Thursday, May 04, 2006

தினமலரின் குறும்பு:

தனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை வெளிப்படை யாகவும், கூச்சமின்றியும், அறநெறிகளை மீறியும் செய்து வரும் தினமலர் 03 05 2006 அன்று தயாநிதி மாறன் குறித்து முதல் பக்க லீட் ஸ்டோரியை வெளியிட்டுள்ளது. தயாநிதி மாறன் விவகாரத்தில் டாடாவுடன் பேச நிராகரிப்பு... கருணாநிதியின் கோரிக்கையை ஏற்க சோனியா மறுப்பு என்பது அந்த லீட் ஸ்டோரியின் தலைப்பாகும். இந்த ஸ்டோரியில், எங்குமே, யாரையுமே மேற்கோள் காட்டப் படவும் இல்லை. இந்த வாதங்களுக்கு எந்த ஆதாரமும் முன் வைக்கப் படவுமில்லை. முழுக்க முழுக்க இது ஒரு கற்பனையாகவோ, வதந்தியாகவோ இருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
அந்தச் செய்தியை இங்கே அப்படியே தருகிறோம்.:

தயாநிதி மாறன் விவகாரத்தில் "டாடா'வுடன் பேச... சோனியா நிராகரிப்பு! கருணாநிதி கோரிக்கையை ஏற்க மறுப்பு

நமது சிறப்பு நிருபர்
டாடா நிறுவனத்தை மிரட்டியதாக கூறப்படும் சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை காப்பாற்ற தி.மு.க., தலைமை காங்.,
கட்சியிடம் வைத்திருந்த கோரிக்கையை காங்., நிராகரித்து விட்டது.

இந்த விவகாரத்தில் டாடா நிறுவனம் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க., தலைமை விரும்புகிறது. ஆனால், இது தொடர்பாக டாடா நிறுவனத்திடம் பேச
சோனியாவும், பிரதமரும் மறுத்து விட்டதாக டில்லி காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.

வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு (டி.டி.எச்.,) வர்த்தக
உரிமம் பெற்றுள்ள டாடா நிறுவனத்தில், சன் "டிவி' குழுமத்தை பங்குதாரராக்க வேண்டும்
என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதாக பத்திரிகைகளில்
செய்திகள் வெளிவந்தன. இந்த விவகாரத்தை முதன் முதலில் கிளப்பியவர் வைகோ.

டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் நாட்டில் உள்ள தொழிலதிபர்களை
உலுக்கியுள்ளது. தேர்தல் களத்தில் இது தி.மு.க.,வுக்கு பெரும் தர்மசங்கடத்தை
ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரமாக செய்திகள் தொடர்ந்து
வெளியாகிக் கொண்டுள்ளன. ஆனால், டாடா நிறுவனம் இந்த செய்திகளை இதுவரை
மறுக்கவில்லை.

இதுதான் தி.மு.க.,வை பீதிக்குள் தள்ளி விட்டது. தேர்தல்
நேரத்தில் டாடா விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தி
வருவதாக தி.மு.க.,வினரே கூறி வருகின்றனர்.

டாடாவை மிரட்டிய விவகாரம்
தமிழக தேர்தலின் போக்கையே மாற்றிவிடும் என்ற அச்சம் தி.மு.க., தலைமையை பிடித்துக்
கொண்டுள்ளது. இந்த விவகாரத்திலிருந்து எப்படியாவது தயாநிதி மாறனை மீட்க வேண்டும்
என்று தீவிரமாக இறங்கியது தி.மு.க., தலைமை.

இதற்காக முதலில் காங்கிரஸ்
தலைவர் சோனியாவிடம் தி.மு.க., தலைமை பேசியது. "இந்த விவகாரத்தில் டாடா நிறுவனம்
உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்தால் தேர்தலுக்கு
நல்லது' என்று தி.மு.க., தலைமை கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தில்
தலையிடாமல் சோனியா ஒதுங்கிக் கொண்டார். "இதில் தலையிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு
அவப்பெயர் வந்துவிடும்' என்று சோனியா தெரிவித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரம்
கூறுகிறது. பின்னர் பிரதமரிடம் தி.மு.க., தலைமை முறையிட்டது. பிரதமரும் இந்த
விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டதாக தெரிகிறது.

சோனியாவும்,
பிரதமரும் தலையிட மறுத்துவிட்டதால், டாடா விவகாரம் மேலும் வெடித்துக் கொண்டே
இருக்கிறது. தமிழக தேர்தலில் டாடா விவகாரம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்
என்று தி.மு.க.,வினரே தங்கள் கட்சி தலைமையிடம் எடுத்துக் கூறி வருகின்றனர்.
இதிலிருந்து தயாநிதி மாறனை எப்படி மீட்பது என்று தெரியாமல் தி.மு.க., தலைமை தவியாய்
தவித்து வருகிறது.
Source :
http://www.dinamalar.com/2006may03/fpnews1.asp

கருணாநிதிக்கு எதிரான செய்திக்கு தினத் தந்தியில் முக்கியத்துவம்:

தினந் தந்தி அதிமுக வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் அதே வேளையில் கருணாநிதிக்கு எத்ரிஆன நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. கருணாநிதியின் பிரச்சார உரைகளை வெளியிட்டு வந்தாலும், அவருக்கு எதிராக யார் பேசினாலும், அது ஜெயலலிதாவா, வைகோவா, நடிகர் செந்திலா என்பது முக்கியமல்ல, அதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவது தினத் தந்தியின் பாணியாக இருக்கிறது.

மே 03 இதழில், வைகோ கருணாநிதி மீது வழக்குப் போடப் போவதாக அறிவித்துள்ள செய்தி, " என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டிய கருணாநிதி மீது ரூ 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு, சேப்பாக்கம் கூட்டத்தில் வைகோ அறீவிப்பு", என்ற தலைப்பில் 4 ஆம் பக்கத்தில் 5 காலம் செய்தியாக விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. இந்தச் செய்தியில் வைகோவின் பேச்சை விரிவாக வெளியிட்டதுடன், இதே நாளின் 20 ஆம் பக்கத்தில், "கருணாநிதிக்கு வைகோ அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் விவரம்", என்ற தலைப்பில் வக்கீல் நோட்டீஸ் குறித்த விவரமும் வெளியிடப் பட்டுள்ளது.

கேரளாவில் ஆட்சி மாற்றம்: இந்து நாளிதழ் கணிப்பு

04 05 2006 தி இந்து இதழில் அந்த நாளிதழ் சி என் என் - ஐ பி என் தொலைக்காட்சியுடன் இணைந்து நடத்திய எக்சிட் போல், எனப்படும் வாக்களித்து விட்டு வாக்குச் சாவடியை விட்டு வெளியில் வருபவர்களிடம் கேட்டுப் பெறும் தகவல்களின் அடிப்படையில் இந்தக் கணிப்பு நடத்தப் படுகிறது. இதன் அடிப்படையில் இடது சாரிக் கூட்டணி 107 முதல் 117 இடங்கள் வரைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. அறிவியல் பூர்வமான இந்த ஆய்வின் முடிவு, பதில் அளித்தவர்களின் நேர்மையைப் பொறுத்த விஷயமாகும். எவ்வளவு தூரம் உண்மையைச் சொல்லியிருக்கிறார்களோ, அவ்வளவு தூரம், அது நிஜத்தைப் பிரதிபலிக்கும்.

நடுகை செய்யப் பட்ட செய்தி:

ஈராக் போரில், பத்திரிகையாளர்களை போர் வீரர்களுடன் உள்ளே புகுத்தி அனுப்புவது அமெரிக்க ராணுவத்தின் நுட்பமாக இருக்கிறது. அதே போல இந்தியப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை உளவுத் துறையோ, வேறு எவருமோ நடுகை செய்வதாக (ப்லன்ட்) நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அதைக் கண் முன் நிறுபிப்பதாக உள்ளது 04 05 2006 அன்று தினமலர், தினமணி, தினத்தந்தியில் இடம் பெற்றுள்ள செய்தி.
தினமணியிலும், தினத் தந்தியிலும் முதல் பக்கத்திலும், தினமலரில் கடைசிப் பக்கத்திலும் வெளியாகியுள்ள பெட்ரோல் விலை உயரும் என்ற அறிவிப்பு தான் அது. இதில், எங்கும் எவரும் மேற்கோள் காட்டப் படவில்லை. சிதம்பரத்தின் அறிவிப்பும், அதற்கு அவரே அளித்துள்ள மறுப்பும் இந்தச் செய்தியில் இடம் பெற்றிருந்தாலும், இது ஒரே நேரத்தில் யாரையும் மேற்கோள் காட்டாமல் வெளியிடப் பட்டிருக்கும் விதம் இதை ஒரு நடுகை செய்யப் பட்ட செய்தியாகக் கருத இடமளிக்கிறது.

தினமலரில் வெளி வந்த செய்தி இங்கே அப்படியே தரப் படுகிறது:



நான்கு நாட்களில் பெட்ரோல், டீசல், காஸ் விலை கடுமையாக
உயர்கிறது * தி.மு.க., நிர்பந்தத்தால் அறிவிப்பை தள்ளிவைத்தது மத்திய
அரசு


புதுடில்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த
வேண்டிய கட்டாய நிலைக்கு மத்திய அரசு வந்துவிட்டது. லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை
அதிகரிக்கப்பட உள்ளது. சமையல் காஸ் விலையும் பத்து ரூபாயில் இருந்து ரூ. 15 வரை உயர
உள்ளது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே விலை உயர்வு அமலுக்கு
வரவேண்டும் என கூட்டணி கட்சிகள் கொடுத்துவந்த நெருக்கடி காரணமாக தற்போது விலை
உயர்வு அறிவிக்கப்படவில்லை.


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்
தங்களால் நஷ்டத்தை தாங்கி கொள்ள முடியாது. எனவே விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஓட்டுப்பதிவு வரும் 8ம் தேதி முடிந்ததும் அன்று நள்ளிரவு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாமதத்திற்கு மத்தியில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., வின் தொடர் நெருக்கடியும் காரணம் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் ஆகியவற்றை வினியோகித்து வருகின்றன. இதில் பெரும் பங்கு ஐ.ஓ.சி., நிறுவனத்துடையது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 75 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்து காணப்படுவதால் இந்நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கடந்த 200506ம் நிதியாண்டில் இந்நிறுவனங்களுக்கு ரூ. 39 ஆயிரத்து 600 கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரலில் ஐ.ஓ.சி., நிறுவனத்துக்கு ரூ. இரண்டு ஆயிரத்து 450 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மே மாதத்தில் ஆயிரத்து 560 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து 200607ம் ஆண்டில் ரூ. 57 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்திக்க உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 9.34, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 10. 43, மண்ணெண்ணெய் விலையில் லிட்டருக்கு ரூ. 16.78, சமையல் காஸ் விலையில் ஒரு சிலிண்டருக்கு ரூ. 200 என நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதை சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையில் ரூ. 10 உயர்த்த வேண்டும். அதே போல் சமையல் காஸ் விலையையும் உயர்த்த வேண்டும் என ஐ.ஓ.சி., தலைவர் சில நாட்களுக்கு முன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். கோவையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை நெடுநாளைக்கு தள்ளிப்போட முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாய் வரையும், சமையல் காஸ் விலையில் பத்து ரூபாயில் இருந்து ரூ. 15 வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து விட்டது. ஆனால், ஐந்து மாநில தேர்தல்கள் தான் இந்த முடிவை சற்று தள்ளிப் போட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் தான் இதற்கு பெரும் எதிர்ப்பு என்பதால், கேரளா, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் வரும் 5ம் தேதிக்குள் அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், 8ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம் மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளில் தான் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தை சமாளிக்க 5ம் தேதிக்குள் விலை உயர்வை அறிவிக்க மத்திய அரசு யோசித்தது. இதை அறிந்த , தி.மு.க., தமிழக ஓட்டுப்பதிவு வரை அறிவிப்பை தள்ளிப்போட ரொம்ப பிரயத்தனம் செய்தது. இதற்காக மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மூலமாக காய் நகர்த்தல் வேலைகள் நடந்தன. விலை உயர்வு பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்றால் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் தேவை. ஆனால், சிதம்பரம் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் இருப்பதால் அதை காரணம் காட்டி தி.மு.க., அடுத்த வாரம் வரை தள்ளிப் போட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது . இது குறித்து டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு: தமிழக ஓட்டுப்பதிவுக்கு முன் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டால் தேர்தல் வெற்றி வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலை தேர்தலில் உருவாகியுள்ளதால் "விலை உயர்வு அறிவிப்பு' எக்காரணம் கொண்டும் தேர்தலுக்கு முன்பாக இருக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தி.மு.க., தலைமை திட்டவட்டமாக கூறி விட்டது. தமிழகத்தை சேர்ந்தவரே நிதியமைச்சராகவும் இருப்பதால் "விலை உயர்வு அறிவிப்பு' வெளியாவதில் காலதாமதம் ஏற்படுத்துவது சுலபமாகி விட்டது. தமிழகத்தேர்தல் ஓட்டுப்பதிவு தினமான 8ம் தேதி நள்ளிரவிலோ அல்லது ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 11ம் தேதி நள்ளிரவிலோ விலை உயர்வு அறிவிப்பை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால் தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கருத்து உள்ளது. எனவே ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஓட்டுப்பதிவு தினமான 8ம் தேதி நள்ளிரவில் விலைஉயர்வு அறிவிப்பு வெளியாகும். குறைந்த ஓட்டுபதிவு என்ற நிலை உருவானால் 11ம் தேதி நள்ளிரவு வெளியாகும். தமிழக தேர்தல் முடிவுகள் தி.மு.க., வுக்கு பாதகமாகவும் அ.தி.மு.க., வுக்கு சாதகமாகவும் இருந்தால் நிச்சயம் அன்றைய தினம் நள்ளிரவே விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும். எனவே தமிழக மக்கள் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., வுக்கு ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் பெட்ரோலியப்பொருட்களின் விலை உயர்வை உடனடியாக எதிர் கொண்டே ஆக வேண்டும். இவ்வாறு டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. சொன்னது என்ன? சிதம்பரம் விளக்கம்: "" பெட்ரோல் விலை உயரும் என நான் கூறவில்லை; நீண்ட காலத்துக்கு தள்ளிப்போட முடியாது என்றே தெரிவித்தேன்,'' என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: என்னிடம் " பெட்ரோல் விலை பற்றிய முடிவை எவ்வளவு காலத்திற்கு தள்ளிப்போட முடியும்?' என்று கேட்கப்பட்டது. " நீண்ட காலத்திற்கு தள்ளிப் போட முடியாது' என்று பதில் அளித்தேன். விரைவில் பெட்ரோல் விலை உயரும் என்று நான் கூறவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Source :
http://www.dinamalar.com/2006may04/fpnews3.asp

மாயாவதியின் பேச்சு: தமிழ்ப் பத்திரிகைகள் [தினமணி தவிர] புறக்கணிப்பு

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் எஸ் கிருஷ்ணசாமியை ஆதரித்துப் பேசிய பேச்சு தினமணியில் மட்டும் வெளியாகியுள்ளது. 04 05 2006 அன்று 6ஆம் பக்கத்தில் 6 காலம் செய்தியாக, 3 காலம் படத்துடன் இந்தச் செய்தி வெளியிடப் பட்டுள்ளது. இச்செய்தியைப் பிற இதழ்களில் காணமுடியவில்லை.

தயாநிதிமாறனுக்கு எதிரான தினமலரின் போர்:

டாடா விவகாரத்தை முடிந்தவரைப் பெரிதாக்கி, அதன் மூலம் தயாநிதி மாறனைப் பதவி நீக்கம் செய்ய முடியுமா என்பது தினமலரின் பிரமப் பிரயத்தன முயற்சியாக இருப்பதைப் பாமரனும் உணர்ந்து கொள்வான். தினமும், டாடா- தயாநிதி தொடர்பான ஒரு செய்தியை எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வெளியிட்டுத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொள்வது தினமலரின் வழக்கமாக இருக்கிறது.

04 05 2006 அன்று சென்னை வரும் பிரதமர், பொதுக்கூட்டத்தில் இது தொடர்பாக அறிவிப்பார் என்கிறது தினமலரின் செய்தி. இதற்கும் எவ்வித ஆதாரத்தையோ, மேற்கோளையோ காட்டவில்லை. ஒரு பத்திரிகை முதலாளிக்கு என்னவெல்லாம் ஆசையோ அதையெல்லாம் செய்தியாக, குறிப்பாக லீட் ஸ்டோரியாக்க முடியுமா? இது அபத்தம் இல்லையா? அறநெறிகளை மீறுதலின் உச்சம் இல்லையா?

தினமலர் வெளியிட்டுள்ள செய்தியை அப்படியே தருகிறோம்:


தயாநிதி விவகாரம் குறித்து சென்னையில் இன்று
விளக்கம்?...மன்மோகன் முடிவு! தேர்தல் பிரசாரத்தில் மத்திய அரசின் முடிவை
அறிவிக்கிறார்

நமது சிறப்பு நிருபர்

டாடா நிறுவனத்தை மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில்
தி.மு.க., தலைமையின் நெருக்கடி ஒரு பக்கத்திலும், இந்த விவகாரத்தில் பிரதமர் பதில்
சொல்லியாக வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை மறுபக்கத்திலும் வலுத்து வரும்
நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று தமிழகம் வருகிறார். திருச்சி, சென்னை ஆகிய
இடங்களில் தி.மு.க., அணிக்கு தேர்தல் பிரசாரம் செய்யும் அவர் "டாடா விவகாரத்தில்'
மவுனம் கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக தேர்தல் சூடு
பிடித்துள்ள நிலையில், டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் மத்திய அரசுக்கும்,
தேர்தல் களத்தில் நிற்கும் தி.மு.க.,வுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு (டி.டி.எச்.,) வர்த்தக உரிமம் பெற்றுள்ள டாடா
நிறுவனத்தில், சன் "டிவி' நிறுவனத்தை பங்குதாரராக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்
தயாநிதி மிரட்டியதாக வெளிவந்த செய்திகள் தி.மு.க., கூட்டணியை பெரிதும் பதம்
பார்த்துவிட்டது.
ஆறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் தி.மு.க.,வுக்கு எதிராக
களத்தில் நிற்கும் அ.தி.மு.க., அதே அளவு பலத்தோடு இருப்பது இந்த தேர்தலில்
ஏற்பட்டுள்ள புதிய நிலைமை. எதிர்ப்பு அலை இல்லாத நிலையில் உள்ள ஆளும் அ.தி.மு.க.,வை
எதிர்கொள்ள தி.மு.க., கூட்டணி பல்வேறு யுக்திகளை கையாண்டு
வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் தமிழக
தேர்தலில் கடுமையாக எதிரொலித்து வருகிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின்
வாயை அடைக்க, டாடா நிறுவனம் மறுப்பு தெரிவித்தால் மட்டுமே தயாநிதி மாறனை காப்பாற்ற
முடியும் என்று தி.மு.க., தலைமை கருதுகிறது.
மறுப்பு அறிவிக்கும்படி டாடா
நிறுவனத்திற்கு நிர்ப்பந்தம் செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும்,
பிரதமரிடமும் தி.மு.க., தலைமை கோரிக்கை வைத்தது. ஆனால், இரண்டு பேருமே கையை
விரித்து விட்டதாக டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த
நிலையில், தயாநிதி மாறன் தொடர்பான விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,
இதற்கு பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தேர்தல்
பிரசாரத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக அத்வானி போன்ற தேசிய
தலைவர்களும் இந்த கருத்தை வலியுறுத்தி வருவதால், டாடா விவகாரம் தேசிய பிரச்னையாக
உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியை ஆதரித்து பிரதமர் மன்மோகன்
சிங் இன்று திருச்சி மற்றும் சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும், நிருபர்கள் கண்டிப்பாக இந்த கேள்வியை
பிரதமர் முன் வைப்பது உறுதி.
அங்கே பேட்டியை தவிர்த்து விட்டாலும்,
பொதுக்கூட்டத்தில் டாடா விவகாரத்திற்கு பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்திற்கு
பிரதமர் தள்ளப்பட்டுள்ளார். காரணம், அவருக்கு தி.மு.க., தலைமை கொடுத்து வரும்
நெருக்கடி.
டாடா விவகாரத்தில் இதுநாள் வரை மவுனம் சாதித்த பிரதமர் சென்னையில்
மவுனத்தை கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டாடா நிறுவனத்தை வளைக்க
முயற்சி: தயாநிதி மாறன் மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் சோனியா, பிரதமர்
ஆகியோர் சமாதான கருத்துக்களை கூறினாலும், அவை எடுபடுமா என்பது கேள்விதான். இதற்கு
டாடா நிறுவனத்திடம் இருந்தே மறுப்பு வர வேண்டும் என்று தி.மு.க., தலைமை
கருதுகிறது.
இதற்காக நிருபர்கள் கூட்டத்தை கூட்டி டாடா நிறுவனத்தினர்
பேட்டியளிக்க வேண்டும். அல்லது பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட வேண்டும் என்று
நிர்ப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், டாடா நிறுவனத்தினருக்கும் பல்வேறு
தரப்புகளிலிருந்து நெருக்கடி கொடுத்து வருவதாக டில்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Source :
http://www.dinamalar.com/2006may04/fpnews1.asp

கலைஞரின் கடிதம்: தினகரன் மட்டும் வெளியிட்டது

04 05 2006 தினகரனின் 6 ஆம் பக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. தனது உடன்பிறப்புகளுக்கு, வெற்றியின் வாய்ப்பு அதிகரித்து வருவது குறித்து, ஒரு கற்பனை உரையாடலை வெளியிட்டு இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார் கருணாநிதி.
பொதுவாக, கருணாநிதியின் கடிதங்களை எல்லா தமிழ் நாளிதழ்களும் சுருக்கியோ, நறுக்கியோ, அப்படியோ வெளியிடும். தினகரன், அவர் குடும்பப் பத்திரிகை என்பதால் அப்படியே வெளியிடும். 04 05 அன்று வெளியான கடிதத்தில் நிறைய கற்பனை வசனங்கள் உள்ளன. குறிப்பாக தமிழக முதல்வரைக் கடுமையாகக் கிண்டல் செய்யும் வசனங்களும் உள்ளன. அந்தக் கடிதத்தை எடிட் செய்து விவாதத்துக்குரிய தகவல்களை மட்டும் தெரிவு செய்து வெளியிடும் திறன் சப் எடிட்டர்களுக்கு இல்லையோ என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. கலைஞர் கவிதைகளையும் இது போன்ற சிக்கல்களால் புறக்கணிப்பது தம்ழிப் பத்திரிகையின் வழக்கமாக இருக்கிறது. கலைஞர் கடிதம் அப்படியே இங்கே பிரசுரிக்கப் படுகிறது.






தினகரனின் சிறப்புப் பேட்டிகள் :

மே 3 அன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம் கிருஷ்ணசாமியின் சிறப்புப் பேட்டியும், 04 05 2006 அன்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பேட்டியும் தினகரனின் 8ஆம் பக்கத்துச் சிறப்புப் பேட்டிகளாக இடம் பெற்றுள்ளன.

3 comments:

Sivabalan said...

Your team is doing good job.

Do you have any guess, " When do these newspapers come to normal stand"

Probably after Election?

Arulselvan said...

சிவபாலன்,
தங்களின் அன்பிற்கு நன்றி.
இந்த அபத்தங்கள் தேர்தலுடன் முடிவுக்கு வரப் போவதில்லை. ஜனநாயகம் நீடிக்கும் வரை, பத்திரிகை சுதந்திரம் நீடிக்கும். அதற்குக் குந்தகம் வரும்போது, இது போன்ற அபத்தங்கள் நிறுத்தப் படலாம். அல்லது, இவ்வாறு அபத்தமாகச் செய்தி வெளியிடுவது அவமானகரமானது என்றொ, இப்படிச் செய்தி வெளியிட்டால், மக்கள் புறக்கணித்து விடுவார்களென்றோ ஒரு நிலை தோன்றினால், அப்போது இவை மட்டுப் படுத்தப் படும். தொடர்ந்து ஊடக விமர்சனங்களை மேற்கொள்வதால் நிலைமை மேம்படலாம்.
ஊடக விமர்சனக் குழு

Sivabalan said...

Yes. I do agree.

I am really disappointed with the newspapers. It is my first experience to go thro the election coverage in newspapers. (In Previous elections I was not gone thro like this)

But, I am very much happy, that " Media Watch Team, at least, can raise their voice impartially against the newspapers which do ugly things.

Is there any possibility that Team like yours can come and do well in newspaper field? Do you have any long term plans to work on this.

I am sorry; if I have crossed any limits in comment, please ignore it.