Friday, April 21, 2006

மீடியாவை ஆட்கொண்ட கருனாநிதி

கருணாநிதி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். சன் டி வி அவரது நெல்லை மாநகரத்துப் பிரச்சார உரையாஇ வெள்ளி இரவு 830 மணிக்கு "என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களெ", என்பதில் தொடங்கி "ஆகவே உதய சூரியனுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்", என்று முடிக்கும் வரையான பேச்சை ஒளிபரப்பியது. சன் டிவியில் கருணாநிதி பேச்சு இரவு 830 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று, கே டிவி, சன் மியூசிக், சன் நியூஸ் என தனக்குச் சொந்தமான அனைத்து பிற டிவி சேனல்களில் அறிவிப்பு சின்னத் திரையின் அடிப்பகுதியில் நேற்றிரவு ஓடிக் கொண்டிருந்தாது. குடும்பத்து டி விக்கள் எல்லாம், அவரது பேச்சையும், பேச்சு பற்றிய அறிவிப்பையும் வெளியிடுவதில் பெரிய வியப்பொன்றும் இருக்க முடியாது. ஆனால், 21 4 2006 வெள்ளிக்கிழமை அன்று வெளியான 4 முன்னணி தமிழ் நாளிதழ்களின் திரும்பிய பக்கமெல்லாம் கருணாநிதியின் பேச்சும், பேட்டியுமாக கொட்டிக் கிடந்தது.

21 4 2006 வெள்ளிக்கிழமை வெளியான தினமணியில் முதல் 9 பக்கத்தில் கருணான்நிதி தொடர்பான 8 செய்திகள் இடம் பெற்றிருந்தன. தூத்துக்குடி பேட்டி மட்டும், முதல் பக்கத்திலும், 9ஆம் பக்கத்தின் மேல் பகுதியிலும், 9ஆம் பக்கத்தின் கீழ் பகுதியிலும் இடம் பெற்றிருந்தன. தவிர, நெல்லை பேச்சு, பாளையம்கோட்டை பேச்சு, தூத்துக்குடி பேச்சு, திருச்செந்தூர் பேச்சு, ஆறுமுகனேரி பேச்சு, என தினமணியின் திரும்பிய பக்கமெல்லாம் கருணாநிதியின் பேச்சே கண்ணில் பட்டது.

தினமலரில் நெல்லை, தூத்துக்குடி பேச்சுக்கள் விரிவாக இடம் பெற்றிருந்தன. கருணாநிதியின் பேட்டி, தினமலரின் 7ஆம் பக்கத்தில் அரைப் பக்கத்திற்கு இடம் பெற்றிருந்தது. கருணாநிதியின் தூத்துகுடிப் பேச்சு பத்தாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. தூத்துகுடியில் பேசிய மற்றொரு பேச்சு, 14 ஆம் பக்கத்தில் விரிவாக இடம் பெற்றிருந்தது. நெல்லைப் பேச்சு முதல் பக்கத்தில் விரிவாக வெளியிடப் பட்டிருந்தது.

தினத் தந்தியின் முதல் பக்கத்தில் தூத்துக்குடி பேட்டியும், கடைசிப் பக்கத்தில் திருநெல்வேலிப் பேச்சும் விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. எண்ணிக்கையில் தினத்தந்தி குறைவாகத் தோன்றினாலும், பரப்பளவில் தினத்தந்தி கணிசமான இடத்தை ஒதுக்கியிருந்தது.
தூத்துகுடியில் கருணாநிதி சொன்ன விஷயங்களைக் கொண்டு எழுதப் பட்டுள்ளது, தினத்தந்தியின் லீட் ஸ்டோரி. இது தவிர, அவரது ஒவ்வொரு பேச்சையும், பேட்டியையும் தினகரன் விரிவாகவும் தனித் தனியாகவும் வெளியிட்டிருந்தது.

ஆக 4 நாளிதழ்களுமே இன்றைய (21 4 2006) பதிப்பில் கருணாநிதியின் பேச்சுக்கும் பேட்டிக்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்திருந்தன. இது பிற தலைவர்களுக்குரிய இடம் ஒதுக்கத் தடையாகவே அமையும் என்று கூறலாம். ரேஷன் அரிசியையும், இலவச டிவியையும் தாண்டி கருணாநிதி பல விஷயங்களை கருணாநிதி விரிவாகப் பேசியும், பேட்டிகளில் அலசியும் இருந்ததால், அவரது நீண்ட பேட்டியும், தொடர்ச்சியான உரைகளும், இன்றைய இதழின் பக்கங்கள் பலவற்றை ஆக்கிரமித்துக் கொண்டது எனலாம்.

தந்தியின் நாடார் பாசம்

கருணாநிதி தவிர, தந்தியில் வைகோவின் பேச்சையும், விஜயகாந்தின் பேச்சையும் விரிவாகவே வெளியிடப் பட்டுள்ளது. ஆனால், சரத்குமாரின் பேச்சுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு, விரிவாக வெளியிட்டுள்ளது தினத் தந்தி. தினத் தந்தியின் அதிபர் சிவந்தி ஆதித்தனுக்கு தான் சார்ந்துள்ள நாடார் சமுதாயத்தின் மேல் ஒரு தனி அக்கறை உண்டு என்பதால், நாடாரான சரத்குமாருக்கு அதீத முக்கியத்துவம் தரப் பட்டு செய்திகள் வெளியிடப் படுகின்றன என்று கருத இடமிருக்கிறது.

இது தவிர ஜெயலலிதாவின் பேச்சு, இளங்கோவனின் பேச்சும் பரவலாக மீடியாவின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஸ்டாலின் திருச்சியில் செய்த பிரச்சாரம் தினகரனில் வெளியாகியுள்ளது (ப.6).

தின்கரன் தனது சிறப்புப் பேட்டிகளின் வரிசையில் இன்று (21.4.06) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயளர், தா பாண்டியனின் சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது.

தினமணியின் தலித் ஆதரவு தலையங்கம்

தினமணியின் 21 4 2006 வெள்ளிக்கிழமை தலையங்கம், மனப்புண்ணுக்கு மருந்து என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் 17 குற்றவாளிகளுக்குக் கீழ் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை, சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்திருப்பதை வரவேற்று இந்தத் தலையஙகம் வரையப் பட்டுள்ளது.

லதிகா சரண் நியமனம் குறித்த செய்தியைப் பற்றிய ஒரு ஆய்வு:

சென்னை மாநகரக் காவல் துறை ஆணையராக லதிகா சரண் நியமிக்கப் பட்ட செய்தி இன்றைய தினமணியின் லீட் ஸ்டோரியாகி இருக்கிறது. இந்தச் செய்தியை 4 நாளிதழ்களும் எப்படி வெளியிட்டிருக்கின்றன என்று ஆய்வு செய்தோம். இதே செய்தியை தி இந்து நாளிதழ் எப்படிக் கையாண்டிருக்கிறது என்றும் ஒப்பிட்டு ஆய்வை நடத்தினோம்.

இந்தச் செய்தி தேர்தலுடன் தொடர்புடையதுதான் என்றாலும், இன்றைய நாளிதழ்களின் தேர்தல் செய்தி எழுதும் முறை பற்றிய ஆய்விற்கு நேரடியாகத் தொடர்புடையது என்று கருத முடியாது. என்றாலும், தமிழ் நாளிதழ்கள் தொழில் ரீதியாக எந்த நிலையில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள, நம்பகத் தன்மையிலும், தொழில் நேர்த்தியிலும் சிறந்து விளங்கும் தி இந்துவுடன் ஒப்பிட்டு இந்தச் செய்தியை விளங்கிக் கொள்ள முயன்றிருக்கிறோம்.

4 நாளிதழ்களிலும் வெளியான செய்திகள் அப்படியே, இந்தப் பதிவின் இறுதியில் ஒன்றன் பின் ஒன்றாகக் கொடுக்கப் பட்டிருக்கின்றது.

Letika Saran replaces Nataraj

She was chosen from three names suggested by Government


New Delhi: The Election Commission on Thursday asked the Tamil Nadu Gov-ernment to appoint Letika Saran Chennai Police Commissioner in place of R Na-taraj, who was shifted for alleged violation of the model code of conduct.

இப்படியாகத் தலைப்பிட்டு, முகப்புரையும் கொடுத்து தி இந்துவின் செய்தி செல்கிறது. இதில் முகப்புரை மிகத் தெளிவாக, “தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப் படும் சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் நடராஜை, மாற்றிவிட்டு அந்த இடத்தில் லெடிகா சரனை நியமிக்குமாறு தமிழக அரசை, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது”, என்று அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

இப்பொழுது 4 முன்னணித் தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ள இதே செய்தியின் முகப்புரை எழுதப் பட்டிருப்பதை ஒன்றன் பின் ஒன்றாகக் கவனியுங்கள்.

சென்னை: சென்னை மாநகரின் முதன் பெண் போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நேற்று நியமனம் செய்யப்பட்டார். நேற்று வரை போலீஸ் கமிஷனராக இருந்த ஆர்.நடராஜ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
-----தினமலர்

சென்னை, ஏப். 21: சென்னை போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜை மாற்றுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒரு மாதமாக நடந்த மோதல் முடிவுக்கு வந்தது.
---------தினமணி


சென்னை, ஏப்.21- தேர்தல் கமிஷன் உத்தரவை தொடர்ந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் பதவி ஏற்றுக்கொண்டார்.
------------தினத்தந்தி

சென்னை ஏப் 21: சென்னை போலீஸ் கமிஷனராக லத்திக சரண் நியமிக்கப் பட்டுள்ளார்.

-----------தினகரன்


தி இந்து நாளிதழின் முகப்புரையில் இருந்த விளக்கமும் நேர்த்தியும் 4 நாளிதழ்களின் செய்தி முகப்பிலும் இல்லை என்பதைக் கவனிக்கலாம். இதில் தொடங்கி, தேர்தல் கமிஷனுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் வழங்கியிருக்கிறது தி இந்து நாளிதழ் செய்தி. தமிழ் நாளிதழ்களில், இந்தச் செய்தியை, தினத் தந்தி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, லதிகா சரண் நியமிக்கப் பட்டதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகார மோதல் நடந்து கொண்டிருக்கும் போது யார் உத்திரவுக்கு யார் பணிந்தார்கள் என்று எழுதுவதை விட, என்ன சரியான வார்த்தைகள் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன என்று தந்தி செய்தியாளர் கவனித்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் லதிகா சரணை நியமிக்கும்படிக் கேட்டுக் கொண்டது என்பதே சரியான அறிக்கையிடலாக இருந்திருக்கும். “எலக்ஷன் கமிஷன் ஆஸ்க்ட் “ என்று தி இந்து நாளிதழில் எழுதியதற்கு இணையான சொல் எதையும் தமிழ்ப் பத்திரிகைகள் பயன் படுத்தவில்லை.

இதற்குச் சரியான வார்த்தையைத் தெரிவு செய்ய எந்தத் தமிழ் நாளிதழும் முன் வரவில்லை. இது ஜனநாயக அமைப்பில் இரு பெரும் சக்திகளுக்கு இடையிலான போட்டிகளின் முடிவுப் பகுதியை அறிவிக்கும் நேரம். எனவே மிகுந்த கவனத்துடன் வார்த்தைகளைத் தெரிவு செய்திருக்க வேண்டும், தினத் தந்தி உப தலைப்புகளுடன் இந்தச் செய்தியை உண்மை பக்கம் அதிகம் போகாமல் எழுதியிருக்கிறது.

தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகளை நடராஜ் மீறியிருப்பதாக் கருதப் படும் தகவலை, இந்தச் செய்தியில் பதிவு செய்திருப்பது தினமணியும், தினத் தந்தியும். மற்ற இரு பத்திரிகைகளான தினமலரும், தினகரனும், நடராஜ் ஏன் மாற்றப் படுகிறார் என்பதற்கான விளக்கத்தைச் சரியாகப் பதிவு செய்யவில்லை.

லதிகா சரனின் பெயரை இந்து நாளிதழ் என்று வெளியிட்டிருக்கிறது. இதைத் தமிழில் லெடிகா சரண் என்று எழுதலாம். தினகரன் மட்டும் லத்திக சரண் என்று வெளியிட்டுள்ளது. பிற பத்திரிகைகள் மூன்றும் லதிகா சரண் என்று எழுதி வருகின்றன.

இனி இந்தச் செய்திகளை ஒன்றன் பின் ஒன்றாகக் காணலாம்:

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மாற்றம் : புதிய கமிஷனராக லத்திகா சரண் பொறுப்பேற்பு

சென்னை: சென்னை மாநகரின் முதன் பெண் போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நேற்று நியமனம் செய்யப்பட்டார். நேற்று வரை போலீஸ் கமிஷனராக இருந்த ஆர்.நடராஜ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஆர்.நடராஜ், மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேட்டியளித்தார். இதையடுத்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழக அரசு அவரை இடமாற்றம் செய்யாததால், இரண்டாவது முறையாக கமிஷனரை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழக அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியல் அனுப்புவதற்கான காலக்கெடு கடந்த 18ம் தேதியுடன் முடிவடைந்தது. அப்போதும் தமிழக அரசு பட்டியலை அனுப்பவில்லை. இந்நிலையில், மீண்டும் அதிகாரிகளின் பெயர் பட்டியலை அனுப்ப, நேற்று ஒரு நாள் மட்டும் தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. இதையடுத்து ஏ.டி.ஜி.பி.,கள் கே.வி.எஸ்.மூர்த்தி, நாஞ்சில்குமரன், லத்திகா சரண் ஆகியோர் கொண்ட பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு நேற்று காலை தமிழக அரசு அனுப்பியது.

பெயர் பட்டியலில் மூன்றாவதாக இருந்த லத்திகா சரணை புதிய கமிஷனராக நியமனம் செய்ய தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து கமிஷனராக நடராஜ் நேற்று பணியிலிருந்து மாற்றப்பட்டு, தலைமையிடத்து ஏ.டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டார். புதிய கமிஷனராக லத்திகா சரணை நியமித்து நேற்று மாலை 5.20 மணிக்கு அரசு உத்தரவிட்டது. டி.ஜி.பி., அலெக்ஸாண்டரை சந்தித்த லத்திகா சரண் நேற்று மாலை 6.30க்கு கமிஷனர் அலுவலகம் வந்தார். கூடுதல் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் புதிய கமிஷனரை வரவேற்றார். 6.35 மணிக்கு கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். கமிஷனர் லத்திகா சரணிடம் தேர்தல் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய பைலை ஒப்படைத்த நடராஜ் விடைபெற்றார். அலுவலகத்திலிருந்து வெளியேறிய நடராஜை, கமிஷனர் லத்திகா சரண் வழியனுப்பி வைத்தார்.
பத்திரிகை, "டிவி' நிருபர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட கமிஷனர் லத்திகா சரண் நிருபர்களிடம் கூறுகையில், ""முக்கியமான நேரத்தில் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளேன். என் மீதுள்ள நம்பிக்கையில் இந்த பொறுப்பை கொடுத்துள்ளனர். முன்னாள் கமிஷனர் நடராஜ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது பணிகளை நான் தொடர்வேன். பிரச்னையின்றி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, சட்டம்ஒழுங்கு பாதுகாக்கப்படும். மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும்,'' என்று கமிஷனர் கூறினார்.
முதல் பெண் கமிஷனர் : போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் கடந்த 1952ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி பிறந்தவர். 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தார். திருச்சி ஏ.எஸ்.பி., முதல் பணியிடம். சி.பி.ஐ.,யில் நான்கு ஆண்டுகள், லஞ்ச ஒழிப்புத் துறையில் நான்கு ஆண்டுகள், சி.பி.சி.ஐ.டி., உட்பட முக்கியமான பதவிகளை வகித்தவர். நேற்று முன்தினம் வரை தலைமை இடத்து ஏ.டி.ஜி.பி.,யாக பணியாற்றினார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி. கணவர் அசோக். மகள் ருத்ரா டாக்டராக உள்ளார். இவரது தந்தை தார், தாய் விஜயலட்சுமி. இவரது குடும்பத்தில் இவர் தான் போலீஸ் அதிகாரியாகி உள்ளார். டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா ஆகிய மெட்ரோபாலிட்டன் மாநகரங்களில் இதுவரை பெண் போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்படவில்லை. முதன் முதலாக மெட்ரோபாலிட்டன் மாநகரான சென்னை போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Source : www.dinamalar.com

போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நியமனம்: தேர்தல் ஆணைய உத்தரவை அரசு ஏற்றது

சென்னை, ஏப். 21: சென்னை போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜை மாற்றுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒரு மாதமாக நடந்த மோதல் முடிவுக்கு வந்தது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குப் பணிந்து ஆர். நடராஜை தமிழக அரசு மாற்றிவிட்டது. அவருக்கு பதிலாக போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் (54) நியமிக்கப்பட்டார். அவர் வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்றார்.
சென்னை நகரின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு இவர், காவல்துறை தலைமை அலுவலகத்தில் கூடுதல் டிஜிபியாகப் பதவி வகித்து வந்தார்.
கமிஷனராக இருந்த ஆர். நடராஜ், காவல் துறை தலைமை அலுவலக கூடுதல் டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மாதம் மோதல்: மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த நடராஜ், முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசினார்.
அவரது கருத்து, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக உள்ளது என்றும் அவரை மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பு கூறியது.
போலீஸ் கமிஷனரும் தனது பொறுப்பை உணர்ந்து பேசியிருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இவ்விஷயத்தில் தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் மோதல் போக்கைத் கைவிட்டு இணக்கமான முடிவு எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.
தேர்தல் அட்டவணை குறித்து கடந்த 13-ம் தேதி அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து கமிஷனர் நடராஜை மாற்ற வேண்டும் என்றும் வேறு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரைத் தெரிவிக்குமாறும் தேர்தல் ஆணையம் தமிழக அரசை மீண்டும் கேட்டுக் கொண்டது. வியாழக்கிழமை மாலை 5 மணி வரை தமிழக அரசுக்கு, தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது.
கூடுதல் டிஜிபிக்கள் லத்திகா சரண், கே.வி.எஸ். மூர்த்தி, நாஞ்சில் குமரன் ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு அனுப்பியது.
இதைப் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் லத்திகா சரணை, கமிஷனராக நியமிப்பதாக உத்தரவிட்டது. இதற்கான அரசாணையை தமிழக உள்துறைச் செயலர் பவன் ரெய்னா வியாழக்கிழமை மாலை வெளியிட்டார்.
Source : www.dinamani.com

தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி
சென்னை போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் பதவி ஏற்றார்


சென்னை, ஏப்.21-
தேர்தல் கமிஷன் உத்தரவை தொடர்ந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் பதவி ஏற்றுக்கொண்டார்.

தேர்தல் கமிஷன் உத்தரவு

சென்னை நகர போலீஸ் கமிஷனராக நடராஜ் இருந்தார். சமீபத்தில் உலக மகளிர் தினவிழாவையொட்டி அவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தபோது தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை லட்சிய பெண்மணிக்கு உதாரணமாக கூறி கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு தி.மு.க. வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க.வை சேர்ந்த மத்திய மந்திரி ராஜா தலைமை தேர்தல் கமிஷனிடம் போலீஸ் கமிஷனர் நடராஜ் மீது புகார் செய்தார்.

போலீஸ் கமிஷனர் நடராஜ் முதல்-அமைச்சரை புகழ்ந்து கருத்து தெரிவித்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து போலீëஸ் கமிஷனர் நடராஜை மாற்றும்படியும், அவருக்கு பதிலாக புதிய கமிஷனரை நியமிக்க 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்படியும் தேர்தல் கமிஷன் தமிழக அரசை கேட்டுக்கொண்டது.

3 பேர் பட்டியல்

தேர்தல் கமிஷன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பிலும், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.க்கள் சிலரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், "தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னால், தேர்தல் கமிஷன் பிறப்பிக்கும் உத்தரவு மாநில அரசை கட்டுப்படுத்தாது'' என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தேர்தல் கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு (அப்பீல்) செய்தது.

இதற்கிடையில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. போலீஸ் கமிஷனர் நடராஜை உடனடியாக இடம் மாற்றம் செய்யும்படியும், அவருக்கு பதிலாக புதிய கமிஷனர் நியமிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் கொண்ட பட்டியலை 18-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படியும் தமிழக அரசை தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது.

பரபரப்பு


தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டபடி 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை 18-ந் தேதி வரை தமிழக அரசு அனுப்பவில்லை. இதனால் போலீஸ் வட்டாரத்திலும், அரசு அதிகாரிகள் மட்டத்திலும் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசு வழங்க தேர்தல் கமிஷன் மேலும் கால அவகாசம் அளித்தது.

இதற்கிடையே சென்னை நகர போலீஸ் கமிஷனராக யார் நியமிக்கப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் பெறும் எதிர்பார்ப்பு உருவானது. நேற்றுடன் தேர்தல் கமிஷன் அனுமதித்த கால அவகாசம் முடிவதால் உயர்மட்ட அதிகாரிகள் நேற்று பரபரப்புடன் காணப்பட்டனர். டி.ஜி.பி. அலெக்சாண்டர் நேற்று வேலூரில் இருந்தார். அவருடன் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் போனில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.

லத்திகா சரண் நியமனம்

இறுதியில் நாஞ்சில்குமரன், கே.வி.எஸ்.மூர்த்தி, லத்திகாசரண் ஆகியோர் அடங்கிய 3 பேர் பட்டியல் தமிழக அரசால் தேர்தல் கமிஷனுக்கு நேற்று பகல் 2 மணி அளவில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த பட்டியலை தேர்தல் கமிஷன் பரிசீலித்தது. இதில் லத்திகாசரணை சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பிற்பகல் 3 மணிக்கு தகவல் அனுப்பியது.
இந்த தகவல் கிடைத்த பிறகு போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டு லத்திகாசரண் சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
இதன் பிறகு தான் கடந்த சில நாட்களாக நிலவிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. லத்திகாசரண் சென்னை டி.ஜி.பி. அலுவலக தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தார். போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டு லத்திகா சரண் பணியாற்றிய இடத்தில் டி.ஜி.பி. அலுவலக தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி ஏற்றார்

தேர்தல் நேரம் என்பதால் லத்திகா சரண் சென்னை நகர போலீஸ் கமிஷனராக உடனடியாக நேற்று மாலை 6.30 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை நகரத்தின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. மாலை 6.27 மணிக்கு அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். விடைபெற்ற கமிஷனர் நடராஜ் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
கூடுதல் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், சென்னை உளவு பிரிவு துணை கமிஷனர் வரதராஜ×, உதவி கமிஷனர் இளங்கோ, மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் விட்டல் ராமன் மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் லத்திகாசரண் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்றதும் நடராஜ×ம், லத்திகாசரணும் கை குலுக்கி கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து புகை படத்துக்கு போஸ் கொடுத்தனர்.

தேர்தல் பைல்

இதன் பின் நடராஜ் புறப்பட்டு சென்றார். அவரை கார் வரை சென்று லத்திகா சரண் வழி அனுப்பி வைத்தார். புறப்படும் முன்பு நடராஜ் பத்திரிக்கையாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சென்னை நகர மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறி அவர் மகிழ்ச்சியோடு விடை பெற்று சென்றார்.
அவர் புறப்படும் முன்பு தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ரகசிய பைல் ஒன்றை புதிய கமிஷனர் லத்திகா சரணிடம் வழங்கினார்.
Source : www.dailythanthi.com

தினகரனில் வெளிவந்த இது தொடர்பான செய்தியை வெப்சைட்டில் 21 4 2006 இதழின் முதல் பக்கத்திலேயே வாசிக்கலாம்.




www.dinakaran.com

ஊடக விமர்சனக் குழுவின் சார்பில்
இரா. பத்மலதா