்டது என்பதே சரியான அறிக்கையிடலாக இருந்திருக்கும். “எலக்ஷன் கமிஷன் ஆஸ்க்ட் “ என்று தி இந்து நாளிதழில் எழுதியதற்கு இணையான சொல் எதையும் தமிழ்ப் பத்திரிகைகள் பயன் படுத்தவில்லை.

இதற்குச் சரியான வார்த்தையைத் தெரிவு செய்ய எந்தத் தமிழ் நாளிதழும் முன் வரவில்லை. இது ஜனநாயக அமைப்பில் இரு பெரும் சக்திகளுக்கு இடையிலான போட்டிகளின் முடிவுப் பகுதியை அறிவிக்கும் நேரம். எனவே மிகுந்த கவனத்துடன் வார்த்தைகளைத் தெரிவு செய்திருக்க வேண்டும், தினத் தந்தி உப தலைப்புகளுடன் இந்தச் செய்தியை உண்மை பக்கம் அதிகம் போகாமல் எழுதியிருக்கிறது.

தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகளை நடராஜ் மீறியிருப்பதாக் கருதப் படும் தகவலை, இந்தச் செய்தியில் பதிவு செய்திருப்பது தினமணியும், தினத் தந்தியும். மற்ற இரு பத்திரிகைகளான தினமலரும், தினகரனும், நடராஜ் ஏன் மாற்றப் படுகிறார் என்பதற்கான விளக்கத்தைச் சரியாகப் பதிவு செய்யவில்லை.

லதிகா சரனின் பெயரை இந்து நாளிதழ் என்று வெளியிட்டிருக்கிறது. இதைத் தமிழில் லெடிகா சரண் என்று எழுதலாம். தினகரன் மட்டும் லத்திக சரண் என்று வெளியிட்டுள்ளது. பிற பத்திரிகைகள் மூன்றும் லதிகா சரண் என்று எழுதி வருகின்றன.

இனி இந்தச் செய்திகளை ஒன்றன் பின் ஒன்றாகக் காணலாம்:

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மாற்றம் : புதிய கமிஷனராக லத்திகா சரண் பொறுப்பேற்பு

சென்னை: சென்னை மாநகரின் முதன் பெண் போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நேற்று நியமனம் செய்யப்பட்டார். நேற்று வரை போலீஸ் கமிஷனராக இருந்த ஆர்.நடராஜ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஆர்.நடராஜ், மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேட்டியளித்தார். இதையடுத்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழக அரசு அவரை இடமாற்றம் செய்யாததால், இரண்டாவது முறையாக கமிஷனரை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழக அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியல் அனுப்புவதற்கான காலக்கெடு கடந்த 18ம் தேதியுடன் முடிவடைந்தது. அப்போதும் தமிழக அரசு பட்டியலை அனுப்பவில்லை. இந்நிலையில், மீண்டும் அதிகாரிகளின் பெயர் பட்டியலை அனுப்ப, நேற்று ஒரு நாள் மட்டும் தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. இதையடுத்து ஏ.டி.ஜி.பி.,கள் கே.வி.எஸ்.மூர்த்தி, நாஞ்சில்குமரன், லத்திகா சரண் ஆகியோர் கொண்ட பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு நேற்று காலை தமிழக அரசு அனுப்பியது.

பெயர் பட்டியலில் மூன்றாவதாக இருந்த லத்திகா சரணை புதிய கமிஷனராக நியமனம் செய்ய தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து கமிஷனராக நடராஜ் நேற்று பணியிலிருந்து மாற்றப்பட்டு, தலைமையிடத்து ஏ.டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டார். புதிய கமிஷனராக லத்திகா சரணை நியமித்து நேற்று மாலை 5.20 மணிக்கு அரசு உத்தரவிட்டது. டி.ஜி.பி., அலெக்ஸாண்டரை சந்தித்த லத்திகா சரண் நேற்று மாலை 6.30க்கு கமிஷனர் அலுவலகம் வந்தார். கூடுதல் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் புதிய கமிஷனரை வரவேற்றார். 6.35 மணிக்கு கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். கமிஷனர் லத்திகா சரணிடம் தேர்தல் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய பைலை ஒப்படைத்த நடராஜ் விடைபெற்றார். அலுவலகத்திலிருந்து வெளியேறிய நடராஜை, கமிஷனர் லத்திகா சரண் வழியனுப்பி வைத்தார்.
பத்திரிகை, "டிவி' நிருபர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட கமிஷனர் லத்திகா சரண் நிருபர்களிடம் கூறுகையில், ""முக்கியமான நேரத்தில் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளேன். என் மீதுள்ள நம்பிக்கையில் இந்த பொறுப்பை கொடுத்துள்ளனர். முன்னாள் கமிஷனர் நடராஜ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது பணிகளை நான் தொடர்வேன். பிரச்னையின்றி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, சட்டம்ஒழுங்கு பாதுகாக்கப்படும். மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும்,'' என்று கமிஷனர் கூறினார்.
முதல் பெண் கமிஷனர் : போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் கடந்த 1952ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி பிறந்தவர். 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தார். திருச்சி ஏ.எஸ்.பி., முதல் பணியிடம். சி.பி.ஐ.,யில் நான்கு ஆண்டுகள், லஞ்ச ஒழிப்புத் துறையில் நான்கு ஆண்டுகள், சி.பி.சி.ஐ.டி., உட்பட முக்கியமான பதவிகளை வகித்தவர். நேற்று முன்தினம் வரை தலைமை இடத்து ஏ.டி.ஜி.பி.,யாக பணியாற்றினார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி. கணவர் அசோக். மகள் ருத்ரா டாக்டராக உள்ளார். இவரது தந்தை தார், தாய் விஜயலட்சுமி. இவரது குடும்பத்தில் இவர் தான் போலீஸ் அதிகாரியாகி உள்ளார். டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா ஆகிய மெட்ரோபாலிட்டன் மாநகரங்களில் இதுவரை பெண் போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்படவில்லை. முதன் முதலாக மெட்ரோபாலிட்டன் மாநகரான சென்னை போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Source : www.dinamalar.com

போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நியமனம்: தேர்தல் ஆணைய உத்தரவை அரசு ஏற்றது

சென்னை, ஏப். 21: சென்னை போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜை மாற்றுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒரு மாதமாக நடந்த மோதல் முடிவுக்கு வந்தது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குப் பணிந்து ஆர். நடராஜை தமிழக அரசு மாற்றிவிட்டது. அவருக்கு பதிலாக போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் (54) நியமிக்கப்பட்டார். அவர் வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்றார்.
சென்னை நகரின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு இவர், காவல்துறை தலைமை அலுவலகத்தில் கூடுதல் டிஜிபியாகப் பதவி வகித்து வந்தார்.
கமிஷனராக இருந்த ஆர். நடராஜ், காவல் துறை தலைமை அலுவலக கூடுதல் டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மாதம் மோதல்: மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த நடராஜ், முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசினார்.
அவரது கருத்து, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக உள்ளது என்றும் அவரை மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பு கூறியது.
போலீஸ் கமிஷனரும் தனது பொறுப்பை உணர்ந்து பேசியிருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இவ்விஷயத்தில் தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் மோதல் போக்கைத் கைவிட்டு இணக்கமான முடிவு எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.
தேர்தல் அட்டவணை குறித்து கடந்த 13-ம் தேதி அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து கமிஷனர் நடராஜை மாற்ற வேண்டும் என்றும் வேறு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரைத் தெரிவிக்குமாறும் தேர்தல் ஆணையம் தமிழக அரசை மீண்டும் கேட்டுக் கொண்டது. வியாழக்கிழமை மாலை 5 மணி வரை தமிழக அரசுக்கு, தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது.
கூடுதல் டிஜிபிக்கள் லத்திகா சரண், கே.வி.எஸ். மூர்த்தி, நாஞ்சில் குமரன் ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு அனுப்பியது.
இதைப் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் லத்திகா சரணை, கமிஷனராக நியமிப்பதாக உத்தரவிட்டது. இதற்கான அரசாணையை தமிழக உள்துறைச் செயலர் பவன் ரெய்னா வியாழக்கிழமை மாலை வெளியிட்டார்.
Source : www.dinamani.com

தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி
சென்னை போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் பதவி ஏற்றார்


சென்னை, ஏப்.21-
தேர்தல் கமிஷன் உத்தரவை தொடர்ந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் பதவி ஏற்றுக்கொண்டார்.

தேர்தல் கமிஷன் உத்தரவு

சென்னை நகர போலீஸ் கமிஷனராக நடராஜ் இருந்தார். சமீபத்தில் உலக மகளிர் தினவிழாவையொட்டி அவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தபோது தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை லட்சிய பெண்மணிக்கு உதாரணமாக கூறி கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு தி.மு.க. வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க.வை சேர்ந்த மத்திய மந்திரி ராஜா தலைமை தேர்தல் கமிஷனிடம் போலீஸ் கமிஷனர் நடராஜ் மீது புகார் செய்தார்.

போலீஸ் கமிஷனர் நடராஜ் முதல்-அமைச்சரை புகழ்ந்து கருத்து தெரிவித்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து போலீëஸ் கமிஷனர் நடராஜை மாற்றும்படியும், அவருக்கு பதிலாக புதிய கமிஷனரை நியமிக்க 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்படியும் தேர்தல் கமிஷன் தமிழக அரசை கேட்டுக்கொண்டது.

3 பேர் பட்டியல்

தேர்தல் கமிஷன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பிலும், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.க்கள் சிலரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், "தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னால், தேர்தல் கமிஷன் பிறப்பிக்கும் உத்தரவு மாநில அரசை கட்டுப்படுத்தாது'' என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தேர்தல் கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு (அப்பீல்) செய்தது.

இதற்கிடையில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. போலீஸ் கமிஷனர் நடராஜை உடனடியாக இடம் மாற்றம் செய்யும்படியும், அவருக்கு பதிலாக புதிய கமிஷனர் நியமிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் கொண்ட பட்டியலை 18-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படியும் தமிழக அரசை தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது.

பரபரப்பு


தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டபடி 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை 18-ந் தேதி வரை தமிழக அரசு அனுப்பவில்லை. இதனால் போலீஸ் வட்டாரத்திலும், அரசு அதிகாரிகள் மட்டத்திலும் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசு வழங்க தேர்தல் கமிஷன் மேலும் கால அவகாசம் அளித்தது.

இதற்கிடையே சென்னை நகர போலீஸ் கமிஷனராக யார் நியமிக்கப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் பெறும் எதிர்பார்ப்பு உருவானது. நேற்றுடன் தேர்தல் கமிஷன் அனுமதித்த கால அவகாசம் முடிவதால் உயர்மட்ட அதிகாரிகள் நேற்று பரபரப்புடன் காணப்பட்டனர். டி.ஜி.பி. அலெக்சாண்டர் நேற்று வேலூரில் இருந்தார். அவருடன் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் போனில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.

லத்திகா சரண் நியமனம்

இறுதியில் நாஞ்சில்குமரன், கே.வி.எஸ்.மூர்த்தி, லத்திகாசரண் ஆகியோர் அடங்கிய 3 பேர் பட்டியல் தமிழக அரசால் தேர்தல் கமிஷனுக்கு நேற்று பகல் 2 மணி அளவில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த பட்டியலை தேர்தல் கமிஷன் பரிசீலித்தது. இதில் லத்திகாசரணை சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பிற்பகல் 3 மணிக்கு தகவல் அனுப்பியது.
இந்த தகவல் கிடைத்த பிறகு போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டு லத்திகாசரண் சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
இதன் பிறகு தான் கடந்த சில நாட்களாக நிலவிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. லத்திகாசரண் சென்னை டி.ஜி.பி. அலுவலக தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தார். போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டு லத்திகா சரண் பணியாற்றிய இடத்தில் டி.ஜி.பி. அலுவலக தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி ஏற்றார்

தேர்தல் நேரம் என்பதால் லத்திகா சரண் சென்னை நகர போலீஸ் கமிஷனராக உடனடியாக நேற்று மாலை 6.30 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை நகரத்தின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. மாலை 6.27 மணிக்கு அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். விடைபெற்ற கமிஷனர் நடராஜ் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
கூடுதல் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், சென்னை உளவு பிரிவு துணை கமிஷனர் வரதராஜ×, உதவி கமிஷனர் இளங்கோ, மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் விட்டல் ராமன் மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் லத்திகாசரண் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்றதும் நடராஜ×ம், லத்திகாசரணும் கை குலுக்கி கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து புகை படத்துக்கு போஸ் கொடுத்தனர்.

தேர்தல் பைல்

இதன் பின் நடராஜ் புறப்பட்டு சென்றார். அவரை கார் வரை சென்று லத்திகா சரண் வழி அனுப்பி வைத்தார். புறப்படும் முன்பு நடராஜ் பத்திரிக்கையாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சென்னை நகர மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறி அவர் மகிழ்ச்சியோடு விடை பெற்று சென்றார்.
அவர் புறப்படும் முன்பு தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ரகசிய பைல் ஒன்றை புதிய கமிஷனர் லத்திகா சரணிடம் வழங்கினார்.
Source : www.dailythanthi.com

தினகரனில் வெளிவந்த இது தொடர்பான செய்தியை வெப்சைட்டில் 21 4 2006 இதழின் முதல் பக்கத்திலேயே வாசிக்கலாம்.




www.dinakaran.com

ஊடக விமர்சனக் குழுவின் சார்பில்
இரா. பத்மலதா

Thursday, April 20, 2006

தினமணியின் தலித் எதிர்ப்புப் போக்கு

புதிய தமிழகம் கட்சியை
வன்முறைக் கட்சியாகச் சித்தரிக்கும் முயற்சி


தினமணியை மேலோட்டமாக வாசிக்கும் எவருக்கும் அதை ஒரு நடு நிலையான பத்திரிகையாக தோன்றும். ஆனால், தலித் தொடர்பான அப் பத்திரிகையின் நிலைப்பாடு, தினமல்ருக்கு நிகராகவே இருக்கிறது என்று கூற முடியும்.

இன்றைய தினமணியிலும் தினமலரிலும் வந்த செய்தியைப் பாருங்கள்:

“வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தூத்துக்குடியில் புதிய தமிழகம் வேட்பாளர்கள் 3 பேர் ஆதரவாளர்களுடன் சாலை மறியல்”, , என்ற தலைப்புடன் தினமணியின் 4ஆம் பக்கத்தில் ஒரு 5 காலம், செய்தி மூன்று காலம் அகலமான படத்துடன் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி, தினமலரின் 9ஆம் பக்கத்தில் 4 காலம் செய்தியாக 2 காலம் படத்துடன் வெளியாகியுள்ளது.

தினத் தந்தியும், தினகரனும் இந்த நிகழ்வைச் செய்திக்குரிய நிகழ்வாகக் கருதவில்லை.

தினமலரும் தினகரனும் தலித் அரசியல் இயக்கங்களை நெகடிவ் ஆகச் சித்தரிக்க முயன்று வருகின்றனவோ என்ற ஐயம் எங்களிடம் தோன்றியிருக்கிறது. ஒரு சாலை மறியல் நிகழ்வு என்பது, 5 காலம் செய்தி போடும் அளவிற்கு முக்கியமானத என்ற கேள்வி எழுகிறது. இதையே வேறொரு கட்சி நிறைவேற்றியிருந்தால், இத்தனை தூரம் பெரிது படுத்தப் பட்டிருக்குமா என்றும் சிந்திக்க வெண்டியுள்ளது.

தவிர, இன்று, மேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துகளைக் கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டணை உயர் நீதி மன்றத்தால் உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

இந்த 2 செய்திகளிலும் பயன்படுத்தப் பட்ட மொழியும் ஆய்வுக்குரியது. இந்த 2 செய்திகளின் நடையும் கவனிக்க வேண்டியதாக உள்ளது.

இன்று வெளியான செய்திகளை ஒவ்வொரு நாளிதழ் வாரியாகப் பார்க்கலாம்.

தினமணி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்றைய நாளிதழ்கள் யாவுமே வெளியிட்டுள்ளன. கிராமங்களில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச மனை, படித்து வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ 300, என்ற தலைப்புடன் 7 காலம் அகலத்திற்கு, தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
நிபந்தனை ஏதுமின்றி 10 கிலோ இலவச அரிசி : ஜெ என்ற தலைப்புடனும், விலை கொடுத்து 10 கிலோ அரிசி வாங்க கட்டாயமில்லை என்ற துணைத்தலைப்புடனும் இன்றைய தினமணியின் லீட்ஸ்டோரி அமைந்துள்ளது.

தோல்வி பயத்தால் கூட்டணி ஆட்சிக்கு தயார் என்கிறார் கருணாநிதி, என்ற திருமாவளவனின் சென்னை பேச்சு, தினமணியின் 2 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்வது மூட நம்பிக்கையின் வெளிப்பாடு, என்ற வீரமணியின் குற்றச்சாட்டு, 2 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இவை தவிர, வத்தலக்குண்டு நகரில் ஜெயலலிதாவின் பேச்சு, வைகோவின் வேலூர் பேச்சு, டாக்டர் ராமதாசின் கும்பகோணம் பேச்சு, டாக்டர் ராமதாசின் பேட்டி, விஜயகாந்தின் சேலம் நகரப் பேச்சுக்களும் இடம் பெற்றுள்ளன.

தினகரன

மேலவளவு முருகேசனின் கொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப் பட்டிருக்கும் செய்தி தினகரனில் முதல் பக்கத்தில் 8 காலங்களில் பெரிய செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது.

சரத் குமாருக்கு எதிர்ப்பு.. உண்மையில் நடப்பது என்ன?

சரத்குமார் உருவ பொம்மைக்கு செருப்படி, ரசிகர்கள் ஆத்திரம் என்ற செய்தி தினகரனில் 5 காலம் அளவிற்கு பெரிய செய்தியாக படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. தினகரனில் சரத் குமாருக்கு எதிரான செய்திகளுக்கு, அவர் திமுகவில் இருந்து வெளியேறிய பின்பு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே சரத் குமார் ரசிகர்கள் உண்மையில் கொதித்துப் போயிருக்கிறார்களா என்று அறிய வேண்டுமானால், பிற நாளிதழ்களிலும் வரும் செய்தியை வைத்து ஒரு சிறிய அளவிலான ஆய்வு செய்தே ஒரு வாசகர், உண்மை நிலவரத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

ஆனால், தினகரன் தவிர வேறு எந்தத் தமிழ் நாளிதழிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவே செய்தியைக் காண முடியவில்லை. சமாதானபுரம், பாவூர்ச்சத்திரம் என்ற இரண்டு பகுதிகளைச் சேர்ந்த நாட்டாமை சரத் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு செய்ததாக இந்தச் செய்தி கூறுகின்றது. இது தொடர்பான படத்திலும் 10 பேர் சேர்ந்து ஒரு உருவ பொம்மையை ஏதோ செய்வது போலக் காட்டப் பட்டுள்ளது.

தமிழகத்தையே ஆண்டி மடமாக்க விரும்புகிறார் ஜெயலலிதா, என்ற தலைப்புடன் வெளி வந்திருக்கும் தினகரனில் இன்றைய சிறப்புப் பேட்டியில் இடம் பெற்றிருப்பவர் பா ஜ கவின் மாநிலத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.

தயாநிதி மாறனின் பேச்சைக் கேட்கும் பிரமாண்ட கூட்டத்தின் படமும், 5 காலம் அளவிலான செய்தியும் இன்றைய தினகரனின் கடைசிப் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளன.


தினத் தந்தி:

20 கிலோ அரிசி வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரேஷன் கடைகளில் நிபந்தனை இன்றி 10 கிலோ இலவச அரிசி, தேர்தல் வாக்குறுதி பற்றி ஜெயலலிதா விளக்கம் என்பது தான் இன்றைய தினத் தந்தியின் லீட் ஸ்டோரியாகும்.
தினகரன் சரத்குமாருக்கு எதிர்ப்பு என்று பிரச்சாரம் செய்து வர, தினத் தந்தியோ சர்த்குமார் ரசிகர் மன்றங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இதில் எது உண்மை என்று எளிதில் கண்டு பிடித்து விட முடியாது. [நெல்லையில் சரத் குமார் ரசிகர் மன்றத்தினர் தேர்தல் பிரச்சாரம் தொடன்கினர் என்ற செய்தி தினத் தந்தியில் 4 ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியாகியுள்ளது. ]

கட்சிகள் அள்ளி வழங்கும் வாக்குறுதிகள், தமிழகத்தின் புதிய அரசுக்கு காத்திருக்கும் கூடுதல் செலவு, என்ற தலைப்பில், எகனாமிக் டைம்சின் கட்டுரையை மொழி பெயர்த்து தினத் தந்தி 6 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தினமலர்

எல்லோருக்கும் கூட்டம் கூடுவது எதனால்?

நாமக்கல் நகரில் தே மு தி க தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசும் பேச்சு, இன்றைய தினமலரில் 6 காலங்களில் வெளியிடப் பட்டுள்ளது. இன்று தினகரனில் கடைசிப் பக்கத்தில் தயாநிதி மாறனுக்கு பிரமாண்டமான கூட்டம் கூடியிருப்பதாக ஒரு ப்டம் வெளியாகியுள்ளது. இன்று தினத் தந்தியின் முதல் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்குக் கூடியுள்ள பிரமாண்டமான கூட்டத்தின் படம் வெளியிடப் பட்டுள்ளது. கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும் லட்சக் கணக்கான மக்களின் பிரமாண்டமான கூட்டம் பற்றி சில தினங்களாகவே தினகரனில் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில், யாருக்கு யாரை விட கூட்டம் அதிகமாகக் கூடுகிறது என்பதை எந்தப் பத்த்ரிகையாளரும் ஒப்பிட்டுச் சொல்வதில்லை. 4 பத்திரிகைகளையும் வாசிக்கும் ஒருவருக்கு, எல்லோருக்குமே பிரமாண்டமாகக் கூட்டம் கூடுவதை உறுதி செய்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் மக்கள் தொகை பெருகி விட்டது. வேடிக்கை பார்ப்பதில் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது. எங்கள் ஊருக்கு இன்று கருணாநிதி வந்து மாலையில் பேசுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. அந்தப் பகுதி அலங்கரிக்கப் படுவதைப் பார்த்த போது, நாமும் அங்கே போய் வேடிக்கை பார்த்தாலென்ன என்ற எண்ணம் எங்களில் பலருக்கு ஏற்பட்டது. கூட்டம் கூடுவதைப் பார்த்து எத்தனை பேர் ஏமாறப் போகிறர்கள் என்று தெரியவில்லை.

ஜா. தினேஷ் அருமை நாயகம்
ஊடக விமர்சனக் குழுவின் சார்பில்

Wednesday, April 19, 2006

பத்திரிகைகளும் மௌனம்

ரேஷன் அரிசியைச் சுற்றிவரும்
பிரச்சாரம் பத்திரிகைகளும் மௌனம்

தமிழ் நாடு சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் மையப் பொருளாக ரேஷன் அரிசி மாறி விட்டது. 19 4 2006 நாளிதழ்களைப் புரட்டினால் எல்லாப் பக்கங்களிலும் அரிசி பற்றிய குற்றச்சாட்டுக்களும், மறுப்புரைகளும், விவதங்களும் தான். ரேஷன் அரிசியத் தாண்டி மக்களிடம் விவாதிக்க வேறு பிரச்னைகளே இல்லையா என்று எண்ணுமளவிற்கு பத்திரிகைகளின் பக்கங்களை ரேஷன் அரிசி அரசியல் இறுக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறது. பிரச்னையே ஒரு மாதம் முழுவதுக்குமாக 20 கிலோ அரிசியை இப்போதைய விலையான ரூ 3.50/கிலோ என்பதை, இன்னும் எப்படிக் குறைத்து, எவ்வளவு இலவசமாக வழங்குவது என்பது பற்றியது தான். இதுவரை, இந்தியர்களில் பலர் ஒரு நாள் வாழ்க்கையை ஒரு டாலருக்குள் முடித்துக் கொள்ளும் அளவு ஏழைகள் என்று மேலை நாடுகள் விமர்சனம் செய்து வந்தன. இனி, ஒரு மாதம் முழுவதற்குமே ஒரு டாலர் அளவிற்குள் சாப்பாட்டுச் செலவுகளை முடித்துக் கொள்வார்கள் என்று கிண்டல் பண்ணக் கூடும்.
இந்தச் சூழலில், விவாதங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் திறனற்ற நிலையில் இருக்கின்றன தமிழக பத்திரிகைகள். விவாதங்களை எழுப்பவோ, நிபுணர்களின் கருத்துரைகளை முன்வைத்து உண்மையான மக்கள் பிரச்னைகளை அடையாளம் காட்டவோ, இயலாமல் தமிழ் பத்திரிகைகள் மௌனம் காத்து வருகின்றன, என்ற எங்களின் எண்ணத்தை முன் வைத்து, இன்றைய ஆய்வைத் தொடங்குகிறோம்.


கொட்டும் மழையில் ஜெயலலிதா.. தவறான இமேஜை உருவாக்கலாமா தினகரனும், தினமணியும்.

கொட்டும் மழையில் ஜெயலலிதா பிரச்சாரம் என்றொரு செய்தி, 19 4 2006 தினமணியில் 9ஆம் பக்கத்திலும், கனமழையில் ஜெயலலிதா பிர்ச்சாரம் என்றொரு செய்தி, தினகரனில் 6ஆம் பக்கத்திலும், வெளிவந்துள்ளது. மழை பெய்துகொண்டிருக்கும் போதே, ஜெயலலிதா நைந்து கொண்டே மக்களிடம் பிரச்சாரத்தைத் தொடர்ந்திருக்கிறார் என்றதொரு பிம்பத்தை உருவாக்க இந்த செய்திகள் முயற்சிக்கீன்றன. ஆனால், தினமணியில் இடம் பெற்றுள்ள இது தொடர்பான படமோ, ஜெயலலிதா, தனது ஏர்கண்டிஷன்ண்ட் வேனில் உட்கார்ந்து கொண்டு வழக்கம் போல பிரச்சாரம் செய்வதையும், பொதுமக்கள் குடை பிடித்தவாறு அவர் பேச்சைக் கேட்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இந்தச் செய்தியை எழுதியவர்கள், கொட்டும் மழையில் வேனுக்குள்ளிருந்தபடி ஜெயலலிதா பிரச்சாரம் என்று விளக்கியிருக்க வேண்டும். வாசகர்களுக்கு ஒரு தவறான இமேஜை உருவாக்குவதிலிருந்து தவிர்க்க இவ்வாறான விளக்கம் உதவும் என்று நம்புகிறோம்.


தினத் தந்தியில் திருமாவளவனின் மும்பை பேச்சு:

மராட்டிய மாநில விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் இரட்டை வாக்குரிமை மாநில மாநாடு மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு மற்றும் சமூக நல்லிணக்க மலர் வெளியீட்டு விழ மும்பை தாரவியில் ந்டந்தது. இதில் கலந்து கொண்ட திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாக ஒரு பேட்டி தினத் தந்தியில் வெளிவந்துள்ளது. எனினும், இந்தச் செய்தியில், இரட்டை வாக்குரிமை குறித்து திருமாவளவன் என்ன பேசினார் என்பது குறித்து எதுவும் இடம் பெறவில்லை. இலவச டி வி குறித்த திருமாவளவனின் விமர்சனமே இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ளது.

துப்புரவுத் தொழிலாளி போட்டியிடும் செய்தி
தினமணியில் மட்டும்

சங்கரன் கோவில் தொகுதியில், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், துப்புரவு பெண் தொழிலாளி சுப்புலட்சுமி போட்டி என்ற செய்தி, படத்துடன் தினமணியில் 2ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் வேறு எந்தப் பத்திரிகையிலும் இடம் பெறவில்லை.

வேட்பாளர்கள் சொத்து பட்டியல்
மாவட்ட வாரியாக தினத் தந்தியில்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விற்பனையாகும், தினத் தந்தியின் திருநெல்வேலிப் பதிப்பில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களது சொத்துப் பட்டியலை தினத் தந்தி வெளியிட்டுள்ளது. இது போலவே தமிழகம் முழுவதும் அந்தந்த பதிப்புக்களில் அந்தந்த மாவட்டத்து வேட்பாளர்களது பட்டியலைத் தினத்தந்தி வெளியிட்டிருக்கக் கூடும். எனினும், இது முழுமையான பட்டியலாகத் தெரியவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 9 வேட்பாளர்களது சொத்து விவரங்கள் மட்டுமே இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

அன்பழகனின் பேச்சு முதன் முறையாக தினகரனில்

அன்பழகன் என்றொரு தலைவர் திமுகவில் இருக்கிறார், அவரும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை நினைவூட்டும் வகையில் திமுக பொதுச் செயலர் அன்பழகனின் பேச்சு, தினகரனில் 6 ஆம் பக்கமும் அவரது சிறப்புப் பேட்டி, 8ஆம் பக்கமும் வெளியாகியுள்ளது. திமுகவில் கருணாநிதி, தயாநிதி, ஸ்டாலின் தவிர்த்த பிற தலைவர்களது பேச்சுக்கள் அரிதாகவே நாளிதழ்களில் இடம் பெறுகின்றன. தினகரனும் இதில் விதி விலக்கல்ல.

ரேஷன் அரிசி பிரச்னை தொடர்பான திமுக தலைவரின் கவிதை
ரேஷன் அரிசி தொடர்பாக தலைவர்கள் பேசியது, மறுப்புத் தெரிவித்தது, திமுக தலைவர் இந்தப் பிரச்னையின் இன்றைய நிலவரம் குறித்து கவிதை எழுதியது போக பிற தேர்தல் விஷயங்களை இன்று கவனிப்போம்.

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை
எடுப்போம் என்று சேப்பக்கத்தில் கருணாநிதி பேசியிருக்கிறார். இது தினத் தந்தியில் 8ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
பள்ளிகளில் வசூலிக்கப் படும் கல்வி சிறப்புக் கட்டணம் ரத்துச் செய்யப் படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்துள்ளார் என்ற செய்தி தினத் தந்தியில் 20 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. கருணாநிதியும் கல்வி சிறப்புக் கட்டணம் ரத்துச் செய்யப் படும் என்று உறுதி கொடுத்துள்ளார் என்று தினமணி 6ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

சரத் குமார் குறித்தும், நாடார் சமுதாயத்துக்கு மதிப்பு தரவில்லையா என்று கேட்டும் திமுக தலைவர் கருணாநிதி தனியாக அறிக்கை விடுத்துள்ளார். இது தினமணியில் 6ஆம் பக்கத்திலும், தினகரனில் 5ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.

யாருக்கு சொத்து அதிகம், கருணாநிதிக்கா? ஜெயலலிதாவுக்கா?: தினமணி ஒப்பீடு

ஜெயலலிதாவுக்குள்ள சொத்துக்களையும், கருணாநிதிக்குள்ள சொத்துக்களையும் ஒப்பிட்டு, தினமணி ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. தினமணியின் 10 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பட்டியலின் படி, ஜெயலலிதாவை விட கருணாநிதிக்கு ரூ 1.15 கோடி அளவுக்கு அதிகம் சொத்துக்கள் இருக்கின்றன என்றும், ஆனால், இதில் ஜெயலலிதாவின் நகைகளின் மதிப்பு சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழ சட்டசபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களது சொத்து மதிப்புக்களைப் பார்த்து, மக்கள அதிர்ச்சி அடைந்துள்ளதாக, தினமலர் 19 4 2006 இதழில் லீட் ஸ்டோரி வெளியிட்டுள்ளது. வழக்கம் போல இந்தச் செய்திக்கும் எந்தவிதமான மேற்கோளையும் காட்டாமல், தினமலர் வெளியிட்டுள்ளது.
ராமதாஸ் அறிக்கையும் (தினமலர் ப.5) பேட்டியும் (தினமணி ப.9), திராவிடர் கழகப் பொதுச் செயலர் கி. வீரமணியின் நெல்லை மாவட்டத்துப் பேச்சும் (தந்தி. ப.20, தினமணி ப3., தினகரன் ப.4, தினமலர் ப.11) இன்று வெளியாகியுள்ளன. விஜயகாந்த், வைகோ ஆகியோரது பேச்சுக்களும் வழக்க்ம்போலவே இடம் பெற்றுள்ளன.

ரத்தீஷ் குமார்,
ஊடக விமர்சனக் குழுவிற்காக

Tuesday, April 18, 2006

தடுமாறும் தமிழ்ப் பத்திரிகைகள்

விஜயகாந் சொத்து பற்றி 4 பத்திரிகளும்
4 வித தகவல்களை வெளியிடுகின்றன

விருத்தாச்சலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜயகாந்த், எவ்வளவு சொத்து விவரம் என்பதையும் தாக்கல் செய்திருக்கிறார்.
தினத் தந்தியின் 8ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள இச்செய்தி, விஜயகாந்திற்கு ஒன்பதே கால் கோடி சொத்து இருப்பதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலரின் 3 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தி விஜயகாந்திற்கு 12.21 கோடி சொத்து இருப்பதாகச் சொல்கிறது.
தினமணி 9ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி, ரூ 12.50 கோடி சொத்துக்கள் விஜயகாந்திடம் இருப்பதாகக் கூறுகிறது.
தினகரனில் விஜயகாந் சொத்து விவரம் வெளியிடப் பெறவில்லை.
வேட்பாளர் தாக்கல் செய்த தகவல்களின் அடிப்படையில் சேகரித்து வெளியிடப் படும் இந்தத் தகவலில் ஏன் இத்தனை வேறுபாடுகள் என்பது ஆய்வுக்குரியது.
எனினும், தமிழ் செய்தித்தாள்களில் வெளியான விஜயகாந்த் சொத்து விவரம் குறித்த தகவலில் எது சரியானது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தால், தி இந்து நாளிதழில் இது குறித்து என்ன தகவல் இடம் பெற்றிருக்கிறது என்று தேடினோம். இந்து தகவலின் படி, விஜயகாந்த் சொத்து மதிப்பு ரூ 12.50 கோடிக்கும் மேல் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தினமணியில் வெளியாகியுள்ள தகவல், தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள தகவலுடன் ஒத்துப் போகிறது.

சரத்குமார் திமுகவிலிருந்து விலகியது குறித்த
செய்தி வெளியிடலில் பத்திரிகைகளின் பக்கச் சார்பு

சரத் குமார் விலகியதை அடுத்து உருவப் பொம்மைகள் எரித்த செய்தி தினகரனில் இன்று (18 4 2006) மூன்று தனித் தனிச் செய்திகளாக படங்களுடன் பெரிய அளவில் வெளியிடப் பட்டுள்ளது.
தினத் தந்தியில், சரத் குமார் உருவ பொம்மை எரிக்கப் பட்டதாக செய்தி எதுமே இடம் பெறவில்லை. அதே வேளை,
அதிமுகவினர், சரத்குமார் அதிமுகவில் சேர்ந்ததை இனிப்பு விநியோகித்துக் கொண்டாடியதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு புறம், உருவ பொம்மை எரிப்பு. மறுபுறம் இனிப்பு விநியோகம் என்ற தகவல்.
தினமலரில் உருவ பொம்மை எரிக்கப் பட்ட செய்தியும், இனிப்பு வழன்கப் பட்ட செய்தியும் இடம் பெற்றுள்ளது.
தினமணியில் உருவ பொம்மை எரிப்பு பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இனிப்பு விநியோகம் பற்றிய செய்தி இடம் பெறவில்லை.
தினத் தந்தியில் இனிப்பு விநியோகம் பற்றிய செய்தி, தினகரனில் உருவ பொம்மை எரிக்கப் பட்டதாக பகக்த்திற்குப் பக்கம் செய்தி, தினமணியில் உருவ பொம்மை எரிக்கப் பட்டதாக செய்தி, தினமலரில், உருவ பொம்மையை ஒரு தரப்பு எரித்ததாகவும், இன்னும் ஒரு தரப்பு இனிப்பு விநியோகம் செய்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு தரப்புச் செய்தியை வெளியிடுவது, அல்லது சில விஷயங்களில் மட்டும் இரு தரப்பையும் வெளியிட்டு நடு நிலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்று தமிழ் நாளிதழ்களே தடுமாற்றத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

“புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியின் வேட்பு மனு தாக்கல்”, செய்தியை இருட்டடிப்பு செய்த தினமலரும் தினகரனும்

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஓட்டப் பிடாரம் தொகுதியில் திங்கள் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்தச் செய்தி தினமணியிலும், தி இந்துவிலும் படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. தினத் தந்தியில் 8 ஆம் பக்கத்தில் செய்தியும், 20 ஆம் பக்கத்தில் படமும் வெளியாகியுள்ளன. தினமலரிலும், தினகரனிலும் இது பற்றிய செய்தியோ, படமோ இடம் பெறவில்லை. தலித் தலைவர்களின் பேச்சுக்களை இருட்டடிப்பு செய்யும் தமிழ் நாளிதழ்கள் அவர்களது செய்திகளைப் பெருமளவில் புறக்கணித்து விடுகின்றன. தினமலர் இவ்விஷயத்தில் முன்னணி வகிக்கிறது. தினமலரின் பல வழிமுறைகளைப் பின் பற்றத் தொடங்கியிருக்கும் தினகரன், இவ்விஷயத்திலும் தினமலரின் வழிமுறையைப் பின் பற்றத் தொடங்கியுள்ளது என்று கூறலாம்.

இன்றைய சிறப்புப் பேட்டிகள்

தனது சிறப்புப் பேட்டித் தொடரில் இன்று தினகரன், அதிமுகவைச் சேர்ந்த க. சுப்புவின் பேட்டியை வெளியிட்டுள்ளது.
தினமலர் இன்று விஜயகாந்தின் சிறப்புப் பேட்டியை 18 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நெடுமாறனின் பேட்டி தினமணியில் மட்டுமே

"வாய்ப்பூட்டை அரசியல் கட்சிகள் கண்டிக்கவில்லையே... ஈழபோராட்டத்தை ஆதரிக்கும் வேட்பாளருக்கே ஓட்டு, ஆதரவாளர்களுக்கு நெடுமாறன் வேண்டுகோள்", என்ற தலைப்புடன் தினமணியில் பழ நெடுமாறனின் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பை பேட்டியாக வெளியாகியுள்ளது. ஜனநாயக உரிமைகள் குறித்த இந்தப் பேட்டியி ஒவ்வொரு பத்திரிகையும் வெளியிட்டிருக்க வேண்டிய ஒரு பேட்டி. ஆனால், என்ன காரணத்தால், பழ நெடுமாறனின் பேட்டியைத் தமிழ் பத்திரிகைகள் புறக்கணித்திருக்கின்றன என்பது ஆய்வுக்குரியது.
கருணாநிதியின் அரசியல் கவிதை "சிறு நரிகள் சிம்மாசனக் கனவு சிதைந்து போகும்", என்ற தலைப்பில் தினகரனில் 6ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இன்றைய லீட் ஸ்டோரி

தினமணி
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ இலவச அரிசி: ஆண்டிபட்டியில் ஜெயலலிதா வாக்குறுதி, என்ற தலைப்புடன் தினமணியின் லேட் ஸ்டோரி வெளியாகியுள்ளது.

தினகரன்
"அதிமுகவில் சரத்குமார்- ராதிகா, திமுகவுக்கு ராஜேந்தர் ஆதரவு, களை கட்டுகிறது தேர்தல், மனு தாக்கல் விறுவிறுப்பு", என்பது என்றைய தினகரனின் லீட் ஸ்டோரியாகும்.

தினமலர் :
“ரூ 22 கோடி, திமுக தலைவர் கருணநிதியின் சொத்து மதிப்பு, வேட்பு மனு தாக்கலில் விவரத்தை வெளியிட்டார்”.

தினத்தந்தி:
"புதிதாக அமைய இருக்கும் அதிமுக ஆட்சியின் திட்டம்.. ரேஷனில் 20 கிலோ அரிசி வாங்கும்போது, 10 கிலோ அரிசி இலவசம்.. ஜெயலலிதா வாக்குறுதி.."

வேட்பாளர்களது சொத்து விவரங்களை வெளியிடுவதில் தினமலர் தீவிர முனைப்பு

வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவதில் தினமலர் கூடுதல் அக்கறை காட்டி வருகிறது. இன்றைய இதழில் திருப்பிய பக்கமெல்லாம் வேட்பாளர்களின் சொத்துப் பட்டியல் தினமலர் இதழில் இடம் பெற்றுள்ளது. இன்றைய பிற 3 நாளிதழ்களை ஒப்பிடுகையில், தினமலரில் வேட்பாளர் சொத்து விவரம் கணிசமாக இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது.

ஊடகக் கண்காணிப்புக் குழுவின் சார்பில்
ஜோ அன்டோ சத்யன்

Monday, April 17, 2006

தீவிரமாகும் பத்த்ரிகைகளின் சார்புநிலை

தினமணி ஜெயலலிதாவுக்குத் தரும் முக்கியத்துவம்.

சனிக்கிழமை அன்று, ஜெயலலிதா மனு தாக்கல் செய்கிறார் என்று லீட் ஸ்டோரி வெளியிட்ட தினகரன், இன்று “சேப்பாக்கம் தொகுதியில் இன்று கருணாநிதி மனு தாக்கல், 11வது முறையாக போட்டி”, என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. தினமணியில், கருணாநிதியின் மனு தாக்கல் செய்தியை முதல் பக்கத்தில் பத்து செ மீ உயரமும், 2 பத்தி அகலமும் கொண்ட செய்தியாகச் சுருக்கமாக வெளியிடப் பட்டுள்ளது. தினமணி, கருணாநிதியை விட, ஜெயலலிதாவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருகிறது என்று கருத இடமிருக்கிறது.

தினகரனில் த மு மு க தலைவர் ஜவாகிருல்லாவின் சிறப்புப் பேட்டி

"இந்துத்வா கொள்கைகளையே பின்பற்றுகிறார் ஜெ. இது பா ஜ க பினாமி ஆட்சி", த மு மு க தலைவர் ஜவாகிருல்லாவின் சிறப்புப் பேட்டி 17 04 2006 தினகரனில் 8ஆம் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

தி மு க தலைவருக்கு மட்டும் தான் கூட்டம் கூடுகிறதா?
தினகரனின் பக்கச் சார்பு

17 4 2006 தினகரனின் 16 ஆவது பக்கத்தில் "இதுவரை காணாத மக்கள் எழுச்சி. பிரம்மாண்டம் கண்டு கருணாநிதி மகிழ்ச்சி", என்ற தலைப்புடன் 8 காலச் செய்தி இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதாவிற்கோ, வைகோவிற்கோ கூடும் கூட்டத்தை விட, கருணாநிதிக்குக் கூடும் கூட்டம் எவ்வளவு அதிகம் என்பதற்கான சரியான ஆதாரங்களுடன் இந்தச் செய்தி வெளியிடப் படவில்லை.

தீவிரமாகும் சார்பு நிலை

கோவில்பட்டியில் நல்ல கண்ணுவின் பேச்சு (ப.2), நெல்லையிலும் சேரன்மாதேவியிலும் நடிகர் நெப்போலியன் பேச்சு (ப.3, ப.4), பாளையங்கோட்டையில் த மு மு க செயலர் ரிபாயி பேச்சு (ப.3), விழுப்புரத்தில் ராமதாசின் பேச்சு (ப.6), பூந்தமல்லியில் இளங்கோவன் பேச்சு (ப.7), விருத்தாசலத்தில் அன்புமணி பேச்சு (ப.7) என திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களது பேச்சுக்களால் தினகரன் நிரம்பி வழிகிறது.
இது தவிர, கருணாநிதியின் அறிக்கை (ப.6), ஜி கே வாசனின் பேட்டி (ப.6), விஜய டி ராஜேந்தருக்கு கருணாநிதியின் அழைப்பு (ப.7) என்று மேலும் மேலும் திமுக கூட்டணி தொடர்பான செய்திகளே தினகரனின் 17 4 2006 பக்கங்களை அலங்கரிக்கின்றன. தினகரன், திமுக சார்பு நிலையில் செய்திகளை வெளியிடுகிறது என்பதை ஒளிவு மறைவு இல்லாமலே வெளியிடும் போக்கு, தேர்தல் நாள் நெருங்க நெருங்க அதிகரித்துக் கொன்டே வருகிறது.

பன்முகத் தன்மை கொண்ட தினமணி

தினமணியின் முதல் பக்கத்தில் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் பேசிய பேச்சு 5 பத்திகள் அகலத்தில் விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. கருணாநிதி, ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் என்ற செய்தியும், சேப்பாக்கத்தில் கருணாநிதி பேசிய பேச்சும், ஜெயலலிதா முரிறியில் போட்டி? என்ற செய்தியும் முதல் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

திருநெல்வேலியில் நெப்போலியன் பேச்சு (ப3), கருணாநிதி மீது வைகோ குற்றச்சாட்டு (ப.4), விஜயகாந் பேட்டி (ப.4), ஜி கே வாசன் பேட்டி (ப.5), நல்ல கண்ணு பேட்டி (ப.7), சன்கரய்யா பேட்டி (ப.7), கருணாநிதி பேச்சு (ப.9) சிவகங்கையில் ப சிதம்பரம் பேச்சு (ப.7) மதுரையில் விஜயகாந் பேச்சு (ப.7), தாராபுரத்தில் நடிகர் சந்திரசேகர் பேச்சு (ப.12) என பல தரப்புச் செய்திகளின் கலவையாக வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது தினமணி.

பொதுவாக, தலித் மைனாரிட்டி தரப்பைத் தவிர, பிற அரசியல் கட்சிகளின் பல தரப்புக் கருத்துகளையும் மக்கள் முன் வைக்கும் ஒரே நாளிதழாக தினமணி விளங்குகிறது.

தினத் தந்தியின்
அதிமுக சார்புநிலை:

முதன் முறையாக ஜெயலலிதா அல்லாத வேறு ஒரு அரசியல் கட்சியின் செய்தி, தினத்தந்தியின் லீட் ஸ்டோரியாக்கப் பட்டிருப்பதாக நாங்கள் கருதுவது, இன்றைய (17 4 2006) தினத் தந்தியில் இடம் பெற்றுள்ள "சென்னையில் ஒறெ நாளில் கருணாநிதி - வைகோ - போட்டி போட்டு தேர்தல் பிரசாரம்", என்ற செய்தி முதன்மைச் செய்தியைத் தான்.
சுப்ரமணிய சாமி சென்னையில் அளிட்த்க பேட்டி (ப.3) நல்ல கண்ணுவின் திருச்சி பேட்டி (ப.3), மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு - விஜயகாந் மீது கல்வீச்சு (ப.4), ராமதாசின் செங்கற்பட்டு பேச்சு (ப.8), நெல்லை மாவட்டத்தில் நெப்போலியனின் பேச்சு (ப.8), சென்னையில் வைகோவின் பேச்சு (ப.9), சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியின் பேச்சு (ப.10), ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி பேச்சு (ப.10) தேனி பகுதியில் ஜெயலலிதா பிரசாரம் (ப. 18), விஜயகாந் மதுரை பிரச்சாரம் (ப.11), நடிகர் செந்தில் பேச்சு (ப.15) ஆகியவை இன்று (17 4 2006) தினத் தந்தியில் இடம் பெற்றுள்ள முக்கியமான பிரச்சாரம் தொடர்பான செய்திகள். இதில் அதிமுக கூட்டணி சார்பான செய்திகள் அதிகம் இடம் பெற்றிருப்பதையும், திமுக கூட்டணி தொடர்பான செய்திகளுக்கு இடம் மறுக்கப் பட்டிருப்பதையும், தினகரனிலும், தினமணியிலும் வெளி வந்த செய்திகளுடன் ஒப்பிட்ட்டு உறுதி செய்து கொள்ளலாம்..

தினமலரும் அதிமுக சார்பு நிலையில் தான் செய்தி
வெளியிடுகிறது.

மதுவிலக்கு பற்றி தேர்தல் அறிக்கையில் கட்சிகள் மூச், காவிரி, பெரியாறு பிரச்னைகளும் புறக்கணிப்பு,, மறந்துட்டாங்க என்ற செய்தி இன்றைய (17 04 2006) லீட் ஸ்டோரியாக்கப்பட்டிருக்கிறது. செய்தி முழுக்க யாரையும் மேற்கோள் காட்டாமல் ஒரு தனி நபரது பார்வையைப் போல, இந்தச் செய்தி (?) வெளியிடப் பட்டிருக்கிறது. செய்திக்குரிய இடத்தில், செய்தியைப் போன்ற தோற்றம் தரும் வகையில், ஒரு சொந்தக் கருத்தை வெளியிடுவது தினமலர் மட்டுமே பின்பற்றும் வழிமுறை.
இதைத் தவிர, வைகோவின் விழுப்புரத்துப் பேச்சு (ப.1), கருணாநிதியின் தஞ்சாவூர்ப் பேச்சு (ப.1), நல்ல கண்ணுவின் திருச்சி பேட்டி (ப.3), ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் பேச்சு (ப4) கருணாநிதியின் நள்ளிரவு பேட்டி (ப.4), கருணாநிதியின் அறிக்கை (ப.4), நடிகர் பாகியராஜ் பிரச்சாரம் (ப.16), விஜய டி ராஜேந்தருக்கு கருணாநிதி அழைப்பு (ப.16)விஜயகாந் மீது கல் வீச்சு (ப.16), நெல்லையில் நெப்போலியனின் பேச்சு (ப.7), வைகோவின் சென்னை பேச்சு (ப.10), மீண்டும் நடிகர் நெப்போலியனின் நெல்லை பேச்சு (ப.11), கருணாநிதியின் சேப்பாக்கம் பிரச்சாரம் (ப14) ஆகியவை இன்று (17 4 2006) தினமலரில் இடம் பெற்றுள்ள செய்திகளாகும்.
விஜய டி ராஜேந்தரை, விஜய ராஜேந்தர் என்று இன்றைய தினமலரின் செய்தித் தலிப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவர்களின் பெயர்களை வெளியிடுவதில் தினமலர் குறும்புத்தனம் செய்வதாக நேற்று எழுதியிருந்தோம்.
தினமலரின் செய்திகளிலும், அதிமுக சார்பு நிலையைக் காண முடியும். திமுக தரப்பில் கருணாநிதி, ஸ்டாலின், சில சினிமா நடிகர்கள் பேச்சுக்களை வெளியிடுவதுடன் நிறுத்திக் கொள்வது தினமலரின் வழக்கமாக இருந்து வருகிறது.
____________

Sunday, April 16, 2006

தினமலரின் உருப்படியான செயல்

வேட்பாளர்களின் சொத்துக்களை வெளியிடுவதில்
தினமலர் முன்னுரிமை


தமிழ் நாடு சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சட்டம் மூலம் கட்டாயப் படுத்தி இருக்கிறது. அதையொட்டி, வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள், இந்தச் சொத்து விவரங்களையும் சேர்த்தே தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ்ப் பத்திரிகைகளில், தினமலர், வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து விவரங்களை முன்னுரிமை அடிப்படையில் வெளியிட்டு வருகிறது

தமிழ முதல்வரும் ஆண்டிப்பட்டி வேட்பாலருமான ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ 24.65 கோடி. திமுக பொதுச் செயலரின் சொத்து மதிப்பு விவரங்கள் (ப.2), ம தி மு கவைச் சேர்ந்த மு. கண்ணப்பன் சொத்து மதிப்பு ரூ 2 கோடி (ப.6) தற்போதைய அ தி மு க அமைச்சர் நயினார் நாகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ 1.42 கோடி (ப. I), தற்போதைய அமைச்சர் தாமோதரனின் சொத்து மதிப்பு (ப.1`6), தென்காசி தொகுதியின் வேட்பாளர் கருப்பச்சமிப் பாண்டியனின் சொத்து விவரங்கள் (ப.IV), சன்கரங்கோவில் வேட்பாளர் கருப்பசாமியின் சொத்து மதிப்பு, எனப் பல வேட்பாளர்களின் சொத்து மதிப்புக்களை தினமலர் வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை தினத் தந்தி தவிர பிற நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன..
மீண்டும் அதிமுக ஆட்சி: ஜெ உறுதி என்று வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு ஜெயலலிதா அளித்த பேட்டியை, தினமலரும், தினத் தந்தியும் லீட் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளன.

தலைவர்களின் பெயர்களைச் சரியாக வெளியிட மறுக்கும் தினமலர்

லட்சிய தி மு க வின் தலைவர் விஜய டி ராஜேந்தர் மயிலாடுதுறையில் போட்டியிடப் போவதாகவும், அத்துடன் 11 வேட்பாளர்களின் பட்டியலையும் 4 நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. இதில் தினமலர் தவிர பிற 3 நாளிதழ்களும் லட்சிய திமுகவின் தலைவர் பெயரை விஜய டி ராஜேந்தர் என்றே வெளியிடுகின்றன. தினமலர் மட்டும், டி.ராஜேந்தர் என்றே வெளியிடுகிறது. திருமாவளவன் பெயரை, தொல் திருமாவளவன் என்று தமிழ் நாளிதழ்கள் யாவும் வெளியிட, தினமலர் மட்டுமே திருமாவளவன் என்று வெளியிட்டு வருகிறது. இப்படி பல தலைவர்களது பெயர்களையும் சரியாக வெளியிட மறுத்தே வருகிறது தினமலர். இவ்வாறு தவறாக வெளியிடப் படும் தலைவர்களது பெயர்களின் பட்டியலைத் தனியாகவே தொகுக்கலாம்.

ராம்தாசின் பேட்டியைப் புறக்கணித்த தமிழ் பத்திரிகைகள்

ராமதாசின் தைலாபுரத்துப் பேட்டியை, தி இந்து நாளிதழ் மட்டும் [ப.4] வெளியிட்டுள்ளது தமிழ் நாளிதழ்களில் எதுவுமே இந்தப் பேட்டியை வெளியிடவில்லை.
கருணாநிதியின் பேச்சுக்கு 4 நாளிதழ்களும் முக்கியத்துவம்
கருணாநிதி, தஞ்சாவூர், பாபநாசம், மயிலாடுதுறை, குக்பகோணம், திருவாரூர், திருச்சி ஆகிய இடங்களில் பேசிய பேச்சுக்கள், தமிழ்ப் பத்திரிகைகளில் பாகுபாடில்லாமல் பரவலாக இடம் பெற்றுள்ளன.

ஜெயலலிதாவை முழுதாகப் புறக்கணித்த தினகரன்

அதே போல, ஸ்டாலில் கடையனல்லூரில் பேசிய பேச்சு, தினமணி தவிர பிற 3 நாளிதழ்களிலும் விரிவாக இடம் பெற்றுள்ளது.

ஜெயலலிதா, ஆண்டிப் பட்டியில் பேசிய பேச்சு, வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி, மக்களை கருணாநிதி திசை திருப்புவதாக வெளியிட்டுள்ள அறிக்கை யாவும் பரவலாக இட்ம் பெற்றுள்ளன. தினகரனில் மட்டும் இந்த மூன்றும் இடம் பெறவில்லை.

சிதம்பரத்தின் பேட்டி தினகரனில் இடம் பெறவில்லை

சிதம்பரத்தின் சென்னை பேட்டி தினகரனிலும் (ப.7), தினமணியிலும் (ப. 11), தினமலரிலும் (ப.4) இடம் பெற்றுள்ளது. தினத் தந்தியில் சிதம்பரத்தின் பேட்டி இடம் பெறவில்லை.

ஆதாரமில்லாமல் செய்தி வெளியிடுவதில் தினமலரைப் பின்பற்றும் தினகரன்

16 4 2006 நாளிட்ட தினகரனில் லீட் ஸ்டோரியாக வைகோவை சேர்த்தது தவறா? அதிமுகவில் திடீர் குழப்பம் "இந்து" கருத்துக் கணிப்பு எதிரொலி என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்திக்கு ஆதாரமாக அதிமுக அமைச்சர் ஒருவர் கூறியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த அமைச்சர் யார் என்பது பற்றியோ, வேறு ஆதாரங்கள் எதுவுமே மேற்கோள் காட்டப் படவில்லை. இந்தச் செய்தியே முழுதும் ஆதாரமில்லாமல் எழுதப் பட்டதாகக் கருத இடமிருக்கிறது.

நேற்று தினமலர் இதழில், இடம் பெற்ற லீட் ஸ்டோரியும் இதுவும் ஏறத் தாழ ஒரே ரகம். ஆதாரங்கள் எதனையும் மேற்கோள் காட்டாமல் தன்க்களது பத்திரிகையின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப செய்தி எழுதுவதில் முன்னோடியாகத் திகழும் தினமலரைப் பின்பற்றி தினகரன் இன்றைய செய்தி எழுதப் பட்டிருப்பதாகக் கொள்ளலாம்.

நேற்றைய தினமலர் லீட் ஸ்டோரி, ஆதாரமில்லாமல் எழுதப் பட்டிருப்பதாக நமது விமர்சனத்தில் குறிபிட்டிருந்தோம். அதை மீண்டும் நினைவூட்டும் வகையிலும் இன்றைய தினகரனின் லீட் ஸ்டோரியையும் ஒப்பிட்டுக் கொள்வதற்காக மறு பிரசுரம் செய்கிறோம்.

ஆதாரமில்லாத தினமலரின் லீட் ஸ்டோரி

15 4 2006 சனிக்கிழமைல் தினமலர் நாளிதழின் லீட் ஸ்டோரியாக, கருத்துக் கணிப்பு முடிவுகளால் அதிமுக, திமுக, கலக்கம், பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. ஒரு செய்தி என்பதற்கு உரிய எந்த உட்கூறும்
இந்தச் செய்தியில் காணப் படவில்லை.
2 அணிகளும் தி இந்து நாளிதழின் கருத்துக்
கணிப்பைப் பார்த்துக் கலக்கம் அடைந்திருப்பதாகக் கூறும் இந்தச் செய்தி இதற்கு ஆதாரமாக எதையும் முன் வைக்கவில்லை. தவிர, 8 பாராக்களில் விவரிக்கப் பட்டுள்ள இந்தச் செய்தியில், 7 பாராக்கள், இதுவரை தேர்தல் களத்தில் என்னென்ன நடந்துள்ள என்ற
முன்கதைச் சுருக்கத்தைத் தான் வெளியிட்டிருக்கிறது.

பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்று சொல்லும் இந்தச் செய்தி, இதற்கும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. கலக்கம் அடைந்ததாகக் கூறுவதோ, பிரச்சாரம் தீவிரப்படுத்தப் பட இருப்பதாகக் கூறுவதோ, தினமலர் "சிறப்பு நிருபரின்",
கற்பனையன்றி வேறில்லை என்ற முடிவுக்கு ஒரு வாசகன் எளிதில் வந்து விடும் ஆபத்து இதில் இருக்கிறது.

தாம்பரத்தில் பாக்கியராஜ் பிரச்சாரம் தினகரனில் மட்டும் (7ஆம் பக்கத்தில்) வெளியாகியுள்ளது.

சிறுபான்மையினரின் குரலைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழ் நாளிதழ்கள்

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் ரிபாயியின் மேலப் பாளையப் பிரச்சாரப் பேச்சு, தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது.

இன்றைய சிறப்புப் பேட்டிகள்: எழுத்தாளர் ரவிக்குமார் பேட்டி
தினமணியில்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லக் கண்ணுவின் பேட்டி, தினமணியில் 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சரும் இளையான்குடி திமுக வேட்பாளருமான ராஜ கண்ணப்பனின் பேட்டி, தினமணியில் 7 ஆம் பக்கம் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் ரவிக்குமாரின் பேட்டி தினமணியில் 10 ஆம் பக்கம் வெளியாகியுள்ளது. மூத்த பத்திரிகையாளர் பொன் தனசேகரன், எழுத்தாளர் ரவிக்குமாரைப் பேட்டி கண்டிருக்கிறார்.
தினகரன் 2 நாட்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் தொல் திருமாவளவன் பேட்டியை வெளியிட்டிருந்தது. அதற்குப் பின் இந்த 4 நாளிதழ்களில் இடம் பெறும் முக்கிய தலித் தலைவரின் பேட்டி இதுவாகும்.

பிரமாண்ட புகைப்படம்

திமுக தலைவர் கருணாநிதி தஞ்சாவூரில் பேசிய பேச்சைக் கேட்கக் கூடிய பிரமாண்ட கூட்டத்தின் பெரிய சைசிலான்ஃ அரைப்பக்க அளவிலான புகைப்படம் தினகரனின் கடைப்பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் இவ்வளவு பெரிய புகைப் படம் வெளியாவது இதுவே முதல் முறை. இந்தப் புகைப் படத்தை தினகரனில் வெப்சைட்டில் காணலாம்.