Monday, April 10, 2006

4 இல் 3 பத்திரிகைகள் கட்சிகளுக்குச் சார்பானவை

தமிழக சட்டமன்ற முன்னாள் சபாநாயகரான சேடப்பட்டி முத்தையா திமுகவில் சேர்ந்த செய்தியை, 4 நாளிதழ்களும் 10 ஏப்ரல் 2006 நாளிட்ட இதழில் வெளியிட்டுள்ளன. வைகோ வீட்டிற்கு ஜெயலலிதா விஜயம் செய்ததையும் 4 ஆளிதழ்களும் 10 ஏப்ரல் 2006 நாளிட்ட இதழில் வெளியிட்டுள்ளன. கலர் டிவி, இரண்டு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் ஆகிய மூன்று விஷயங்களைச் சுற்றியே பிரச்சாரம் நகன்று கொண்டிருக்கின்றது. ஆய்வுக்குட்படுத்தப் பட்டு வரும் 4 பத்திரிகைகளும் வேறு விவாதத்துக்குரிய விஷயங்கள் எதையும் முன் வைக்கவுமில்லை.

இன்று கவனிக்க வெண்டிய
சில செய்திகளைப் பார்க்கலாம்.

இந்தியா டுடே வார இதழின் தமிழ்ப் பதிப்பில் (ஏப்ரல் 19 2006 நாளிட்டது. ப 22௨3) வெற்றி கிடைக்குமா? என்ற தலைப்பில் வாரிசு அரசியல் குறித்து ஒரு அலசல் இஅட்ம் பெற்றுள்ளது. "மன்னராட்சி மலையேறிவிட்டாலும் தமிழக அரசியலில் வாரிசுகளுக்குப் பஞ்சமில்லை. இந்த ச்ட்டமன்றத் தேர்தலிலும் பல வாரிசுகளுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால் வாகை சூடுவார்களா?", என்ற கேள்வியுடன் இந்த ஆய்வு தொடங்குகிறது. இந்த ஆய்வில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் அரசியல் வாரிசுகளின் பட்டியல் இடம் பெற்றுள்ளது.
அரசியல் தலைவர்களின் வாரிசுகள் 12 பேர் இந்தத் தேர்தலில் களமிறக்கப் பட்டுள்ளனர். 1. ஸ்டாலின் - கருணாநிதியின் மகன். 2. பூங்கோதை ஆலடி அருணா (ஆலடி அருணாவின் மகள்), 3. தங்கம் தென்னரசு (முன்னாள் அமைச்சர் தங்கப் பாணிட்யனின் மகன்). 4. அன்பில் பெரியசாமி (அன்பில் தர்மலிங்கத்தின் மகன்). 5. கீதா ஜீவன் (தூத்துக்குடி பெரியசாமியின் மகள்), 6. கே எஸ் விஜயகுமார் (மறைந்த அதிமுக எம் எல் ஏ, கே சுதர்சனத்தின் மகன்), 7. மனோஜ் பான்டியன் (பி எச் பாண்டியனின் மகன்), 8. ஆ ராஜேந்திரன் (வீர பாண்டி ஆறுமுகத்தின் மகன்), 9. என் கே பி ராஜா (முன்னாள் திமுக அமைச்சர் என் கே கே பெரியசாமியின் மகன்) 10. எம் கே விஷ்ணுபிரசாத் (தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன்) 11. அருள் அன்பரசு (முன்னாள் காங்கிரஸ் எம் பி அன்பரசுவின் மகன்) 12. எஸ் ஆர் வெற்றிவேல் (முன்னாள் அதிமுக எம் எல் ஏ அரங்க நாதனின் மகன்).
இது தவிர நேற்று அறிவிக்கப்பட்ட பா ஜ க வின் 2 ஆவது பட்டியலில், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் குமரி அனனந்தனின் மகள் தமிழிசை நான்குனேரி தொகுதியில் போட்டியிடப் போவதக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆய்வு தமிழக அரசியலில் வாரிசுகளின் ஆதிக்கத்தை அம்பலப் படுத்துகிறது. நாளிதழ்களில் இது போன்ற விமர்சனப் போக்கிலான ஆய்வுகள் எதையும் இது வரை காணவில்லை.

தினகரனில் நல்லகண்ணுவின் சிறப்புப் பேட்டி 10 4 2006 இதழின் 8ஆம் பக்கத்தில் வெளிவந்துள்லது. ஜனநாயக முறையில் வந்த சர்வாதிகாரி ஜெயலலிதா என்று நல்லகண்ணு இந்த பேட்டியில் விமர்சித்துள்ளார்.

சிவகாசி தொகுதியை ஜெயலலிதா புறக்கணித்து விட்டுச் சென்றதாக தினகரனில் மட்டும் 14 ஆம் பக்கத்தில் செய்தி வெளிவந்துள்ளது. இந்தத் தகவல் வேறு இதழ்களில் இடம் பெறவில்லை. சிவகாசியில் தே ம கூ சார்பில் மதிமுக போட்டியிடுகிறது.

பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் கருணாநிதி, என்று விளாத்திகுளத்தில் வைகோ பேசிய பேச்சு தினமலரில் 16 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இன்றைய ஆய்வு:

ஜெயலலிதா, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தி மு க கூட்டணி வன்முறை மூலம் தேர்தலை நடத்த விடாமல் சதி செய்யப்பார்க்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தச் செய்தியை எல்லா நாளிதழ்களுமே வெளியிட்டிருந்தன.
"இதை தினமணி லீட் ஸ்டோரியாக்கி இருக்கிறது. தின மலர் முதல் பக்கத்து நங்கூரமாக வெளியிட்டிருக்கிறது. தினகரனில் மிகச் சுருக்கமாக 6ஆம் பக்கத்தில் வெளியிடப் பட்டிருக்கிறது. தினத்தந்தியின் 28 ஆம் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிரச்சார வண்ணப்படங்களுடன் இச்செய்தி வெளியிடப் பட்டிருக்கிறது. "
இந்தச் செய்திக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து பேட்டிகளும் அறிக்கைகளும் அளித்துள்ளனர். பக்கச் சார்பற்ற முறையில் செய்தி வெளியிட வேண்டிய நாளிதழ்கள், ஜெயலலிதா கூறிய கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தவர்களின் கருத்துகளுக்கும் உரிய இடம் ஒதுக்கி செய்தி வெளியிட்டிருக்க வேண்டும். அது தான் பத்திரிகை தர்மம், அறம்.

இது தொடர்பாக கருணாநிதி சென்னையில் பேட்டி அளித்திருக்கிறார்.
பா ம க தலைவர் ராமதாஸ் அறிக்கை அளித்திருக்கிறார், பிரச்சாரத்திலும் பேசி இருக்கிறார்.
தா பாண்டியன் பேட்டி அளித்த்ருக்கிறார், பிரச்சாரத்திலும் பேசி இருக்கிறார்.

தினமணி, "ஜெ குற்றச் சாட்டுக்கு எதிர்க் கட்சிகள் கண்டனம், தோல்வி பயத்தால் வீண் பழி சுமத்துகிறார்" என்று தலைப்புடன், முதல் பக்கத்தில் இந்த மூன்று பேர்களின் கருத்துக்களையும் தொகுத்து அளித்து விட்டது. முந்தைய நாளில் லீட் ஸ்டோரியாக்கியதால், முதல் பக்கத்திலேயே செய்தியை உரிய வகையில் வெளியிட்டு, தனது பக்கச் சார்பின்மையை வெளிப் படுத்தியிருக்கிறது தினமணி.

தினகரன் கருணாநிதியின் பேட்டியை 17 ஆம் பக்கத்தில் விரிவாகவும், ராமதாசின் கிருஷ்ணகிரிப் பேச்சை 6ஆம் பக்கத்திஉலும் தா பாண்டியனின் பேட்டியை 7 ஆம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. ஆனால், தினகரன் இது தொடர்பான ஜெயலலிதாவின் பேட்டியை மிகச் சுருக்கமாக வெளியிட்டிருந்தது; ஜெயலலிதாவுக்காஅன மறுப்பையும் கண்டனத்தையும் விரிவாக வெளியிட்டுள்ளது.
தினத்தந்தியில், கருணாநிதியின் சென்னை பேட்டி விரிவாக வெளியிட்டதுடன் சரி. இது தொடர்பான பா ம கவின் அறிக்கையையோ, ராமதாசின் பேச்சையோ வெளியிடவில்லை.

தினமலரில் கருணாநிதி பேட்டியும் இடம் பெறவில்லை, பாம கவின் அறிக்கையும் இடம் பெறவில்லை. தா பாண்டியனின் சென்னை பேச்சு விரிவாக இடம் பெற்றுள்ளது. அதில் ஜெயலலிதாவுக்குக் கண்டனமும் இடம் பெற்றுள்ளது.
நான் பெட்டி வாங்கினேனா ? எனக்கு பண ஆசை இல்லை என்று வைகோவின் சிறப்புப் பேட்டி, தினமலரில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. வைகோ வெடிச் சிரிப்புடன் காட்சி தரும் படமும் இடம் பெற்றுள்ளது. வைகோவின் பேச்சுக்களை முழுமையாகப் பதிவு செய்த தினமலர், அவரிடம் சிறப்புப் பேட்டியும் வாங்கி அதை அரைப் பக்கத்திற்கு வெளியிட்டிருப்பதால், தினமலர், வைகோவின் ஊதுகுழலைப் போலச் செயல் படுகிறது என்று கருத இடமிருக்கிறது.
இந்தக் குறிப்புடன் இன்றைய ஆய்வினை நிறைவு செய்கிறோம்.
மீண்டும் ஏப்ரல் 11 2006 நாளிதழ் குறித்த ஆய்வுடன் சந்திப்போம்.

ஊடக விமர்சனக் குழு
தேன்மொழி

No comments: