Thursday, April 13, 2006

பல பத்திரிகைகளில் ஜனநாயகமில்லை

“டைவர்சிட்டி” என்பது ஜனநாயக ஊடகத்தின் ஒரு முக்கிய அம்சம். பல தரப்புக் குரல்களுக்கும் ஜனநாயகம் இடம் தருவதை இது குறிக்கும்.

ஒரு சான்றைப் பாருங்கள்: 12 4 2006 அன்று குறைந்தது 7 தலைவர்கள் வெவ்வேறு கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

1.அ தி மு க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப் படும் என்று வைகோ சொல்லியிருக்கிறார்.

2. 50 லட்சம் ஏக்கர் நிலம் குறித்து , பா ஜ க வின் இல கணேசன், ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

3. ராமதாஸ் ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

4. ஸ்டாலின் களியக் காவிளையிலும், மார்த்தாண்டத்திலும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.

5. ப. சிதம்பரம் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.

6. 233 வேட்பாளர்களையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்தி அதில் விஜயகாந் பேசியுள்ளார்.

7. பா ஜ க வின் முன்னாள் தலைவர் வென்கைய நாயுடு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

வழக்கமான திமுக அதிமுக தலைவர்கள் பிரச்சாரம் போக இத்தனை தலைவர்கள் பேசிய பிரச்சாரப் பேச்சுக்களை தமிழ் நாளிதழ்கள் எப்படி வெளியிட்டிருக்கின்றன என்று பார்த்தோம்.
தினமணி, இந்த 7 செய்திகளில் 5 செய்திகளை இன்றைய பதிப்பில் பதிவு செய்து கொண்டு, "டைவர்சிட்ட்ய்" (பலதரப்புக் குரல்களையும் பதிவு செய்வதில்) பிற நாளிதழ்களை விட முன்னணியில் இருக்கிறது. வைகோவின் பேச்சையும், இல கணேசனின் பேச்சையும் தினமணி வெளியிடவில்லை.
அடுத்ததாக 7ல் 4 செய்திகளை வெளியிட்டிருக்கிறது தினமலர். ராமதாசின் பேச்சை தினமலர் வெளியிடவில்லை. சிதம்பரம், வைகோ, பேச்சுக்களும் தினமலரில் இடம் பெறவில்லை.
தினத் தந்தி இந்த 7 செய்திகளில், வைகோவின் "முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு", என்ற செய்தியை மட்டும் வெளியிட்டிருக்கிறது, பிற 6 செய்திகளுக்கும் தினத் தந்தி இடம் தரவில்லை.

தினகரன் இந்த 7 செய்திகளில் இல கணேசனின் பேச்சை மட்டும் வெளியிட்டு விட்டு, பிற 6 செய்திகளையும் வெளியிடாமல் தடுத்து விட்டது.

இன்றைய ஆய்வைப் பார்ப்போம்:

தினத் தந்தி, தினகரனின் ஒரு பக்கச் சார்புநிலை

மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதா என்று கடைசிப் பக்கத்தில் வண்ணப் படங்கள் நான்கையும் சேர்த்து 3 காலம் செய்தியை வெளியிட்டுகிகிறது தினத் தந்தி.
தினகரனோ, கலைஞர் செல்லும் வழி நெடுக மக்கள் வெள்ளம் என்று லீட் ஸ்டோரி வெளியிட்டுள்ளது.
இதில் ஏன் தந்தி கருணாநிதி செல்லும் கூட்டத்தில் பங்கேற்கும் மக்களைப் பற்றி செய்தி எழுதவில்லை என்றும், தினகரனில் ஜெயலலிதா செல்லும் இடங்களில் கூடும் கூட்டங்கள் பற்றியும் எந்தக் குறிப்பையும் வெளியிடவில்லை என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.. இது எப்படி அறமாகும்?

தயாநிதியின் வழக்கும் வைகோவின் சவாலும்

வைகோ, தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டி கடந்த வாரம் பேசிய செய்திகளை, தினமலரும், தினத் தந்தியும் விரிவாக வெளியிட்டிருந்தன. வைகோ மீது தயாநிதி மாறன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்தச் செய்தியை, தினமணி (ப.1 பாக்ஸ்), தந்தி (ப.8), தினகரன் (ப.14 6 காலம் அளவிற்கு பெரிய செய்திய்) ஆகிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. தினமலர் நெல்லைப் பதிப்பில் இந்தச் செய்தியை வெளியிடவில்லை.

இதற்கு எதிர்வினையாக, வைகோ, தயாநிதி மாறன் வழக்கை சந்திக்கத் தயார் என்று நேற்று வைகோ உடனடியாக அறிவிக்க, அந்தச் செய்தி தினமணியிலும் (ப.9), தினத் தந்தியிலும் (ப.14) இடம் பெற்றுள்ளன. தினகரனும், தினமலரும் இந்தச் செய்திகளை வெளியிடவில்லை.

அதாவது தினமலர், இந்த இரண்டு செய்திகளையுமே வெளியிடாமல், மொத்தமாக இருட்டடிப்புச் செய்து விட்டது. தினகரன், வைகோவின் பதில் பேச்சை மட்டும் வெளியிடவில்லை. தினத் தந்தியும், தினமணியும், இரண்டு செய்திகளையுமே வெளியிட்டுள்ளன.
______________________

ஒரு தொகுதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் சந்திப்பு: தினகரன் இருட்டடிப்பு

இது தவிர, பாளையங்கோட்டையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் சந்திக்க வைத்து அது தொடர்பான விவாதங்களையும், பட்டியலையும் வெளியிட்டுள்ளன, தினமணி ப.3, தினத் தந்தி ப.4, தினமலரும்.
இது தொடர்பான செய்திகளை தினகரன் வெளியிடவில்லை.
_____________

தலைவர்கள் பேச்சுக்களை வெளியிடுவதில்
முழுமை இல்லை
__________
கருணாநிதி

கருணாநிதி 12 3 2006 அன்று சைதாப்பேட்டை, செங்கற்பட்டு, விளுப்புரம் ஆகிய இடங்களில் பிரச்சார உரையாற்றியிருக்கிறார். கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப் படும் அரிசியை, வங்குபவர்களின் வசதிக்கு, மாதம் இரண்டு தடவையாகவும் வாங்கிக்கொள்ள வசதி செய்யப் படும், கல்விக் கட்டணம் குறைக்கப் படும், ஆட்சி மாற்றமே முக்கிய தேர்தல் பிரச்சினை, ஆட்சியைக் கைப்பற்றினால் முதலில் போடும் கையெழுத்து எதுவாக இருக்கும் எனப் பல விஷயங்களை முன் வைத்துள்ளார். இந்த உரைகளில் உள்ள அனைத்துக் கருத்துக்களையும் இடம் பெறச் செய்த நாளிதழ் எதுவுமில்லை.
தினம்ணி, சைதாப்பேட்டை பேச்சையும் செங்கற்பட்டு பேச்சையும் வெளியிட்டுள்ளது. தினத் தந்தி சைதாப்பேட்டை பேச்சை மட்டும் வெளியிட்டுள்ளது. தினமலர் விழுப்புரம் பேச்சையும், சைதாப் பேட்டை பேச்சையும் வெளியிட்டுள்ளது. தினகரன் முந்தைய நாள் மைலாப்பூரில் பேசிய பேச்சை விரிவாக வெளியிட்டுள்ளது. கருணாநிதி எழுதிய அரசியல் கவிதையை தினகரன் மட்டுமே வெளியிட்டுள்ளது. தி மு க மத்திய அமைச்சரவையில், மதிமுக சார்பிலும் அமைச்சர்களைப் பெற்றுக் கொண்டதாகக் கூறுவது அபாண்டப் பொய் என்று வைகோவின் பெயரைக் குறிப்பிடாமல் சாடுகிறது இக்கவிதை. வடிவம் கவிதை என்பதாலேயே கருணாநிதியின் இந்த முழக்கம் அவாரது குடும்பப் பத்திரிகை தவிர பிறவற்றில் இடம் பெறவில்லை.
_________
ஜெயலலிதா.

ஜெயலலிதா தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் பேசியிருக்கிறார். திருச்செந்தூர், தூட்துக்குடி, ஓட்டப்பிடாரம், ஆத்தூர், ஸ்பிக்நகர் ஆகிய இடங்களில் பேசிய அந்தப் பேச்சுக்களில் தாமிரபரணி தண்ணீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுப்பது பற்றிய திட்டத்தையும், நெசவாளர்கள், மீனவர்களைப் பாதுகாக்கும் திட்டத்தையும், தூத்துகுடி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் செய்யப் பட்ட வளர்ச்சிப் பணிகளையும், மனித நேயம் சிறந்து விளங்க சட்டம் ஒழுங்கை சீரமைத்தது அதிமுக அரசு என்ற தகவல்களை வெளியிட்டுள்ளார். தினத் தந்தியும், தினமலரும் கூட இந்த 4 விஷயங்களையும் வெளியிடவில்லை. ஆத்தூர், ஸ்பிக் நகர் உரைகளை தினத் தந்தி வெளியிடவில்லை. திருச்செந்தூர் ஓட்டப் பிடாரம் பேச்சுக்களை மட்டும் தந்தி வெளியிட்டுள்ளது. தினமணி திருச்செந்தூர், தூத்துக்குடி பேச்சுக்களைப் பதிவு செய்துள்ளது. தினகரன் ஆத்தூர் பேச்சையும், தினமலர், திருச்செந்தூர், ஸ்பிக் நகர் பேச்சுக்களையும் மட்டும் வெளியிட்டுள்ளன.
_________
தலித் குரலுக்கு இடமில்லை

விடுதலைச் சிறுத்தைகள் சின்னம் 24ஆம் தேதி தெரியும் என்று திருமாவளவனின் பேச்சு தினமலரில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இச்செய்தி பிற 3 நாளிதழ்களிலும் வெளியாகவில்லை.

திமுகவில் இந்திரகுமாரி இணைந்த செய்தி 4 நாளிதழ்களிலும், படமாகவோ, செய்தியாகவோ பதிவு செய்யப் பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சி அதிமுகவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்திருப்பது தந்தியில் மட்டும் ப.14ல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா தங்குவதற்கு தேனியில் தனி பங்களா தயாராகி வருவதாக தினகரனில் ப.6ல் செய்தி வெளியாகியுள்ளது.

________

சிறப்புப் பேட்டிகள்

தி இந்து நாளிதழ் திமுக தலைவர் கருணாநிதியின் சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது. தினகரன் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் என் வரதராஜனின் சிறப்புப் பேட்டி இடம் பெற்றுள்ளது.

ஆனந்த விகடனில் திமுக தலைவர் கருணாநிதியின் சிறப்புப் பேட்டி இடம் பெற்றுள்ளது. வைகோவை பொய்க்கோ என்றும், ஜெயலலிதாவை பயலலிதா என்றும் முரசொலியில் குறிப்பிடப் படுவது உட்பட பல விஷயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

ஊடகக் கண்காணிப்புக் குழு

1 comment:

Sami said...

பல பத்திரிக்கைகள் இன்று கட்சி சார்ந்த பத்திரிக்கைகளாகவே இயங்கி வருகின்றன.தினமலர்,தினத்தந்தி,தினபூமி இவைகளின் வரிசையில் குமுதமும் அதிமுக ஆதரவு பத்திரிக்கைகள் வரிசையில் இணைந்துள்ளது.தினகரனின் திமுக ஆதரவு நிலை ஒன்றும் புதிய செய்தியல்ல.

நடுநிலமை தவறாமல் செய்திகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய பத்திரிக்கைகள்,கரை வேட்டிகளாக தங்களை மாற்றிக் கொண்டு செய்திகளை திரித்து எழுதுவது வேதனைக்குரியது.மிகவும் மோசமாக இந்த திரிப்பு வேலை செய்வது தினமலாராக தான் இருக்கும் என்று எனக்கு தோண்றுகிறது.

தினமணியின் நடுநிலமை பாராட்டுக்குரியது.