Monday, April 03, 2006

தலித் குரலைப் புறக்கணிக்கும் தினமலர், தினகரன்

ஏப்ரல் 4 அன்று வெளியான நாளிதழ்களில் இருந்து 8 செய்திகளை ஆய்வு செய்யலாம்.
1. புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
தினத்தந்தி செய்தியையும், பட்டியலையும் கடைசிப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தினமணி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்ட செய்தியை முதல் பக்கத்திலும், பட்டியலை உட்பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. தினமலரும் தினகரனும் செய்தியை மட்டும் வெளியிட்டு, பட்டியலை இருட்டடிப்பு செய்து விட்டன. ஒரு முக்கிய கட்சியின் வேட்பாளர் பட்டியலைக் கூட வெளியிடாமல் புறக்கணிப்பது அறமா?

2. கருணாநிதியின் பிரச்சாரத் திட்டம்: ஏப்ரல் 9 அன்று தொடங்கும் கருணாநிதியின் பிரச்சாரத் திட்டம் குறித்த செய்திகளை 4 நாளிதழ்களுமே வெளியிட்டுள்ளன. ஆய்வைத் தொடங்கிய பின் கடந்த 4 நாட்களில், ஆய்வுக்குட்படுத்தப் பட்டு வரும் 4 நாளிதழ்களுமே வெளியிட்ட ஒரே செய்தி இதுவாகத் தான் இருக்க வேண்டும்.

3. விஜயகாந் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் தினமலரில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் பட்டுள்ளது. தினமணியில் பட்டியல் இடம் பெற்றுள்ளது. தந்தியும், தினகரனும் இச்செய்தியையோ, பட்டியலையோ வெளியிடவில்லை.

4. ஜெயலலிதாவின் நாகப் பட்டிணம், மயிலாடுதுறை பிரச்சாரம், தினமலரில் இடம் பெறவில்லை. தினகரன், தினத் தந்தி, தினமணி இச்செய்தியை வெவ்வேறு அளவுகளில் வெளியிட்டுள்ளன.

5. இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பன்னீர் செல்வம் அளித்துள்ள பதில், தினத் தந்தியில் விரிவாகவும், தினமணியில் சுருக்கமாகவும் வெளியாகி உள்ளது. தினகரன் இந்த அறிக்கையை வெளியிடவில்லை.
ஆனால், பன்னீர் செல்வத்தின் அறிக்கைக்கு, கருணாநிதி அளித்துள்ள மறுப்பு அறிக்கை, தினகரனில் விரிவாகவும், தினமலரிலும், தினமணியிலும் சுருக்கமாகவும் இடம் பெற்றுள்ளன. தினத் தந்தி கருணாநிதியின் இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட வில்லை.

6.மன்னிப்புக் கேட்க மாட்டேன், என்று வைகோ, மதுரையில் பேசிய பேச்சு, தினமலரில் மிகப் பெருமளவில் முக்கியத்துவம் தரப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது. 8 பத்திச் செய்தியாக இது வெளியாகி உள்ளது. இச்செய்தி தினகரனில் இடம் பெறவில்லை. தினமணியிலும் இச்செய்தி இடம் பெறவில்லை. தினத் தந்தி விரிவாக இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

7. வைகோவின் பெயரைக் குறிப்பிடாமல், உடன் பிறப்புகளுக்கு, கருணாநிதி எழுதியுள்ள கடிதம், தினகரனில் முழுமையாகவும், தினமணியில் சுருக்கமாகவும் இடம் பெற்றுள்ளன. தினத் தந்தியிலும், தினமலரிலும் இக்கடிதம் பற்றிய தகவல் எதுவும் இடம்பெறவில்லை.

8. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தினமலரிலும் தினத்தந்தியிலும் லீட் ஸ்டோரியாக வெளியாகி உள்ளது. தினமலரில், உளவுத் துறை என்று மட்டும் மேற்கோள் காட்டி, வேறு எந்த ஆதாரமும் சுட்டிக் காட்டப் படாமல், பட்டியலில் குழப்பம் நிலவுவதாக இச்செய்தி அமைந்துள்ளது.

இந்த 4 நாட்களும் ஆய்வு செய்ததில் இருந்து எங்களுக்கு எழும் கேள்விகள்:

1. பப்ளிக் ஸ்பியர் என்று சொல்லப்படுவது இன்றைய நாளிதழ்களுக்குப் பொருந்தாதா?

2. செய்திகளை மேற்கோள் இன்றி எழுதுவது, இருட்டடிப்பு செய்வது, தமது விருப்புகளுக்கு உட்பட்ட செய்திகளை மட்டும் வெளியிடுவது என்று தேர்தல் செய்திகளை வெளியிடுவது அறமாகுமா?

3. அண்டை மாநிலங்களில் குறிப்பாக கேரளத்தில் நிலவரம் எப்படி?

4. அருந்ததி ராய், "புஷ்ஷே திரும்பிப் போ", என்று கூக்குரலிட்டு எழுதிய கட்டுரையில், இந்தியப் பத்திரிகைகளை, கார்ப்பொரேட் பிரஸ் என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் நாளிதழ்களில் எதுவுமே இந்தக் குற்றச் சாடிலிருந்து தப்பிக்க முடியாதோ என்ற கேள்வி எழுகிறது.

இன்னும் 32 நாட்கள் பிரச்சாரம் நடக்க வேண்டியுள்ளது. அதன் முடிவில் எங்களுக்குத் தமிழ் நாளிதழ்களைப் புரிந்து கொள்ள சில தகவல்கள் இந்த ஆய்விலிருந்து கிடைக்கும் என்று நம்புகிறோம்.

2 comments:

அழகப்பன் said...

ஊடகத்துறையின் சார்பு நிலையை தொடர்ந்து வெளிக்கொணருகிறீர்கள். நன்றி.

உங்கள் பதிவு தமிழ்மணத்தில் தானாகவே திரட்டப்படவில்லை. தானாகவே திரட்டப்பட இந்த இணைப்பில் உள்ளவாறு செயல்படவேண்டும்.

தமிழ்மணமும் பட்டையும்

இவ்வாறு அந்த குறிப்பிட்ட பதிவை நீங்கள் அனுப்பாவிட்டால் வேறு எவரும் அனுப்ப வாய்ப்பு உள்ளது. சென்ற முறையும் இம்முறையும் நானே அனுப்பினேன்.

இசை செல்வபெருமாள் எழுதிய நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் பிரச்சனை உள்ளது. சரி செய்யவும்.

Arulselvan said...

அழகப்பனின் உதவிக்கு நன்றி. தங்கள் யோசனைப் படி, கருவிப் பட்டையை இணைக்க முயன்று கொண்டிருக்கிறோம். இசை செல்வப் பெரும்மளின் ஆக்கம் இன்று காலை வரை வலைப்பூவில் வாசிக்கக் கிடைத்தது. ஆனால், காலை நேரத்திற்குப் பின் அதைக் காணவில்லை. என்ன பிரச்னை என்று தெரியவும் இல்லை. மீண்டும் பதிப்பித்திருக்கிறோம். வலைப்பூக்களின் இயங்கௌதலை மெல்ல மெல்ல புரிந்து கொண்டு வருகிறோம். முதல் வாரத்தின் இறுதிக்குள் நிலைமை, கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும் என்று நம்புகிறோம்.
தங்களின் உதவிக்கு மீண்டும் நன்றி.
ஊடகக் கண்காணிப்புக் குழுவினர்.