Tuesday, April 11, 2006

தவறான தகவல் தரலாமா?

அதிகம் விற்கும் பத்திரிகை
தவறான தகவல் தரலாமா?

தமிழ் நாட்டில் அதிகம் விற்பனையாகும் தமிழ் நாளிதழான தினகரனில் இடம் பெற்றுள்ள ஒரு செய்தி தவறாக இருப்பதாக நாங்கள் எம் ஆய்வின் அடிப்படையில் கண்டறிந்தோம். அது பற்றிய ஆய்வுரைக்குப் புகு முன், இன்று கவனிக்க வேண்டிய சில தகவல்களை முதலில் பார்த்து விடுவோம்:

கேரள, தமிழக, மேற்கு வங்க சட்ட மன்றப் பொதுத் தேர்தல்களையொட்டி தி இந்து நாளிதழ் 2 நாட்களுக்கு ஒரு முறை, 2 முழுப் பக்கங்களை, சட்ட மன்றங்களுக்கான பொதுத் தேர்தல்கள் தொடர்பான ஆய்வுகளுக்காக ஒதுக்கி வருகிறது. 11.4.2006 இதழில், வைகோவின் சிறப்புப் பேட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது. “Pragmatism not opportunism”, என்பது இந்த பேட்டிக் கட்டுரைக்கான தலைப்பக அமைந்துள்ளது.

ஜெயலலிதாவின் பிரச்சாரப் போக்கு, தற்போதைய தேர்தலில் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதைத் தவிர்த்து, தனது பாசிட்டிவான சாதனை விஷயங்களையே பேசி வருகிறார் என்கிறது மற்றுமொரு ஆய்வுக் கட்டுரை. “A subtle change in style and strategy- carefully avoiding personal attacks on her rival Jayalalithaa has chosen to dwell on the “positives”” என்பது இந்த ஆய்வுக் கட்டுரைக்கான தலைப்பும், துணை அடுக்குத் தலைப்பும் ஆகும்.

இனி இன்று ஆய்வுக்குட்படுத்த வேண்டிய செய்திகளை ஒவ்வொன்றாகக் காணலாம்:

ஜெயலலிதா மதுரை பேட்டியில், தே ஜ கூட்டணி மீது எழுப்பிய குற்றச் சட்டிற்கு மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப சிதம்ப்ரம் தெரிவித்த கருத்துக்கள் தினகரனில் முதல் பக்கத்தில் வெளி வந்துள்ளன. இந்தச் செய்தியை தினமலரும் தினத் தந்தியும் வெளியிடவில்லை. இது தவிர, காட்டுமன்னார்கோவிலில் வள்ளல்பெருமானை ஆதரித்து ப சிதம்பரம் பேசிய பேச்சு, தினமணியில் விரிவாக வெளியாகியுள்ளது. தவிர சிதம்பரத்தில் வள்ளல்பெருமான் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்த பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியையும் தினமணி தவிர வேறு எந்த நாளிதழும் வெளியிடவில்லை.

2 ரூபாய்க்கு அரிசி உறுதி என்று சேப்பாக்கத்தில் கருணாநிதி பேசிய பேச்சு தினகரனில் முதல் பக்கத்தில் லீட் ஸ்டோரியாக்கப் பட்டுள்ளது. திட்டமிட்ட படி தேர்தல் நடக்கும் என்று நரேஷ் குப்தா தெரிவித்த பேட்டி தினகரனில் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

திருவேற்காட்டிலிருந்து ஒரு திக்குவாய்த் தம்பி என்ற தலைப்பில் கருணாநிதி எழுதியுள்ள அரசியல் கவிதை தினகரனில் மட்டும் 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் கேள்வி பதில் வடிவிலான அறிக்கைகளை எடிட் செய்து வேளியிடும் தினமணியோ, பேச்சு, பேட்டி, கேள்வி ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதிகளை வெளியிடும் தினமலரோ, இந்தக் கவிதையை வெளியிடாமல் ஒதுங்கிக்
கொண்டன.

செய்தியாளர் கூட்டத்தில் திமுக கூட்டணி 200 இடங்கள் பெறும் என்று கருணாநிதி சொன்னதைக் கேட்டு தொண்டர்கள் தேர்தல் பணியாற்றாமல் இருந்துவிடக் கூடாதே என்ற கவலியுடன் கருணாநிதி, இந்தக் கவிதையை வடித்துள்ளார். எப்படியெல்லாம் ஆளுக் கட்சி இந்தத் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகங்கள் செய்யக் கூடும் என்று சொல்லும் அவரது கவிதை, தொண்டர்களைத் திறமை காட்டி உழைத்திடக் கட்டளையிடுகிறது.

மல்லை சத்யா என்பவரின் சிறப்பு பேட்டி தினகரனில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தினமலரில், "ஓட்டுக்காக கொள்கையை அடகு வைத்த திமுக", என்ற தலைப்புடனும் இந்தி மொழியில் பிரசார நோட்டீஸ் என்ற முந்து தலைப்புடனும் ஒரு செய்தி வெளியாகிரிஉக்கிறது. ஈரோட்டில் வசிக்கும் வட மாநிலத்தவரிடம் ஓட்டுப் பெறுவதற்காக இந்த இந்தி நோட்டீசை அச்சிட்டு வினியோகித்திருப்பதாக இந்தச் செய்தி கூறுகிறது. இதன் முளம் திமுக ஓட்டிற்காக தனது இந்தி எதிர்ப்புக் கொள்கையை அடகு வைத்திருப்பதாகச் சொல்கிறது தினமலர்.

“பென்னாகரத்தில் பா ம க அதிருப்தியாளர்களுக்கு ராம்தாஸ் அட்வைஸ்” என்ற தலைப்பிலொரு செய்தி தினமலரின் 8 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. தினமலரில் ப ம க குறித்து செய்திகள் எதுவும் இடம் பெறுவதில்லை என்பதை இந்த ஆய்வு கண்டுணர்ந்துள்ளது. எப்பொழுதாவது இடம் பெறும் ப ம க குறித்த செய்திகளும், ப ம க வுக்கு எதிரான நிலைப்படு கொண்டதன் அடிப்படையிலேயே எழுதப் படுகிறது. இந்தச் செய்தி ராமதாஸ் அட்வைஸ் சொன்னதாக இதன் தலைப்பு சொல்கிறது. 10 பாராக்களில் சொல்லப் பட்டுள்ள இந்தச் செய்தியில், ராமதாசின் அறிவுரை ஒரு வரியில் மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்தச் செய்தி உள்நோக்கம் கொண்ட ஒன்றாக இருக்கலாம் என்று ஐயுற இடமிருக்கிறது.

தினமலரில் இடம் பெற்ற அந்தச் செய்தியை அப்படியே தருகிறோம்.:

பென்னாகரத்தில் பா.ம.க., தொடர் முரண்டு அதிருப்தியாளர்களுக்கு ராமதாஸ் "அட்வைஸ்'



தர்மபுரி: பென்னாகரம் தொகுதியில் .மு.க.,வேட்பாளருக்கு எதிராக பா.ம.க.,வினர் தேர்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நேற்று பென்னாகரம் தொகுதி பா.ம.க., அதிருப்தியாளர்களை ராமதாஸ் சந்தித்து பேசினார்.

வன்னியர்கள் அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த பா.ம.க., பென்னாகரம், தர்மபுரி ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தற்போது பா.ம.க., அணி மாறி தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தி.மு.க., கூட்டணிகள் தொகுதி பங்கீட்டில் தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு ஆகிய இரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பென்னாகரம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ., மணி மீது அதிருப்தி நிலவியதால், கடைசி நேரத்தில் மணி மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

பென்னாகரம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட பா.ம.க., வேட்பாளர் வெங்கடேசனுக்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தி.மு.க., கூட்டணியில் தொகுதி மாற்றம் செய்யப்பட்டது. பென்னாகரம் தொகுதியில் தி.மு.க.,வும், தர்மபுரி தொகுதியில் பா.ம.க.,வும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

பென்னாகரம் தொகுதியில் தி.மு.க., சார்பில்
போட்டியிடும் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பெரியண்ணன், கடந்த தேர்தலின் போது பா.ம.க., வில் சீட் கிடைக்காத அதிருப்தியில் மணியை எதிர்த்து போட்டியிட்டு 34 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது தி.மு.க., சார்பில் போட்டியிடும் பெரியண்ணனுக்கு, பா.ம.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பென்னாகரம் தொகுதி பா.ம.க.,வினர், பெரியண்ணனுக்கு
எதிராக வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருப்பதோடு, சுயேட்சையாக போட்டியிடும் மன நிலையில் உள்ள சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு ஆதரவு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். நேற்று முன்தினம் பென்னாகரத்தில் நடந்த பா.ம.க., ஆலோசனை கூட்டத்தில் முத்துலட்சுமி கலந்து கொண்டு ஆதரவு
கேட்டுள்ளார்.

பென்னாகரம் தொகுதியில் தி.மு.க.,வுக்கு எதிராக பா.ம.க., களம் இறங்க நடவடிக்கை எடுத்து வருவதால் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பா.ம.க., போட்டியிடும் தர்மபுரி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஆகிய தொகுதியில் தி.மு.க.,வினர் தேர்தல் பணிகளை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பென்னாகரம் தொகுதியில் '96 தேர்தலில் பா.ம.க.,
தலைவர் மணி தனித்து நின்று வெற்றி பெற்றார். தொடர்ந்து இரு முறை பா.ம.க., வெற்றி பெற்ற தொகுதி என்பதோடு, பா.ம.க., மீது தொகுதி மக்கள் அதிருப்தியிருப்பதால், இந்த முறை தொகுதியில் போட்டியிடுவதை பா.ம.க.,வினர் விட்டு கொடுத்துள்ளனர்.

தி.மு.க., சார்பில் போட்டியிடும் பெரியயண்ணனுக்கு
உள்ள தனிப்பட்ட செல்வாக்கு, அவருக்கு தேர்தலில் வெற்றியை தேடி தந்தால், இந்த தொகுதி
பா.ம.க.,விடம் இருந்து தி.மு.க.,வுக்கு பறிபோய் விடும் என்பதால், பா.ம.க.,வினர் இந்த தொகுதியில் தி.மு.க.,வுக்கு எதிராக களம் இறங்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். இதற்கு பா.ம.க., தலைமையும் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக தொகுதி முழுவதும் தகவல் பரவியுள்ளது.

தர்மபுரியில் தங்கியிருந்த ராமதாஸ்,
நேற்று பென்னாகரம் தொகுதி பா.ம.க.,வினரை சந்தித்தார். "தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்; கட்சியின் கட்டுபாடுகளை யாரும் மீறக்கூடாது' என அதிருப்தியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ராமதாஸ் அறிவுரை கூறிய போதிலும், தி.மு.க., ÷ வட்பாளர் பெரியண்ணனுக்கு எதிராக பா.ம.க.,வினர் தீவிரமாக வேலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர்.

இன்றைய சிறப்புப் பார்வை:


தமிழகத்தில் ஏழை மக்களுக்கு 55 ஏக்கர் நிலம், போகாத ஊருக்கு வழி கூறுகிறார் கருணாநிதி, நெல்லையில் முதல்வர் ஜெ பேட்டி என்ற செய்தி தினமலரில் இடம் பெற்றுள்ளது.

ஆனால், ஜெயலலிதாவின் நெல்லை பேட்டிக்கு, தினகரன் கொடுத்துள்ள தலைப்பு இது:

“55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பது உண்மைதான்”, நெல்லையில் ஜெ பேட்டி

எது உண்மை என்று அறிந்து கொள்ள செய்திகளை ஆய்வு செய்தோம். தினமலரில் வெளிவந்த செய்தி இங்கே அப்படியே தரப்படுகிறது:

இலவச நிலம்: போகாத ஊருக்கு வழி சொல்கிறார் கருணாநிதி நெல்லையில் ஜெ.,பிரசாரம்



திருநெல்வேலி : ஏழைகளுக்கு இலவசமாக நிலம் தருவதாக தி.மு.க.,தேர்தல் அறிக்கையில்
கூறியிருப்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாக உள்ளது என நெல்லையில் முதல்வர் ஜெயலலிதா
பேசினார்.

நெல்லை வாகையடி முனையில் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பின்னர் நான்குரதவீதிகள் வழியாக மீண்டும் ஜங்ஷன், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை வழியாக பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் அம்பை ரோடு சந்திப்பில் பேசினார்.

அங்கு பாளையங்கோட்டை தொகுதி தேசிய லீக் வேட்பாளர் நிஜாமுதீனை ஆதரித்து பிரசாரம் செய்தார். தொடர்ந்து நான்குநேரியில் அ.தி.மு.க., வேட்பாளர் சூரியகுமாரை ஆதரித்தும், பணகுடியில் ராதாபுரம் தொகுதி வேட்பாளர் ஞானபுனிதாவை ஆதரித்தும் பேசினார். தொடர்ந்து ஆரல்வாய்மொழி வழியாக
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்யச் சென்றார்.

நெல்லை டவுனில் பிரசாரத்திற்கு இடையே நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் தருவதாக கருணாநிதி கூறியுள்ளார். இது எவ்வாறு
சாத்தியம் என்று தெரியவில்லை. நான்கு முறை முதல்வராக இருந்த கருணாநிதி இதனை
வேண்டுமென்றே இவ்வாறு கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

வேண்டுமென்றே அரசை குறைகூறுகிறாரா... மக்களை ஏமாற்ற இவ்வாறு பேசியுள்ளாரா என்று தெரியவில்லை.
புரிந்தும் புரியாததுபோல பேசியுள்ளார். பயன்படா தரிசு நிலம் முன்பு எம்.ஜி.ஆர்.,காலத்திலும் கடந்த அ.தி.மு.க.,ஆட்சிகாலத்திலும், தற்போதைய அ.தி.மு.க.,ஆட்சியிலும் முழுமையாக விவசாயிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தெரியாமல் கருணாநிதி மக்களை ஏமாற்றும் வகையில் அறிவிப்பு
வெளியிட்டுள்ளார்.

போகாத ஊருக்கு வழிசொல்வது போல அவரது அறிவிப்பு உள்ளது. பயிர் செய்யாத தரிசு நிலங்களை விவசாயிகளுக்கு கொடுக்க அரசிடம் கையிருப்பாக
நிலம் ஏதும் இல்லாத காரணத்தால் ஆதிதிராவிட மகளிருக்கு நிலம் வழங்கும் புதுமை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் தனியாரிடம் இருந்து விவசாய நிலத்தை பெற்று அதை ஆதிதிராவிட மகளிருக்கு 50 சதவீத மானியத்திலும் ஐந்து சதவீத வங்கி கடனிலும் வழங்கியுள்ளோம். உண்மை இப்படி இருக்க கருணாநிதி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

தொடர்ந்து வெற்றி வாய்ப்புக் குறித்து கூறுகையில், ""தமிழக மக்களிடம் அ.தி.மு.க.,கூட்டணிக்கு அமோக
ஆதரவு உள்ளது. இதனால் பெரும் பான்மை இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்,'' என்றார்.

Dinamalar, p.1 Tirunelveli edition

55 லட்சம் தரிசு நிலம் இருப்பது உண்மைதான், நெல்லையில் ஜெ பேட்டி

என்பது தான் தினகரன் இச்செய்திக்கு அளித்துள்ள தலைப்பு. இச்செய்தி தினகரனின் நெல்லைப் பதிப்பில் மூன்றாம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இணையப் பதிப்பிலும் இச்செய்தியை வாசிக்கலாம்.

மேலும் ஒரு ஒப்பீட்டிற்காக தினமணியில் இடம் பெற்ற செய்தியும் கீழே தரப்படுகிறது.


55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் அரசிடம் இல்லை: ஜெயலலிதா

திருநெல்வேலி, ஏப். 11: தமிழ்நாட்டில் சுமார் 55 லட்சம் ஏக்கர் அரசு தரிசு நிலம் இருப்பதாகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை ஏழைகளுக்கு பிரித்துக் கொடுப்போம் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறுவது, போகாத ஊருக்கு வழி சொல்வது போன்றதாகும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.
திருநெல்வேலில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் செய்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
"திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் சுமார் 55 லட்சம் ஏக்கர் அரசு தரிசு நிலம் இருப்பதாக கருணாநிதி கூறியிருப்பதில் எள்ளளவும் உண்மை இல்லை. அரசு தரிசு நிலம், தனியார் பட்டா நிலம், விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலம் என பலவகை தரிசு நிலங்கள் உண்டு. இவ்வாறு மொத்தமுள்ள 55 லட்சம் ஏக்கரில், அரசிடம் உள்ளது 3.57 லட்சம் ஏக்கர் மட்டுமே. தனியாரிடம் சுமார் 50 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. கருணாநிதி கூறுவது போல 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலமும் அரசிடம் இல்லை. இப்படி இருக்க ஏழைகளுக்கு 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை பிரித்துக் கொடுப்போம் எனக் கருணாநிதி கூறுவது போகாத ஊருக்கு வழி சொல்வது போன்றது.
தரிசு நிலம் குறித்து கருணாநிதி சரியாகப் புரிந்து கொண்டு, தெரிந்து கொண்டு பேச வேண்டும். நான்கு முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்துள்ள கருணாநிதிக்கு அரசிடம் உள்ள தரிசு நிலம் எவ்வளவு என்பது தெரியாதது வேடிக்கையாகத்தான் உள்ளது. அல்லது வேண்டுமென்றே என் அரசு மீது அவதூறும், குறையும் கூறி மக்களை ஏமாற்ற இவ்வாறு கூறி வருகிறாரா எனத் தெரியவில்லை.
தனியாரிடம் உள்ள தரிசு நிலத்தை மேம்படுத்தி அதன் மூலம் விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக என்னால் தீட்டப்பட்ட திட்டம்தான் ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம். தனியார் விளைநிலங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்தவும், மண் வளத்திற்கு ஏற்ற பழச் செடிகள் மற்றும் தோட்டப் பயிர்களை பயிரிடவும் உதவி அளிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், பெரிய நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் காட்டாமணக்கு போன்ற உயிரி எரிபொருள்களைப் பயிரிட இடுபொருள்களை வழங்கி, பின்னர் விளைபொருள்களை அந்த நிறுவனங்களே திரும்பப் பெற்றுக் கொள்ளவும் இந்த திட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலம்: அரசிடம் உள்ள தரிசு நிலங்களில் பயிரிடக் கூடிய தரிசு நிலங்கள் ஏற்கெனவே, எம்.ஜி.ஆர். ஆட்சியின்போதும், என்னுடைய முந்தைய (1991-1996) ஆட்சியின்போதும் ஏழைகளுக்கு வழங்கப்பட்டு விட்டன. இப்போது எஞ்சி இருப்பவை பயிரிட முடியாத -கல் நிறைந்த நிலங்கள்தான்.
அரசிடம் தரிசு நிலம் இல்லாததால்தான், தாழ்த்தப்பட்ட விவசாயப் பெண்களுக்கு வழங்க தனியாரிடமிருந்து தரிசு நிலங்களை விலை கொடுத்து வாங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி, நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் மானியமாகவும், 50 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும். இதைப் பலமுறை நான் விளக்கி உள்ளேன்' என்றார் ஜெயலலிதா
.

Dinamani, Tirunelveli Edition p.1

ஜெயலலிதா சொல்லாத ஒரு தகவலை, அவர் சொன்னது போல வெளியிடுவது, வாசகர்களுக்குத் தவறான தகவல் தருவதற்குச் சமம் ஆகாதா? இது பத்திரிகை தர்மம் ஆகுமா?

வைகோ தாயாரின் பேட்டியை, தினகரன் தவிர பிற 3 நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. பா ஜ க வின் 19 பேர் கொண்ட 2ஆவது வேட்பாளர் பட்டியல் 4 இதழ்களில் இடம் பெற்றுள்ளன. சரத்குமார் திமுகவில் இருந்து விலகிய செய்தியும், அதற்கு திமுக தலைவர் கருணாநிதியின் எதிரிவினையும், 4 நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளன. சரத் குமார் அதிமுகவில் சேரப் போகிறார் என்ற செய்தி தினமலரில் மட்டும் வெளியாகி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் தினமணியிலும் தினமலரிலும் இடம் பெற்றுள்ளன. தினகரனும் தினத் தந்தியும் இச் செய்தியை வெளியிடவில்லை.

ஜெ பிரச்சாரத்தில் மக்கள் பட்ட துன்பம் குறித்து தினமணி விரிவாக்ப் பதிவு செய்துள்ளது. மக்கள் பார்வையிலிருந்து இம்மாதிரியான செய்திகள் பிற 3 நாளிதழ்களில் காணப்படவில்லை.

அன்புமணி ராமதாஸ், கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் தேர்தல் பிரச்சாரப் பேச்சுக்களை தினமணி பதிவு செய்துள்ளது.
வழக்கம் போலவே வைகோ பிரச்சாரம் தொடர்பான செய்திகள் தினகரனில் இடம் பெறவில்லை. தினத் தந்தியிலும், தினமலரிலும் அதிகமாகவும், தினமனியில் பிற செய்திகளுக்கு நிகராகவும் வெளியிடப் பட்டுள்ளன. விஜயகாந் பிரச்சாரம் தொடர்பான செய்திகளுக்கும் இதே நிலை தான்.
அஸாமில் காங்கிரஸ் மெஜாரிட்டி பலம் பெறும் நிலையில் இருப்பதாக தி இந்து நாளிதழும், சி என் என் - ஐ பி என் நிறுவனமும் கூட்டாக நடத்திய கணிப்பில் தெரிய வந்துள்ளதாக இன்றைய தி இந்து நாளிதழின் முதல் பக்கச் செய்தி கூறுகிறது.
என் டி டி வி யில் இன்று இடம் பேற்ற செய்திகளில், திமுக தலைவர் குடும்பத்துடன் பிரச்சாரத்தை சேப்பாக்கத்தில் தொடங்கியதாக அதன் செய்தியாளர் வர்ணித்தார். இது போன்ற பதிவுகள் தமிழ் இதழியலில் காணக் கிடைக்கவில்லை என்ற குறிப்புடன் இன்றைய ஆய்வை நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளைய ஆய்வுடன் சந்திப்போம்.

ஊடக விமர்சனக் குழு

7 comments:

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல அவசியமான வேலை, தொடருங்கள்.

viswa said...

useful information continue

Anonymous said...

நல்ல அலசல்.

//ஜெயலலிதா மதுரை பேட்டியில், தே ஜ கூட்டணி மீது எழுப்பிய குற்றச் சட்டிற்கு மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப சிதம்ப்ரம் தெரிவித்த கருத்துக்கள் தினகரனில் முதல் பக்கத்தில் வெளி வந்துள்ளன. இந்தச் செய்தியை தினமலரும் தினத் தந்தியும் வெளியிடவில்லை.//

ஆனால், தினமலர் இணையத்தில் முதல் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. 'சுனாமி மற்றும் வெள்ள நிவாரணச் செலவுகளுக்குக் கணக்குக் கேட்கும் நாள் வரும்' என்பது போன்றது கட்டுரையின் தலைப்பு.

நன்றி
கமல்

Arulselvan said...

கமல்,
நேற்றைய தினமலர் திருனெல்வேலி பதிப்பில் சிதம்பரம் தொடர்பான செய்தி இடம் பெறவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நாளிதழைப் பார்வையிட்டு மறு உறுதி செய்து கொண்டோம். எனினும் நீங்கள் குறிப்பிட்டது போல, தினமலர் இணையத்தில் ."தமிழக அரசை கணக்கு கேட்கும் காலம் வரும்' நிதி அமைச்சர் சிதம்பரம் சூசகம்", என்ற தலைப்பில் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சென்னை விமான நிலைய பேட்டி மட்டும் வெளியாகியுள்ளது. அவர் காட்டு மன்னார் கோவிலில் வள்ளல்பெருமானை ஆதரித்துப் பேசிய விரிவான பேச்சோ, சிதம்பரத்தில் தேர்தலுக்காக கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தபோது தெரிவித்த கருத்துக்களோ இணையத்திலும் இடம் பெறவில்லை என்று அறிகிறோம். தினமலரின் பிற பதிப்புக்களில் சென்னை விமான நிலைய பேட்டி இடம் பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது.
இவ்விஷயத்தைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் 4 நாளிதழ்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு நடத்தப் படுகிறது. எனினும், குறிப்பிட்ட பதிப்பில் மட்டும் இடம் பெறவில்லை என்பதாலேயே ஒரு நாளிதழ் குறித்து ஒரு தவறான முடிவுக்கு வந்து விட முடியாது. இவ்வகையில், கமல் சுட்டிக் காட்டிய தகவல் எங்களின் ஆய்வுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

னாங்கள் எழுதும் ஒவ்வொரு விஷயத்தையும் மறு உறுதி செய்து கொண்டு தான் எழுதுகிறோம். எங்கள் கவனக் குறைவால் தவறுகள் இடம் பெறுமானால் அதை உடனடியாகத் திருத்திக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம்.

நன்றி
ஊடகக் கண்காணிப்புக் குழுவினர்

Anonymous said...

சென்னை விமானநிலையம் மற்றும் காட்டுமன்னார்கோயில் என இரண்டு பேட்டிகள் கொடுத்த விஷயம் தெரியாது. விமான நிலையப் பேட்டியைத்தான் சொல்கிறீர்கள் எனத் தவறாக நினைத்துக்கொண்டேன். இப்பொழுது மீண்டும் படித்தபோதுதான் சரியாகப் புரிந்தது.

பின்னூட்டங்களைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்வதற்கு நன்றி.

தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி
கமல்

Sivabalan said...

Media is one of pillars of Democracy.

Your team's contribution to this pillar may not be big enough but it is really a good begining.

Please do this service, even after the election, if time permits to you.Atleaset on some of the vital news item.

It is my request.

Arulselvan said...

Yes Mr Sivabalan,
Its a good suggestion indeed. We can react upon case by case, after the elections. It has given a good opportunity for us, to learn about the newspapers in Tamilnadu.

Thanks again for the suggestion,
Media Watch Team.