Sunday, April 02, 2006

அதிகரித்து வரும் பக்கச் சார்பு

ஏப்ரல் 03 அன்று வெளியான நாளிதழ்களில் இருந்து 6 செய்திகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றன:

1. கருணாநிதியின் அறிக்கை
2. வைகோவின் தென் மாவட்டப் பிரச்சாரம்
3. ஜெயலலிதாவின் வட மாட்டப் பிரச்சாரம்
4. சரத் குமார் ரசிகர் மன்றத்துத் தீர்மானம்
5. சீத்தாராம் யெச்சூரியின் தென் மாவட்டத்துப் பிரச்ச்சாரம்
6. விஜய்காந்தின் வட மாவட்டத்துப் பிரச்சாரம்

இந்த ஆறு செய்திகளையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ள நாளிதழ் எதுவுமே தமிழகத்தில் இல்லை என்ற முடிவை எடுக்கலாம்..

1. கருணாநிதியின் அறிக்கையை தினத் தந்தி வெளியிடவில்லை. தினமலரில் அறிக்கை வெளியான வடிவில், ஒரு எள்ளலுடன், முழுவதும் வெளியிடப் பட்டுள்ளது. தினகரன் இந்த அறிக்கையை லீட் ஸ்டோரியாக்கி இருக்கிறது. தினமும் யார் எந்தச் செய்தியை லீட் ஸ்டோரியாக்குகிறார்கள் என்பதே அந்தந்த நாளிதழின் அரசியல் நிலைப் பாட்டை அமபலப் படுத்தும் என்று முடிவு செய்ய இந்த அலசல் உதவுகிறது. தினத் தந்தி யேன் இந்த அறிக்கையை வெளியிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அறிக்கையில் இடம் பெற்ற தகவல்கள், தினமலர் வெப்சைட்டிலிருந்து அப்படியே தரப் படுகிறது:

“இலவசமாக "கலர் டிவி' வழங்குவது எப்படி?*5ம் தேதி விளக்கம் அளிப்பேன் என்கிறார் கருணாநிதி
""இலவசமாக "கலர் டிவி' எப்படி வழங்கப்பட இருக்கிறது என்பது பற்றி வரும் 5ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் விளக்குவேன்,'' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களைச் சந்திக்காத நாட்களில், நிருபர்கள் கேட்பது போன்று அவரே கேள்வி தயார் செய்து, அதற்கு பதிலும் அளித்து பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பார். அப்படி அவர் நேற்று அனுப்பிய "கேள்வி பதில்' அறிக்கை:

தனக்கு தலைமை வழங்கிய பதவியை அனுபவித்த சிலர், இந்த முறை தேர்தலில் நிற்க வாய்ப்பில்லை என்றதும், கட்சி தாவியிருக் கிறார்களே; அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அந்த "நபர்'களுக்காக நேரிலும், கடித மூலமும் எனக்குப் பரிந்துரை செய்து வேண்டுகோள் விடுத்த நண்பர்கள், இப்போதாவது உணர்ந்து கொள்வார்கள். நான் முன்கூட்டியே கட்சி எனும் இந்தக் கழனியில் "களை' பெருகிவிடாமல் தடுத்துக் காப்பாற்றத் தான் துரோகத்தை துளிர்த்திட விடாமல் துணிந்து முடிவெடுத்து இருக்கிறேன் என்பதை; இல்லையேல் தோளில் உட்கார்ந்து கொண்டே முதுகில் குத்தியிருப்பார்களே.

ரேஷனில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கும், "கலர் டிவி' இலவசமாகவும் வழங்குவதாக கூறியிருப்பது, தேர்தலில் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் தாய்மார்களை ஏமாற்றுகிற உறுதிமொழி என சிலர் எழுதுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

இப்பொழுது "ரேஷன் அரிசி' மானியம் வழங்கி, மக்களுக்கு அளிக்கப்படுவதில், மேலும் சற்று அதிகமாக மானியம் அளித்து கிலோ இரண்டு ரூபாய் என்று தந்திட எந்தத் தடையும் வரப் போவதில்லை. ஆட்சிக்கு வந்தால், அக்கணமே நியாய விலைக் கடைகளில் அரிசி விலை கிலோ இரண்டு ரூபாய் என்று அறிவிப்பு வெளிவரும். வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி எப்படி வழங்கப்பட இருக்கிறது என்பதை சென்னையில் வரும் 5ம் தேதி நடைபெறுகிற அனைத்துக் கட்சித் தேர்தல் பிரசார துவக்கப் பொதுக் கூட்டத்தில் விளக்க இருக்கிறேன்.

பதவி கிடைக்காமல் கட்சியை விட்டுப் பிரிந்து போகிறவர்கள் தி.மு.க.,வை குறை கூறி, குற்றம்சாட்டி கூச்சல் போடுவதை எவ்வாறு உணருகிறீர்கள்?

அஜீரணம் காரணமாக வயிறு குடைந்து கொண்டிருக்கும் போது, சப்தத்துடன் இரண்டு "ஏப்ப'மாக காற்று வெளியேறிய பிறகு, அப்போது மனிதனுக்கு "அப்பாடா' என்று ஒரு மன நிம்மதி அவன் முகத்தில் தெரியும். அது போலத் தான் உணருகிறேன்.

தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள் அனைத்திலும் தனது ஐந்தாண்டு ஆட்சியின் சாதனை என்று ஒன்றிரண்டை ஜெயலலிதா குறிப்பிடுகிறாரே?

உழவர் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்தோம் என்று முதல் சாதனையாகச் சொல்லுகிறார். உண்மையிலேயே உழவர் பாதுகாப்புக்காக தி.மு.க., ஆட்சியின் போது "உழவர் சந்தை' திட்டம் கொண்டு வரப்பட்டு, ஒரே ஆண்டில் தமிழகம் முழுவதும் நுõற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தையே ஒழித்து விட்டு, நான்காண்டு முடிந்து தேர்தல் வருகிறது என்றதும் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற ஒன்றை அறிவித்திருப்பதே ஒரு சாதனையல்ல என்பதை உழவர்கள் நன்கு உணர்வார்கள். இலவச சைக்கிள் உண்மையிலேயே மனதார மாணவர் களுக்காக கொண்டு வரப்பட்டது அல்ல. அந்த சைக்கிள்களை வாங்கியதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது என்பதை அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறேன்.

பெண்கள் மேம்பாட்டுக்காக பெண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்துள்ளதாக ஜெயலலிதா கூறுகிறாரே?

பெண்கள் சுய உதவிக் குழுக்கள் 1989ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நான் முதல்வராக இருந்த போது தர்மபுரி மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்ட திட்டம்.

நுழைவுத் தேர்வு கிடையாது என்று தமிழக அரசு செய்த அறிவிப்பைக் கேட்டு மணவர்கள், அந்தத் தேர்வுக்காக படிக்காமல் இருந்து விட்டார்கள். தற்போது திடீரென நுழைவுத் தேர்வு நடத்தப் போவதாகச் சொல்கிறார்களே?

மாணவர்களைப் பற்றி கவலைப்படுவதற்கு ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லை என்பது தான் உண்மை. நுழைவுத் தேர்வில் இப்படிப்பட்ட குளறுபடிகள் என்றால், பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றில் கேள்வித் தாள்களிலே பல குளறுபடிகள். குழப்பம், குளறுபடி ஆகியவற்றுக்கு உதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசின் கல்வித் துறை.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்”.

வைகோவின் பிரச்சாரப் பேச்சுக்களை தினகர ன் வெளியிடவில்லை. தினத் தந்தியும், தினமலரும், வைகோவின் பேச்சுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.

ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை மிக விரிவாக தினத் தந்தியும், மிகச் சுருக்கமாக தினகரனும் வெளியிட்டுள்ளன.

சீத்தாராம் யெச்சூரியின் பிரச்சாரத்தை எல்லா நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன.

வைகோ, தயாநிதி மாறன் குறித்துப் பேசியதற்கு மான நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடரப் போவதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார், தயாநிதி. இந்த அறிக்கை தினகரனில் மட்டுமே வெளியாகி உள்ளது. தினமணி கூட இந்தச் செய்தியை வெளியிடவில்லை.

ஆனால், இந்த அறிக்கைக்கு வைகோ தெரிவித்திருக்கும் மறுப்பை தினத் தந்தி விரிவாக வெளியிட்டுள்ளது. தினமலர் இந்தச் செய்தியை வெளியிடவில்லை.

சரத் குமார் ரசிகர் மன்றத்தின் ஒரு தீர்மானத்தை லீட் ஸ்டோரியாக்கியிருக்கிறது தினமலர். இதே செய்தியை தினத் தந்தியும் விரிவாக வெளியிட்டிருக்கிறது. இது பற்றிய செய்தி தினகாரனில் இடம் பெறவ்வில்லை.
சரத் குமார் ரசிகர் மன்றத்தின் அறிக்கையை பக்கச் சார்பில்லாமல், மிகைப் படுத்தாமல் தினமனி செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த செய்தி அப்படியே தரப் படுகிறது:

திமுகவுக்கு எதிராகப் போர்கொடி: பிரசாரம் செய்வதில்லை என சரத்குமார் ரசிகர் மன்றம் முடிவு
சென்னை, ஏப். 3: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்யப்போவதில்லை என்று அகில இந்திய சரத்குமார் ரசிகர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இது தொடர்பான தனது முடிவை சரத்குமார் ஓரிரு நாளில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
அகில இந்திய சரத்குமார் ரசிகர்கள் தலைமை நற்பணி மன்றத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
1996-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அல்லும் பகலும் பாடுபட்டு தனது உடலை வருத்தி உண்மை உணர்வோடு தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றியையும் தேடித்தந்தார் சரத்குமார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்துள்ளார். ஆனால் அவரது உழைப்புக்கும் அறிவுக்கும் ஏற்ற உரிய மதிப்பு, மரியாதையை திமுக இதுவரை அவருக்குக் கொடுக்கவில்லை என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
எங்களது நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் திமுக கூட்டணியை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்யக் கூடாது.

இந்த தீர்மானத்தை சரத்குமாருக்கு அனுப்பி வைத்து அவர் எடுக்கும் இறுதி முடிவுக்கு மன்றம் கட்டுப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரசிகர் மன்ற தலைவர் சுந்தரேசன் கூறியதாவது:
பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி, திருவள்ளூர், தேனி, நாங்குநேரி, நாகர்கோயில் ஆகிய தொகுதிகளை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் சரத்குமார் வேண்டுகோள் விடுத்தார். இதில் ஒருவருக்கு கூட சீட் கொடுக்கவில்லை.
அதோடு சரத்குமாரை தொடர்ந்து அவமரியாதை செய்து வருகின்றனர். இதனால் திமுக மாநாட்டில் கூட ரசிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
நடிகர் விஜய்யை அழைத்து தபால்தலை வெளியிட்டனர். ஆனால் எம்.பி.யாக உள்ள சரத்குமாரை அழைக்காமல் அவமரியாதை செய்துவிட்டனர்.
ரசிகர்கள் ஆவேசம்: திமுகவைப் புறக்கணிப்போம் என்று கோஷமிட்டனர்.
ரசிகர்கள் முடிவு குறித்து சரத்குமாரின் கருத்து கேட்டபோது, இன்னும் ஓரிரு நாள்களில் முடிவு எடுப்பார் என்று அவருக்கு நெங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

_______________

தொடரும் இருட்டடிப்பு ... ஒரு பக்கம் சார்ந்து எழுதும் போக்கை உறுதி செய்யும் ஆதாரம்


இன்று [02 04 2006] ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுபவை 4 செய்திகள்:
1. வைகோவின் சன் டி வி - தினகரன் தொடர்பான பேச்சுக்கு, தினகரனின் தன்னிலை விளக்கம்
2. ஜெயலலிதாவின் விழுப்புரப் பிரச்சாரம்
3. வைகோவின் நாசரேத், திருச்செந்தூர் பேச்சு
4. கருணாநிதி குறித்து நெல்லை கண்ணனின் பேட்டி

1. வைகோவின் சன் டி வி - தினகரன் தொடர்பான பேச்சுக்கு, தினகரனின் தன்னிலை விளக்கம்:
இன்றைய தினகரனின் 8ஆம் பக்கத்தில் தினகாரன் ஒரு முழுப் பக்க தன்னிலை விளக்கத்தை வெளியிட்டுள்ளது. தினகரனின் வெப்சைட்டில் இதை முழுமையாக வாசிக்கலாம். வைகோ என்ன பேசினார் என்பதையே வெளியிடாமல், அவர் பேச்சுக்கு இவ்வளவு பெரிய மறுப்புரை வெளியிடுவது சரியா? அவர் என்ன பேசினார் என்பதை பேசிய அன்றே வெளியிட்டிருக்கலாமே? இதை எழுதியது யார்? தினகரன் ஆசிரியரா? சன் டி வி யின் அதிபரா? பத்திரிகையாளரா? எந்தக் குறிப்பும் இல்லாமல் ஒரு செய்திக் கட்டுரையைப் போல வெளியிட்டிருப்பது அறமா?

2. ஜெயலலிதாவின் விழுப்புர பிரச்சாரம்: இன்றைய தினகரன் இந்தச் செய்தியை முழுமையாக இருட்டடிப்புச் செய்து விட்டது. தினமலர் அரை குறையாக வெளியிட்டுள்ளது. தினத்தந்தி விரிவாக வெளியிட்டுள்ளது. தினமணி விழுப்புரத்துப் பிரச்சாரத்தைப் பதிவு செய்துள்ளது.

3. தினமலர் திருநெல்வேலி பதிப்பு 2 4 2006 பக்கம் 20ல் "அ தி மு க வுடன் கரம் கோர்த்தது ஏன்? திருச்செந்தூரில் வைகோ ஆவேசம்", என்ற செய்தி 33 செ மீ நீளம், 4 காலம் அகலம் 3 காலம் படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. அதே நாளிதழின் 19ஆம் பக்கத்தில் "மதிமுகவினர் என்ன கொத்தடிமைகளா.. கருணாநிதி மீது வைகோ பாய்ச்சல்", என் ற செய்தி 13.5 செ மீ நீளம் 8 காலம் அகலத்தில் படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. இச்செய்தி தினமலர் வெப்சைட்டில் இடம் பெற வில்லை.

தி மு க கூட்டணி பிரச்சாரம் ஆரம்பித்ததும் பிரச்சர செய்திகள் எவ்வளவு வெளியிடப் படுகின்றன என்பதைக் கவனித்து தான் இது குறித்த விமர்சனத்தை முன் வைக்க வேண்டும்.
தினமணி வைகோவிடம் பிரத்யேக பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. தினகரனில் இந்த 2 உரைகள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

4. கருணாநிதி குறித்து நெல்லை கண்ணனின் விரிவான பேட்டி இன்றைய தினமலரில் இடம் பெற்றுள்ளது. கருணாநிதியைக் கடுமையாக விமர்சிக்கிறது இந்த பேட்டி. இதே போல பிற தலைவர்களையும் விமர்சிக்கும் பேட்டிகள் தினமலரில் இனி வரும் நாட்களில் இடம் பெறுவதை வைத்துத் தான் இந்த பேட்டியின் உள்நோக்கம் குறித்துச் சொல்ல முடியும்.
________

Day 1 posted on April 01 2006

செய்தியை இருட்டடிப்புச் செய்யலாமா? மேற்கோள் இல்லாமல் செய்தி எழுதுவது அறமா?

ஏப்ரல் 01 2006 அன்று வெளியான செய்திகளில் 3 செய்திகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

1. ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்
2. விஜயகாந் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்
3. கலிங்கப்பட்டியிலிருந்து வைகோ பிரச்சாரத்தைத் தொடங்கினார்

இதில், ஜெயலலிதா பிரச்சாரம் தொடங்கியது பற்றி தினத் தந்தி, தினமலர், தினமணி, தினகரன் ஆகிய 4 நாளிதழ்களும் செய்தியை வெளியிட்டுள்ளன.

விஜயகாந் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தகவல் தினமலரின் லீட் ஸ்டோரியாக வெளியாகி உள்ளது. இதில் எந்த நபரையும் மேற்கோள் காட்டாமல், பொதுவாக ரசிகர்கள் என்று மட்டும் மேற்கோளாகக் காட்டி சில தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன. தினமலர் செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் கீழே தரப் படுகின்றன:

"இப்படி இரு பெரிய அணிகளுமே வலுவாக உள்ள இந்த தொகுதியை விஜயகாந்த் தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வன்னியர் ஓட்டுக்களை இரு அணிகளின் வன்னியர் வேட்பாளர்கள் பிரிக்கும் பட்சத்தில் இதர ஓட்டுக்களை பெற்று வெற்றி பெறலாம் என்ற கணக்கில் விஜயகாந்த் இந்த தொகுதியை தேர்வு
செய்திருக்கலாம் என பா.ம.க.,வினர் கருதுகின்றனர். உண்மையில் வன்னியர்களின் ஓட்டுக்களை பெரிதும் நம்பியே விஜயகாந்த் இத்தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.


பா.ம.க.,வுக்கு சவால் விடும் வகையில் அவர்களது கோட்டையிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்று காண்பிக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் திட்டம் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். விஜயகாந்துக்கு இப்பகுதிகளில் அதிகளவு ரசிகர்கள் உருவாகி வந்ததால் தான் அவருடன் மோதல் போக்கை ஆரம்பத்திலேயே பா.ம.க., துவக்கியதாக
கூறப்படுகிறது. மேலும், கட்சியை துவக்கி தமிழகம் முழுவதும் பிரசாரத்தை விஜயகாந்த் ஆரம்பித்த போது விருத்தாசலத்தில் தான் அதிக அளவிற்கு கூட்டம் கூடியுள்ளது. இதன் காரணமாகவே இந்த தொகுதியை அவர் தேர்வு செய்ததாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த தொகுதியில் இவருக்கு அதிகளவு ரசிகர் மன்றங்களும் உள்ளன. இதில், அதிக அளவிற்கு வன்னியர்கள் தான் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு விஜயகாந்த் போட்டியிட வேண்டுமென 15 பேர் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே, இரண்டு நாட்கள் இந்த தொகுதியை விஜயகாந்த் சுற்றி வந்தாலே அவர் வெற்றி பெறுவது நிச்சயம் என ரசிகர் மன்றத்தினர் கூறுகின்றனர்".

இவ்வாறு செய்தி எழுதுவது, உள்நோக்கம் கொண்டதாகக் கருத இடமுண்டு அல்லவா? செய்தி வேறு, எண்ணம் வேறு அல்லவா? இது அறமா?

இன்று வெளியான தேர்தல் குறித்த செய்திகளில் முக்கியமான ஒன்று வைகோவின் பிரச்சாரம் கலிங்கப் பட்டியில் தொடங்கப் பட்டதாகும். தேசிய ஆங்கில நாளேடான தி இந்து நாளிதழ் இது குறித்து 3 பத்திகளில் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி தினகரனில் இடம் பெறவில்லையே ஏன்? இதை உள்நோக்கம் கொண்டது என்று கருத இடமுண்டு அல்லவா? இது இருட்டடிப்பு ஆகாதா?

1 comment:

Anonymous said...

கமல், உங்களின் யோசனைக்கு நன்றி. எல்லோரும் கருத்துரை வழங்க வழி வகை செய்துள்ளோம்.
மீடியா வாட்ச் குழுவினர்