Sunday, April 02, 2006

இதழியல் மாணவர்களின் பதிவு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பை இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு செய்யவிருக்கும் மாணவர்களாகிய நாங்கள், எமது பட்டப் படிப்பின் ஒரு பயிற்சியாக இந்த வலைப்பூவைத் தொடங்குகிறோம்.

தேர்தல் பிரச்சாரத்தை முக்கிய தலைவர்கள் தொடங்கி விட்டார்கள். 01 04 2006 தொடங்கி தேர்தல் முடிவுகள் வெளியிடப் படும் வரை இந்த வலைப் பூவைத் தொடரத் திட்டமிட்டிருக்கிறோம். எங்களின் பட்ட மேற்படிப்பில் ஊடக ஒழுக்கங்கள் குறித்து கற்று வருகிறோம். இதில், அற ஒழுக்கங்கள் குறித்தும், ஊடகச் சட்டங்கள் குறித்தும் படித்து வருகிறோம். தேர்தல் வேளையில், தமிழ் நாளிதழ்கள் எவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றன என்பது குறித்து ஆராய்வதே எங்களின் முக்கிய நோக்கம். குறிப்பாக, துல்லியம், பக்கம் சாராமை, நியாயமுடன் செய்திகளை வெளியிடுதல் போன்ற அடிப்படை விஷயங்களில் தமிழ் நாளிதழ்கள் என்ன விதமான போக்கினைக் கையாண்டு வருகின்றன என்பதைக் கண்டுணர்வதே எம்முடைய அக்கறையாக இருக்கும். இது, தமிழ் நாளிதழ்களைப் புரிந்து கொள்ள எமக்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.
திருநெல்வேலி மாநகரிலிருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் அதிக எண்ணிக்கையில் வெளியாகும், தினத்தந்தி, தினமலர், தினமணி, தினகரன் ஆகிய நான்கு நாளிதழ்களையும் ஆய்வுக்கு உட்படுத்துவது என்று தீர்மானித்திருக்கிறோம்.

எமது விமர்சனங்கள் குறித்த, தமிழ் சமூகத்தின் எதிர்வினையை மிகுந்த ஆர்வமுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம்.

ஆர்வமுடன்,

தேர்தல் ஊடக விமர்சனக் குழுவினர்

_________

14 comments:

hameedabdullah said...

NALLA THARAMAANA AYVU ALASAL VAAZTTHUKKAL...

குறும்பன் said...

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.
தினமலர் - அதிமுக / பாஜக சார்பு. திமுக எதிர்ப்பு....
தினகரன் - திமுக சார்பு....
தினத்தந்தி - ஆளும் கட்சி சார்பு...
தினமணி - உருப்படியான நாளிதழ். பிரச்சனை உள்ளூர் செய்திகளுக்கு குறைவான முக்கியதுவம் அல்லது இன்னும் அதிக முக்கியதுவம் தேவை.
இந்த என் ( ஊர் அறிந்த ) கண்ணோட்டங்களுடன் உங்கள் விமர்சனங்களை / அலசல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தமிழ் சசி said...

இது நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.

தமிழக ஊடகங்களைப் பொறுத்தவரை நடுநிலையான நாளேடு என்று சொல்லத் தகுந்த வகையில் இருப்பது தினமணி மட்டுமே. ஆனால் இதனை சாதாரண மக்கள் வாசிப்பது இல்லை என்பது மிகப் பெரிய குறை

தினத்தந்தியைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை

தினமலர் ஊடகங்களில் மிக மோசமாக சார்பு நிலையை கடைப்பிடித்து வருகிறது. செய்திகளைக் கூட தன் சார்பு நிலைக்கு ஏற்றவாறு வார்த்தைகளை போட்டு மக்களை திமுகவிற்கு எதிராக மாற்ற முனைகிறது.

தினகரனும் இதே நிலையில் தான் உள்ளது. ஆனால் தினமலரை விட தினகரனில் ஒரு ஆரோக்கியம் என்னவென்றால் தினமலர் போல "ஜெயலலிதா மக்களை ஏமாற்றினார்", என்பது போல வார்த்தைகளை செய்திகளில் பயன்படுத்துவதில்லை

பத்திரிக்கைகளின் போக்கு குறித்து நான் கீழ்க்கண்ட பதிவுகளில் எழுதி இருக்கிறேன்

http://thamizhsasi.blogspot.com/2006/03/blog-post_11.html

http://thamizhsasi.blogspot.com/2006/02/blog-post.html

Venkat said...

வருக, வருக. நீங்கள் தமிழக மாணவர்கள் பலரும் செய்யாத முயற்சியில் இறங்கியிருக்கிறீர்கள். உதாரணமாக, தமிழகத்தில் கணினி பயிலும் மாணவர்கள் யாரும் நமக்கேயான கணினி நிரலி ஓன்றைத் தயாரிக்க இதுவை முயற்சி மேற்கொண்டதாகத் தெரியவில்லை. ஊடகம் பயிலும் நீங்கள் 'இன்றைய' ஊடகத்தைக் கைக்கொண்டிருப்பது மிக மகிழ்ச்சியளிக்கிறது.

உங்களைப் போன்ற மாணவர்களிடமிருந்துதான் வருங்காலத்திற்கான ஊட்கங்கள் கிளைக்க வேண்டும். அதற்கு இன்றைய ஊடகங்களின் பாதையிலேயே செல்லாமலிருக்க, அவர்களின் தவ்றுகளைத் திரும்பச் செய்யாதிருக்க, அவற்றினின்று பாடங்களைக் கற்றுக்கொள்ள இந்த முயற்சி மிக அவசியம்.

மீண்டும், உங்கள் ஊக்கத்திற்குப் பாராட்டுகள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.

கமல் said...

உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஊடக ஒழுக்கங்கள் மற்றும் சட்டங்கள் பற்றிய மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால், சென்னையில் டாக்டர்.மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தை நடத்திவரும் பேராசிரியர் மா.இரா.அரசு (பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்)
அவர்களை நாடலாம். மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த முனைப்புடையவர்.

பள்ளி, தேர்வு, சினிமா என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வராமல் இருக்கும் இன்றைய பெரும்பாலான மாணவர்களுக்கு மத்தியில், உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

நன்றி
கமல்

newsintamil said...

நண்பர்களே
தலைப்புகளை சிறிதாக (இரண்டு அல்லது மூன்று சொற்களுக்குள்) வைத்துக் கொள்ளுங்கள். இல்லா விட்டால் பதிவுகளை பிளாக்கர் விழுங்கிவிடும்.
அன்புடன்
வலைஞன்

குமரேஸ் said...

ஊடக ஒழுக்கங்கள் குறித்து உங்கள் ஆய்வுகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

அரசியல் தேர்தல் களுக்கு அப்பாலும் பல விடயங்களில் ஊடகங்களின் தற்கால நடவடிக்கைளை ஆய்வு செய்தல் அவசியம்

maalan said...

வரவேற்கிறேன்.வாழ்த்துகிறேன். அச்சு இதழ்களோடு இணைய இதழ்களையும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளுங்கள். வணிக நிர்பந்தங்கள், ஊடக ஒழுக்கங்களில் எத்தகைய அழுத்தங்களைத் தருகின்றன என்பதை நீங்கள் அளவிட, ஒப்பிட அது உதவும்.
வலைப்பதிவுகளையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.(மாற்று ஊடகம் என்ற அளவில்)
இம்மாத திசைகள் (www.thisaigal.com) தேர்தலை மையப்படுத்தி வெளியாகியிருக்கிறது.

அன்புடன்
மாலன்

Media Watch Team said...

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. தமிழ் சசியின் தேர்தல் களம் : ஊடகங்களின் பங்களிப்பு என்ற கட்டுரையை எமக்குள் விவாதிக்க இருக்கிறோம். மாலனின், திசைகள் (தேர்தல் சிறப்புப் பதிப்பு) வாசித்து எமக்குள் விவாதிக்கப்படும். கமல் யோசனைப் படி ராசமாணிக்கனாரின் ஆய்வு மையத்தைத் தொடர்பு கொள்வோம். வலைஞனின் யோசனைக்கு நன்றி. உடனடியாக நீளத்தைக் குறைப்போம். மீண்டும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. எங்களின் விமர்சனங்கள் குறித்த உங்களின் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

Muruga said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கும் தினமணி நாளிதழுக்கான சுட்டி தவறாக இருக்கிறதே...!!!

Media Watch Team said...

தவற்றைச் சுட்டிக் காட்டிய முருகனுக்கு நன்றி. தினமணிக்கான சுட்டி சரிசெய்யப் பட்டுவிட்டது.

அழகப்பன் said...

வாழ்த்துக்கள்.

யாழ்ப்பாணம் said...

தங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் நடக்கும் நிலமைகளை அறியத்துடிக்கும் என் போன்ற ஈழத்தவர்களுக்கு தாங்கள் நடுநிலை வழுவாது தரும் செய்திகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஜயம் சிறிதும் இல்லை. நன்றி.

Maravandu - Ganesh said...

hi

good work carry on


Thanks
maravantu