Thursday, April 06, 2006

சிறுபான்மையினருக்கும் இடம் மறுப்பு

தமிழ் ஊடகங்களில் சிறுபான்மையினரின் குரலுக்கும் இடமில்லையே ஏன்?


காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல், திமுக் கூட்டணியின் பிரச்சாரம் தொடக்கம், காட்டுமன்னார்குடியில் திருமாவளவன், தனது கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்தல், என நேற்றைய தேர்தல் களம் களை கட்டியிருந்தது. தலித்களின் குரல் மட்டுமல்ல, முஸ்லிம் சிறுபான்மையினரின் குரலுக்கும் தமிழக மெயின்ஸ்ட்ரீம் மீடியா, உரிய இடம் தர மறுத்து இருட்டடிப்புச் செய்து கொண்டிருக்கிறது, இதில் தினமணியும் விதிவிலக்கல்ல என்பதை இன்று கண்டறிந்தோம்.இந்த முன்னுரையுடன் இன்றைய ஆய்வைத் தொடங்குவோம்.

ஜெயலலிதா, தஞ்சாவூரில் மேற்கொண்ட பிரச்சாரமும், அவரது பேட்டியும் இன்றைய நாளிதழ்களின் இடங்களை ஆக்கிரமித்துள்ளன. "தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடர வாக்களியுங்கள்: தஞ்சையில் ஜெயலலிதா பேச்சு, என்பது தினமலரின் தலைப்பு. (ப.1).
"தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட கவர்ச்சித் திட்டங்களை திமுக நிறைவேற்ற முடியாது: ஜெ பேட்டி", என்பது தினத்தந்தியின் தலைப்பு (ப. 1). கிராமங்களில் பிரச்சார நேரத்தைக் குறைத்ததற்கு தி மு கவே காரணம்: ஜெ குற்றச் சாட்டு", என்பது தினமணியின் தலைப்பு (ப.7). "என் சாதனைகளை சில நிமிடத்தில் சொல்வது எளிதான வேலையல்ல: தஞ்சையில் ஜெயலலிதா பிரச்சாரம்", என்பது தினகரன் தந்துள்ள தலைப்பு (ப்.6). ஆக, 4 நாளிதழ்களுமே ஜெயலலிதாவின் பிரசாரத்திற்கும், பேட்டிக்கும் முக்கியத்துவம் தந்து செய்தியை வெளியிட்டு விட்டன. தினத் தந்தி, தொடர்ந்து ஜெயலலிதாவின் செய்தியை லீட் ஸ்டோரியாக்கி வருகிறது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல், 4 நாளிதழ்களிலும் முதல் பக்கச் செய்தியாக வெளிவந்திருக்கிறது. திமுக அமைச்சர்கள், பிற மாநிலங்களில் தேர்தல் நிதி வசூலிப்பதாக வைகோ கூறிய குற்றச்சாட்டை நேற்று வெளியிட்ட பத்திரிகைகள், இன்று அந்தக் குற்றச் சாட்டிற்குப் பதில் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜா வெளியிட, அதை தினத் தந்தி மட்டும் 3ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளது. பிற பத்திரிகைகள் அதை வெளியிடவில்லை.

தேர்தல் பிரச்சாரத்திற்கு சோனியாகாந்தி வரவிருப்பது உள்ளிட்ட பல தகவல்களை வெளியிட்ட கருணாநிதியின் சென்னை பேட்டி, தந்தியில் 5ஆம் பக்கத்திலும், தினமணியில் 9ஆம் பக்கத்திலும், தினகரனில் 7ஆம் பக்கத்திலும், தினமலரில் 5 ஆம் பக்கத்திலும் வெளியாகியிருக்கின்றன.

இரண்டு ரூபாய்க்கு அரிசி எப்படி வழங்கப்படும் என்பது பற்றியும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்க என்ன திட்டமுள்ளது என்பது பற்றியும், கருணனிதி விளக்கிப் பேசிய பிரச்சார உரை, தந்தி (ப.8), தினமணி (ப4), தினகரன் (ப.5), தினமலர் (ப6), என அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகி உள்ளது. தினகரன், திமுக பிரச்சாரம் தொடங்கப் பட்ட மேடையில் தலைவர்கள் அமர்ந்திருக்கும் படத்தை 8 பத்திகளில் பெரிதாக வெளியிட்டுள்ளது.
நடிகரும் முன்னாள் இயக்குநருமான பாக்கிய ராஜ், திமுகவில் சேர்ந்த செய்தி, 4 நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.[தந்தி (ப.10 , தினமணி ப.9, தினகரன் ப.1, தினமலர், ப.16].
ராமதாசின் நேற்றைய சென்னை பேட்டி, 4 இதழ்களிலும் இடம் பெற்றுள்ளது. "திமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்றக் கூடியதுதான்", டாக்டர் ராமதாஸ் பேட்டி (தந்தி ப.10), "இன்னும் 10 நாள்களில் ஜெக்கு எதிரான அலை", ராம்தாஸ் ஆரூடம் (தினமணி ப.6), தினமலரிலும் (ப.6), தினமலரிலும் (ப.7), இச்செய்தி சுருக்கமாகத் தரப்பட்டிருக்கிறது.
புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள், தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்த செய்தி, தினத்தந்தியில் 13ஆம் பக்கத்திலும், தினமலரில் 14ஆம் பக்கத்திலும் வெளிவந்துள்ளன. தினகரனும், தினமணியும், இந்தச் செய்தியை வெளியிட வில்லை.

தமிழ் நாட்டில் மாயாவதி 5 நாட்கள் பிரச்சாரம், பகுஜன் சமாஜ்வாடிக் கட்சியின் வேட்பாளர்கள் 55 பேர் அறிவிப்பு என்ற செய்தி தினத் தந்தியில் 13 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. எனினும், வேட்பாளர்களின் முழு பட்டியலும் இடம் பெறவில்லை.

திருமாவளவன் முதல் கட்டப் பிரச்சாரம் என்ற செய்தி தினமணியில் 4ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதில் அவர் என்ன பேசினார் என்ற தகவல் எதுவும் இல்லை. திருமாவளவன் பங்கேற்றார் என்று மட்டுமே செய்தியில் காணப் படுகிறது. வைகோ, தனது தந்தையின் நினைவு நாளான, ஏப்ரல் 5 அன்று பகலில் மவுன விரதம் இருந்ததாக நேற்றைய நாளிதழ் ஒன்றில் செய்தி இடம் பெற்றிருந்தது. அது போல திருமாவளவன் ஏதாவது விரதத்தில் இருக்கிறாரா, என்று தெரியவில்லை. திருமா தனது கட்சி வேட்பாளர்களைக் காட்டுமன்னார்கோவிலில் அறிமுகம் செய்து வைத்துப் பேசிய பேச்சு 4 இதழ்களில் எதிலும் இடம் பெறவில்லை. அவர் என்ன பேசினார் என்பதை, இந்த நவீன வசதிகள் கொண்ட யுகத்திலும் இவ்வளவு எளிதாக இருட்டடிப்பு செய்து விட முடிகிறதே? தலித் என்பதால் தான் இந்த நிலையா?

தினமணியில் வெளியாகியுள்ள திருமாவளவன் குறித்த செய்தி இதோ அப்படியே தரப்படுகிறது.

திருமாவளவன் முதல்கட்ட பிரசாரம்


சென்னை, ஏப்.6: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார்.

சுற்றுப் பயண விவரம்:

ஏப்.6 -காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, குமராட்சி மற்றும் சிதம்பரம் நகர்.

ஏப்.7 -அண்ணாமலை நகர், சிதம்பரம் நகர், வல்லம்படுகை.

ஏப்.8 -செம்பானூர், நல்லாடை, நல்லாத்தூர், நெடுங்காடு பகுதிகளில் வாக்கு சேகரிப்பு

ஏப்.9 -விருத்தாசலம் நகர், கரிவேப்பிலங்குறிச்சி, ராசேந்திரப்பட்டினம், முருகன்குடி, பெண்ணாடம்.

ஏப்.10 -ஆவினங்குடி, திட்டக்குடி, வேப்பூர், நல்லூர், உளுந்தூர்பேட்டை.

ஏப்.11 -உளுந்தூர்பேட்டை நகர், எலவுநாத்தூர்கோட்டை, தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், மணலூர்பேட்டை .

ஏப்.12 -விழுப்புரம், கிடார்.

ஏப்.13 -செங்கம், சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளி, ஊத்தங்கரை, அனுமன் தீர்த்தம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு. அரூரில் பொதுக் கூட்டம்.

ஏப்.14 -ஊத்தங்கரை, காரப்பட்டு, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், அணைக்கட்டு.

ஏப்.15 -சத்துவாச்சாரி, விஷாரம், ஆர்க்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், தக்கோலம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு. ஸ்ரீபெரும்புதூரில் பொதுக் கூட்டம்.


தமிழக நதிகளை இணைப்பேன், நடிகர் விஜயகாந்த் பிரசாரம் என்ற தலைப்பில் தினமணி 6ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் நடிகராகத் தான் பிரச்சாரம் செய்கிறாரா? அவருக்கு என்று ஒரு அரசிய்ல் கட்சி தொடங்கி பிரச்சாரமும் மும்முரமாக நடத்திக் கொண்டிருக்கும் போது நடிகர் என்ற அடைமொழி அவசியமா? தினமணி தவிர வேறு எந்த நாளிதழும் அவரது பூந்தமல்லி பேச்சை வெளியிடவில்லை.

அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் என்று ஒரு கருத்துக்கணிப்புக் கூறுவதாக தினமணி 7ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியும் வேறு எந்த நாளிதழிலும் இடம் பெறவில்லை.

ஸ்டாலின் ஒரு மாத பிரசாரம் என்ற செய்தி தினமணியிலும் (ப்.7), தினகரனிலும் (ப7) இடம் பெற்றுள்ளது.

வைகோவை விமர்சித்து தயாநிதி மாறன், பேசிய பேச்சு, தினகரனிலும் (முதல் பக்கம்), தினமலரிலும் (3ஆம் பக்கம்) வெளியாகியுள்ளது. பிற 2 பத்திரிகைகளும் இச்செய்தியை வெளியிடவில்லை.

வைகோவின் ஒரு பேச்சு, தினமலரில் மட்டும், மற்றொரு பேச்சு தினமணியில் மட்டும் வெளியாகியுள்ளது. "அழியப் போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். அமிர்தமதி காவியத்தைக் கூறி கருணாநிதிக்கு வைகோ பதில்", என்ற தலைப்பில் வைகோவின் உடுமலைப்பேட்டை பேச்சு, தினமலரில் 6ஆம் பக்கம் வெளியாகி உள்ளது. "தமிழகத்துக்கு பிரதமர் வருவதைத் தடுத்தார் கருணாநிதி: வைகோ குற்றச்சாட்டு", என்ற தலைப்பில் கறுரில் செவ்வாய்க்கிழமை (4.4.2006) வைகோ பேசிய பேச்சும் இடம் பெற்றுள்ளது. கரூரில் வைகோ அளித்த பேட்டி ஒன்று தினத் தந்தியில் வெளிவந்துள்ளது: "பெரும்பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சி அமைக்கும்", என்ற தலைப்பில் தினத்தந்தியின் 4 ஆவது பக்கத்தில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது.

இன்றைய அறம் தவறிய செயல்களாகக் கொள்ளத் தக்கவை:

1. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பிரச்சார்த் தொடக்க விழா, நேற்று சென்னை புரசைவாக்கத்தில் நடந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் பங்கேற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய தலைவர்களின் உரையை தினமலர் விரிவாக வெளியிட்டுள்ளது. தினத்தந்தியும் விரிவாகவே வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் ஆகிய இருவரின் பேச்சுக்களை 4 நாளித்ழ்களுமே வெளியிடவில்லை. இவர்களும் பங்கேற்று உரையாற்றினார்கள் என்று செய்தியை முடித்துக் கொண்டன. சிறுபான்மை இனத்தவர்களான இந்த 2 தலைவர்களின் பேச்சுக்களை மட்டும் இருட்டடிப்பு செய்வது அறமா?

2. திருமாவளவன் நேற்று காட்டு மன்னார்கோவிலில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய பேச்சு எந்த நாளிதழிலும் இடம் பெறவில்லையெ ஏன்?

3. "தயாநிதி மாறன் 'அநாகரீக ஆவேசம்', திமுக கூட்டணித் தலைவர்கள் எரிச்சல்", என்ற தலைப்பில் தினமலர் திருநெல்வேலி சப்ளிமென்டின் 11ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், எந்தத் தலைவரையும் மேற்கோள் காட்டாமல், "அதிமுக, மதிமுக முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்", என்று மட்டும் சொல்லி விட்டு ஒரு அவதூறைப் போல செய்தி வெளியிடுவது அறமா?

4. எம்ஜிஆர் பெயரைச் சொல்லி பிரச்சாரம், ஜெ பாணியில் திடீர் மாற்றம், என்று எந்த ஆதாரமும் இல்லாமல், தினகரன் 7ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார் என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. பத்திரிகை நிறுவனங்கள் தங்களின் அரசியலுக்காகச் செய்தி வெளியிடும் போது, இப்படி எந்த ஆதாரத்தையும் மேற்கோள் காட்டாமல் எழுதுவது அறமா?

இந்தக் கேள்விகளுடன் இன்று விடை பெறுகிறோம். மீண்டும் நாளைய விமர்சனத்துடன் சந்திப்போம்.

ஊடக விமர்சனக் குழு

2 comments:

Abu Umar said...

ஊடக விமர்சன குழுவிற்கு நன்றி.

//தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜபருல்லா,//

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெயர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் என்பதாகும். ஜபருல்லா அல்ல.

Arulselvan said...

சுட்டிக் காடியமைக்கு நன்றி. தவறு திருத்தப் பட்டு விட்டது.