Saturday, April 22, 2006

தினத் தந்தியைத் திருப்பும்பக்கமெல்லாம் சரத்குமார்

அரசியல் தலைவர்களின் பேச்சுக்களின் அரிய ஒலித் தொகுப்பு


அரசியல் தலைவர்களது பேச்சுக்களின் அரிய தொகுப்பை கோபிச் செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த ஏ ஆர் குணசேகரன் வைத்திருப்பதாக, தி இந்து நாளிதழின் 4 ஆம் பக்கத்தில் இன்று 22 4 2006 செய்தி வெளியாகியுள்ளது.

You name it, he has it
Gunasekaran’s store has a rare collection of speeches from across the political spectrum என்ற முகப்புரையுடன் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது. மாகாத்மா காந்தி, நேரு, போஸ், அம்பேத்கார் தொடங்கி இன்றைய தலைவர்கள் வரையான பேச்சுக்களை அவர் சேகரித்து வைத்திருப்பதாக இந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

தினமலரும் தினத் தந்தியும், விஜயகாந்திற்கு அதிக முக்கியத்துவம்

விஜயகாந்த் கட்சிக்கு தனிச் சின்னம் இல்லை, என்ற செய்தி, இன்றைய தினமலரிலும், தினத் தந்தியிலும் லேட் ஸ்டோரியாக வெளி வந்துள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்த இந்தத் தகவல், தினமணியில் 9 ஆம் பக்கத்தில் வெளி வந்திருக்கிறது.


சரத்குமாருக்கு தினகரன் தவிர பிற நாளிதழ்களில் முக்கியத்துவம்

தினத் தந்தியும் தினமலரும் இந்தச் செய்தியை லீட் ஸ்டோரியாக்கும் அளவிற்கு இந்தச் செய்தி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்பது கவனிக்கத் தக்கது. விஜயகாந்திற்கு தினமலரும், தினத் தந்தியும் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாக அமைகிறது.
தென் மாவட்டங்களில் கருணாநிதி செய்து வரும் பிரச்சாரம் குறித்த செய்திகள், இன்றைய தமிழ் நாளிதழ்களில் விரிவாக வெளியிடப் பட்டிருந்தன. சரத் குமாரின் பிரச்சாரப் பேச்சுக்களுக்கு தினமலரும் தினத் தந்தியும் அதிக முக்கியத்துவம் கொடுத்தௌ வருகின்றன. தினகரனில், தவறாமல், சரத்குமாருக்கு எதிரான ஒரு செய்தி இடம் பெற்று வருகிறது. இன்று தினமணியும், சரத்குமாரின் பிரச்சாரப் பேச்சை பெ ரிதாகவே வெளியிட்டுள்ளது.

பல தரப்புக் குரலுக்கும் இடம் கொடுக்கும் தினமணி


சேலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின் பேச்சை தினமணி வெளியிட்டுள்ளது. ராமதாசின் சென்னை பேட்டி, வீரமணியின் மதுரை பேட்டி, ஜி கே வாசனின் பெருந்துறைப் பிரச்சாரம், சன்கரய்யாவின் திண்டுக்கல் பேச்சு, தயாநிதி மாறனின் திருப்பத்தூர் பேச்சு, சென்னையில் விஜயகாந்தின் பிரச்சாரம், பாகியராஜின் ஈரோட் நகரப் பேச்சு, அண்ணாமலைனகரில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அளித்த பேட்டி, சென்னையில் ராமதாஸ் அளித்த பேட்டி என்று, இன்றைய தினமணி பலதரப்புக் குரல்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறது.
லயோலாக் கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை முக்கியத்துவம் கொடுத்து தினமணி வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் விவரங்களை தினமணி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் 7 பெண்களைப் பற்றிய குறிப்புக்களை வெளியிட்டுள்ளது.

திமுக சாதகமான கருத்துக் கணிப்புக்கு தினகரனில் முக்கியத்துவம்

லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய தமிழ சட்டசபை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு, தினகரன் அதிக முக்கியத்துவம் கொடுத்து இன்றைய லீட் ஸ்டோரியாகவே வெளியிட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் நடத்திய ஒரு கருத்துக் கணிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. கருத்துக் கணிப்பின் முடிவு, திமுகவுக்க்ச் சாதகமாக இருப்பதால், அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

கருணாநிதியின் பேச்சுக்கு தினகரனில் 2 முழுப்பக்கங்கள்

இன்றைய தினகரனில், மூன்றாம் பக்கம் முழுவதும், 16ஆம் பக்கத்தின் விளம்பரங்கள் தவிர்த்த பிற பகுதிகளும் கருணாநிதியின் தென்காசி நகரப் பேச்சுக்களும், நெல்லை நகரப் பேச்சுக்களும் பிரம்மாண்டமான படங்களுடன் வெளியிடப் பட்டுள்ளது.

தவிர ப சிதம்பரம், ஜெயலலிதா, ஜி கே வாசன், ராமதாஸ், தயாநிதி மாறன் ஆகியோரின் பேச்சுக்கள் இன்றைய தினகரனில் இடம் பெற்றுள்ளன. தினமும், தயாநிதி மாறன் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அதிகம் பேர் பங்கேற்பதான அறிவிப்புடன் ஒரு படம் தினகரனில் இடம் பெற்றுவிடுகிறது.

தினகரனில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் சிறப்புப் பேட்டி

எந்தக் கூட்டணியிலும் எங்களைச் சேர்க்காததால் கவலையில்லை என்ற தலைப்புடன் டாக்டர் கே கிருஷ்ணசாமியின் சிறப்புப் பேட்டி, இன்றைய தினகரனில் 8 ஆம் பக்கம் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பின் தமிழ் நாளிதழ் ஒன்றில் தலித் தலைவரது பேட்டி, விரிவாக இடம் பெறுவது இது இரண்டாவது தடவையாகும். சில தினங்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் தொல் திருமாவளவனது சிறப்புப் பேட்டி இதே பகுதியில் இடம் பெற்றிருந்தது.

தினத் தந்தியில் திருப்பும் பக்கமெல்லாம் சரத்குமார்

1. திருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் பிரச்சாரம், செய்தியும் பெரிய படமும், முதல் பக்கத்தில்.
2. நடிகர் சரத்குமாருக்கு பெண்கள் ஆரத்தி, மலர் தூவி சிறப்பான வரவேற்பு, படத்துடன் செய்தி 2ஆம் பக்கம்.
3. அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் முழு வெற்றி பெற வேண்டும், கோவில் பட்டியில் நடிகர் சரத்குமார் பேச்சு, 5ஆம் பக்கத்தில் படத்துடன் செய்தி,
4. திமுகவினால் எந்த நெருக்கடி வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், சரத்குமார் பேட்டி, 7ஆம் பக்கத்தில் செய்தி.
5. சரத்குமார் நெல்லை மாவட்ட சுற்றுப் பயண விவரம், 10 ஆம் பக்கத்தில் அரைப் பக்க விளம்பரம்
இதில் எல்லா செய்திகளுமே பெரியவை. எல்லாப் படங்களுமே பெரிய சைசிலேயே வெளியிடப் பட்டுள்ளன.
சரத்குமார், தினத் தந்தியின் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டதால், வைகோவுக்கும், விஜயகாந்திற்கும் உரிய இடம் தினத் தந்தியில் குறைந்து இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

சரத்குமார், கருணாநிதி, விஜயகாந்த், ஜெயலலிதா ஆகிய நாங்கு முக்கியமான தலைவர்களது பேச்சுக்களை மட்டுமே இன்றைய தினத்தந்தியில் காண முடிகிறது. ஒப்பீட்டிற்காக தினமணியில் இன்று இடம் பெற்றுள்ள தலைவர்களது பேச்சுக்கள், பேட்டிகளின் பட்டியலை மீண்டும் கீழே தருகிறோம். தினத் தந்தி, எவ்வளவு செய்திகளை இருட்டடிப்புச் செய்கிறது என்று புரியும்.

சேலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின்
பேச்சை தினமணி வெளியிட்டுள்ளது. ராமதாசின் சென்னை பேட்டி, வீரமணியின் மதுரை பேட்டி,
ஜி கே வாசனின் பெருந்துறைப் பிரச்சாரம், சன்கரய்யாவின் திண்டுக்கல் பேச்சு, தயாநிதி
மாறனின் திருப்பத்தூர் பேச்சு, சென்னையில் விஜயகாந்தின் பிரச்சாரம், பாகியராஜின்
ஈரோட் நகரப் பேச்சு, அண்ணாமலைனகரில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அளித்த பேட்டி,
சென்னையில் ராமதாஸ் அளித்த பேட்டி என்று, இன்றைய தினமணி பலதரப்புக் குரல்களுக்கும்
இடம் கொடுத்திருக்கிறது


தினமலரில் சரத்குமாருக்கு முக்கியத்துவம்


இன்றைய தினமலரின் முதல் பக்கத்தில் சரத் குமார் திருச்செந்தூரில் பேசுவது போன்ற படம் 5 காலங்கள் அகலத்தில் வெளியிடப் பட்டுள்ளது. ஜெயலல்டிகா, விஜயகாந்திற்கு அடுத்டு 5 கால அகலத்திற்கு வண்ணத்தில் பெரிய படம் இடம் பெறுவது சரத்குமாருடையது ஆகும்.


ராமதாஸ் பேட்டிக்கு தினமலரின் நீண்ட விளக்கம்

ராமதாசின் பேட்டி இன்றைய தினமலரின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. சென்னையில் அவர் அளித்த பேட்டிக்கு "கூட்டணி ஆட்சியில் பா ம க பங்கெடுக்காது, ராமதாஸ் மீண்டும் திட்டவட்டம்", என்ற தலைப்புடன் செய்தி வெளியாகியுள்ளது. அவர் பேட்டிக்கு அளிக்கப் பட்டுள்ள இடத்தை விட, அது குறித்த தினமலரின் விளக்கம் அதிக இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது. அந்த பேட்டி தினமலரில் உள்ளபடி கீழே தரப் படுகிறது.

கூட்டணி ஆட்சியில் பா.ம.க., பங்கெடுக்காது ராமதாஸ் மீண்டும் திட்டவட்டம்

சென்னை : ""கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க., பங்கெடுக்காது; அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட இந்த முடிவில் கட்சி உறுதியாக இருக்கிறது,'' என்று அக்கட்சித் தலைவர் ராமதாஸ் கூறினார்.தமிழகத்தில் எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக ஆரம்பத்தில் இருந்தே கூட்டணிக் கட்சிகள் "கரைந்து' விடக்கூடாது என்பதற்காக அக்கட்சிகள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுத்தார். தொகுதிப் பங்கீடு முதல், தொகுதி ஒதுக்கீடு வரை மிகவும் "தாராளமாக' நடந்து கொண்டார்.தொகுதி ஒதுக்கீடு முடிந்து பிரசாரப் பணிகளை துவக்கியபோது,
"கூட்டணி ஆட்சி அமையாது. தனிப் பெரும்பான்மை பெற்று தி.மு.க., ஆட்சி அமைக்கும்' என்று கூறி வந்தார். அ.தி.மு.க.,வுக்கு எதிரான அலை இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து தனது முடிவை தளர்த்தினார். கடந்த சில தினங்களாக,"அ.தி.மு.க., ஆட்சியை அகற்றினால் போதும். கூட்டணி ஆட்சிக்கும் தி.மு.க., தயாராக இருக்கிறது' என்று கருணாநிதி கூறி வருகிறார். கூட்டணி ஆட்சியில் பங்கேற்பது குறித்து மற்ற கட்சிகள் வாய் திறக்காவிட்டாலும் அந்த விவகாரத்தில் பா.ம.க., உறுதியாக இருக்கிறது. "கூட்டணி ஆட்சியில் பா.ம.க., பங்கேற்காது' என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டது. அந்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று அக்கட்சித் தலைவர் ராமதாஸ் நேற்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்காது; அதை கட்சி எதிர்பார்க்கவும் இல்லை. கூட்டணி ஆட்சியில் பங்கேற்கமாட்டோம் என்று எங்கள் கட்சி தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருக்கிறோம். அந்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது. 234 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவிற்கு எதிரான அலை வீசுகிறது. எனவே தி.மு.க., தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். 2001 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத ஜெயலலிதா, இலவச அரிசி வழங்குவோம் என்று இப்போது கூறக்கூடாது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையின்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த நிலை இருக்கிறதா? கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாதபோது இலவச அரிசி வழங்குவோம் என்று இப்போது கூறக்கூடாது.
மாநிலம் முழுவதும் 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்றும், அனைத்து கிராமங்களிலும் ஒரு வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்துவோம் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறார். வாக்குறுதி அளிப்பது மிகவும் எளிது. யாரால் செயய்ய முடியும், யாரால் முடியாது என்பதையெல்லாம் மக்கள் நன்றாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

வைகோ, ராமதாஸ், சிதம்பரம், தா பாண்டியன், ஜி கே வாசன், சரத்குமார், ஜெயலலிதா, கருணாந்டிகி, ஆகியோரது பேச்சுக்களும் இன்றைய தினமலரில் இடம் பெற்றுள்ளன.

ஊடக விமர்சனக் குழுவினர்

2 comments:

Anonymous said...

முதலில் நீங்கள் பாரபட்சமில்லாமல் எழுத முயற்சியுங்கள். பிறகு ஊடகங்கங்களின் பாரபட்சம் பற்றி பேசலாம். இந்த தேர்தலில் 3 அணிகள், 1 தனிக்கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதிமுக, திமுக, பாஜக, விஜயகாந்தின் கட்சி ஆகியவை. அதிமுக, திமுக, விஜயகாந்தின் அணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் அக்கறையையும் என்றாவது பாஜக அணிக்கு கொடுத்திருக்கிறீர்களா? நீங்களே தேடிப்பாருங்கள் உங்கள் பதிவுகளில். எத்தனைமுறை பாஜக என்ற வார்த்தை வருகிறது, எத்தனைமுறை திமுக, அதிமுக, விஜயகாந்த், திருமாவளவன் ஆகிய வார்த்தைகள் வருகின்றன என்று ஆராய்ந்து பாருங்கள். உங்களது பாரபட்சம் உங்களுக்கே தெரியும். இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்ற பாரபட்சங்கள் உங்களைப் பற்றியே நன்றாக சொல்கின்றன. பாரபட்சமில்லாத ரிப்போர்ட்டிங் சாத்தியமில்லை என்பதற்கு நீங்களே நல்ல ஒரு உதாரணம்.

Arulselvan said...

முதலில் உங்களின் கருத்துக்கு நன்றி. பா ஜ க வுக்கு உரிய இடம் இடம் ஒதுக்கப் பட வில்லை என்று எப்போதும் நாங்கள் இந்த விமர்சனங்களில் ஒரு வரி கூடச் சொன்னதில்லை என்பது உண்மை தான். ஆனால், தலித் இயக்கங்களுக்காக வாதாடுவதும் பா ஜ க விற்காக வாதாடுவதும் ஒன்றாகுமா? ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப் பட்ட, சிறுபான்மை இனத்தவர்களுக்காக எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அந்தந்தக் குரல்களுக்கும் உரிய இடங்களை வழங்கவில்லை என்று கூறுவது எப்படித் தவறாகும்? பக்கச் சார்பற்ற ரிப்போர்ட்டிங் சாத்தியம் தான். பல உலகப் பத்திரிகைகள் மிகவும் நியாயத்துடனும், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், பக்கம் சாராமலும் ரிப்போர்ட்டிங் செய்து வருகின்றன என்பதை இந்த வலைப்பூவின் பின்னூட்டத்திலேயே சிலர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். யாருக்கும் சார்பாக வாதிட வேண்டிய தேவையில் நாங்கள் இல்லை. நாங்கள் செய்வது ஒரு கல்விப் பயிற்சி. இதில் வணிக நோக்கமோ, அரசியல் நோக்கமோ இல்லை. எனவே உங்களின் குற்றச்சட்டை ஏற்க முடியாது என்று கூறிக் கொள்கிறோம்.

ஊடக விமர்சனக் குழுவினர்