Thursday, April 20, 2006

தினமணியின் தலித் எதிர்ப்புப் போக்கு

புதிய தமிழகம் கட்சியை
வன்முறைக் கட்சியாகச் சித்தரிக்கும் முயற்சி


தினமணியை மேலோட்டமாக வாசிக்கும் எவருக்கும் அதை ஒரு நடு நிலையான பத்திரிகையாக தோன்றும். ஆனால், தலித் தொடர்பான அப் பத்திரிகையின் நிலைப்பாடு, தினமல்ருக்கு நிகராகவே இருக்கிறது என்று கூற முடியும்.

இன்றைய தினமணியிலும் தினமலரிலும் வந்த செய்தியைப் பாருங்கள்:

“வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தூத்துக்குடியில் புதிய தமிழகம் வேட்பாளர்கள் 3 பேர் ஆதரவாளர்களுடன் சாலை மறியல்”, , என்ற தலைப்புடன் தினமணியின் 4ஆம் பக்கத்தில் ஒரு 5 காலம், செய்தி மூன்று காலம் அகலமான படத்துடன் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி, தினமலரின் 9ஆம் பக்கத்தில் 4 காலம் செய்தியாக 2 காலம் படத்துடன் வெளியாகியுள்ளது.

தினத் தந்தியும், தினகரனும் இந்த நிகழ்வைச் செய்திக்குரிய நிகழ்வாகக் கருதவில்லை.

தினமலரும் தினகரனும் தலித் அரசியல் இயக்கங்களை நெகடிவ் ஆகச் சித்தரிக்க முயன்று வருகின்றனவோ என்ற ஐயம் எங்களிடம் தோன்றியிருக்கிறது. ஒரு சாலை மறியல் நிகழ்வு என்பது, 5 காலம் செய்தி போடும் அளவிற்கு முக்கியமானத என்ற கேள்வி எழுகிறது. இதையே வேறொரு கட்சி நிறைவேற்றியிருந்தால், இத்தனை தூரம் பெரிது படுத்தப் பட்டிருக்குமா என்றும் சிந்திக்க வெண்டியுள்ளது.

தவிர, இன்று, மேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துகளைக் கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டணை உயர் நீதி மன்றத்தால் உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

இந்த 2 செய்திகளிலும் பயன்படுத்தப் பட்ட மொழியும் ஆய்வுக்குரியது. இந்த 2 செய்திகளின் நடையும் கவனிக்க வேண்டியதாக உள்ளது.

இன்று வெளியான செய்திகளை ஒவ்வொரு நாளிதழ் வாரியாகப் பார்க்கலாம்.

தினமணி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்றைய நாளிதழ்கள் யாவுமே வெளியிட்டுள்ளன. கிராமங்களில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச மனை, படித்து வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ 300, என்ற தலைப்புடன் 7 காலம் அகலத்திற்கு, தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
நிபந்தனை ஏதுமின்றி 10 கிலோ இலவச அரிசி : ஜெ என்ற தலைப்புடனும், விலை கொடுத்து 10 கிலோ அரிசி வாங்க கட்டாயமில்லை என்ற துணைத்தலைப்புடனும் இன்றைய தினமணியின் லீட்ஸ்டோரி அமைந்துள்ளது.

தோல்வி பயத்தால் கூட்டணி ஆட்சிக்கு தயார் என்கிறார் கருணாநிதி, என்ற திருமாவளவனின் சென்னை பேச்சு, தினமணியின் 2 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்வது மூட நம்பிக்கையின் வெளிப்பாடு, என்ற வீரமணியின் குற்றச்சாட்டு, 2 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இவை தவிர, வத்தலக்குண்டு நகரில் ஜெயலலிதாவின் பேச்சு, வைகோவின் வேலூர் பேச்சு, டாக்டர் ராமதாசின் கும்பகோணம் பேச்சு, டாக்டர் ராமதாசின் பேட்டி, விஜயகாந்தின் சேலம் நகரப் பேச்சுக்களும் இடம் பெற்றுள்ளன.

தினகரன

மேலவளவு முருகேசனின் கொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப் பட்டிருக்கும் செய்தி தினகரனில் முதல் பக்கத்தில் 8 காலங்களில் பெரிய செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது.

சரத் குமாருக்கு எதிர்ப்பு.. உண்மையில் நடப்பது என்ன?

சரத்குமார் உருவ பொம்மைக்கு செருப்படி, ரசிகர்கள் ஆத்திரம் என்ற செய்தி தினகரனில் 5 காலம் அளவிற்கு பெரிய செய்தியாக படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. தினகரனில் சரத் குமாருக்கு எதிரான செய்திகளுக்கு, அவர் திமுகவில் இருந்து வெளியேறிய பின்பு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே சரத் குமார் ரசிகர்கள் உண்மையில் கொதித்துப் போயிருக்கிறார்களா என்று அறிய வேண்டுமானால், பிற நாளிதழ்களிலும் வரும் செய்தியை வைத்து ஒரு சிறிய அளவிலான ஆய்வு செய்தே ஒரு வாசகர், உண்மை நிலவரத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

ஆனால், தினகரன் தவிர வேறு எந்தத் தமிழ் நாளிதழிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவே செய்தியைக் காண முடியவில்லை. சமாதானபுரம், பாவூர்ச்சத்திரம் என்ற இரண்டு பகுதிகளைச் சேர்ந்த நாட்டாமை சரத் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு செய்ததாக இந்தச் செய்தி கூறுகின்றது. இது தொடர்பான படத்திலும் 10 பேர் சேர்ந்து ஒரு உருவ பொம்மையை ஏதோ செய்வது போலக் காட்டப் பட்டுள்ளது.

தமிழகத்தையே ஆண்டி மடமாக்க விரும்புகிறார் ஜெயலலிதா, என்ற தலைப்புடன் வெளி வந்திருக்கும் தினகரனில் இன்றைய சிறப்புப் பேட்டியில் இடம் பெற்றிருப்பவர் பா ஜ கவின் மாநிலத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.

தயாநிதி மாறனின் பேச்சைக் கேட்கும் பிரமாண்ட கூட்டத்தின் படமும், 5 காலம் அளவிலான செய்தியும் இன்றைய தினகரனின் கடைசிப் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளன.


தினத் தந்தி:

20 கிலோ அரிசி வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரேஷன் கடைகளில் நிபந்தனை இன்றி 10 கிலோ இலவச அரிசி, தேர்தல் வாக்குறுதி பற்றி ஜெயலலிதா விளக்கம் என்பது தான் இன்றைய தினத் தந்தியின் லீட் ஸ்டோரியாகும்.
தினகரன் சரத்குமாருக்கு எதிர்ப்பு என்று பிரச்சாரம் செய்து வர, தினத் தந்தியோ சர்த்குமார் ரசிகர் மன்றங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இதில் எது உண்மை என்று எளிதில் கண்டு பிடித்து விட முடியாது. [நெல்லையில் சரத் குமார் ரசிகர் மன்றத்தினர் தேர்தல் பிரச்சாரம் தொடன்கினர் என்ற செய்தி தினத் தந்தியில் 4 ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியாகியுள்ளது. ]

கட்சிகள் அள்ளி வழங்கும் வாக்குறுதிகள், தமிழகத்தின் புதிய அரசுக்கு காத்திருக்கும் கூடுதல் செலவு, என்ற தலைப்பில், எகனாமிக் டைம்சின் கட்டுரையை மொழி பெயர்த்து தினத் தந்தி 6 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தினமலர்

எல்லோருக்கும் கூட்டம் கூடுவது எதனால்?

நாமக்கல் நகரில் தே மு தி க தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசும் பேச்சு, இன்றைய தினமலரில் 6 காலங்களில் வெளியிடப் பட்டுள்ளது. இன்று தினகரனில் கடைசிப் பக்கத்தில் தயாநிதி மாறனுக்கு பிரமாண்டமான கூட்டம் கூடியிருப்பதாக ஒரு ப்டம் வெளியாகியுள்ளது. இன்று தினத் தந்தியின் முதல் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்குக் கூடியுள்ள பிரமாண்டமான கூட்டத்தின் படம் வெளியிடப் பட்டுள்ளது. கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும் லட்சக் கணக்கான மக்களின் பிரமாண்டமான கூட்டம் பற்றி சில தினங்களாகவே தினகரனில் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில், யாருக்கு யாரை விட கூட்டம் அதிகமாகக் கூடுகிறது என்பதை எந்தப் பத்த்ரிகையாளரும் ஒப்பிட்டுச் சொல்வதில்லை. 4 பத்திரிகைகளையும் வாசிக்கும் ஒருவருக்கு, எல்லோருக்குமே பிரமாண்டமாகக் கூட்டம் கூடுவதை உறுதி செய்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் மக்கள் தொகை பெருகி விட்டது. வேடிக்கை பார்ப்பதில் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது. எங்கள் ஊருக்கு இன்று கருணாநிதி வந்து மாலையில் பேசுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. அந்தப் பகுதி அலங்கரிக்கப் படுவதைப் பார்த்த போது, நாமும் அங்கே போய் வேடிக்கை பார்த்தாலென்ன என்ற எண்ணம் எங்களில் பலருக்கு ஏற்பட்டது. கூட்டம் கூடுவதைப் பார்த்து எத்தனை பேர் ஏமாறப் போகிறர்கள் என்று தெரியவில்லை.

ஜா. தினேஷ் அருமை நாயகம்
ஊடக விமர்சனக் குழுவின் சார்பில்

2 comments:

Anonymous said...

what are you trying to say? whats your point here?. I am not able to conculde anything from this article.

Arulselvan said...

இதில் என்ன புரியவில்லை என்று எங்களுக்குத் தெரியவில்லை. தலித் இயக்கங்களைத் தொடர்ந்து தமிழக பத்திரிகைகள் புறக்கணித்து வருகின்றன என்ற குற்றச் சாட்டை நிரூபிக்கும் வகையில் பல ஆதாரங்களை இந்த ஆய்வில் கண்டறிந்து வெளியிட்டு வருகிறோம். குறிப்பாக, நடுநிலை நாளிதழ் போலத் தோற்றமளிக்கும் தினம்ணி, முழுமையான நடுநிலை நாளிதழ் அல்ல என்பதே எங்களின் கருத்து.
ஜெயலலிதா, பிரச்சாரத்திற்குச் செல்லும் ஒவ்வொரு வேளையும், போக்குவரத்து நிறுத்தப் பட்டு, பொது ஜனங்கள் மிகுந்த இடையூறுக்கு ஆளானதை நாங்கள் எங்கள் பகுதியிலேயே நேரடியாகக் கண்டோம்.
ஒரு அரசியல் இயக்கம் நடத்திய ஒரு போராட்டத்தினால் முக்கால் மணி நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது என்பதற்கு இத்தனை பெரிய செய்தியை வெளியிட்டிருக்க வேண்டுமா என்பதும், உயர் ஜாதியினர் நடத்தும் அல்லது ஆசிரிய பொறுப்பில் இருக்கும், தினமலர், தினமணியிலும் மட்டுமே இந்த செய்தி வந்திருக்கிறது. தொடர்ந்து புதிய தமிழகத்தை ஒரு வன்முறைக் கட்சியாகச் சித்தரிக்கும் போக்கு காணப் படுகிறது என்பதே நாங்கள் சொல்ல வந்த செய்தி.
நன்றி
ஊடக விமர்சனக் குழுவினர்