Wednesday, April 19, 2006

பத்திரிகைகளும் மௌனம்

ரேஷன் அரிசியைச் சுற்றிவரும்
பிரச்சாரம் பத்திரிகைகளும் மௌனம்

தமிழ் நாடு சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் மையப் பொருளாக ரேஷன் அரிசி மாறி விட்டது. 19 4 2006 நாளிதழ்களைப் புரட்டினால் எல்லாப் பக்கங்களிலும் அரிசி பற்றிய குற்றச்சாட்டுக்களும், மறுப்புரைகளும், விவதங்களும் தான். ரேஷன் அரிசியத் தாண்டி மக்களிடம் விவாதிக்க வேறு பிரச்னைகளே இல்லையா என்று எண்ணுமளவிற்கு பத்திரிகைகளின் பக்கங்களை ரேஷன் அரிசி அரசியல் இறுக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறது. பிரச்னையே ஒரு மாதம் முழுவதுக்குமாக 20 கிலோ அரிசியை இப்போதைய விலையான ரூ 3.50/கிலோ என்பதை, இன்னும் எப்படிக் குறைத்து, எவ்வளவு இலவசமாக வழங்குவது என்பது பற்றியது தான். இதுவரை, இந்தியர்களில் பலர் ஒரு நாள் வாழ்க்கையை ஒரு டாலருக்குள் முடித்துக் கொள்ளும் அளவு ஏழைகள் என்று மேலை நாடுகள் விமர்சனம் செய்து வந்தன. இனி, ஒரு மாதம் முழுவதற்குமே ஒரு டாலர் அளவிற்குள் சாப்பாட்டுச் செலவுகளை முடித்துக் கொள்வார்கள் என்று கிண்டல் பண்ணக் கூடும்.
இந்தச் சூழலில், விவாதங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் திறனற்ற நிலையில் இருக்கின்றன தமிழக பத்திரிகைகள். விவாதங்களை எழுப்பவோ, நிபுணர்களின் கருத்துரைகளை முன்வைத்து உண்மையான மக்கள் பிரச்னைகளை அடையாளம் காட்டவோ, இயலாமல் தமிழ் பத்திரிகைகள் மௌனம் காத்து வருகின்றன, என்ற எங்களின் எண்ணத்தை முன் வைத்து, இன்றைய ஆய்வைத் தொடங்குகிறோம்.


கொட்டும் மழையில் ஜெயலலிதா.. தவறான இமேஜை உருவாக்கலாமா தினகரனும், தினமணியும்.

கொட்டும் மழையில் ஜெயலலிதா பிரச்சாரம் என்றொரு செய்தி, 19 4 2006 தினமணியில் 9ஆம் பக்கத்திலும், கனமழையில் ஜெயலலிதா பிர்ச்சாரம் என்றொரு செய்தி, தினகரனில் 6ஆம் பக்கத்திலும், வெளிவந்துள்ளது. மழை பெய்துகொண்டிருக்கும் போதே, ஜெயலலிதா நைந்து கொண்டே மக்களிடம் பிரச்சாரத்தைத் தொடர்ந்திருக்கிறார் என்றதொரு பிம்பத்தை உருவாக்க இந்த செய்திகள் முயற்சிக்கீன்றன. ஆனால், தினமணியில் இடம் பெற்றுள்ள இது தொடர்பான படமோ, ஜெயலலிதா, தனது ஏர்கண்டிஷன்ண்ட் வேனில் உட்கார்ந்து கொண்டு வழக்கம் போல பிரச்சாரம் செய்வதையும், பொதுமக்கள் குடை பிடித்தவாறு அவர் பேச்சைக் கேட்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இந்தச் செய்தியை எழுதியவர்கள், கொட்டும் மழையில் வேனுக்குள்ளிருந்தபடி ஜெயலலிதா பிரச்சாரம் என்று விளக்கியிருக்க வேண்டும். வாசகர்களுக்கு ஒரு தவறான இமேஜை உருவாக்குவதிலிருந்து தவிர்க்க இவ்வாறான விளக்கம் உதவும் என்று நம்புகிறோம்.


தினத் தந்தியில் திருமாவளவனின் மும்பை பேச்சு:

மராட்டிய மாநில விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் இரட்டை வாக்குரிமை மாநில மாநாடு மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு மற்றும் சமூக நல்லிணக்க மலர் வெளியீட்டு விழ மும்பை தாரவியில் ந்டந்தது. இதில் கலந்து கொண்ட திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாக ஒரு பேட்டி தினத் தந்தியில் வெளிவந்துள்ளது. எனினும், இந்தச் செய்தியில், இரட்டை வாக்குரிமை குறித்து திருமாவளவன் என்ன பேசினார் என்பது குறித்து எதுவும் இடம் பெறவில்லை. இலவச டி வி குறித்த திருமாவளவனின் விமர்சனமே இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ளது.

துப்புரவுத் தொழிலாளி போட்டியிடும் செய்தி
தினமணியில் மட்டும்

சங்கரன் கோவில் தொகுதியில், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், துப்புரவு பெண் தொழிலாளி சுப்புலட்சுமி போட்டி என்ற செய்தி, படத்துடன் தினமணியில் 2ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் வேறு எந்தப் பத்திரிகையிலும் இடம் பெறவில்லை.

வேட்பாளர்கள் சொத்து பட்டியல்
மாவட்ட வாரியாக தினத் தந்தியில்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விற்பனையாகும், தினத் தந்தியின் திருநெல்வேலிப் பதிப்பில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களது சொத்துப் பட்டியலை தினத் தந்தி வெளியிட்டுள்ளது. இது போலவே தமிழகம் முழுவதும் அந்தந்த பதிப்புக்களில் அந்தந்த மாவட்டத்து வேட்பாளர்களது பட்டியலைத் தினத்தந்தி வெளியிட்டிருக்கக் கூடும். எனினும், இது முழுமையான பட்டியலாகத் தெரியவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 9 வேட்பாளர்களது சொத்து விவரங்கள் மட்டுமே இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

அன்பழகனின் பேச்சு முதன் முறையாக தினகரனில்

அன்பழகன் என்றொரு தலைவர் திமுகவில் இருக்கிறார், அவரும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை நினைவூட்டும் வகையில் திமுக பொதுச் செயலர் அன்பழகனின் பேச்சு, தினகரனில் 6 ஆம் பக்கமும் அவரது சிறப்புப் பேட்டி, 8ஆம் பக்கமும் வெளியாகியுள்ளது. திமுகவில் கருணாநிதி, தயாநிதி, ஸ்டாலின் தவிர்த்த பிற தலைவர்களது பேச்சுக்கள் அரிதாகவே நாளிதழ்களில் இடம் பெறுகின்றன. தினகரனும் இதில் விதி விலக்கல்ல.

ரேஷன் அரிசி பிரச்னை தொடர்பான திமுக தலைவரின் கவிதை
ரேஷன் அரிசி தொடர்பாக தலைவர்கள் பேசியது, மறுப்புத் தெரிவித்தது, திமுக தலைவர் இந்தப் பிரச்னையின் இன்றைய நிலவரம் குறித்து கவிதை எழுதியது போக பிற தேர்தல் விஷயங்களை இன்று கவனிப்போம்.

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை
எடுப்போம் என்று சேப்பக்கத்தில் கருணாநிதி பேசியிருக்கிறார். இது தினத் தந்தியில் 8ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
பள்ளிகளில் வசூலிக்கப் படும் கல்வி சிறப்புக் கட்டணம் ரத்துச் செய்யப் படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்துள்ளார் என்ற செய்தி தினத் தந்தியில் 20 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. கருணாநிதியும் கல்வி சிறப்புக் கட்டணம் ரத்துச் செய்யப் படும் என்று உறுதி கொடுத்துள்ளார் என்று தினமணி 6ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

சரத் குமார் குறித்தும், நாடார் சமுதாயத்துக்கு மதிப்பு தரவில்லையா என்று கேட்டும் திமுக தலைவர் கருணாநிதி தனியாக அறிக்கை விடுத்துள்ளார். இது தினமணியில் 6ஆம் பக்கத்திலும், தினகரனில் 5ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.

யாருக்கு சொத்து அதிகம், கருணாநிதிக்கா? ஜெயலலிதாவுக்கா?: தினமணி ஒப்பீடு

ஜெயலலிதாவுக்குள்ள சொத்துக்களையும், கருணாநிதிக்குள்ள சொத்துக்களையும் ஒப்பிட்டு, தினமணி ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. தினமணியின் 10 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பட்டியலின் படி, ஜெயலலிதாவை விட கருணாநிதிக்கு ரூ 1.15 கோடி அளவுக்கு அதிகம் சொத்துக்கள் இருக்கின்றன என்றும், ஆனால், இதில் ஜெயலலிதாவின் நகைகளின் மதிப்பு சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழ சட்டசபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களது சொத்து மதிப்புக்களைப் பார்த்து, மக்கள அதிர்ச்சி அடைந்துள்ளதாக, தினமலர் 19 4 2006 இதழில் லீட் ஸ்டோரி வெளியிட்டுள்ளது. வழக்கம் போல இந்தச் செய்திக்கும் எந்தவிதமான மேற்கோளையும் காட்டாமல், தினமலர் வெளியிட்டுள்ளது.
ராமதாஸ் அறிக்கையும் (தினமலர் ப.5) பேட்டியும் (தினமணி ப.9), திராவிடர் கழகப் பொதுச் செயலர் கி. வீரமணியின் நெல்லை மாவட்டத்துப் பேச்சும் (தந்தி. ப.20, தினமணி ப3., தினகரன் ப.4, தினமலர் ப.11) இன்று வெளியாகியுள்ளன. விஜயகாந்த், வைகோ ஆகியோரது பேச்சுக்களும் வழக்க்ம்போலவே இடம் பெற்றுள்ளன.

ரத்தீஷ் குமார்,
ஊடக விமர்சனக் குழுவிற்காக

1 comment:

Anonymous said...

Please visit this

http://www.aaraamthinai.com/arasiyal/states/2006/apr21state.asp

Till today i was not aware of this...