Saturday, April 15, 2006

வானொலி இல்லாத கடைசித் தேர்தல்

தமிழகத்தில் ஒலிபரப்பாகி வரும் வானொலிகள் எது வுமே இந்தத் தேர்தலில் முழுமையாகப் பங்கேற்கவில்லை. என்றாலும், வானொலியின் முழுமையான பங்கேற்பு இல்லாமல் நடக்கும் கடைசிப் பொதுத் தேர்தல் இதுவாகத் தான் இருக்கும் என்று கூற முடியும்.

அகில இந்திய வானொலி நிலையங்கள் தமிழகத் தேர்தலில் இருந்து தங்களை முழுதும் விலக்கிக் கொண்டு. பாகிஸ்தானிலோ, பூட்டானிலோ, அல்லது நமது நாட்டுடன் தொடர்பில்லாத ஒரு தேசத்திலோ இருந்து இயங்குவது போல ஒதுங்கி நிற்கின்றன. மிகப் பெரும் ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் இருந்து எப்படி அகில இந்திய வானொலி ஒதுங்கிக் கொள்ள முடியும்?

காலையில் 645 மணிக்கு ஒலிபரப்பாகும் செய்திகளில் ஒரு சில செய்திகள் தேர்தல் தொடர்பாக இடம் பெற்று வருகிறது. அடுத்து 715 டில்லி செய்தி அறிக்கை. பிற்பகலில் 12.40 தமிழ் செய்தி அறிக்கை. 1.45 மாநில தமிழ் செய்தி அறிக்கை. மாலையில் 630 செய்தி அறிக்கை என்று ஒரு நாளைக்கு மொத்தம் 50 நிமிடங்களே தமிழில் செய்திகள் ஒலிபரப்பாக்கின்றன. இதில் எல்லா செய்திகளுடனும் தேர்தல் செய்திகளும் இடம் பெறுகின்றன. இனி ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியும் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்று தினமும் 10, 20 நிமிடங்கள் வரை ஒதுக்கப் படும். அவ்வளவுதான்.
திருநெல்வேலிக்கு சில தினங்கள் முன்பு ஜெயலலிதா வந்தார். உள்ளூர் பத்திரிகைகள் எல்லாம் அவர் பேச்சை விரிவாக படத்துடன் வெளியிட்டன. ஏராளமாக விளம்பரங்களும் வெளியிடப் பட்டன. ஒரு பெரிய அரசியல் தலைவர் மாநகருக்கு வருகிறார் என்பது இங்குள்ள ஊடகங்களுக்கு கொண்டாட்டம், திருவிழா. ஆனால், திருநெல்வேலி வானொலி நிலையமோ, எதுவுமே நடக்காதது போல தன் வழக்கமான நிகழ்ச்சிகளை மட்டுமே ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. இதற்கு இங்குள்ள பொறுப்பாளர்களே காரணம் என்று நாங்கள் சொல்லவரவில்லை. அகில இந்திய வானொலியின் தேசிய அளவிலான கொள்கை முடிவுகள், மக்கள் விரோத மனப்பான்மை ஆகியவையே காரணம்.

விரைவில் தனியார் பண்பலை ஒலிபரப்புகள் செய்தியை ஒலிபரப்ப அனுமதி பெற்று விடும். அவ்வாறு அனுமதி பெற்றதும், வானொலி நிலையங்கள் தமது அரசியல் சார்பு நிலைக்கேற்ப தலைவர்களின் பேச்சுக்களை நேரடியாக ஒலிபரப்பு செய்யத் தான் போகின்றன. அதன் பின்பு, இந்திய வானொலியும் ஏதாவது செய்யத் தான் போகிறது. அந்தச் சூழலில், வானொலி தேர்தலில் முழு வீச்சில் பங்கேற்றுத் தான் தீர வேண்டும். ஏற்கனவே சன் நியூஸ் தொலைக்காட்சி, தினமும் இரவில் திமுக தலைவர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட உரைகள் நேரடியாக ஒலிபரப்பப் படுவது ஒரு முக்கிய வளர்ச்சியாகத் தான் கருதப் படும்.

13 4 2006 அன்று புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளாக திருநெல்வேலியில் உள்ள அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சில நிகழ்வுகளைக் கவனியுங்கள்:

காலை 830 மணிக்கௌ நடிடக் மனோரமாவின் சிறப்பு நேர்முகம்
பகல் 11 மணிக்கு பின்னணிப் பாடகர் மாணிக்க விநாகத்துடன் ஒரு சிறப்பு நேர்முகம்

பிற்பகல் ஒரு மணிக்கு பரத்வாஜுடன் நேர்முகம்

பிற்பகல் 3 மணிக்கு விக்ரம் நேர்முகம்

இரவு 8 மணிக்கு தேவயானியின் நேர்முகம்

இரவு 930 க்கு பா விஜய் நேர்முகம்

காலை முதல் இரவு 10 மணி வரை இடைப்பட்ட நேரங்கள் பலவற்றில் திரையிசைப் பாடல்கள் ஒலிபரப்பாகும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.

இவற்றைப் பார்க்கும் போது இவை யாவும் சூரியன் எப் எம் மில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் போலத் தான் தோன்றும்.. இவை யாவுமே இந்திய அரசுக்குச் சொந்தமான, மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அகில இந்திய வானொலியில், ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் அறிவிக்கப் பட்டு வேட்பு மனு தொடங்கிய நாளில், ஒலிபரப்பான நிகழ்ச்சிகளாகும்.
இது நியாயமா? தர்மமா? இது அறத்தை மீறிய செயல் ஆகாதா? எப்படி இவ்வாறு வெட்கமில்லாமல் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ய முடிகிறது என்று எண்ணியபோது எங்களுக்குக் கோபம்தான் வந்தது.

இந்தக் குறிப்புடன் இன்றைய நாளிதழ்களை அலசுவோம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் என் வரதராஜனின் சிறப்புப் பேட்டி, இன்றைய தி இந்துவில், 4 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. தி இந்து, தினம் ஒரு தலைவரிடம் பேட்டி கண்டு வெளியிட்டு வருகிறது. பேட்டி காணப் படும் நபர்களைத் தெரிவு செய்வதிலும், கேட்கப் படும் கேள்விகளும், அவற்றை வெளியிடும் நேர்மையும், தமிழ் நாளிதழ்களில் தினமணியைத் தவிர பிற எதிலும் காண இயலாதவை.

ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா இன்று மனு தாக்கல்
தினமணியின் அறிக்கையிடல் பிற 3 நாளிதழ்களை விட நன்று
ஆண்டிப்பட்டியில் ஜெ இன்று வேட்பு மனு தாக்கல் என்ற செய்தி இன்று பல நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது. தினமணி இந்தச் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின் கடைசிப் பத்தியில், கருணாநிதி, ஏப்ரல் 17 அன்று சேப்பாக்கத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறார் என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது. மனுத் தாக்கல் ஏப்ரல் 20 ஆம் நாளில் நிறைவடைவதையும் இந்தச் செய்தி குறிப்பிடுகிறது. தினத் தந்தியும், தினகரனும் இதே செய்தியை லீட் ஸ்டோரியாக்கியுள்ளன. என்றாலும், தினமணி தந்துள்ள கருணாநிதி பற்றிய குறிப்புகள் அந்த 2 இதழ்களிலும் இடம் பெறவில்லை. எனினும், தினத் தந்தி, ஆண்டிபட்டி தேர்தல் அதிகாரி யார் என்பது பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறிட்த்கும் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளது. தினமலர் இந்தச் செய்தியை முதல் பக்க பெட்டிச் செய்தியாக வெளியிட்டுள்ளது தினகரன், தினத் தந்தி செய்திகளுக்கும், தினமலர் செய்திக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. என்றாலும், ஆண்டிப் பட்டியில் இரண்டாம் முறையாக ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்ற கூடுதல் தகவலியும், தினமலர் வெளியிட்டுள்ளது.

ஆதாரமில்லாத தினமலரின் லீட் ஸ்டோரி

15 4 2006 சனிக்கிழமைல் தினமலர் நாளிதழின் லீட் ஸ்டோரியாக, கருத்துக் கணிப்பு முடிவுகளால் அதிமுக, திமுக, கலக்கம், பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. ஒரு செய்தி என்பதற்கு உரிய எந்த உட்கூறும் இந்தச் செய்தியில் காணப் படவில்லை.
2 அணிகளும் தி இந்து நாளிதழின் கருத்துக் கணிப்பைப் பார்த்துக் கலக்கம் அடைந்திருப்பதாகக் கூறும் இந்தச் செய்தி இதற்கு ஆதாரமாக எதையும் முன் வைக்கவில்லை. தவிர, 8 பாராக்களில் விவரிக்கப் பட்டுள்ள இந்தச் செய்தியில், 7 பாராக்கள், இதுவரை தேர்தல் களத்தில் என்னென்ன நடந்துள்ள என்ற முன்கதைச் சுருக்கத்தைத் தான் வெளியிட்டிருக்கிறது.
பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்று சொல்லும் இந்தச் செய்தி, இதற்கும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. கலக்கம் அடைந்ததாகக் கூறுவதோ, பிரச்சாரம் தீவிரப்படுத்தப் பட இருப்பதாகக் கூறுவதோ, தினமலர் "சிறப்பு நிருபரின்", கற்பனையன்றி வேறில்லை என்ற முடிவுக்கு ஒரு வாசகன் எளிதில் வந்து விடும் ஆபத்து இதில் இருக்கிறது.

தலித் அரசியலைத் தவறாக அணுகுவதில் தினமணியும் விதிவிலக்கல்ல

விடுதலைச் சிறுத்தைகள் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்வுகளில் நடந்து கொண்ட விதம் இன்று தினமலரிலும், தினமணியிலும் செய்திகள் இடம் பெற்றுள்ளன. தலித் அரசியல் இயக்கங்கள் பற்றிய செய்திகள் இது போன்ற பிரச்னை ஏற்படும் வேளைகளிலும், திமுகவையோ அதிமுகவையோ ஆதரித்தோ, எதிர்த்தோ பேசும்போது, அந்தந்த சார்புடைய பத்திரிகைகள், தத்தமது வசதிக்கேற்ப செய்திகளை வெளியிடுகின்றன. இதில் தினமணி உட்ப. 4 நாளிதழ்களுமே ஒரே விதமாகத் தான் நடந்து கொள்கின்றன.

திருமாவளவனின் பெயரை சரியாக வெளிய மறுக்கும் தினமலர்
திருமாவளவனின் பேச்சை தினமலர் 6ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "அதிமுகவுக்கு வரும் கூட்டத்தால், கருணாநிதி கலக்கம்: திருமாவளவன் என்ற தலைப்பில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. திருமாவளவன் பெயரை தொல். திருமாவளவன் என்று எழுதுவது தான் சரியாகும். ஆனால், தினமலர் செய்தியில் திருமாவளவன் என்றே குறிப்பிடப் படுகிறது. தினமணி தொல் திருமாவளவன் என்றே ஒவ்வொரு முறையும் அவர் பெயரை வெளியிடுகிறது. பிற நாளிதழ்கள் எவ்வாறு அவர் பெயரை வெளியிட்டு வருகின்றன என்பதை இனி வரும் நாட்களில் கவனிப்போம்.

ஒரு கருத்துக் கணிப்பு : இரண்டு மாறுபட்ட பார்வைகள்:

தி இந்து நாளிதழும், சி என் என் - ஐ பி என் தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு குறித்து தினமலர், "ஜெயலலிதாவே முந்துகிறார்", என்ற தலைப்பில் 8ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. தினகரன், "மதிமுகவினர் பாதி பேர் திமுகவுக்கு வாக்கு -இந்து கருத்துக் கணிப்பில் தகவல்", என்ற தலைப்பில் 16 ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசியத் தலைவரது பேச்சை இருட்டடிப்பு செய்யும் 3 முக்கிய பத்திரிகைகள்

இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மதுரையில், தே மு கூ வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பேச்சு, தினமணியில் 4 ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியை பிற 3 நாளிதழ்களும் இருட்டடிப்புச் செய்திருக்கின்றன. ஒரு தேசியக் கட்சியின் தேசியத் தலைவரது தேர்தல் பிரச்சார உரையை 3 முக்கிய தமிழ் நாளிதழ்கள் வெளியிட மறுப்பதை எப்படி ஆரோக்கியமான ஒரு செயலாகக் கொள்வது?

ஸ்டாலின் பேச்சுக்கு 4 நாளிதழ்களுமே முக்கியத்துவம்:

15 4 2006 நாளிட்ட நாளிதழ்களில் ஸ்டாலினின் தென் மாவட்டத்துப் பிரச்சார உரைகள் விரிவாக இடம் பெற்றுள்ளன. 4 நாளித்ழ்களும் ஸ்டாலின் பேச்சை விரிவாகவே வெளியிட்டு வருகின்றன. இன்று 4 நாளிதழ்களிலும் இடம் பெற்றுள்ள ஸ்டாலினின் பேச்சுக்களின் பட்டியலைப் பாருங்கள்:
மு க ஸ்டாலின் ஆலங்குளத்தில் "கேபிள் டிவியுடன் இலவச கலர் டிவி: மு க ஸ்டாலின் பேச்சு", என்ற தலைப்பில் தினமணியில் 4 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. கோவில்பட்டியில் பேசிய பேச்சு, தினமணியின் 5 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

மேலப் பாளைய பேச்சு, தினமணியின் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் மாலை ராஜாவை ஆதரித்துப் பேசிய பேச்சு, தினமணியில் 7ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

மாலை ராஜாவை ஆதரித்துப் பேசிய பேச்சு தினகரன் ப.3

அரியலூரில் வைகோ பிரச்சாரம், தினத் தந்தி ப.9

ஸ்டாலின் ஓட்டப் பிடாரம் பேச்சு, தினமலர், ப.9

நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம், தினமலர், ப.14

நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலின் பிரச்சாரம், தினத் தந்தி ப.9

ஸ்டாலின் ஓட்டப் பிடாரம் பேச்சு, தினமலர், ப.9

நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம், தினமலர், ப.14

ஸ்டாலினுக்கு அடுத்து மிக முக்கியத்துவம் தரப்பட்டிருப்பவர் கருணாநிதி. அதை அடுத்து ஜெயலலிதாவின் பேச்சுக்களும், வைகோவின் பேச்சுக்களும் இடம் பெற்றுள்ளன. தவிர, பல தரப்புத் தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவைகளில் பெரும்பாலனவற்றைப் பதிவு செய்ய வெண்டும் என்ற முனைப்பு தினமணியிடம் மட்டுமே தெரிகிறது. வெளியான செய்திகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது இந்த முடிவுக்கு வரமுடியும். இதோ இன்று இடம் பெற்றுள்ள தலைவர்களது உரைகள் பற்றிய பட்டியல்:

கருணாநிதி

நாகை மாவட்டம், கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய இடங்களில் திமுக தலைவர் கருணாநிதி பேசிய பேச்சுக்கள் தினமணியில் 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
சிதம்பரத்தில் கருணாநிதி பேச்சு, தினமணி ப.9
சிதம்பரத்தில் கருணாநிதி பேச்சு, தினகர்ன் ப. 16 (8 காலம் வண்ணப் படத்துடன் )
கருணாநிதி கடலூர் பேச்சு தினகரன் 7 ஆம் பக்கம்
கருணாநிதி கடலூர் பிரச்சாரம், தினத் தந்தி ப.4
கருணாநிதி சிதம்பரத்தில் பேசியது, தினமலர். ப.16

வைகோ
வைகோ அரியலூரில் பேசிய பேச்சு தினமணியில் 5ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
வைகோ நாளை முதல் சென்னையில் பிரச்சாரம், தினத் தந்தி. ப. 3
வைகோ கடலூர்ப் பேச்சு, , தினமலர் ப.16

ஜெயலலிதா
தேவாரத்தில் ஜெயலலிதா பிரச்சாரம், தினத் தந்தி ப.8
சின்னமனூரில் ஜெயலலிதா பேச்சு தினத் தந்தி ப.18

பிற தலைவர்களது பேச்சுக்கள்:
வீரமனி பேட்டி, தினகரன் 7ஆம் பக்கம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் சிறப்புப் பேட்டி, தினகரனில் 8 ஆம் பக்கம்
விஜயகாந்த கோவில் பட்டி பேச்சு, தினகரன், ப.2
மைலாப்பூரில் ப சிதம்பரம் பேச்சு, தினமணியில் 8ஆம் பக்கம்
புதுச்சேரியில் ராம்தாஸ் தினமணிக்கு சிறப்புப் பேட்டி,தினமணி ப.8
ராமநாதபுரத்தைல் கார்த்திக் பேச்சு, தினமணி ப. 8
ஜனதாக் கட்சித் தேர்தல் அறிக்கை தினமணியில் 7ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை, தினத் தந்தியில், ப.3
சுப்ரமணியசாமி பேட்டி தினகரன் 7ஆம் பக்கம்
பா ஜ க தலைவர் சி பி ராதாகிருஷ்ணனில் சிறப்புப் பேட்டி, தினமணியில் 9ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூரில் திருமாவளவன் பேச்சு, தினத் தந்தி ப.18
பாஜகவின் 3 வது பட்டியல் வெளியாகியிருப்பது பற்றிய செய்திகள் பரவலாக இடம் பெற்றுள்ளன. அம்பேத்கரின் பிறந்த நாள் நிகழ்வ்யுகளும்., வை பாலசுந்தரத்தின் பேட்டியும் இன்றைய இதழ்களில் இடம் பெற்றுள்ளன.

நலிந்த நிலையில் தமிழ் இதழியல்

செய்திகளைத் துல்லியமாக எழுத வேண்டும். செய்திக்கான ஆதாரங்களை வாசகருக்குத் தெரியப் படுத்துவதன் மூலம் வாசகனிடம் நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதெல்லாம் இதழியலின் பால பாடங்களாகச் சொல்லித் தரப் படுகிறது. ஆனால், தமிழ் நாளிதழ்களில் எதுவுமே, இந்த அடிப்படை விதிகளை, முழு ஈடுபாட்டுடன் பின் பற்றவில்லையோ என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஒரு சான்றைப் பாருங்கள்:

பிரதமர் மன்மோகன் சிங் சுகவீனத்தால் 13 4 2006 அன்று நடைபெற வேண்டிய அமைச்சரவைக் கூட்டம் ரத்து என்ற செய்தி 14 4 2006 நாளிட்ட தினமணியின் முதல் பக்கச் செய்தியாக வெளிவந்துள்ளது. தினமணியை ஒரு தரமான நாளிதழ் என்றுப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
தினமணியில் வெளியான செய்தியைக் கீழே தருகிறோம்:

பிரதமர் சுகவீனம்: அமைச்சரவை கூட்டம் ரத்து

புதுதில்லி, ஏப் 14: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வியாழக் கிழமை சிறிது உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
அதனால், மலையில் நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டமும், இந்தியா வந்துள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்களுடனான சந்திப்பும் ரத்து செய்யப் பட்டது.
தினமணி, 14 04 2006 திருநெல்வேலி பதிப்பு பக்கம் 1

இயல்பாகவே, பிரதமருக்கு என்ன உடல் நலக் குறைவு ஏற்பட்டது, இந்தத் தகவலைத் தெரிவித்தது யார் என்ற கேள்விகள் எழுகின்றன.

என்னதான் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காக தி இந்து நாளிதழ் செய்தியைப் பார்த்தோம். அதில் எங்களுக்கான விடை கிடைத்தது. தி இந்து நாளிதழின் செய்தியையும் அப்படியே தருகிறோம்:

Prime Minister down with the “mild flu”
Special Correspondent


New Delhi: Prime Minister Manmohan Singh was down with “mild flue” and al lhis official engagements for Thursday
evening were cancelled, according to Sanjay Baru, media adviser to the Prime Minister. A scheduled Cabinet meeting was also cancelled. According to Mr Baru, Friday being a “Government holiday”, the Prime Minster hopes to get
three days of complete rest.

UNI reports:
Official sources pointed out that the Prime Minister had chaired a meeting of the Chief Ministers of the States affected by naxalite violence. He sat through the proceedings for over two hours, the sources said. Earlier, he hosted breakfast for the six Chielf
Ministers and held discussions.


The Hindu April 14 2006, Madurai Edition , p.1.

இந்தச் செய்தி தேர்தலுடன் தொடர்புடையதல்ல என்றாலும், செய்திகளை வெளியிடுவதில் தொழில் முறை நேர்த்தி தினமணியில் திருப்திகரமாக இல்லை
என்பதையே இது காட்டுகிறது, என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கான ஒரு முயற்சியே ஆகும்.
தினமலர் இந்தச் செய்தி இடம் பெற்றிருக்கிறது. என்றாலும் தினமணியின் செய்திக்கும் தினமலர் செய்திக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. தினத் தந்தியிலும், தினகரனிலும் இந்தச் செய்தியைக் காண இயலவில்லை. பொதுவாகவே தமிழ் நாளிதழ்கள், செய்திகளை வெளியிடுவதில் தொழில்முறை நேர்த்திக் குறைந்ததாகவே இருக்கின்றன, என்று கருத இடமிருக்கிறது.

இனி 14 04 2006 வெள்ளிக்கிழமை வெளியான நாளிதழ்களை அலசுவோம்:


தினகரன்:


ஸ்டாலின் சாத்தான்குளத்தில் பேசிய பேச்சை முதல் பக்கத்தில் (சுமார் கால் பக்கம்) வெளியிட்டுள்ளது. "மதமாற்ற தடைச் சட்டம் முழுமையாக ரத்து: ஸ்டாலின் உறுதி", என்பது இச்செய்திக்கான தலைப்பு. மூன்றாம் பக்கத்திலும் ஸ்டாலின் ராதாபுரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து விஸ்வனாத புரத்தில் பேசிய, "பனைத் தொழிலாளர்களுக்கு நல வாரியம்: ஸ்டாலின் உறுதி", என்ற செய்தி, 5 பத்தி அகல வண்ணப் படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது.

முதன் முறையாக, தேசிய முற்போக்குக் கூட்டணியைச் சேராதா ஒரு கட்சியின் தலைவரான தொல் திருமாவளவனின் பேட்டியை, தினகரன், 8ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "வண்ணமயில் ஆகாது வான்கோழி: காணாமல் போவார் விஜயகாந்", என்பது இந்த பேட்டிக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு. பேட்டியின் பெரும்பகுதி, மாற்றுக் கருத்துக்கும் இடம் தர வேண்டும் என்ற நோக்குடன் இடம் பெற்றதாகக் கருத முடியாது, என்பதையே உறுதிப்படுத்துகிறது. விஜயகாந் குறித்து விமர்சனக் கருத்துக்களை வெளிப் படுத்தவும், திமுகவின் 2 ஏக்கர் நிலம் தரும் திட்டம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களைப் பெறவும் இந்த பேட்டி பயன் படுத்தப் பட்டிருக்கிறது. தினகரனின் பக்கம் சாராத தன்மையுடன் இந்த பேட்டியில் இடம் பெறச் செய்திருப்பதாகக் கருத முடியாது.

தவிர, கருணாநிதியின் விழுப்புரத்து பிரச்சாரப் பொத்க்கூட்ட உரை 7 ஆம் பக்கத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளது. தி மு க தலைவர் கருணாநிதியின் அறிக்கை "50 லட்சம் தரிசு நில விவகாரம்: ஆதாரம் காட்டியதும் மாற்றுகிறார் ஜெயலலிதா. கருணாநிதி அறிக்கை", என்ற தலைப்புடன் 6 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தினத்தந்தி

"அதிமுக- திமுகவுக்கு மாற்றாக எனக்கு வாய்ப்பு தாருன்க்கள்", என்று தூத்துக் குடியில் விஜயகாந் பேசிய பேச்சு, தினத் தந்தியின் 4 ஆம் பக்கத்தில் 3 காலம் படத்துடன் வெளியாகியுள்ளது.


முல்லைப்பெரியாறு அணையில், 152 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்க: ஜெயலலிதா உறுதி என்ற செய்தி, 5 ஆம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.

திமுக கூட்டணியில் கருணாநிதியின் பேச்சுக்கு அடுத்த படியாக, ஸ்டாலினின் பேச்சை தினத்தந்தி விரிவாக வெளியிட்டு வருகிறது. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு க ஸ்டாலின் பிரசாரம்- "ஆட்சிக்கு வந்தால் பனைத் தொழிலாளர் வாரியத்தை விரிவு படுத்தி சலுகைகளைக் கொடுப்போம்", என்ற செய்தி படத்துடன், 8 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தமிழக தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு- வேட்புமனு தாக்கல் தொடங்கியது . முதல் நாளில் 81 பேர் மனுதாக்கல் செய்தனர் என்பது தினத் தந்தியின் லீட் ஸ்டோரியாக வெளியிடப் பட்டுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு மலர் மற்றும் சிறுவர் தங்கமலர் இலவச புத்தகத்துடன் வெள்ளிமலர் 34 பக்கம் 500 காசு என்ற அறிவிப்புடன் தினத் தந்தி இன்று 5ரூபாய்க்கு விற்கப் பட்டதால், திருநெல்வேலி மாநகரின் பல கடைகளில் தினத் தந்தி மாலை வரை தேங்கிக் கிடந்ததைக் கண்டோம். தந்தியின் விலை இன்று அதிகம் என்பதால், தினகரன், வழக்கத்திற்கு முன்பாகவே விற்றுத் தீர்ந்து விட்டது, என்று பாளையங்கோட்டை கடைக்காரர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

தினமணி


கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா பாண்டியன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி, திஅன்மணியின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. "புதிய கட்சிகள், நடிகர்கள் வருகையால் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு பாதிக்காது", என்ற தலைப்புடன் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.


"72 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவானால் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும்', என்ற தலைப்புடன் விஜயகாந் சிவகங்கையில் பேசிய பேச்சு, தினமணியின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

பெரியாறு அணை 152 அடியாக உயர்த்தப் படும் என்று சமயநல்லூரில் ஜெயலலிதா பேசிய பேச்சும், நடிகர் சர்த்குமார் விலகலால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை என்ற மு க ஸ்டாலினின் பேட்டியும், புதன் கிழமை, தூட்துக் குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் ஜெயலலிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியும், [அரசு நிலம் விவகாரத்தில் மக்களைத் திசை திருப்ப கருணாநிதி முயற்சி: ஜெயலலிதா குற்றச் சாட்டு என்ற தலைப்புடன்] 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளன.
வள்ளியூரில் மு க ஸ்டாலின் பேச்சும் (சட்டப் பேரவைத் தேர்தல் மூலம் அதிமுக ஆட்சியை அகற்றுங்கள்), சிதம்பரத்தில் வைகோவின் பேச்சும் (வெள்ள நிவாரணம்: மத்திய அரசு மீது வைகோ புகார்), தினமணியின் 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளன.

“2 ஏக்கர் நில விவகாரம்: ஜெ புதிய கருத்துக்கு கருணாநிதி விளக்கம்” என்ற தலைப்புடன் கருணாநிதியின் அறிக்கை 9ஆம் பக்கத்திலும், விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசிய பேச்சு, 9ஆம் பக்கத்திலும் [திமுகவின் தேர்தல் வெற்றி இப்போதே நிச்சயிக்கப் பட்டுள்ளது: மு கருணாநிதி] வெளியாகியுள்ளன.

தினமலர்:

இரட்டை விரலைக் காட்ட ஜெக்கு திடீர் பயம்: கருணாநிதி என்ற தலைப்புடன், கருணாநிதியின் பேச்சை தினமலர் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் விறுறுவிறுப்புடன் மனு தாக்கல் ஆரம்பம் என்பது தினமலரின் லீட் ஸ்டோரியாகும்.
கடலூர் மாவட்டம் சேத்க்டியாத் தோப்பில் வைகோ பேசிய பேச்சு, 6ஆம் பக்கத்திலும் ["வெள்ள நிவாரண நிதியை தடுத்தவர் கருணாநிதி - தேர்தல் பிரசாரத்தில் வைகோ கடும் குற்றச்சாட்டு என்ற தலைப்புடன்], மயிலாடுதுறையில் வைகோ பேசிய பேச்சு 8 ஆம் பக்கத்திலும் [ கருணாநிதி அஸ்திரத்தின் அர்த்தம் தெரியும்: மயிலாடுதுறையில் வைகோ ஆவேசம்] வெளியாகியுள்ளன.

60 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு வழங்கப் படும், மேலூரில் ஜெயலலிதா பேச்சு என்ற செய்தி தினமலரில் 4ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்டாலின் ராதாபுரத்தில் பேசிய பேச்சு தினமலர் சப்ளிமென்டில் VII ஆம் பக்கத்திலும் "திமுக ஆட்சிக்கு வந்தால் பனைத் தொழிலாளர் நலவாரியம்: ஸ்டாலின் உறுதி", என்ற தலைப்புடன் வெளி வந்துள்ளது.
சரத்குமார் விலகியதால் திமுகவிற்கு பாதிப்பில்லை, ஸ்டாலின் பரபரப்பு பேட்டி என்ற செய்தி தினமலரின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவுக்கு முட்டுக் கட்டை போட்டவர் ஜெயலலிதா, ஸ்டாலின் ஆவேசம் என்ற செய்தி, தினமலரின் 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
மதமாற தடை சட்டம் ரத்து செய்யப் படவில்லை, கருணாநிதி திடுக் தகவல் என்ற செய்தி தினமலரின் சப்ளிமென்டில் II ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபி தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பை ஏப்ரல் 1முதல் 7 வரையான நாட்களில், மாநிலத்தின் பல பகுதிகளில் தி இந்து நாளிதழும் சி என் என் - ஐ பி என் தொலைக் காட்சிகளின் சார்பில் நடத்தப் பட்டு முடிவுகள் 14 4 2006 தி இந்துவில் விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. இது குறித்து வலைப்பூக்கள் பல விரிவாக ஆய்வு செய்துள்ளன.

தவிர பா ஜ கவின் தமிழக தலைவர் சி பி ராதாகிருஷ்ணனின் சிறப்பு பேட்டியை தி இந்து நாளிதழ் 4 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நிறைவாக:

பிரச்சாரம் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தாண்டிச் செல்லவில்லை. தமிழ்ப் பத்திரிகைகள் இந்தத் தேர்தலை இதைவிடச் சிறப்பாகக் கையாள முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு பக்கம் சார்ந்து செய்தி வெளியிடுதல், செய்திகளை இருட்டடிப்பு செய்தல், தொழில்முறை நேர்த்தியுடன் எழுதும் திராணியற்று இருத்தல் என்ற பலவீனங்களுடன் பிரச்சாரத்திற்கான நாட்கள் குறைந்து கொண்Dஏ வருகின்றன. நம்பிக்கையுடன் ஆய்வைத் தொடர்கிறோம் என்ற குறிப்புடன் மீண்டும் 15 4 2006 இதழ் குறித்த அலசலுடன் சந்திப்போம் என்று கூறி விடை பெறுகிறோம்.


ஊடகக் கண்காணிப்புக் குழுவினர்

Thursday, April 13, 2006

பல பத்திரிகைகளில் ஜனநாயகமில்லை

“டைவர்சிட்டி” என்பது ஜனநாயக ஊடகத்தின் ஒரு முக்கிய அம்சம். பல தரப்புக் குரல்களுக்கும் ஜனநாயகம் இடம் தருவதை இது குறிக்கும்.

ஒரு சான்றைப் பாருங்கள்: 12 4 2006 அன்று குறைந்தது 7 தலைவர்கள் வெவ்வேறு கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

1.அ தி மு க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப் படும் என்று வைகோ சொல்லியிருக்கிறார்.

2. 50 லட்சம் ஏக்கர் நிலம் குறித்து , பா ஜ க வின் இல கணேசன், ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

3. ராமதாஸ் ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

4. ஸ்டாலின் களியக் காவிளையிலும், மார்த்தாண்டத்திலும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.

5. ப. சிதம்பரம் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.

6. 233 வேட்பாளர்களையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்தி அதில் விஜயகாந் பேசியுள்ளார்.

7. பா ஜ க வின் முன்னாள் தலைவர் வென்கைய நாயுடு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

வழக்கமான திமுக அதிமுக தலைவர்கள் பிரச்சாரம் போக இத்தனை தலைவர்கள் பேசிய பிரச்சாரப் பேச்சுக்களை தமிழ் நாளிதழ்கள் எப்படி வெளியிட்டிருக்கின்றன என்று பார்த்தோம்.
தினமணி, இந்த 7 செய்திகளில் 5 செய்திகளை இன்றைய பதிப்பில் பதிவு செய்து கொண்டு, "டைவர்சிட்ட்ய்" (பலதரப்புக் குரல்களையும் பதிவு செய்வதில்) பிற நாளிதழ்களை விட முன்னணியில் இருக்கிறது. வைகோவின் பேச்சையும், இல கணேசனின் பேச்சையும் தினமணி வெளியிடவில்லை.
அடுத்ததாக 7ல் 4 செய்திகளை வெளியிட்டிருக்கிறது தினமலர். ராமதாசின் பேச்சை தினமலர் வெளியிடவில்லை. சிதம்பரம், வைகோ, பேச்சுக்களும் தினமலரில் இடம் பெறவில்லை.
தினத் தந்தி இந்த 7 செய்திகளில், வைகோவின் "முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு", என்ற செய்தியை மட்டும் வெளியிட்டிருக்கிறது, பிற 6 செய்திகளுக்கும் தினத் தந்தி இடம் தரவில்லை.

தினகரன் இந்த 7 செய்திகளில் இல கணேசனின் பேச்சை மட்டும் வெளியிட்டு விட்டு, பிற 6 செய்திகளையும் வெளியிடாமல் தடுத்து விட்டது.

இன்றைய ஆய்வைப் பார்ப்போம்:

தினத் தந்தி, தினகரனின் ஒரு பக்கச் சார்புநிலை

மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதா என்று கடைசிப் பக்கத்தில் வண்ணப் படங்கள் நான்கையும் சேர்த்து 3 காலம் செய்தியை வெளியிட்டுகிகிறது தினத் தந்தி.
தினகரனோ, கலைஞர் செல்லும் வழி நெடுக மக்கள் வெள்ளம் என்று லீட் ஸ்டோரி வெளியிட்டுள்ளது.
இதில் ஏன் தந்தி கருணாநிதி செல்லும் கூட்டத்தில் பங்கேற்கும் மக்களைப் பற்றி செய்தி எழுதவில்லை என்றும், தினகரனில் ஜெயலலிதா செல்லும் இடங்களில் கூடும் கூட்டங்கள் பற்றியும் எந்தக் குறிப்பையும் வெளியிடவில்லை என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.. இது எப்படி அறமாகும்?

தயாநிதியின் வழக்கும் வைகோவின் சவாலும்

வைகோ, தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டி கடந்த வாரம் பேசிய செய்திகளை, தினமலரும், தினத் தந்தியும் விரிவாக வெளியிட்டிருந்தன. வைகோ மீது தயாநிதி மாறன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்தச் செய்தியை, தினமணி (ப.1 பாக்ஸ்), தந்தி (ப.8), தினகரன் (ப.14 6 காலம் அளவிற்கு பெரிய செய்திய்) ஆகிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. தினமலர் நெல்லைப் பதிப்பில் இந்தச் செய்தியை வெளியிடவில்லை.

இதற்கு எதிர்வினையாக, வைகோ, தயாநிதி மாறன் வழக்கை சந்திக்கத் தயார் என்று நேற்று வைகோ உடனடியாக அறிவிக்க, அந்தச் செய்தி தினமணியிலும் (ப.9), தினத் தந்தியிலும் (ப.14) இடம் பெற்றுள்ளன. தினகரனும், தினமலரும் இந்தச் செய்திகளை வெளியிடவில்லை.

அதாவது தினமலர், இந்த இரண்டு செய்திகளையுமே வெளியிடாமல், மொத்தமாக இருட்டடிப்புச் செய்து விட்டது. தினகரன், வைகோவின் பதில் பேச்சை மட்டும் வெளியிடவில்லை. தினத் தந்தியும், தினமணியும், இரண்டு செய்திகளையுமே வெளியிட்டுள்ளன.
______________________

ஒரு தொகுதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் சந்திப்பு: தினகரன் இருட்டடிப்பு

இது தவிர, பாளையங்கோட்டையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் சந்திக்க வைத்து அது தொடர்பான விவாதங்களையும், பட்டியலையும் வெளியிட்டுள்ளன, தினமணி ப.3, தினத் தந்தி ப.4, தினமலரும்.
இது தொடர்பான செய்திகளை தினகரன் வெளியிடவில்லை.
_____________

தலைவர்கள் பேச்சுக்களை வெளியிடுவதில்
முழுமை இல்லை
__________
கருணாநிதி

கருணாநிதி 12 3 2006 அன்று சைதாப்பேட்டை, செங்கற்பட்டு, விளுப்புரம் ஆகிய இடங்களில் பிரச்சார உரையாற்றியிருக்கிறார். கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப் படும் அரிசியை, வங்குபவர்களின் வசதிக்கு, மாதம் இரண்டு தடவையாகவும் வாங்கிக்கொள்ள வசதி செய்யப் படும், கல்விக் கட்டணம் குறைக்கப் படும், ஆட்சி மாற்றமே முக்கிய தேர்தல் பிரச்சினை, ஆட்சியைக் கைப்பற்றினால் முதலில் போடும் கையெழுத்து எதுவாக இருக்கும் எனப் பல விஷயங்களை முன் வைத்துள்ளார். இந்த உரைகளில் உள்ள அனைத்துக் கருத்துக்களையும் இடம் பெறச் செய்த நாளிதழ் எதுவுமில்லை.
தினம்ணி, சைதாப்பேட்டை பேச்சையும் செங்கற்பட்டு பேச்சையும் வெளியிட்டுள்ளது. தினத் தந்தி சைதாப்பேட்டை பேச்சை மட்டும் வெளியிட்டுள்ளது. தினமலர் விழுப்புரம் பேச்சையும், சைதாப் பேட்டை பேச்சையும் வெளியிட்டுள்ளது. தினகரன் முந்தைய நாள் மைலாப்பூரில் பேசிய பேச்சை விரிவாக வெளியிட்டுள்ளது. கருணாநிதி எழுதிய அரசியல் கவிதையை தினகரன் மட்டுமே வெளியிட்டுள்ளது. தி மு க மத்திய அமைச்சரவையில், மதிமுக சார்பிலும் அமைச்சர்களைப் பெற்றுக் கொண்டதாகக் கூறுவது அபாண்டப் பொய் என்று வைகோவின் பெயரைக் குறிப்பிடாமல் சாடுகிறது இக்கவிதை. வடிவம் கவிதை என்பதாலேயே கருணாநிதியின் இந்த முழக்கம் அவாரது குடும்பப் பத்திரிகை தவிர பிறவற்றில் இடம் பெறவில்லை.
_________
ஜெயலலிதா.

ஜெயலலிதா தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் பேசியிருக்கிறார். திருச்செந்தூர், தூட்துக்குடி, ஓட்டப்பிடாரம், ஆத்தூர், ஸ்பிக்நகர் ஆகிய இடங்களில் பேசிய அந்தப் பேச்சுக்களில் தாமிரபரணி தண்ணீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுப்பது பற்றிய திட்டத்தையும், நெசவாளர்கள், மீனவர்களைப் பாதுகாக்கும் திட்டத்தையும், தூத்துகுடி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் செய்யப் பட்ட வளர்ச்சிப் பணிகளையும், மனித நேயம் சிறந்து விளங்க சட்டம் ஒழுங்கை சீரமைத்தது அதிமுக அரசு என்ற தகவல்களை வெளியிட்டுள்ளார். தினத் தந்தியும், தினமலரும் கூட இந்த 4 விஷயங்களையும் வெளியிடவில்லை. ஆத்தூர், ஸ்பிக் நகர் உரைகளை தினத் தந்தி வெளியிடவில்லை. திருச்செந்தூர் ஓட்டப் பிடாரம் பேச்சுக்களை மட்டும் தந்தி வெளியிட்டுள்ளது. தினமணி திருச்செந்தூர், தூத்துக்குடி பேச்சுக்களைப் பதிவு செய்துள்ளது. தினகரன் ஆத்தூர் பேச்சையும், தினமலர், திருச்செந்தூர், ஸ்பிக் நகர் பேச்சுக்களையும் மட்டும் வெளியிட்டுள்ளன.
_________
தலித் குரலுக்கு இடமில்லை

விடுதலைச் சிறுத்தைகள் சின்னம் 24ஆம் தேதி தெரியும் என்று திருமாவளவனின் பேச்சு தினமலரில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இச்செய்தி பிற 3 நாளிதழ்களிலும் வெளியாகவில்லை.

திமுகவில் இந்திரகுமாரி இணைந்த செய்தி 4 நாளிதழ்களிலும், படமாகவோ, செய்தியாகவோ பதிவு செய்யப் பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சி அதிமுகவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்திருப்பது தந்தியில் மட்டும் ப.14ல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா தங்குவதற்கு தேனியில் தனி பங்களா தயாராகி வருவதாக தினகரனில் ப.6ல் செய்தி வெளியாகியுள்ளது.

________

சிறப்புப் பேட்டிகள்

தி இந்து நாளிதழ் திமுக தலைவர் கருணாநிதியின் சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது. தினகரன் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் என் வரதராஜனின் சிறப்புப் பேட்டி இடம் பெற்றுள்ளது.

ஆனந்த விகடனில் திமுக தலைவர் கருணாநிதியின் சிறப்புப் பேட்டி இடம் பெற்றுள்ளது. வைகோவை பொய்க்கோ என்றும், ஜெயலலிதாவை பயலலிதா என்றும் முரசொலியில் குறிப்பிடப் படுவது உட்பட பல விஷயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

ஊடகக் கண்காணிப்புக் குழு

Wednesday, April 12, 2006

செய்தித்தாள்களில் சமூகநீதி இல்லையா?

அம்பேத்கர் மக்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் பற்றிய செய்தி தினத்தந்தி தவிர பிற 3 இதழ்களில் இடம் பெறவில்லை. செய்தித் தாள்களில் சமூக நீதி அக்கறையுடன் செய்தி வெளியிடும் சூழல் தமிழகத்தில் இல்லையோ என்ற ஐயம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கப் படும் என்று ஜெயலலிதா காயல்பட்டினத்தில் பேசிய பேச்சு, தினமலரில் மட்டும் இடம் பெற்றுள்ளது. தினத்தந்தியிலும், தினமணியிலும் ஜெயலலிதா காயல்பட்டினத்தில் பேசியதாக புகைப்படம் மட்டும் இடம் பெற்றுள்ளது. தினகரனில் செய்தியுமில்லை, புகைப்படமுமில்லை.

வேட்பாளர்களின் சொத்து விவரத்தை இணைய தளத்தில் வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்திருப்பதாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள அறிவிப்பு, தினத்தந்தி தவிர பிற நாளிதழ்களில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரின் சொத்து விவரத்தையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளருக்கும் கிடைக்கவிருப்பதற்கு, நவீன இணைய வசதிகளே காரணம்.
ஜெயலலிதா ஆட்சியில் சாதனை இல்லை வேதனை தான் மிச்சம் என்ற ராமதாசின் மேட்டூர் பேட்டி, தினமலரில் 6 ஆம் பக்கத்திலும், தினகரனில் 6 ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளன. தினமணியிலும், தினத்தந்தியிலும் இச்செய்தி இடம் பெறவில்லை.

ஊடகத்துறையில் ஏகபோகம், கலைஞர் மீது வைகோ புகார் என்ற செய்தி தினமணியிலும் (ப 6), தினத் தந்தியிலும் (ப.3) இடம் பெற்றுள்ளன. தினகரனிலும், தினமலரிலும் இச்செய்தி இடம் பெறவில்லை.

கூட்டமில்லாததால், ஜெயலலிதா 3 நிமிடத்தில் பிரச்சாரத்தை தூத்துக் குடி மாவட்டத்திலுள்ள தட்டார்குடியில் முடித்துக் கொண்டார் என்ற செய்தி தினகரனில் 4ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இச்செய்தியை உறுதி செய்து கொள்ள வழி இல்லை. பிற 3 நாளிதழ்களுமே இத் தகவல் கொண்ட செய்தியை வெளியிடவில்லை.

தேர்தல் விதியை மீறி ஜெயலலிதா பிரச்சாரம் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் செய்திருப்பதாக ஒரு செய்தி, தினகரனில் 2ஆம் பக்கத்திலும், தினமணியில் 3ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளன. இச்செய்தியை தினமலரும் திஅந்தந்தியும் வெளியிடவில்லை. அதிமுகவுக்கும் ஜெயலலிதாவிற்கும் ஆதரவு அளித்து அவரது பிரச்சார செய்திகளை முழுமையாக வெளியிட்டு வரும் தினமலரும் திஅந்தந்தியும், ஜெயலலிதாவிற்கு இடையூற் தரும் செய்திகளை வெளியிடுவதில்லை என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றன என்பதற்கு இச் செய்தி மேலும் ஒரு சான்றாக அமைகிறது.
இன்று (12 4 2006) நான்கு நாளிதழ்களிலும் இடம் பெற்றுள்ள ஒரே செய்தி மயிலாப்பூரில் தி மு க வேட்பாளர் நெப்போலியனை ஆதரித்து தி மு க தலைவர் கருணாநிதியின் பேச்சு மட்டுமே ஆகும்.

பனைத் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைப்பதாக ஜெயலலிதா உடன்குடியில் பேசிய பேச்சு தினகரனில் இடம் பெறவில்லை.

ஜெயலலிதா கூடங்குளம், செட்டிகுளம் பகுதி களில் பேசிய போது அறிவித்த திட்டங்களை தினத் தந்தி முழுமையாக வெளியிட்டுள்ளது. மற்ற 3 நாளிதழ்களும் அவற்றைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளன.

இரண்டு ரூபாய்க்கு அரிசியும், இரண்டு ஏக்கர் நிலமும் வழங்குவது சாத்தியம் என்று காரைக்குடியில் ப. சிதம்பரம் பேசிய பேச்சு, தினமலரில் 17 ஆம் பக்கத்திலும், தினகரனில் 6ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. தினத் தந்தியும், தினமணியும் இச்செய்தியை வெளியிடவில்லை.

பொன்னேரியில் திமுக இளைஞர் அணிச் செயலரான ஸ்டாலினின் பேச்சு, தினகரனில் 7 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சுரங்க ரயில் பற்றிய செய்தி தினமணியில் மட்டும் (ப.4) இடம் பெற்றுள்ளது.
ஜெயலலிதா முரணான தகவல்களை வெளியிடுவதாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை, தினமணியில் மட்டும் இடம் பெற்றுள்ளது.

என் தைரியத்துக்கு ஓட்டுப் போடுங்கள் என்ற விஜயகாந்தின் பேச்சு, தினமலர் (ப.3) இதழில் இடம் பெற்றுள்ளது.
மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூக்கிய தலைவர்களில் ஒருவரான ஜி கே வாசனின் சிறப்புப் பேட்டி தினகரனில் 8 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. தினகரன் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்புப் பேட்டிகளை வெளியிட்டு வருகிறது. ஸ்டாலின், நல்ல கண்ணு, மல்லை சத்திய என்ற வரிசையில் இன்று இடம் பெற்றிருப்பது வாசன். ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை எதிர்த்து நிற்கும் ஜனநாயக மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்க்ளது பேட்டியும் இப்பகுதியில் இடம் பெற்றால், பேட்டிக்குரியவர்களைத் தெரிவு செய்வதில், தினகரன் பக்கச் சார்பில்லாமல் நடந்து கொள்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்.

பன்னிரண்டு நாட்கள் ஆய்வு செய்து விட்ட நிலையில் நாம் சில கருது கோள்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.


கருதுகோள் #1 :
தினகரன் திமுக கூட்டணிச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. என்றாலும், திமுக தலைமைக்கும் கலைஞர் குடும்பத்தினருக்கும்
தரப்படும் முக்கியத்துவம், பிற கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடையாது. ஜெயலலிதாவை விமர்சிக்க முற்படும் செய்திகளுக்கும் முன்னிரிமையை தினகரன் தருகிறது. வைகோவின் பிரச்சாரத்திற்கு தினகரனில் இடமில்லை.

கருதுகோள் #2.

தினமலர், வைகோவின் ஊதுகுழலாக விளங்குகிறது. விஜயகாந்திற்கு தினமலர் உரியதற்கும் அதிகமான இடத்தை ஒதுக்குகிறது. ப ம க தொடர்பான எதிர்மறையான செய்திகளுக்கு தினமலரில் இடமுண்டு.
ராமதாசின் பேட்டிகளுக்கு தினமலரில் இடமில்லை.

கருதுகோள் #3:

தினத் தந்தி, ஜெயலலிதாவிற்கு அதிக பட்ச இடத்தை ஒதுக்கி, அதிமுகவின் பிற தலைவர்களை வஞசிக்கிறது.
வைகோவிற்குக் கூடுதலான இடம் ஒதுக்கப் படுகிறது.

கருதுகோள் #4 :

தினமணி, இருக்கும் 4 நாளிதழ்களில் ஓரளவு நியாயத் தன்மையுடன் நடந்து கொள்வதாகக் கருத
இடமிருக்கிறது.


கருதுகோள் #5.

தமிழகத்தின் 4 தமிழ் நாளிதழ்களுக்குமே சமூக நிதி
குறித்த அக்கறையோ, தலித், சிறுபான்மையினரின் நலனில் சென்சிடிவிடியோ கிடையாது.

இந்தக் கருதுகோள்களை இனி வரும் ஆய்வுகளில் அலசுவோம். ஊடகக் கண்காணிப்புக் குழுவினரின் சார்பில்,

மா. மாரியப்பன் (மாபா)

Tuesday, April 11, 2006

தவறான தகவல் தரலாமா?

அதிகம் விற்கும் பத்திரிகை
தவறான தகவல் தரலாமா?

தமிழ் நாட்டில் அதிகம் விற்பனையாகும் தமிழ் நாளிதழான தினகரனில் இடம் பெற்றுள்ள ஒரு செய்தி தவறாக இருப்பதாக நாங்கள் எம் ஆய்வின் அடிப்படையில் கண்டறிந்தோம். அது பற்றிய ஆய்வுரைக்குப் புகு முன், இன்று கவனிக்க வேண்டிய சில தகவல்களை முதலில் பார்த்து விடுவோம்:

கேரள, தமிழக, மேற்கு வங்க சட்ட மன்றப் பொதுத் தேர்தல்களையொட்டி தி இந்து நாளிதழ் 2 நாட்களுக்கு ஒரு முறை, 2 முழுப் பக்கங்களை, சட்ட மன்றங்களுக்கான பொதுத் தேர்தல்கள் தொடர்பான ஆய்வுகளுக்காக ஒதுக்கி வருகிறது. 11.4.2006 இதழில், வைகோவின் சிறப்புப் பேட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது. “Pragmatism not opportunism”, என்பது இந்த பேட்டிக் கட்டுரைக்கான தலைப்பக அமைந்துள்ளது.

ஜெயலலிதாவின் பிரச்சாரப் போக்கு, தற்போதைய தேர்தலில் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதைத் தவிர்த்து, தனது பாசிட்டிவான சாதனை விஷயங்களையே பேசி வருகிறார் என்கிறது மற்றுமொரு ஆய்வுக் கட்டுரை. “A subtle change in style and strategy- carefully avoiding personal attacks on her rival Jayalalithaa has chosen to dwell on the “positives”” என்பது இந்த ஆய்வுக் கட்டுரைக்கான தலைப்பும், துணை அடுக்குத் தலைப்பும் ஆகும்.

இனி இன்று ஆய்வுக்குட்படுத்த வேண்டிய செய்திகளை ஒவ்வொன்றாகக் காணலாம்:

ஜெயலலிதா மதுரை பேட்டியில், தே ஜ கூட்டணி மீது எழுப்பிய குற்றச் சட்டிற்கு மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப சிதம்ப்ரம் தெரிவித்த கருத்துக்கள் தினகரனில் முதல் பக்கத்தில் வெளி வந்துள்ளன. இந்தச் செய்தியை தினமலரும் தினத் தந்தியும் வெளியிடவில்லை. இது தவிர, காட்டுமன்னார்கோவிலில் வள்ளல்பெருமானை ஆதரித்து ப சிதம்பரம் பேசிய பேச்சு, தினமணியில் விரிவாக வெளியாகியுள்ளது. தவிர சிதம்பரத்தில் வள்ளல்பெருமான் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்த பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியையும் தினமணி தவிர வேறு எந்த நாளிதழும் வெளியிடவில்லை.

2 ரூபாய்க்கு அரிசி உறுதி என்று சேப்பாக்கத்தில் கருணாநிதி பேசிய பேச்சு தினகரனில் முதல் பக்கத்தில் லீட் ஸ்டோரியாக்கப் பட்டுள்ளது. திட்டமிட்ட படி தேர்தல் நடக்கும் என்று நரேஷ் குப்தா தெரிவித்த பேட்டி தினகரனில் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

திருவேற்காட்டிலிருந்து ஒரு திக்குவாய்த் தம்பி என்ற தலைப்பில் கருணாநிதி எழுதியுள்ள அரசியல் கவிதை தினகரனில் மட்டும் 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் கேள்வி பதில் வடிவிலான அறிக்கைகளை எடிட் செய்து வேளியிடும் தினமணியோ, பேச்சு, பேட்டி, கேள்வி ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதிகளை வெளியிடும் தினமலரோ, இந்தக் கவிதையை வெளியிடாமல் ஒதுங்கிக்
கொண்டன.

செய்தியாளர் கூட்டத்தில் திமுக கூட்டணி 200 இடங்கள் பெறும் என்று கருணாநிதி சொன்னதைக் கேட்டு தொண்டர்கள் தேர்தல் பணியாற்றாமல் இருந்துவிடக் கூடாதே என்ற கவலியுடன் கருணாநிதி, இந்தக் கவிதையை வடித்துள்ளார். எப்படியெல்லாம் ஆளுக் கட்சி இந்தத் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகங்கள் செய்யக் கூடும் என்று சொல்லும் அவரது கவிதை, தொண்டர்களைத் திறமை காட்டி உழைத்திடக் கட்டளையிடுகிறது.

மல்லை சத்யா என்பவரின் சிறப்பு பேட்டி தினகரனில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தினமலரில், "ஓட்டுக்காக கொள்கையை அடகு வைத்த திமுக", என்ற தலைப்புடனும் இந்தி மொழியில் பிரசார நோட்டீஸ் என்ற முந்து தலைப்புடனும் ஒரு செய்தி வெளியாகிரிஉக்கிறது. ஈரோட்டில் வசிக்கும் வட மாநிலத்தவரிடம் ஓட்டுப் பெறுவதற்காக இந்த இந்தி நோட்டீசை அச்சிட்டு வினியோகித்திருப்பதாக இந்தச் செய்தி கூறுகிறது. இதன் முளம் திமுக ஓட்டிற்காக தனது இந்தி எதிர்ப்புக் கொள்கையை அடகு வைத்திருப்பதாகச் சொல்கிறது தினமலர்.

“பென்னாகரத்தில் பா ம க அதிருப்தியாளர்களுக்கு ராம்தாஸ் அட்வைஸ்” என்ற தலைப்பிலொரு செய்தி தினமலரின் 8 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. தினமலரில் ப ம க குறித்து செய்திகள் எதுவும் இடம் பெறுவதில்லை என்பதை இந்த ஆய்வு கண்டுணர்ந்துள்ளது. எப்பொழுதாவது இடம் பெறும் ப ம க குறித்த செய்திகளும், ப ம க வுக்கு எதிரான நிலைப்படு கொண்டதன் அடிப்படையிலேயே எழுதப் படுகிறது. இந்தச் செய்தி ராமதாஸ் அட்வைஸ் சொன்னதாக இதன் தலைப்பு சொல்கிறது. 10 பாராக்களில் சொல்லப் பட்டுள்ள இந்தச் செய்தியில், ராமதாசின் அறிவுரை ஒரு வரியில் மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்தச் செய்தி உள்நோக்கம் கொண்ட ஒன்றாக இருக்கலாம் என்று ஐயுற இடமிருக்கிறது.

தினமலரில் இடம் பெற்ற அந்தச் செய்தியை அப்படியே தருகிறோம்.:

பென்னாகரத்தில் பா.ம.க., தொடர் முரண்டு அதிருப்தியாளர்களுக்கு ராமதாஸ் "அட்வைஸ்'தர்மபுரி: பென்னாகரம் தொகுதியில் .மு.க.,வேட்பாளருக்கு எதிராக பா.ம.க.,வினர் தேர்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நேற்று பென்னாகரம் தொகுதி பா.ம.க., அதிருப்தியாளர்களை ராமதாஸ் சந்தித்து பேசினார்.

வன்னியர்கள் அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த பா.ம.க., பென்னாகரம், தர்மபுரி ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தற்போது பா.ம.க., அணி மாறி தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தி.மு.க., கூட்டணிகள் தொகுதி பங்கீட்டில் தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு ஆகிய இரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பென்னாகரம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ., மணி மீது அதிருப்தி நிலவியதால், கடைசி நேரத்தில் மணி மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

பென்னாகரம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட பா.ம.க., வேட்பாளர் வெங்கடேசனுக்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தி.மு.க., கூட்டணியில் தொகுதி மாற்றம் செய்யப்பட்டது. பென்னாகரம் தொகுதியில் தி.மு.க.,வும், தர்மபுரி தொகுதியில் பா.ம.க.,வும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

பென்னாகரம் தொகுதியில் தி.மு.க., சார்பில்
போட்டியிடும் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பெரியண்ணன், கடந்த தேர்தலின் போது பா.ம.க., வில் சீட் கிடைக்காத அதிருப்தியில் மணியை எதிர்த்து போட்டியிட்டு 34 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது தி.மு.க., சார்பில் போட்டியிடும் பெரியண்ணனுக்கு, பா.ம.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பென்னாகரம் தொகுதி பா.ம.க.,வினர், பெரியண்ணனுக்கு
எதிராக வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருப்பதோடு, சுயேட்சையாக போட்டியிடும் மன நிலையில் உள்ள சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு ஆதரவு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். நேற்று முன்தினம் பென்னாகரத்தில் நடந்த பா.ம.க., ஆலோசனை கூட்டத்தில் முத்துலட்சுமி கலந்து கொண்டு ஆதரவு
கேட்டுள்ளார்.

பென்னாகரம் தொகுதியில் தி.மு.க.,வுக்கு எதிராக பா.ம.க., களம் இறங்க நடவடிக்கை எடுத்து வருவதால் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பா.ம.க., போட்டியிடும் தர்மபுரி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஆகிய தொகுதியில் தி.மு.க.,வினர் தேர்தல் பணிகளை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பென்னாகரம் தொகுதியில் '96 தேர்தலில் பா.ம.க.,
தலைவர் மணி தனித்து நின்று வெற்றி பெற்றார். தொடர்ந்து இரு முறை பா.ம.க., வெற்றி பெற்ற தொகுதி என்பதோடு, பா.ம.க., மீது தொகுதி மக்கள் அதிருப்தியிருப்பதால், இந்த முறை தொகுதியில் போட்டியிடுவதை பா.ம.க.,வினர் விட்டு கொடுத்துள்ளனர்.

தி.மு.க., சார்பில் போட்டியிடும் பெரியயண்ணனுக்கு
உள்ள தனிப்பட்ட செல்வாக்கு, அவருக்கு தேர்தலில் வெற்றியை தேடி தந்தால், இந்த தொகுதி
பா.ம.க.,விடம் இருந்து தி.மு.க.,வுக்கு பறிபோய் விடும் என்பதால், பா.ம.க.,வினர் இந்த தொகுதியில் தி.மு.க.,வுக்கு எதிராக களம் இறங்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். இதற்கு பா.ம.க., தலைமையும் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக தொகுதி முழுவதும் தகவல் பரவியுள்ளது.

தர்மபுரியில் தங்கியிருந்த ராமதாஸ்,
நேற்று பென்னாகரம் தொகுதி பா.ம.க.,வினரை சந்தித்தார். "தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்; கட்சியின் கட்டுபாடுகளை யாரும் மீறக்கூடாது' என அதிருப்தியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ராமதாஸ் அறிவுரை கூறிய போதிலும், தி.மு.க., ÷ வட்பாளர் பெரியண்ணனுக்கு எதிராக பா.ம.க.,வினர் தீவிரமாக வேலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர்.

இன்றைய சிறப்புப் பார்வை:


தமிழகத்தில் ஏழை மக்களுக்கு 55 ஏக்கர் நிலம், போகாத ஊருக்கு வழி கூறுகிறார் கருணாநிதி, நெல்லையில் முதல்வர் ஜெ பேட்டி என்ற செய்தி தினமலரில் இடம் பெற்றுள்ளது.

ஆனால், ஜெயலலிதாவின் நெல்லை பேட்டிக்கு, தினகரன் கொடுத்துள்ள தலைப்பு இது:

“55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பது உண்மைதான்”, நெல்லையில் ஜெ பேட்டி

எது உண்மை என்று அறிந்து கொள்ள செய்திகளை ஆய்வு செய்தோம். தினமலரில் வெளிவந்த செய்தி இங்கே அப்படியே தரப்படுகிறது:

இலவச நிலம்: போகாத ஊருக்கு வழி சொல்கிறார் கருணாநிதி நெல்லையில் ஜெ.,பிரசாரம்திருநெல்வேலி : ஏழைகளுக்கு இலவசமாக நிலம் தருவதாக தி.மு.க.,தேர்தல் அறிக்கையில்
கூறியிருப்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாக உள்ளது என நெல்லையில் முதல்வர் ஜெயலலிதா
பேசினார்.

நெல்லை வாகையடி முனையில் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பின்னர் நான்குரதவீதிகள் வழியாக மீண்டும் ஜங்ஷன், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை வழியாக பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் அம்பை ரோடு சந்திப்பில் பேசினார்.

அங்கு பாளையங்கோட்டை தொகுதி தேசிய லீக் வேட்பாளர் நிஜாமுதீனை ஆதரித்து பிரசாரம் செய்தார். தொடர்ந்து நான்குநேரியில் அ.தி.மு.க., வேட்பாளர் சூரியகுமாரை ஆதரித்தும், பணகுடியில் ராதாபுரம் தொகுதி வேட்பாளர் ஞானபுனிதாவை ஆதரித்தும் பேசினார். தொடர்ந்து ஆரல்வாய்மொழி வழியாக
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்யச் சென்றார்.

நெல்லை டவுனில் பிரசாரத்திற்கு இடையே நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் தருவதாக கருணாநிதி கூறியுள்ளார். இது எவ்வாறு
சாத்தியம் என்று தெரியவில்லை. நான்கு முறை முதல்வராக இருந்த கருணாநிதி இதனை
வேண்டுமென்றே இவ்வாறு கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

வேண்டுமென்றே அரசை குறைகூறுகிறாரா... மக்களை ஏமாற்ற இவ்வாறு பேசியுள்ளாரா என்று தெரியவில்லை.
புரிந்தும் புரியாததுபோல பேசியுள்ளார். பயன்படா தரிசு நிலம் முன்பு எம்.ஜி.ஆர்.,காலத்திலும் கடந்த அ.தி.மு.க.,ஆட்சிகாலத்திலும், தற்போதைய அ.தி.மு.க.,ஆட்சியிலும் முழுமையாக விவசாயிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தெரியாமல் கருணாநிதி மக்களை ஏமாற்றும் வகையில் அறிவிப்பு
வெளியிட்டுள்ளார்.

போகாத ஊருக்கு வழிசொல்வது போல அவரது அறிவிப்பு உள்ளது. பயிர் செய்யாத தரிசு நிலங்களை விவசாயிகளுக்கு கொடுக்க அரசிடம் கையிருப்பாக
நிலம் ஏதும் இல்லாத காரணத்தால் ஆதிதிராவிட மகளிருக்கு நிலம் வழங்கும் புதுமை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் தனியாரிடம் இருந்து விவசாய நிலத்தை பெற்று அதை ஆதிதிராவிட மகளிருக்கு 50 சதவீத மானியத்திலும் ஐந்து சதவீத வங்கி கடனிலும் வழங்கியுள்ளோம். உண்மை இப்படி இருக்க கருணாநிதி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

தொடர்ந்து வெற்றி வாய்ப்புக் குறித்து கூறுகையில், ""தமிழக மக்களிடம் அ.தி.மு.க.,கூட்டணிக்கு அமோக
ஆதரவு உள்ளது. இதனால் பெரும் பான்மை இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்,'' என்றார்.

Dinamalar, p.1 Tirunelveli edition

55 லட்சம் தரிசு நிலம் இருப்பது உண்மைதான், நெல்லையில் ஜெ பேட்டி

என்பது தான் தினகரன் இச்செய்திக்கு அளித்துள்ள தலைப்பு. இச்செய்தி தினகரனின் நெல்லைப் பதிப்பில் மூன்றாம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இணையப் பதிப்பிலும் இச்செய்தியை வாசிக்கலாம்.

மேலும் ஒரு ஒப்பீட்டிற்காக தினமணியில் இடம் பெற்ற செய்தியும் கீழே தரப்படுகிறது.


55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் அரசிடம் இல்லை: ஜெயலலிதா

திருநெல்வேலி, ஏப். 11: தமிழ்நாட்டில் சுமார் 55 லட்சம் ஏக்கர் அரசு தரிசு நிலம் இருப்பதாகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை ஏழைகளுக்கு பிரித்துக் கொடுப்போம் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறுவது, போகாத ஊருக்கு வழி சொல்வது போன்றதாகும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.
திருநெல்வேலில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் செய்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
"திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் சுமார் 55 லட்சம் ஏக்கர் அரசு தரிசு நிலம் இருப்பதாக கருணாநிதி கூறியிருப்பதில் எள்ளளவும் உண்மை இல்லை. அரசு தரிசு நிலம், தனியார் பட்டா நிலம், விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலம் என பலவகை தரிசு நிலங்கள் உண்டு. இவ்வாறு மொத்தமுள்ள 55 லட்சம் ஏக்கரில், அரசிடம் உள்ளது 3.57 லட்சம் ஏக்கர் மட்டுமே. தனியாரிடம் சுமார் 50 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. கருணாநிதி கூறுவது போல 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலமும் அரசிடம் இல்லை. இப்படி இருக்க ஏழைகளுக்கு 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை பிரித்துக் கொடுப்போம் எனக் கருணாநிதி கூறுவது போகாத ஊருக்கு வழி சொல்வது போன்றது.
தரிசு நிலம் குறித்து கருணாநிதி சரியாகப் புரிந்து கொண்டு, தெரிந்து கொண்டு பேச வேண்டும். நான்கு முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்துள்ள கருணாநிதிக்கு அரசிடம் உள்ள தரிசு நிலம் எவ்வளவு என்பது தெரியாதது வேடிக்கையாகத்தான் உள்ளது. அல்லது வேண்டுமென்றே என் அரசு மீது அவதூறும், குறையும் கூறி மக்களை ஏமாற்ற இவ்வாறு கூறி வருகிறாரா எனத் தெரியவில்லை.
தனியாரிடம் உள்ள தரிசு நிலத்தை மேம்படுத்தி அதன் மூலம் விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக என்னால் தீட்டப்பட்ட திட்டம்தான் ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம். தனியார் விளைநிலங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்தவும், மண் வளத்திற்கு ஏற்ற பழச் செடிகள் மற்றும் தோட்டப் பயிர்களை பயிரிடவும் உதவி அளிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், பெரிய நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் காட்டாமணக்கு போன்ற உயிரி எரிபொருள்களைப் பயிரிட இடுபொருள்களை வழங்கி, பின்னர் விளைபொருள்களை அந்த நிறுவனங்களே திரும்பப் பெற்றுக் கொள்ளவும் இந்த திட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலம்: அரசிடம் உள்ள தரிசு நிலங்களில் பயிரிடக் கூடிய தரிசு நிலங்கள் ஏற்கெனவே, எம்.ஜி.ஆர். ஆட்சியின்போதும், என்னுடைய முந்தைய (1991-1996) ஆட்சியின்போதும் ஏழைகளுக்கு வழங்கப்பட்டு விட்டன. இப்போது எஞ்சி இருப்பவை பயிரிட முடியாத -கல் நிறைந்த நிலங்கள்தான்.
அரசிடம் தரிசு நிலம் இல்லாததால்தான், தாழ்த்தப்பட்ட விவசாயப் பெண்களுக்கு வழங்க தனியாரிடமிருந்து தரிசு நிலங்களை விலை கொடுத்து வாங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி, நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் மானியமாகவும், 50 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும். இதைப் பலமுறை நான் விளக்கி உள்ளேன்' என்றார் ஜெயலலிதா
.

Dinamani, Tirunelveli Edition p.1

ஜெயலலிதா சொல்லாத ஒரு தகவலை, அவர் சொன்னது போல வெளியிடுவது, வாசகர்களுக்குத் தவறான தகவல் தருவதற்குச் சமம் ஆகாதா? இது பத்திரிகை தர்மம் ஆகுமா?

வைகோ தாயாரின் பேட்டியை, தினகரன் தவிர பிற 3 நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. பா ஜ க வின் 19 பேர் கொண்ட 2ஆவது வேட்பாளர் பட்டியல் 4 இதழ்களில் இடம் பெற்றுள்ளன. சரத்குமார் திமுகவில் இருந்து விலகிய செய்தியும், அதற்கு திமுக தலைவர் கருணாநிதியின் எதிரிவினையும், 4 நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளன. சரத் குமார் அதிமுகவில் சேரப் போகிறார் என்ற செய்தி தினமலரில் மட்டும் வெளியாகி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் தினமணியிலும் தினமலரிலும் இடம் பெற்றுள்ளன. தினகரனும் தினத் தந்தியும் இச் செய்தியை வெளியிடவில்லை.

ஜெ பிரச்சாரத்தில் மக்கள் பட்ட துன்பம் குறித்து தினமணி விரிவாக்ப் பதிவு செய்துள்ளது. மக்கள் பார்வையிலிருந்து இம்மாதிரியான செய்திகள் பிற 3 நாளிதழ்களில் காணப்படவில்லை.

அன்புமணி ராமதாஸ், கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் தேர்தல் பிரச்சாரப் பேச்சுக்களை தினமணி பதிவு செய்துள்ளது.
வழக்கம் போலவே வைகோ பிரச்சாரம் தொடர்பான செய்திகள் தினகரனில் இடம் பெறவில்லை. தினத் தந்தியிலும், தினமலரிலும் அதிகமாகவும், தினமனியில் பிற செய்திகளுக்கு நிகராகவும் வெளியிடப் பட்டுள்ளன. விஜயகாந் பிரச்சாரம் தொடர்பான செய்திகளுக்கும் இதே நிலை தான்.
அஸாமில் காங்கிரஸ் மெஜாரிட்டி பலம் பெறும் நிலையில் இருப்பதாக தி இந்து நாளிதழும், சி என் என் - ஐ பி என் நிறுவனமும் கூட்டாக நடத்திய கணிப்பில் தெரிய வந்துள்ளதாக இன்றைய தி இந்து நாளிதழின் முதல் பக்கச் செய்தி கூறுகிறது.
என் டி டி வி யில் இன்று இடம் பேற்ற செய்திகளில், திமுக தலைவர் குடும்பத்துடன் பிரச்சாரத்தை சேப்பாக்கத்தில் தொடங்கியதாக அதன் செய்தியாளர் வர்ணித்தார். இது போன்ற பதிவுகள் தமிழ் இதழியலில் காணக் கிடைக்கவில்லை என்ற குறிப்புடன் இன்றைய ஆய்வை நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளைய ஆய்வுடன் சந்திப்போம்.

ஊடக விமர்சனக் குழு

Monday, April 10, 2006

4 இல் 3 பத்திரிகைகள் கட்சிகளுக்குச் சார்பானவை

தமிழக சட்டமன்ற முன்னாள் சபாநாயகரான சேடப்பட்டி முத்தையா திமுகவில் சேர்ந்த செய்தியை, 4 நாளிதழ்களும் 10 ஏப்ரல் 2006 நாளிட்ட இதழில் வெளியிட்டுள்ளன. வைகோ வீட்டிற்கு ஜெயலலிதா விஜயம் செய்ததையும் 4 ஆளிதழ்களும் 10 ஏப்ரல் 2006 நாளிட்ட இதழில் வெளியிட்டுள்ளன. கலர் டிவி, இரண்டு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் ஆகிய மூன்று விஷயங்களைச் சுற்றியே பிரச்சாரம் நகன்று கொண்டிருக்கின்றது. ஆய்வுக்குட்படுத்தப் பட்டு வரும் 4 பத்திரிகைகளும் வேறு விவாதத்துக்குரிய விஷயங்கள் எதையும் முன் வைக்கவுமில்லை.

இன்று கவனிக்க வெண்டிய
சில செய்திகளைப் பார்க்கலாம்.

இந்தியா டுடே வார இதழின் தமிழ்ப் பதிப்பில் (ஏப்ரல் 19 2006 நாளிட்டது. ப 22௨3) வெற்றி கிடைக்குமா? என்ற தலைப்பில் வாரிசு அரசியல் குறித்து ஒரு அலசல் இஅட்ம் பெற்றுள்ளது. "மன்னராட்சி மலையேறிவிட்டாலும் தமிழக அரசியலில் வாரிசுகளுக்குப் பஞ்சமில்லை. இந்த ச்ட்டமன்றத் தேர்தலிலும் பல வாரிசுகளுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால் வாகை சூடுவார்களா?", என்ற கேள்வியுடன் இந்த ஆய்வு தொடங்குகிறது. இந்த ஆய்வில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் அரசியல் வாரிசுகளின் பட்டியல் இடம் பெற்றுள்ளது.
அரசியல் தலைவர்களின் வாரிசுகள் 12 பேர் இந்தத் தேர்தலில் களமிறக்கப் பட்டுள்ளனர். 1. ஸ்டாலின் - கருணாநிதியின் மகன். 2. பூங்கோதை ஆலடி அருணா (ஆலடி அருணாவின் மகள்), 3. தங்கம் தென்னரசு (முன்னாள் அமைச்சர் தங்கப் பாணிட்யனின் மகன்). 4. அன்பில் பெரியசாமி (அன்பில் தர்மலிங்கத்தின் மகன்). 5. கீதா ஜீவன் (தூத்துக்குடி பெரியசாமியின் மகள்), 6. கே எஸ் விஜயகுமார் (மறைந்த அதிமுக எம் எல் ஏ, கே சுதர்சனத்தின் மகன்), 7. மனோஜ் பான்டியன் (பி எச் பாண்டியனின் மகன்), 8. ஆ ராஜேந்திரன் (வீர பாண்டி ஆறுமுகத்தின் மகன்), 9. என் கே பி ராஜா (முன்னாள் திமுக அமைச்சர் என் கே கே பெரியசாமியின் மகன்) 10. எம் கே விஷ்ணுபிரசாத் (தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன்) 11. அருள் அன்பரசு (முன்னாள் காங்கிரஸ் எம் பி அன்பரசுவின் மகன்) 12. எஸ் ஆர் வெற்றிவேல் (முன்னாள் அதிமுக எம் எல் ஏ அரங்க நாதனின் மகன்).
இது தவிர நேற்று அறிவிக்கப்பட்ட பா ஜ க வின் 2 ஆவது பட்டியலில், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் குமரி அனனந்தனின் மகள் தமிழிசை நான்குனேரி தொகுதியில் போட்டியிடப் போவதக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆய்வு தமிழக அரசியலில் வாரிசுகளின் ஆதிக்கத்தை அம்பலப் படுத்துகிறது. நாளிதழ்களில் இது போன்ற விமர்சனப் போக்கிலான ஆய்வுகள் எதையும் இது வரை காணவில்லை.

தினகரனில் நல்லகண்ணுவின் சிறப்புப் பேட்டி 10 4 2006 இதழின் 8ஆம் பக்கத்தில் வெளிவந்துள்லது. ஜனநாயக முறையில் வந்த சர்வாதிகாரி ஜெயலலிதா என்று நல்லகண்ணு இந்த பேட்டியில் விமர்சித்துள்ளார்.

சிவகாசி தொகுதியை ஜெயலலிதா புறக்கணித்து விட்டுச் சென்றதாக தினகரனில் மட்டும் 14 ஆம் பக்கத்தில் செய்தி வெளிவந்துள்ளது. இந்தத் தகவல் வேறு இதழ்களில் இடம் பெறவில்லை. சிவகாசியில் தே ம கூ சார்பில் மதிமுக போட்டியிடுகிறது.

பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் கருணாநிதி, என்று விளாத்திகுளத்தில் வைகோ பேசிய பேச்சு தினமலரில் 16 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இன்றைய ஆய்வு:

ஜெயலலிதா, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தி மு க கூட்டணி வன்முறை மூலம் தேர்தலை நடத்த விடாமல் சதி செய்யப்பார்க்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தச் செய்தியை எல்லா நாளிதழ்களுமே வெளியிட்டிருந்தன.
"இதை தினமணி லீட் ஸ்டோரியாக்கி இருக்கிறது. தின மலர் முதல் பக்கத்து நங்கூரமாக வெளியிட்டிருக்கிறது. தினகரனில் மிகச் சுருக்கமாக 6ஆம் பக்கத்தில் வெளியிடப் பட்டிருக்கிறது. தினத்தந்தியின் 28 ஆம் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிரச்சார வண்ணப்படங்களுடன் இச்செய்தி வெளியிடப் பட்டிருக்கிறது. "
இந்தச் செய்திக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து பேட்டிகளும் அறிக்கைகளும் அளித்துள்ளனர். பக்கச் சார்பற்ற முறையில் செய்தி வெளியிட வேண்டிய நாளிதழ்கள், ஜெயலலிதா கூறிய கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தவர்களின் கருத்துகளுக்கும் உரிய இடம் ஒதுக்கி செய்தி வெளியிட்டிருக்க வேண்டும். அது தான் பத்திரிகை தர்மம், அறம்.

இது தொடர்பாக கருணாநிதி சென்னையில் பேட்டி அளித்திருக்கிறார்.
பா ம க தலைவர் ராமதாஸ் அறிக்கை அளித்திருக்கிறார், பிரச்சாரத்திலும் பேசி இருக்கிறார்.
தா பாண்டியன் பேட்டி அளித்த்ருக்கிறார், பிரச்சாரத்திலும் பேசி இருக்கிறார்.

தினமணி, "ஜெ குற்றச் சாட்டுக்கு எதிர்க் கட்சிகள் கண்டனம், தோல்வி பயத்தால் வீண் பழி சுமத்துகிறார்" என்று தலைப்புடன், முதல் பக்கத்தில் இந்த மூன்று பேர்களின் கருத்துக்களையும் தொகுத்து அளித்து விட்டது. முந்தைய நாளில் லீட் ஸ்டோரியாக்கியதால், முதல் பக்கத்திலேயே செய்தியை உரிய வகையில் வெளியிட்டு, தனது பக்கச் சார்பின்மையை வெளிப் படுத்தியிருக்கிறது தினமணி.

தினகரன் கருணாநிதியின் பேட்டியை 17 ஆம் பக்கத்தில் விரிவாகவும், ராமதாசின் கிருஷ்ணகிரிப் பேச்சை 6ஆம் பக்கத்திஉலும் தா பாண்டியனின் பேட்டியை 7 ஆம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. ஆனால், தினகரன் இது தொடர்பான ஜெயலலிதாவின் பேட்டியை மிகச் சுருக்கமாக வெளியிட்டிருந்தது; ஜெயலலிதாவுக்காஅன மறுப்பையும் கண்டனத்தையும் விரிவாக வெளியிட்டுள்ளது.
தினத்தந்தியில், கருணாநிதியின் சென்னை பேட்டி விரிவாக வெளியிட்டதுடன் சரி. இது தொடர்பான பா ம கவின் அறிக்கையையோ, ராமதாசின் பேச்சையோ வெளியிடவில்லை.

தினமலரில் கருணாநிதி பேட்டியும் இடம் பெறவில்லை, பாம கவின் அறிக்கையும் இடம் பெறவில்லை. தா பாண்டியனின் சென்னை பேச்சு விரிவாக இடம் பெற்றுள்ளது. அதில் ஜெயலலிதாவுக்குக் கண்டனமும் இடம் பெற்றுள்ளது.
நான் பெட்டி வாங்கினேனா ? எனக்கு பண ஆசை இல்லை என்று வைகோவின் சிறப்புப் பேட்டி, தினமலரில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. வைகோ வெடிச் சிரிப்புடன் காட்சி தரும் படமும் இடம் பெற்றுள்ளது. வைகோவின் பேச்சுக்களை முழுமையாகப் பதிவு செய்த தினமலர், அவரிடம் சிறப்புப் பேட்டியும் வாங்கி அதை அரைப் பக்கத்திற்கு வெளியிட்டிருப்பதால், தினமலர், வைகோவின் ஊதுகுழலைப் போலச் செயல் படுகிறது என்று கருத இடமிருக்கிறது.
இந்தக் குறிப்புடன் இன்றைய ஆய்வினை நிறைவு செய்கிறோம்.
மீண்டும் ஏப்ரல் 11 2006 நாளிதழ் குறித்த ஆய்வுடன் சந்திப்போம்.

ஊடக விமர்சனக் குழு
தேன்மொழி

Sunday, April 09, 2006

அறிக்கைகளைத் திரித்துவெளியிடுவது அறமா?

தி மு க தலைவர் சனிக்கிழமை வெளியிட்ட கேள்வி பதில் வடிவிலான அறிக்கை இன்று நான்கு நாளிதழ்களிலும் நான்கு விதமாக வெளி வந்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர், தேர்தல் வேளையில், தேர்தல் பிரசாரம் தொடர்பாக வெளியிடும் ஒரு அறிக்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், 4 நாளிதழ்களை வாசித்தாலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

தனது பத்திரிகைக்கேற்ப எடிட் செய்து (செம்மை செய்து) வெளியிடும் உரிமை உலகின் எந்தப் பத்திரிகைக்கும் உண்டு. ஆனால், செம்மை செய்வதாகச் சொல்லி, கருத்துக்களை இருட்டடிப்பு செய்வது அறமா? நேற்று, கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை 4 நாளிதழ்களும் எப்படி வெளியிட்டிருக்கின்றன என்று அலசினோம்:

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலப் பிரதி கிடைத்தால் தான் இந்த ஆய்வு முழுமை அடையும். என்றாலும், இந்த வலைப்பூவின் நோக்கமே, 4 நாளிதழ்களையும் ஒப்பிட்டு, அற ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் நாளிதழை அடையாளம் காண முயற்சிப்பது என்பதால், 4 நாளிதழ்களிலும் வெளியானதை ஆதாரமாகக் கொண்டு இங்கு ஆரயப்படுகிறது:

கருணாநிதியின் அறிக்கை கேள்வி பதில் வடிவில் இருந்ததாக 2 நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன. அவரது அறிக்கையில் குறைந்தது 7 கேள்விகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.

1. தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் கூறியிருப்பது பற்றி?
இந்தக் கேள்விக்கான பதிலில் திமுக தலைவர் "முதல்வர் ஜெயலலிதாவுக்கு புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால் ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலே விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள ஜெயலலிதா அந்த கருத்தை ஆதரிப்பாரா?", என்று எழுப்பியுள்ள கருத்து தினத்தந்தியிலும் தினமணியிலும் இடம் பெறவில்லை. தினமலரிலும், தினகரனிலும் இந்த பதில் முழுமையாக இடம் பெற்றிருக்கிறது. தினகாரன் இந்த விஷயத்தையே, இந்த செய்திக்கான முகப்புரையாகத் தந்திருக்கிறது.

2. கேள்வி:- ஒரு கட்சியின் குமரி மாவட்டக் கழகச் செயலாளரிடம் தாங்கள் பேசியதாகவும், அவரை தி.மு.கழகத்தில் சேரும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஒருவர் கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கான பதிலை தினத் தந்தி மட்டுமே வெளியிட்டிருக்கிறது. பிற 3 நாளிதழ்களும் இந்த பதிலை எடிட் செய்து விட்டன.

3. முரசொலி மாறனின் மகன்கள் பல லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள கார்களில் பயணம் செய்வதாக ஒருவர் தொடர்ந்து கூறி வருகிறாரே? என்ற கேள்விக்கான பதிலை தினமணி எடிட் செய்து விட்டது. தினமலர் இந்த விஷயத்தைத் தான் இந்தச் செய்திக்கான முகப்புரையாக வழங்கியிருக்கிறது.

4.தயாநிதி மாறன் நடத்துகின்ற நிறுவனத்திற்குப் பொறுப்பான அரசுத்துறையை அவரே ஏற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே? இந்தக் கேள்விக்கான பதிலையும் தினமணி எடிட் செய்து விட்டது.

5. ஜெயலலிதா கூட்டத்திற்கு கூட்டம் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறுகிறாரே? இந்தக் கேள்வியை தினத் தந்தி எடிட் செய்து விட்டது. தினமணி இந்த விஷயத்தைத் தான் முகப்புரையாக்கியிருக்கிறது.

6. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் 10 மணிக்கு மேல் எங்கேயும் பேசக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியதற்கு காரணம் தி.மு.க., தான் என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? என்ற கேள்விக்கான பதில் தினத் தந்தியில் இடம் பெறவில்லை. பிற 3 நாளிதழ்களும் இந்தக் கேள்விக்கான பதிலை வெளியிட்டிருக்கின்றன.

7. தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத் தொகை கிடைப்பதை கருணாநிதி தடுத்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்பது தொடர்பான கேள்விக்கு தினமணி மட்டுமே பதிலை வெளியிட்டிருக்கிறது.

இந்த செய்தியை ஆய்வு செய்த போது நமக்கு எழும் கேள்விகள்:
செம்மை செய்வது என்பது என்ன? தகவல்களைச் சரி பார்த்து, இடம் இருக்கும் அளவிற்கு ஏற்ப செய்திகளைச் சுருக்கித் தருவதில்லையா? சப் எடிட்டர், தன் பத்திரிகை முதலாளிக்குப் பிடிக்காத சொற்களை எடிட் செய்து, வெளியிடுவது தான் இன்று கடிஅப்பிடிக்கப் படும் வழிமுறையா?

செய்திகளைத் தெரிவு செய்வதிலும், முறையாகச் செம்மை செய்வதிலும், ஏதேனும் ஒழுக்க விதிகள் கடைப் பிடிக்கப் படுகின்றனவா என்ற கேள்வி பலமாக எழுகிறது.

எமது இந்த ஆய்விற்கு ஆதாரமாக, 4 நாளிதழ்களும் இந்தச் செய்தியை வெளியிட்ட படி, கீழே ஒவ்வொன்றாகத் தருகிறோம். அதையடுத்து இன்றைய வழக்கமான பிற ஆய்வுகளும் இடம் பெறுகின்றன.

தினகரனில் வெளிவந்த செய்தி இது:___________

தினத்தந்தியில் இடம் பெற்ற செய்தி இது:


தி.மு.க. தேர்தல் அறிக்கை:
காங்கிரஸ் கருத்து பற்றி கருணாநிதி விளக்கம்


சென்னை, ஏப்.9-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் கூறிய கருத்து பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி எழுதி உள்ள கேள்வி-பதில் வருமாறு:-
தேர்தல் வாக்குறுதி

கேள்வி:-
தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் கூறியிருப்பது
பற்றி?

பதில்:- ஒரு கட்சியின் சார்பாக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் உள்ளவை அந்தக் கட்சியைத்தான் கட்டுப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு அணியில்
கூட்டணியாக இருக்கிறோம் என்பதற்காக அந்த அணியிலே உள்ள ஒரு கட்சியின் தேர்தல்
அறிக்கையில் உள்ளவை அனைத்தும், அந்த அணியிலே உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடானவையாக இருக்க முடியாது.
கேள்வி:- ஒரு கட்சியின் குமரி மாவட்டக் கழகச்
செயலாளரிடம் தாங்கள் பேசியதாகவும், அவரை தி.மு.கழகத்தில் சேரும்படி கேட்டுக்
கொண்டதாகவும் ஒருவர் கூறியிருக்கிறாரே?
பதில்:- அவரிடம் நான் எப்போது, எப்படிப்
பேசினேன்? தி.மு.கழகக் கூட்டணியிலே அவர்கள் ஒன்றாக இருக்கும்போது, அவருக்கு நான்
வேலையற்றுப் போய் என் கட்சியிலே சேருங்கள், இடம் தருகிறேன் என்று கேட்க வேண்டிய
அவசியம் ஏதாவது இருக்க முடியுமா?
கார்கள்
கேள்வி:- முரசொலி மாறனின் மகன்கள்
பல லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள கார்களில் பயணம் செய்வதாக ஒருவர் தொடர்ந்து கூறி
வருகிறாரே?
பதில்:- அவர்கள் அரசியல் நடத்தி, அதிலே சம்பாதித்து அந்தக் கார்களை வாங்கவில்லையே. இளம் வயதிலேயே தனியாகத் தொழில் நடத்தி, அதிலே சம்பாதித்த
தொகையிலிருந்து அந்தக் கார்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
கேள்வி:-
தயாநிதி மாறன் நடத்துகின்ற நிறுவனத்திற்குப் பொறுப்பான அரசுத்துறையை அவரே
ஏற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே?
பதில்:- தயாநிதி மாறன் தபால் துறை,
தொலைபேசித் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றுக்கான மத்திய அமைச்சர். இதிலே
குறிப்பிட்டுள்ள எந்தத் துறை சம்மந்தமான தொழிலையும் அவரோ, அவருடைய குடும்பத்தினரோ
நடத்தவில்லை. அவருடைய சகோதரர் நடத்துகின்ற தொழில் தொலைக்காட்சி நிறுவனம். அதற்கான
மத்திய அமைச்சர் தாஸ் முன்ஷி. அவர்தான் பத்திரிகை, டி.வி., ரேடியோ ஆகிய மூன்று துறைகளுக்கான அமைச்சர்.
இவ்வாறு கருணாநிதி கூறியிருக்கிறார்.
Source : Daily Thanthi
__________________________

தினமலரில் இடம் பெற்ற செய்தி இது:

இளம் வயதில் சம்பாதித்த பணத்தில் கார் வாங்கியுள்ளனர் மாறன் மகன்கள் சொல்கிறார் கருணாநிதி


சென்னை: ""மாறனின் மகன்கள் இளம் வயதில் தனியாக தொழில் நடத்தி சம்பாதித்த பணத்தில் வாங்கிய கார்களை பயன்படுத்துகின்றனர்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களை சந்திக்காத நாட்களில் நிருபர்கள் கேள்வி கேட்பது போன்று அவரே கேள்வி தயார் செய்து அதற்கு பதிலும் அளித்து
பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பார். அப்படி அவர் நேற்று அனுப்பிய கேள்விபதில் அறிக்கை:
ஜெயலலிதா கூட்டத்திற்கு கூட்டம் பஸ் கட்டணத்தை
உயர்த்தவில்லை என்று கூறுகிறாரே?
கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த
மூன்றாவது மாதமே மினி பட்ஜெட் போல ஏராளமான பொருட்களின் மீதெல்லாம் வரியை உயர்த்திய
நேரத்தில் மின் கட்டணம், பஸ் கட்டணத்தை, ரயில் கட்டணத்தை விட அதிக அளவிற்கு உயர்த்தினார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறியதை
ஜெயலலிதா தனக்கு கிடைத்த ஆதரவு செய்தி என்பதைப் போல சொல்லியிருக்கிறாரே?
ஒரு கட்சியின் சார்பாக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் உள்ளவை கட்சியைத்தான்
கட்டுப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு அணியில் கூட்டாக இருக்கிறோம் என்பதற்காக
அந்த அணியிலே உள்ள ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளவை அனைத்தும் அந்த அணியிலே உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடானவையாக இருக்க முடியாது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால் ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலே விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக றிப்பிடப்பட்டிருக்கும். அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள ஜெயலலிதா அந்த கருத்தை ஆதரிப்பாரா? தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் 10 மணிக்கு மேல் எங்கேயும் பேசக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியதற்கு காரணம் தி.மு.க., தான் என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? முதல்வரின் அந்தக் கூற்று பொய். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தான் தேர்தல் கமிஷன் இரவு 10 மணியோடு பிரசாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணை பிறப்பித்தள்ளதாகவும் ஜெயலலிதாவிற்கு தேர்தல் ஆணையம் உடனடியாக பதில் அளித்துள்ளது. இரவு 11 மணி வரை பேசலாம் என்பதை கருத்தில் கொண்டு தான் தனது சுற்றுப் பயணம் வகுக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளாரே? முதல்வருக்காக சுற்றுப்பயணம் வகுத்த அதிகாரிகளும், முதல்வர் அலுவலகமும் எந்த அளவிற்கு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைக் கூட நன்றாகத் தெரிந்து கொள்ளாமல் செயல்பட்டிருக்கின்றனர் என்பதைத் தான் ஜெயலலிதாவின் பதில் நமக்கு தெளிவாக்குகின்றது. மாறனின் மகன்கள் பல லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள கார்களில் பயணம் செய்வதாக ஒருவர் தொடர்ந்து புலம்பி வருகிறாரே? அவர்கள் அரசியல் நடத்தி, அதிலே சம்பாதித்து அந்தக் கார்களை வாங்கவில்லை. இளம் வயதிலேயே தனியாகத் தொழில் நடத்தி அதிலே சம்பாதித்த தொகையிலிருந்து அந்தக் கார்களை வாங்கி பயன்படுத்துகின்றனர் என்றால் இவருக்கு ஏன் வயிறு பற்றி எரிகிறது? இதுவா அரசியல்? எவர் எந்தக் காரில் போகிறார் என்று தனிப்பட்ட முறையில் பேசுவதா தேர்தல்? சாதனைகளைச் சொல்லி பேசிட வக்கற்ற நிலையில் சண்ட மாருதம் என்ன வேண்டிக் கிடக்கிறது? தயாநிதிமாறன் நடத்துகின்ற நிறுவனத்திற்குப் பொறுப்பான அரசுத் துறையை அவரே ஏற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே? மாறனின் சகோதரர் நடத்துகின்ற தொழில் தொலைக் காட்சி நிறுவனம். அதற்கான மத்திய அமைச்சர் தாஸ்முன்ஷி. அவர் தான் பத்திரிகை, டிவி, ரேடியோ ஆகிய மூன்று துறைகளுக்குமான அமைச்சர். இந்த விவகாரத்தைக் கூடத் தெரியாதவர் தான் 18 ஆண்டுகள் பார்லிமென்ட்டில் உறுப்பினராக இருந்திருக்கிறார். ஆத்திரம் அறிவுக்கு சத்துரு. இவ்வாறு கருணாநிதி எழுதியுள்ளார்.

Source : Dinamalar
_________
தினமணியில் இடம் பெற்ற செய்தி இது:

பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என ஜெ. சொல்வது உண்மையல்ல: கருணாநிதி அறிக்கை


சென்னை, ஏப்.9: அதிமுக ஆட்சியில் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவதில் உண்மையில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த மூன்றாவது மாதத்தில் மினி பட்ஜெட் போல ஏராளமான பொருள்களின் மீது வரியை உயர்த்திய நேரத்தில், மின் கட்டணம், பஸ் கட்டணம் ஆகியவற்றையும் உயர்த்தினார்.
ரயில் கட்டணத்தைவிட அதிகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை யாரும் மறுக்க முடியாது.
தேர்தல் அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளைக் கட்டுப்படுத்தாது என்பது உண்மை.
கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் வாக்குறுதி மற்ற கட்சிகளுக்கு உடன்பானதாக இருக்க வேண்டும் என்று கிடையாது. இன்னும் சொல்லப் போனால் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள சில விஷயங்களை, அக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் அதிமுக
ஆதரிக்குமா?
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் இரவு 10 மணிக்கு மேல் பேசக் கூடாது என்ற முடிவு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் எடுக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. நான் சொல்லி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஜெயலலிதா கூறுவது தவறான தகவல். தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத் தொகை கிடைப்பதை கருணாநிதி தடுத்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 25-11-2005-ல் நடந்த திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தமிழக அரசு கோரியிருக்கும் ரூ.1742 கோடி போதாது என்பதால், தமிழக அரசு கோரும் கூடுதல்
நிதியை உடனடியாக முறையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
26.11.2005-ல் நிருபர்கள் சந்திப்பில், நிவாரணப் பணிகள்
திருப்தி அளிக்கிறதா என கேட்டனர். அப்போதுகூட, இதை நாங்கள் அரசியல் ஆக்க விரும்பவில்லை என்றும், தமிழக அரசு கேட்கும் தொகையை மத்திய அரசு அளித்து உதவ வேண்டும் என்றும் கூறினேன்.
எனவே, தமிழகத்துக்கு மத்திய அரசு நிவாரணத் தொகை
கொடுப்பதை நான் தடுத்ததாகச் சொல்லப்படுவது உண்மைக்கு மாறானது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
Source : Dinamani

_________________

ஒரு ஒப்பீட்டிற்காக தி இந்து நாளிதழில் இதே பேட்டி எவ்வாறு வெளியிடப் பட்டிருக்கிறது என்று ஒப்பிட்டோம். தி இந்து நாளிதழ் இரண்டு விஷயங்களை மட்டும் வெளியிட்டிருக்கிறது என்பதைக் கண்டோம்.

Karunanidhi refutes Jayalalithaa's charge
Says DPA urged Centre to sanction adequate funds for flood relief

CHENNAI: Dravida Munnetra Kazhagam president M. Karunanidhi on Saturday refuted Chief Minister Jayalalithaa's charge that the Democratic Progressive Alliance parties prevented the sanctioning of adequate Central funds for flood relief in the State last year.
Immediately after the Central team visited the flood-hit areas in the State, the DPA adopted a resolution urging the Centre to sanction Rs. 1,742 crore to Tamil Nadu, as demanded by the State Government, Mr. Karunanidhi said. The resolution also said the Centre should not hesitate to sanction additional funds if the State Government felt that they were not sufficient to provide adequate relief to the flood-hit people, a party release said.
Denying the Chief Minister's charge that the DMK was responsible for bringing the deadline for campaigning from 11 p.m. to 10 p.m., Mr. Karunanidhi said the decision was taken by the Election Commission at the instance of the Supreme Court and he had no role in it.
The Chief Minister was making the charge only to mislead people, he said.
Source : THE HINDU, http://www.hindu.com/2006/04/09/stories/2006040914920600.htm

இன்றைய பிற ஆய்வுகள்:

தினமலரிலும் தினமணியிலும் தினம் இன்று தலைவர்கள் எங்கே பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது பற்றிய குறிப்பு தனி செய்தியாக இடம் பெறுகிறது. மறு நாள், அந்தத் தலைவர்கள் அந்தந்த ஊர்களில் பேசிய பேச்சுக்கள் இடம் பெற்று வருகின்றன. ஆனால், இது வரை ஒரு நாள் கூட திருமாவளவன் என்ன பேசினார் என்ற தகவல் தினமலரிலோ, தினமணியிலோ இடம் பெற்றதில்லை. புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாக இது வரை 4 பத்திரிகைகளும் ஒரு வரி கூட செய்தி வெளியிட்டதில்லை.

டி ஜே எஸ் ஜார்ஜ் "எப்போது வரும் விடிவு காலம்", என்ற கட்டுரை தினமணியில் இடம் பெற்றுள்ளது. அரசியல் கட்சிகள், வாக்காளர்களை எந்த அளவுக்கு முட்டாள்கள் எனக் கருதுகின்றன என்பதற்கு அவற்றின் தேர்தல் அறிக்கைகளை ஒரு நோட்டம் விட்டாலே போதும், என்ற அடுக்குத் தலைப்புடன் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது. அண்மையில் வந்த ஒரு நியாயமான, பக்கச் சார்பற்ற ஒரு கட்டுரையாக இதைக் குறிப்பிடலாம். நாம் ஆய்வைத் தொடங்கிய பின் இது போன்ற ஒரு கட்டுரையை இது வரை எந்த நாளிதழிலும் இடம் பார்க்க முடிந்ததில்லை.

இன்று ராமதாசிடம் தினமணியும், தி இந்து நாளிதழும், தனித் தனியாக விரிவாகப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளன.
ஸ்டாலின் அளித்துள்ள சிறப்பு பேட்டி, தினகரனில் 8ஆம் பக்கத்தில் வெளியாக்யுள்ளது. ஜெயலலிதா திருந்தவில்லை, திருந்தியது போல நடிக்கிறார் என்பது இந்த பேட்டி செய்திக்கு தரப்பட்டுள்ள தலைப்பு.
"அதிமுகவின் அதிகார பலத்தை முறியடிப்போம்", என்ற வாசனின் சிறப்புப் பேட்டி தினமணியின் 9ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.


அரசியல் கட்சிக்ளின் இலவச கவர்ச்சி அறிவிப்புகளால் கஜானா காலி ஆவதால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடையாது. வளர்ச்சிக்குத் தடை என்ற ஆய்வுக் கட்டுரை, பொதுவாக மானியங்களை எதிர்த்து வாதிடுகிறது. (தினமலர் ப. 8)
ஜெயலலிதா இன்று முதல் 7 நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் 930 முதல் 10 மணி வரை தனது ஜெயா டிவியில் சிறப்புப் பேட்டி வழங்க இருப்பதாக தினத் தந்தியில் இடம் பெற்றுள்ள ஜெயா டிவியின் விளம்பரம் குறிப்பிடுகிறது.
விஜய்காந் வைகோவின் பேச்சுக்கள் இன்று தினமலரில் 5 தனித் தனி செய்திகளாக இடம் பெற்றுள்ளன. நெப்போலியன் போல வெற்றி பெறுவோம் என்று விஜயகாந் பேசிய பேச்சு தினமணியில் 6ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தோல்வி பயத்தால், தேர்தலை தள்ளி வைக்க திமுக சதி, ஜெ குற்றச்சாட்டு என்ற செய்தி, நேற்று (சனிக்கிழமை) மதுரையில் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின் அடிப்படையில் அமைந்தது. இதை தினமணி லீட் ஸ்டோரியாக்கி இருக்கிறது. தின மலர் முதல் பக்கத்து நங்கூரமாக வெளியிட்டிருக்கிறது. தினகரனில் மிகச் சுருக்கமாக 6ஆம் பக்கத்தில் வெளியிடப் பட்டிருக்கிறது. தினத்தந்தியின் 28 ஆம் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிரச்சார வண்ணப்படங்களுடன் இச்செய்தி வெளியிடப் பட்டிருக்கிறது.

அகில இந்திய பார்வார்ட் பிளாக் தமிழக தலைவர் கார்த்திக் தலைவர்கள் யாரையும் எதிர்த்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று கூறிய பேட்டியும், வேட்பாளர் பட்டியலும் தினத் தந்தியில் 24 ஆம் பக்கத்திலும், தினகரனில் முதல் பக்கத்திலும், தினமணியில் 11 ஆம் பக்கத்திலும், தினமலரில் 3 ஆம் பக்கத்திலும் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா இன்று முதல் 3 நாட்களாகப் பிரச்சாரம் செய்யவிருக்கிறார் என்ற செய்தி தினத்தந்தியின் லீட் ஸ்டோரியாக்கப் பட்டுள்ளது. பிற 3 நாளிதழ்களும் இச்செய்தியை விரிவாகவே வெளியிட்டுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பேசிய பேச்சுக்கள் தினகரனில் மட்டும் இடம் பெற்றுள்ளன. தவிர, செது சமுத்திரம் பற்றி வைகோ கேள்வி எழுப்பாததேன் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயல்ர் ராஜவின் பேச்சு தினமணியில் மட்டும் இடம் பெற்றுள்ளது.